நாட்டுப்பற் றால்முன்னே நாய்படாப் பாடுபட்ட
ஓட்டைப் பிடார ஒளிர்மறவன் - மாட்டன்று
நன்றிபா ராட்டாத நாடொரு நூற்றாண்டு
சென்றபின் செய்யும் சிறப்பு.

ஆலைத் தொழிலாளர் ஆற்றும் பணிக்கேற்ற
கூலித் திறம்பெறுங் கொள்கையின் - மேலும்
அடிமைத் தனமில்லா ஆட்சிதன் மானக்
குடிமை சிதம்பரத்தின் கோள்.

ஆங்கிலர்நா வாய்குழும்பின் ஆவுருபா வோரிலக்கம்
வாங்க மறுத்து வருந்தொல்லை - ஓங்கினுமே
கொள்கை விடாது குடிமாண் சிதம்பரம்தன்
உள்கை சிறந்தான் உயர்ந்து.

தனக்குச் சமமாகத் தன்மனைவி வாழ்ந்து
மனக்கினிய மந்திரியாய் மாணுங் - கணக்காக
இல்லறம் ஆற்றினான் ஈகைச் சிதம்பரம்தான்
வள்ளுவன் கண்ட வகை.

பிறப்பாற் சிறப்பில்லை யென்னும் பெருநூல்
அறப்பால் மனையோ டணைந்து - பிறப்பிழிந்தான்
என்னும் ஒருவனை இல்லம்வைத் துண்பித்தான்
மன்னும் சிதம்பரத்தின் மாண்பு.

தாய்நாடே போற்றியெனுந் தக்கவங் கத்தொடரை
வாய்மொழியாற் கண்டித்த வன்தண்டல் - நாயகற்கே
வாயுள்ள நாளும் வலித்துரைப்பே னென்றுரைத்தான்
பாயும் சிதம்பரவேங் கை.

மாடுபோற் செக்கிழுத்து மட்டிபோற் கல்லுடைத்து
வேடுபோற் கேடா யுடையுடுத்துப் - பாடுபட்டான்
கேழ்வரகுக் கூழுண்டு கீழ்விலங்கிற் கீழ்விலங்கின்
தாழ்வுறுதற் கேசிதம்ப ரம்.

கொலையுங் கடுஞ்செயலுங் கூடாது வேற்றுரசு
குலையும் வகையெதிர்க்குங் கொள்கை - தலையாகக்
கொண்டான் சிதம்பரம் கூற்றாலும் ஆசுகொலை
கண்டோம் அவன்கண்ட னம்.

ஆற்றும் பணிமீட்டான் ஆங்கில னேனுமவன்
வேற்று மொழிப்பெயரை வேட்புடன்தன் - பேற்றுமகன்
பேராக இட்ட பெருந்தன்மை பாராட்டும்
சீராம் சிதம்பரம் செப்பு.

தொல்காப் பியப்பகுதித் தொல்லுரையும் ஒண்குறளின்
மல்கா வுரையன்றும் மாண்டமிழ்க்கே - அல்காத
இன்னிலைப் புத்துரையும் ஏனைப் பதிப்புகளும்
துன்னிய வ.உ.சி. தொண்டு.

தமிழ்மொழி ஞாயிறு ஞா.தேவநேயன்