ஆழ்வார்கள், நாயன்மார்கள் காலத்திற்குப் பிறகு தோன்றிய சமயப் பெரியார்களை நினைவு கூறுகையில் பட்டினத்தார், தாயுமானவர், இராமலிங்க சுவாமிகள் மூவரும் இயல்பாக நினைவுக்கு வருபவர்கள்.

பட்டினத்தார் கடுந்துறவு இயக்கத்தைச் சார்ந்தவர். தாயுமானவர் பொதுநெறி இயக்கத்துக்கு வித்திட்டவர். இராமலிங்க சுவாமிகளோ சமயத்தோடு சமூகத் தொண்டையும் இணைத்தவர்.

தமிழ்ச் சமூக மறுமலர்ச்சி இயக்க வரலாற்றை வள்ளலாரிடமிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். இராமலிங்க சுவாமிகள் தாம் வாழையடி வாழையென வரும் திருச்சிற்றம்பலக் கூட்ட மரபில் வந்தவனென்று ஓர் இடத்தில் கூறுவார்.

தன்னை எப்பொழுதும் சிதம்பரம் இராமலிங்கம் என்று மட்டுமே அழைத்துக் கொண்டவர். பிற்காலத்தில் வள்ளலார் என்ற சிறப்புப் பெயர் எப்படி இராமலிங்க சுவாமிகளுக்கு வழங்கலாயிற்று என்பதையும் பார்க்க வேண்டி உள்ளது.

1867-ஆம் ஆண்டு வெளியான திருவருட்பா முதற் புத்தகத்தில் திருவருட்பிரகாச வள்ளலாரென்னும் சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய திருவருட்பா என்று தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களால் சிறப்புப் பெயரிட்டுப் புத்தகம் வெளியானது. புத்தக முகப்பில் இப்பெயரைக் கண்டதும் “திருவருட் பிரகாச வள்ளல் ஆர்? என்று கேட்கிற இராமலிங்கம் என்று வைத்துக் கொள்ள வேண்டுமோ?” என்று வினவியுள்ளார். இறுக்கம் இரத்தினசாமி முதலியாரிடம்,‘இவ்வாறு பெயரிடுவதில் எனக்கு விருப்பம் இல்லை’ என்றும் அறிவுறுத்தினார்.

திருவருட்பா, அருட்பிரகாச வள்ளலார் என்ற பெயரிட்ட தலைப்பு ஆறுமுக நாவலர் அவர்களுக்கு உடன்பட முடியவில்லை. அதன் பின்பு வழக்குமன்றம் வரை சென்று அருட்பா X மருட்பா தர்க்க விவாதங்கள் நடந்தது தனிக்கதை.

இராமலிங்க சுவாமிகள் 1851-ல் ‘ஒழிவிலொடுக்கம்’ என்ற நூலினை முதன் முதலாகப் பதிப்பிக்கிறார். இந்த நூலில் வரும் சிறப்புப் பாயிரச் செய்யுள் “வள்ளல் குருராயன் வாதுவென்ற சம்பந்தன்” என்ற வெண்பாவுக்கு விரிவான விருத்தி உரை செய்து பதிப்பிக்கிறார்.

இதில் வள்ளல் என்னும் திருப்பெயர் வள்ளலார் என்ற பெயருடையவர். காழி ஞானசம்பந்தனை ஞான குருவாகக் கொண்டு சீர்காழி என்ற ஊரில் பிறந்த கண்ணுடைய வள்ளலார். இவரே ஒழுவிலொடுக்க நூலாசிரியர். இந்த நூல் ஐக்கியவாத சைவ நூல். கண்ணுடைய வள்ளலார் ஐக்கியவாத சைவர் என்றும் கருத இடம் உண்டு.

வேதாந்தத்தையும் சித்தாந்தத்தையும் பாலமாக இணைக்கும் சமரச நூல் இது. அந்தக் காலங்களில் சைவ மடங்களில் ஒழுவிலொடுக்க நூல் விலக்கப்பட்ட நூலாகவே இருந்துள்ளது.

கண்ணுடைய வள்ளலார் சித்தாந்தச் சைவ நெறியிலிருந்து விலகி ஐக்கியவாத சைவ நெறிக் கொள்கைக்கு வித்திட்டு சைவக் கோட்பாட்டின் முக்கிய ஞான நெறியாகிய சரியை, கிரியை, யோகம் மூன்று வழிகளையும் பழித்துத் தற்போது வொடுக்கம் வேண்டியபடி எழுதிய நூல் ஒழுவிலொடுக்கம். இந்த நூலினை எழுதியவர் வள்ளல் பரம்பரையினர்.

மெய்கண்ட தேவநாயனார் பரம்பரையினர் மரபுக்கு விலகிய கொள்கையாக இருந்ததால் மனமுடைந்து தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டினார்களாம்.

அதற்கு அறிகுறியாக தந்து திருமேனியில் இடப்பட்ட விபூதியை அழித்துச் சைவ சமயத்துக்குக் கேடு வந்துள்ளதே என்று கூறியதாகவும், அதனால் வள்ளலாதீனத்துப் பரம்பரையினர் கைகளில் குறிகளையிட்டு அழிக்கும் வழக்கமும் இருந்துள்ளது என்ற ஒரு கதையும் உண்டு.

500 ஆண்டுகளுக்கு முந்தைய சீர்காழி வள்ளலார் ஆதினம் காலப் போக்கில் அடையாளம் இல்லாமல் சீரழிந்து விட்டது. மு. அருணாசலம் இந்த மடம் குறித்துக் கூறுகையில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் மிகவும் இழிந்த நிலைக்கு வந்து அடியோடு மறைந்து விட்டது என்கிறார்.

ஐக்கியவாதச் சைவர் காழி கண்ணுடைய வள்ளலாரும், தாயுமானசுவாமிகள், வள்ளலார் கொள்கை அளவில் பல்வேறு விசயங்களில் ஒத்துப் போவதை காண முடிகிறது. கண்ணுடைய வள்ளல் ஆதினத்தை வெள்ளை வேட்டி ஆதினம் என்றும் அழைப்பர். மேலும் இல்லறத்திலிருந்து துறவை மேற்கொள்வார்கள்.

தாயுமானவரும் இல்லறத்திலிருந்து துறவு நிலைக்கு வந்த வெள்ளாடை தரித்த மகான். சித்தாந்தத்தையும் வேதாந்தத்தையும் இணைத்துச் சமரச சன்மார்க்க நெறிக்கு வித்திட்டார். “வேறுபடு சமயமெலாம் புகுந்து பார்க்கின் விளங்கு பரம்பொருளே நின் விளையாட்டல்லன்’’என்றும், ``கிழக்கு மேற்கறியான் வழக்குப் பேச புகுந்தானென்ன’’ போன்ற பல பாடல் மூலம் அறியப்படுகிறது.

தாயுமானவர் பாடல்கள் சைவ மடங்களில் பிரதானமாகக் கொள்வதில்லை என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது.

இந்த வாரிசின் தொடர்ச்சியாக இராமலிங்க சுவாமிகளும் ஞானசம்பந்தரைக் குருவாகக் கொண்டு சைவ நூல்களிடையே திளைத்துச் சைவ சமயத்தில் ஒளிந்து கிடக்கும் சாதி மதங்களைப் பழிக்கும் சமய சமூகச் சீர்திருத்தப் பாடல்களாக ஆறாம் திருமுறையில் வெளியிட்டார்.

தமிழ் மரபில் சந்நியாசம் கிடையாது. துறவு மட்டுமே உண்டு. தமிழக ஞானிகள் பலரும் வெள்ளாடைத் துறவிகளே. சமயக் குரவர்களும், சந்தானக் குரவர்களும் வெள்ளாடைத் துறவிகளே.

குருபரம்பரை ப்ரபாவத்தில் தென்கலை வைணவரான ராமானுஷர் கூட வெள்ளாடை அணிந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (தகவல்: சு. வெங்கட்ராமன்).

தமிழகத் துறவு மரபில் கஜாயம் (காவி) அணிவது புறச் சமயங்களிலிருந்து புகுந்து விட்டது.

கோவிலூர் மடத்து ஆதினத்தில் முதல் நான்கு பட்டம் மடாதிபதிகள் வெள்ளை வேட்டி அணிந்தவர்கள்தான். சிருங்கேரி மடாதிபதி கோவிலூர் ஆதினத்திற்கு ஐந்தாம் பட்ட மடாதிபதியின் ஆட்சியின் போது விஷயம் செய்த பிறகு காவி உடைக்கு மாறிவிடுகின்றனர்.

பாம்பன் சுவாமிகள் கூட முதலில் வெள்ளாடை அணிந்தவர். காசிக்கு போய் வந்த பின்னர் காவி ஆடைக்கு மாறியவர்.

இராமலிங்க சுவாமிகளை வெள்ளை வேட்டிப் பரதேசிப் பண்டாரம் என்று சிலர் அழைப்பார்கள். பிள்ளை பெரு விண்ணப்பம் பகுதியில்,

“மெய்யுறக் காட்ட வெருவி வெண் துகிலால் மெய் எலாம் ஐயகோ மறைத்தேன்” என்று அடிகள் பாடியதிலிருந்து வெள்ளாடை துறவி என்று புலனாகிறது.

அவரது உடை இரண்டு வெள்ளை ஆடைகளே. வெள்ளாடையிலும் அடிகள் உடுத்துவது லாங்கிளாத் என்ற வகையே.

இராமலிங்க சுவாமிகள் ஆடை குறித்து அவரது வார்த்தைகளில் கூறுவோமானால், “மூன்றாசைகளில் விசேஜம் பற்றுள்ளவர்களாகித் தயவில்லாத கடின சித்தர்கள் சந்நியாசம் பெற்றுக் கொள்ள வேண்டும். மேற்படி குற்றமற்றவர்களுக்குச் சந்நியாசம் வேண்டுவதில்லை. சந்நியாசி காவி வேஷ்டி போடுவதற்கு ஞாயம். தயவில்லாத கடின சித்தர்களாகையால் தத்துவாபாசமுள்ளது.

”தத்துவத்தை செயித்து தயவை நடத்துவதற்கு யுத்த குறி காவி”

”வெற்றியான பிறகு அடைவது தயவு.ஆதலால் வெற்றிக்கொடி வெள்ளை”.

வள்ளலார் தன்னுடைய வெள்ளி அம்பலத்து மகரிஷிகளுக்கு வேண்டிய வெள்ளை மல்பீஸ்களும், வெள்ளை லாங்கிளாத் துணிகளும், தலைப்பாகை துணிகளும் வாங்கி அனுப்பிய செய்தி அவரது வாழ்க்கை வரலாற்றில் அறிய நேரிடுகிறது.

இதைப்போல வடசென்னை தமிழ்வழி வேதாந்த மடங்களின் ஆளுமைகளும் வெள்ளாடை தரித்தவர்களாகவும், இல்லறத் துறவிகளாகவும் இருந்துள்ளனர். ரிப்பன் பிரஸ் புகழ் இரத்தின செட்டியார் இல்லறத் துறவிதான். இவருடைய சீடர்கள் கோ.வடிவேல் செட்டியார், வியாசர்பாடி கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் தமிழ் வழி மரபின் துறவை ஏற்றுக் கொண்டனர்.

வியாசர்பாடி கரபாத்திர சுவாமிகள் தனது குருவான ரிப்பன் பிரஸ் சைவ இரத்தின செட்டியாரிடம் போய்ச் சந்நியாசம் வழங்கும்படி வேண்டினார். அச்சமயம் இரத்தினசெட்டியார்,“சந்நியாசம் என்பது ஆரிய மரபுக்கு உரியது; தமிழ்நாட்டுக்கு உரியது துறவு மட்டுமே” என்றார்.

சங்க இலக்கியத்தில் முல்லைப்பாட்டில், “கற்றோய்த்துடுத்த படிவப் பார்ப்பான் முக்கோலசை நிலைகடுப்ப” என்ற வாக்கியத்தை மேற்கோள் காட்டி நாம் கை கொள்ள வேண்டியது துறவு மட்டுமே. சந்நியாசவேடமல்ல என்று கூறினார். எனது ஆசிரியர் திருக்குறள் சாமி என்னும் கிருஷ்ணாந்த யதீந்திர சுவாமிகளிடத்தில் யான் மனத்துறவு மட்டுமே பெற்றுக்கொண்டேன் என்று அறிவுறுத்தினார் சைவ இரத்தினசெட்டியார்.

அருட்பா மருட்பா விவாதத்தின் போது இராமலிங்க சுவாமிகளுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் இந்த வழியினர் என்பதும் முக்கியமானது. கலித்தொகை, திருக்குறள் துறவியல் அதிகாரம் போன்றவற்றில் தமிழர்களுக்கே உரித்தான துறவும், வெள்ளை வேட்டி மரபும் தனி ஆவர்த்தனமாக விளங்கியுள்ளது.

- ரெங்கையா முருகன்

Pin It