இன்னும் ஐந்தே ஆண்டுகள்தான். வ.உ.சி. சேலம் ஜில்லா காங்கிரஸ் மாநாட்டில் (1927 நவம்பர் 5) பேசிய தலைமைப் பொழிவு நூறாண்டைத் தொட்டுவிடும். அவர் அன்று பேசிய பெருஞ்சொல் இன்றைக்கும் பெருஞ்சொல்லாகவே இருக்கிறது. இந்திய விடுதலைக்கு முன் 20 வருடங்களும், விடுதலைக்குப் பின் 75 வருடங்களும் அப்பெருஞ்சொல்லை நாம் சொல்லாகவே வைத்திருக்கிறோம்; அவசியம் செயல்படுத்த வேண்டிய பெருஞ்சொல் அவை என்பதை இப்போதாவது நாம் உணர வேண்டும்.

பெருஞ்சொல்லாக அவர் பேசியவற்றில் முக்கியமானவை :(1) சுய அரசாட்சி (2) வகுப்புவாரி பிரதிநிதித்துவம் (3) பிராமணரும் பிராமணரல்லாதாரும் ஆகியவை.

“சுய அரசாட்சி என்றால் என்ன? நாம் விரும்பும் சுய அரசாட்சி எது? அப்படிப்பட்ட சுய அரசாட்சியைப் பெறுவதற்கு வழிகள் யாவை? பெறுகிற சுய அரசாட்சியை எல்லா மக்களுக்குமாக தக்க வைப்பது எப்படி? என்கிற அடிப்படைக் கேள்விகளுக்கான பதில்களை வ.உ.சி. தமது சுய அரசாட்சிப் பொழிவில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

‘சுய அரசாட்சி நான்கு வகைப்படும். (1) குடியாட்சி (Republic Government) (2) கோனாட்சி (3) சார்ந்த குடியாட்சி (Dependent Republic Government) (4) சார்ந்த கோனாட்சி (Dependent Monarchial Government)’ என்பதை விளக்கமாகச் சொல்லி, மேற்கூறிய நான்கு வகையான சுய அரசாட்சிகளுள் முன்னைய மூன்றில் ஒன்றை நாம் அடைய வேண்டுமென்று நம் தேசத்தாரில் ஒருவன் சொல்வானானால், அதுவே இந்தியன் பினல்கோடு 124பி பிரிவுப்படி குற்றமாகுமோ என்று யான் அஞ்சுகின்றேன். ஆதலால் அவற்றைப் பற்றி யான் ஒன்றும் பேசாது அம்மூவகை;ச் சுய அரசாட்சிகளும் நமக்கு ஆகாதவை என்று தள்ளி விடுகின்றேன்.

ஆகவே நாம் அடைய விரும்பும் சுய அரசாட்சி மேலே நான்காவது வகையாகக் கூறப்பட்ட சுய அரசாட்சியே. அவ்வரசாட்சிதான் நம் தேசத்தின் தற்கால நிலைமைக்குப் பொருத்தமானதென்று கொள்ளத்தக்கது. நம் தேச பக்தர்களிற் சிலர் மேற்கூறிய நான்கு வகைச் சுய அரசாட்சிகளில் முதலாவது வகைச் சுய அரசாட்சி ஒன்றே தாம் வேண்டுவது எனக் கூறக் கேட்டிருக்கிறேன்.அக்கூற்றுத் தற்கொல்லியும், பயனிற்சொல்லும் ஆமென்று யான் கருதுகின்றேன். ஆகவே, நாம் அடைய விரும்பும் சுய அரசாட்சி நமது தேசத்து அகப்புறக்காப்புகள் முதலிய காரியங்களில் நாம் பூரண சுதந்திரமும் சுவாதீனமும் உடையவராயும் பிற தேசங்களை நட்பு, பகை, நொதுமல் என்ற மூன்றின் ஒன்றாகக் கொள்ளுதல் முதலிய காரியங்களில் பெரிய பிரிட்டன் (Great Britian) தேசத்து அரசைச் சார்ந்து அதன் ஆணைப்படி ஒழுகும் கடப்பாடு உடையவராயும் இருக்கும் சுய அரசாட்சியே” என்கிறார் வ.உ.சி.voc kovai cell

(வ உ சி இழுத்த செக்கு)

அவர் சொல்லும் நான்காவது சுய அரசாட்சி அதாவது ‘சார்ந்த கோனாட்சி’யைப் பெறுவதற்கு வழி என்ன என்பதை வ.உ.சி. இப்படிக் குறிப்பிடுகிறார்:

“ஒரு பேரரசின் துணையைப் பெற்றுப் போர் புரிதல் அல்லது தேசம் முழுவதும் ஒரே காலத்தில் புரட்சி செய்தல், சுய அராட்சி வழி என்று சிலர் கூறுகின்றனர். நமக்கு ஆகா என்று நாம் தள்ளிய மேற்கூறிய முதல் மூன்று வகைச் சுய அரசாட்சிகளுக்கும் அவ்விரண்டில் ஒன்றுதான் வழி. ஆனால், நாம் அடைய விரும்பும் மேற்கூறிய நான்காவது வகைச் சுய அரசாட்சிக்கு அவ்வழிகளிற் செல்லுதல் அவசியம் இன்று. அன்றியும், அவ்வழிகள் தேசமக்கட்கும் பொருட்கும் அழிவும் கேடும் விளைவிப்பவை; நமது காங்கிரஸ் கோட்பாட்டுக்கு மாறுபட்டவை; நாம் கைக்கொள்ள முடியாதவை. ஆதலால் அவ்வழிகள் நாம் விரும்பும் சுய அரசாட்சியை அடைவதற்கும், நம் தேசத்தின் நிலைமைக்கும் பொருத்தமற்றவையென நாம் தள்ளி விடுவோமாக.”

வெள்ளையனை எதிர்த்துக் கப்பல் விட்டவர்; சுதேசியம் குறித்துப் பொது மக்களிடம் விழிப்பை ஏற்படுத்தி அரசியல் விடுதலை இயக்கத்தில் அவர்களை ஈடுபடுத்தியவர்; வெள்ளைய முதலாளிகளுக்கு எதிராகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்து வெற்றி கண்டவர், கடுங்காவல் தண்டனையின்போதும் வெள்ளை அதிகாரிகளுக்குப் பணியாமல் சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்தவர் ‘புரட்சியும் வன்முறையும் வேண்டாம்’ எனச் சொல்வதை, சுய அரசாட்சி பெறுகிற நம் மக்களுக்கும், அவர்களின் பொருள்களுக்கும் கேடு விளைவிக்காதிருக்க வேண்டுமென்கிற பொது அக்கறையாகவும், இந்தியாவுக்குச் சிறிது சிறிதாக சுயாட்சி வழங்குகிற நிலை அப்போது வந்துவிட்டது என்பதன் வழியும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் அத்தகைய சுய அரசாட்சியைப் பெறுவதற்கு மூன்று வழிகளைச் சுட்டிக் காட்டுகிறார் அவர். அவை: (1) ஒத்துழைத்தல் (Co-operation); (2) ஒத்துழையாமை (Non-Cooperation); (3) ஒத்துழைத்தலும் ஒத்துழையாமையும் (Responsive Cooperation). இந்த மூன்றிலும் அவர் தேர்ந்தெடுப்பது மூன்றாவது வழியான ‘ஒத்துழைத்தலும் ஒத்துழையாமையும்’ என்பதைத்தான். இத்தகைய வழியை வ.உ.சி.யின் அரசியல் குருவாக விளங்கிய திலகர் 1919இல் வெளிப்படுத்தினார்.

1919ஆம் ஆண்டு “இந்திய அரசுச் சட்டம்” (Government of India Act of 1919) பற்றிய விவாதத்தில் திலகர், சி.ஆர்.தாஸ், காந்தியடிகளிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது. சி.ஆர்.தாஸ் சட்டத்தை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்றார். காந்தியடிகள் நிபந்தனையில்லாமல் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார். இவ்விரு கருத்துகளுக்கு இடையே திலகர் நின்றார். பரஸ்பர ஒத்துழைப்பு (Responsive Co-operation) எனும் அணுகுமுறை ஏற்கத்தக்கது எனத் திலகர் கூறினார். காங்கிரஸ் மகாசபை அரசாங்கச் சீர்திருத்த சட்டங்களை அங்கீகரிக்காமல் கூடியவரை எந்தெந்த வழியில் ஒத்துழைக்கலாமோ அந்தந்த வழியில் ஒத்துழைத்தும், எந்தெந்த வழியில் அரசாங்கத்தைத் தாக்கி முட்டுக்கட்டை போடுவதுமான அணுகுமுறை இருக்க வேண்டும் என்றார் திலகர்”. (‘ஜி.ஏ. நடேசன் பதிப்பாளர் - இதழாளர் - தேசபக்தர்’, பெ.சு. மணி, சென்னை: பூங்கொடி பதிப்பகம், ப. 287).

மேற்சொன்ன மூன்று வழிகளுக்கும் தாம் நேசிக்கும் திருக்குறளிலிருந்தே எடுத்துக்காட்டுகளைச் சொல்லி நமக்கு விளக்குகிறார் வ.உ.சி.

‘ஒத்துழைத்தல்’ ‘இரப்பான் வெகுளாமை வேண்டும்’ என்னும் உண்மையையும், ‘ஒத்துழையாமை’ ‘வேண்டாமை வேண்டவரும்’ என்னும் உண்மையையும், ‘ஒத்துழைத்தலும் ஒத்துழையாமையும்’ ‘தன்னெஞ்சறிவது பொய்யற்க’ என்னும் உண்மையையும் உட்கொண்டுள்ளன. எந்த இரப்பு எந்த உண்மையை கொண்டிருப்பினும், எல்லா இரப்பும் இரப்புத்தான்.

‘ஒத்துழைத்தல்’ தமக்கு உரியவற்றைப் பிறர் தரினும் தராவிடினும், அது நமது விதியென்று கருதிப் பிறர்க்குப் பண்பு செய்யும் கிழவர் செயல் போன்றது. ‘ஒத்துழையாமை’ தின்பண்டம் முழுவதும் தமக்குத் தரும் வரையில் அதன் ஒரு பகுதியை ஏற்காது தாய் தந்தையரோடு கோபித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் செயல் போன்றது. ‘ஒத்துழைத்தலும் ஒத்துழையாமையும்’ தமக்குரியவற்றைத் தந்தபோது உவந்தும், தராதபோது வெகுண்டும் நிற்கும் காளையர் செயல் போன்றது”.

இத்தகைய வ.உ.சி.யின் கோட்பாட்டை நாம் இன்றைய இந்தியாவில் பொருத்திப் பார்க்கவேண்டும். விடுதலை பெற்று மொழிவழியாய்ப் பல்வேறு மாநிலங்களாகப் பிரிந்து ஒருங்கிணைந்திருக்கும் இந்தியாவில், மாநிலங்கள் அனைத்தும் சார்ந்த குடியாட்சியைத் (Dependent Republic Government)தான் பின்பற்றியாக வேண்டும். இது தம் மாநில உரிமையில் பூரண சுதந்திரத்தையும், பிற தேசங்களை நட்பு, பகை, நொதுமல் என்ற மூன்றின் ஒன்றாகக் கொள்ளுதல் முதலிய காரியங்களில் நடுவண் அரசைச் சார்ந்து அதன் ஆணைப்படி ஒழுகுவதாயும் உள்ள சுய அரசாட்சியாகவே இருக்கும்.

இத்தகைய மாநில சுயாட்சி இன்றைக்கு நடைமுறையில் இருக்கிறதா? நடுவண் அரசு கொண்டுவரும் பல்வேறு திட்டங்கள் -‘ஒன் இந்தியா’, ‘ஒரே நாடு ஒரே ரேசன்’, ‘ஒரே நுழைவுத் தேர்வு’, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ - நம்மை அச்சுறுத்துகின்றன.இவைஅனைத்துமே ‘சர்வாதிகார‘ ஆட்சிக்கு வழிவகுக்கக் கூடியதாகவும், இந்திய மக்களுக்கிடையே சாதி, மத, இன, மொழி வேற்றுமைகளை அதிகப்படுத்துவதாகவும் அமைந்து விடுமோ என்கிற அச்சம் என்னுள் எழுகிறது.

புதிது புதிதாக அறிவிக்கப்படும் திட்டங்களாக இவற்றை நாம் பார்ப்பதை விட,ச் சாதி, மத, இன, மொழி வாரியாக மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலாக நாம் பார்க்கத் தோன்றுகிறது.இது மீண்டும் அடிமைத்தனத்திற்கே இட்டுச்செல்லும். இத்தகைய பிரிவுகளுக்குப் பதிலாக ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை’ வ.உ.சி. தமது பெருஞ்சொல்லில் முன்வைக்கிறார்.

Unity in Variety என்றபடி வேற்றுமைகளுள் ஒற்றுமை காண்டலன்றோ அறிவு? வேற்றுமை இல்லையெனில் ஒற்றுமையென்பதொன்றுண்டோ?” என்கிறவர், “வகுப்புவாரித் தொகுதிகள் ஏற்படுத்தப்படுமானால் ஜாதி வேற்றுமைகள் வளரப்போவதில்லை. அவை வளர்ந்தாலும் அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. ஒவ்வொரு இந்தியனும் ஒவ்வொரு ஜாதியாயிருந்தாலும்கூட, அதனால் நம் தேசத்திற்குக் கேடு ஒன்றும் உண்டாகப் போவதில்லை. நாம் வேண்டுவதெல்லாம் ஒற்றுமையன்றே”

என்று முழக்கமிடுகிறார். ‘சாதியை ஒழிப்போம்’ என்று பல்லாண்டுகளாக நாம் பேசிக் கொண்டிருந்தாலும் இன்றைக்கும் தேர்தல் காலங்களில் கட்சிப் பாகுபாடின்றி, அந்தந்தத் தொகுதியில் எந்தெந்தச் சாதி வலுவாக இருக்கிறதோ அதன் அடிப்படையிலேயே வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் ஒவ்வொரு ஜாதியாயிருந்தாலும்கூட அவர்களுக்கிடையே இணக்கம் இருந்தால்போதும் என்கிற நடைமுறைச் சாத்தியத்தையே வ.உ.சி..யின் வரிகள் நமக்குக் காட்டுகின்றன.

சாதிய வேறுபாட்டால் சுய அரசாட்சிக்குட்பட்ட மக்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் போகாது என்பதை வலியுறுத்த, “உயர்வு, தாழ்வு இல்லாத ஒரே ஜாதியாருள்ளும், ஒரே குடும்பத்தினருள்ளும், ஒற்றுமையின்மையும், பகைமையும் கொலை முதலியனவும் நிகழக் காண்கிறோம். இதன்றியும், தம் ஜாதி உயர்வென்றும், பிறர் ஜாதி தாழ்வென்றும் கருதும், இருவேறு ஜாதியார், சிலர் ஒற்றுமைப்பட்டு அத்தியந்த நண்பர்களாக வாழ்கின்றதையும் காண்கிறோம். இக்காட்சியால் நம் தேசத்தாருள் நிலவும் ஒற்றுமையின்மை, பகைமை முதலியவற்றிற்கு முக்கியமான காரணம் ஜாதி வேற்றுமையும், அது பற்றிய உயர்வு தாழ்வும் அல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கத் தக்கது” என்கிறார், அவர். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றித் தெளிவாகச் சொல்லும் வ.உ.சி., பிராமணர்-பிராமணரல்லாதார் பிணக்கு பற்றியும் மிக விரிவாகத் தமது பெருஞ்சொல்லில் குறிப்பிட்டுள்ளார்.

“பிராமணர்கள் நம் தேசத்தில் சிறு தொகையினராயிருத்தலால், தம்முடைய உரிமைகளை மற்றை ஜாதியார்கள் கைப்பற்றிக் கொள்வார்கள் என்ற அச்சத்தால், சுய அரசாட்சியை உள்ளூர விரும்ப மாட்டார்கள் என்றும், அவர்கள் சுய அரசாட்சிக்குப் பாடுபடுவதுபோல் நடிப்பதெல்லாம் தம் உறவினருக்கும் ஜாதியாருக்கும் இராஜாங்க உத்தியோகங்கள் வாங்கிக் கொடுக்கும் பொருட்டே என்றும் பிராமணரல்லாதார் சொல்வது உண்மைதானோ என்றும் யானும் இப்பொழுது ஐயம் உறுகின்றேன்.”

வ.உ.சி.யின் ஐயப்பாட்டை நாம் கேள்விக்கு உள்ளாக்க வழியே இல்லாதவாறு இப்போதும் அது தொடர்வதை ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்கிற அரசாணைக்குப் பிராமணர்களிடமிருந்து வந்த எதிர்வினைகளை ஒப்பிட்டுக் கொள்ளலாம்.

இராஜாங்க உத்தியோகங்கள் முதலியவற்றில், தாழ்த்தப்பட்டிருக்கிற ஜாதியார்களின் எண்ணிக்கை விகிதப்படி அவர்கள் அடைய வேண்டிய உத்தியோகங்களை அவர்களும், தாழ்த்துகின்ற ஜாதியார்களின் எண்ணிக்கை விகிதப்படி அவர்கள் அடைய வேண்டிய உத்தியோகங்களை அவர்களும், இந்தியக் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை விகிதப்படி அவர்கள் அடைய வேண்டிய உத்தியோகங்களை அவர்களும், முகமதியர்களின் எண்ணிக்கை விகிதப்படி அவர்கள் அடையவேண்டிய உத்தியோகங்களை அவர்களும் அடையும்படி நாம் ஏற்பாடு செய்ய வேண்டும்”.

‘கீழ் ஜாதி’, ‘மேல் ஜாதி’ என்கிற வார்த்தைகளைக்கூட வ.உ.சி. வெறுத்து ஒதுக்குகிறார் என்பதை ‘தாழ்த்தப்பட்டிருக்கிற ஜாதியார்’, ‘தாழ்த்துகின்ற ஜாதியார்’ என்று அவர் குறிப்பிடுவதிலிருந்தே நாம் அறிந்துகொள்ள முடியும். இப்படி உத்தியோகங்களைப் பங்கிட்டுக்கொள்ள நான்கு வகுப்புத் தலைவர்களும் (தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள், தாழ்த்துகின்ற ஹிந்துக்கள், முகமதியர்கள், இந்தியக் கிறித்தவர்கள்) ஒன்றுகூடி உத்தியோக எண்ணிக்கை, அவற்றின் சம்பளத் தொகை, அதிகாரம், செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் செய்து கொள்ள வேண்டும் என்றும், இவற்றைத் தீர்மானிப்பதற்கு ஒவ்வொரு ஜாதியிலும் நடுவு நிலைமையுள்ள சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் சொல்லுக்குக் கட்டுப்படவேண்டும் என்றும், அப்படிக் கட்டுப்படாதவர்களை அந்தந்த ஜாதியிலிருந்து விலக்குதல் முதலியவற்றைச் செய்யலாம் என்றும் ஆலோசனை தருகிறார் வ.உ.சி.

வ.உ.சி.யின் இந்த ஆலோசனை நடைமுறைக்குச் சாத்தியமா என்பதைத் ‘தமிழர் செல்வம்’ என்றழைக்கப்பட்ட சர் ஏ.டி. பன்னீர்செல்வம் 1926களில் தஞ்சை மாவட்டத்தில் செய்து காட்டியதை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். நீதிக் கட்சியின் முடிசூடா மன்னராகவும், பெரியார் ஈ.வெ.ரா.வின் தொண்டராகவும் இருந்த சர் ஏ.டி. பன்னீர்செல்வம் தஞ்சை மாவட்டக் கழகத் தலைவராக ( 1926-1930 ) இருந்தபோது தாழ்த்தப்பட்ட ஒருவருக்குப் பதவிகொடுத்துப் பணியாற்ற வைத்தார்.

“அவர் [ஏ.டி. பன்னீர்செல்வம்] தஞ்சை மாவட்டக் கழகத் தலைவராக இருந்தபோது பட்டுக்கோட்டை வட்டக் கழகத்துக்குத் தாம் நியமனம் செய்ய வேண்டியவரைத் தாழ்த்தப்பட்டோர் சமூகத்தினின்றே செல்வம் தேர்ந்தெடுத்தார். ஆனால் பட்டுக்கோட்டை வட்டக் கழகத் தலைவரான வி. நாடிமுத்துப் பிள்ளை அந்நியமனத்தை ஏற்க மறுத்தார். தாழ்த்தப்பட்டோர் ஒருவரை வட்டக் கழக உறுப்பினராக நியமனம் செய்து மற்றவர்களுடன் சரிசமமாக அவரை அமரச் செய்ய இயலாது என்று அவர் வாதாடினார். அப்பொழுது சென்னை முதலமைச்சராக இருந்த டாக்டர் பி. சுப்பராயனின் உதவியை நாடினார். தஞ்சை மாவட்டக் கழகத்திலிருந்து இப்பிரச்சினைபற்றிய விளக்கம் முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டது. இரு தரப்பினரின் விளக்கங்களையும் அறிந்த முதலமைச்சர், தஞ்சை மாவட்டக் கழகத் தலைவரால் நியமிக்கப்பட்டவர் பட்டுக்கோட்டை வட்டக் கழக உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். தமது தீர்ப்பு ஏற்கப்படாவிட்டால் பட்டுக்கோட்டை வட்டக் கழகம் கலைக்கப்படும் என்றும் அவர் அச்சுறுத்தினார். எனவே நாடிமுத்துப்பிள்ளை இத்தீர்ப்புக்குத் தலைவணங்க வேண்டியதாயிற்று. செல்வம் விரும்பியபடியே தாழ்த்தப்பட்ட ஒருவர் வட்டக் கழக உறுப்பினராகித் தொண்டு செய்ய முடிந்தது”. (‘தமிழர் செல்வம்: சர் ஏ.டி. பன்னீர்செல்வம் வரலாறு’, அமுதன் அடிகள், சர் ஏ.டி. பன்னீர்செல்வம் நூற்றாண்டு நினைவு வெளியீடு, 1990)

இதன் மூலம் சாதிப் பாகுபாடற்ற நியாயமான ஒரு தலைமை இருக்குமானால் வ.உ.சி.யின் ஆலோசனை சாத்தியம் என்பது தெளிவாகும்.இப்படிப்பட்ட ஜாதி, மதச் சண்டைகளால் நமக்குள் இருக்கும் ஒற்றுமையை நாமே குலைத்துக் கொள்வதையும் வ.உ.சி. எடுத்துக் காட்டத் தவறவில்லை.

“நமக்குள் ஏற்பட்டுள்ள ஜாதிச் சண்டைகளும், மதச் சண்டைகளும் நீங்கி நமக்குள் ஒற்றுமை ஏற்படும் வரையில் நாம் சுய அரசாட்சி அடைய வேண்டுமென்று பேசுதலும், முயற்சித்தலும் ஆகாயக் கோட்டை கட்ட வேண்டுமென்று பேசுதலும், முயற்சித்தலும் போலாம்”

என்றும் எச்சரித்தார். நாம் சுய அரசாட்சி பெற்ற பிறகும், ஜாதிச் சண்டைகளோடும், மதச் சண்டைகளோடும் நமக்குள் ஒற்றுமை இருப்பதாக நமக்கு நாமே ஆகாயக் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறோம்.

பெருஞ்சொல்லாக வ.உ.சி. குறிப்பிடும் ‘சார்ந்த குடியாட்சி’யையும், ‘ஒத்துழைத்தலும் ஒத்துழையாமையும்’ என்கிற கோட்பாட்டையும், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தையும் முழுமையாக நடைமுறைப்படுத்துதலே இன்றைய தேவை.

- ஆ.அறிவழகன்

Pin It