தானியக் களஞ்சியங்களை
போர் கொள்ளையடித்துவிட்ட ஒரு தேசத்தில்
சகோதரனே!
உண்பதற்கு மட்டுமே
நீ வாயைத் திறந்திருக்க வேண்டும்!
உனது எழுதுகோலுள்
குருதியையும் கண்ணீரையும்
ஊற்றிய யார் தவறு?
உடல்சாற்றில் வழுக்கி
ஊடகதர்மம்
அலமலந்து விழுந்துகிடக்கும் மண்ணில்
உண்மையன்று;
நமக்கெல்லாம்
உயிரே வெல்லம் என்பதறியாயோ?
"ஜனநாயகம்' என்ற சொல்
பைத்தியம் பிடித்து
மலங்க மலங்க விழித்தபடி
தன் கண்களை ஒளித்துக் கொள்ள
இடம் தேடியலையும் தெருவொன்றிலிருந்து
நீ உச்சரித்திருக்கக் கூடாது
அந்த இற்றுப்புழுத்த வார்த்தை...
மனிதவுரிமையாளர்களின்
குறிப்புகளைப் பிடுங்கிக் கொண்டு
தரதரவென்று இழுத்துப்போய்
விமானமேற்றும் நாட்டிலிருந்தபடி
என்ன துணிச்சலில் நீ எழுதினாய்
எரிதழல் சொற்களை?
அகதிமுகாமொன்றின்
மலக்குழியின் பக்கப்பலகைகள் இற்றுவிழுந்து
புழுக்களுள் புதையுண்டு
செத்தொழிந்த சிறுவர்கள் கேட்டார்களா?
நாற்றமடிக்கும் சமவுரிமையை
எழுதக் கூடாதா என்றுன்னை?
போர்குற்றங்களை எழுதுவது
மாபெரிய போர்க்குற்றம்!
எனினும்
எமதினிய சகோதரா!
"அவர்கள்' விடுவிக்காது போனாலும்
வரலாறு உன்னை விடுவிக்கும்

போதி மரம்

என்னை விறுக்கென்றுகடந்த
உன் விழிகளில்
முன்னரிலும் முள்ளடர்ந்திருந்தது
உன் உதட்டினுள்
துருதுருக்கும் கத்திமுனை
என் தொண்டைக்குழியை வேட்கிறது

மாறிவிட்டன நமதிடங்கள்
துடிப்படங்கும் மீனாக நான் தரையில்
துள்ளி நீர் கிழித்தபடி நீ கடலில்
துரோகி தியாகிச் சட்டைகள் அவிழ்ந்துவிழ
சற்று முன்பே அம்மணமானோம்
இடுகாட்டில் குளிர்காயும் குற்றவுணர்வில்
எரிகிறது எரிகிறது தேகம்

நம்அட்டைக்கத்திகளில்
எவரெவரின் குருதியோ வழிகிறது
நாம் இசைத்த பாடல்களைப் பிரித்துப் பார்த்தேன்
ஒழுகிற்று
ஊரும் உயிரும் இழந்த
பல்லாயிரவரின் ஒப்பாரிகள்

வன்மம் உதிர்த்து
வந்தொருக்கால் அணைத்துவிட்டுப் போய்த்தொலையேன்
மரணம் என்ற போதி மரத்தின் கீழ்
நிழலில்லை நீயுமில்லை நானுமில்லை
வதைமுகாம் மனிதர்களின்
கண்ணீர் இலையுதிர்ந்து கிடக்கிறது

தோற்றவரின் வேதம் என்பாய்
சரணாகதி என்பாய்
போடீ போ!
இழக்க எவரிடமும் எந்த மயிருமில்லை!

Pin It