தீவாந்தரம் நாவலின் வடிவத்தைக் கூர்ந்து பார்க்கிறபோது என் நாவல் 1098 ஞாபகத்திற்கு வந்தது. ஒரு சிறுமி சார்ந்த கைதும் நடவடிக்கையும் பின்னால் அது சார்ந்த நீதிமன்ற விசாரணைகளும் பிறகு முடிவான தீர்ப்புகளும் அந்தச் சிறுமியின் வாழ்வுப் போக்குகளும் கொண்டதாக அந்த நாவலின் வடிவம் இருக்கும். அதுபோன்ற ஒரு வடிவத்தைத் தீவாந்தரம் நாவலில் கண்டேன். இதில் வ.உ.சி அவர்களின் கைது நடவடிக்கை, அதன்பிறகு அவர் சார்ந்த விசாரணைகள், இறுதியாக அவர் மீது எடுக்கப்பட்ட இறுதி நடவடிக்கைகள், தீர்ப்பின் விளக்கங்கள் என்று நாவலின் போக்கு அமைந்து, என் நாவலின் வடிவ அம்சங்களைத் தீவாந்தரம் ஞாபகத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.

 வ.உ.சி அவர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான காலகட்டத்தைப் பிரதிபலிக்கிறது நாவல். தீவாந்தரம் என்ற தலைப்பே ஒரு வகையான தண்டனையை காண்பித்து விடுகிறது. அந்தத் தண்டனை கைதுக்குப் பின்னால் அவர் மீது அமல்படுத்தப்படும் போதும் அதன் இடையில் ஏற்பட்ட இந்த நாவலில் முக்கியக் கதாபாத்திரங்கள் உரையாடலும் அல்லது நீதிமன்றங்கள் ஏற்படுத்தும் உரையாடலுமாக நாவல் நின்று பேசுகிறது.

andanoor sura novel on vocசமீபத்தில் நடைபெற்ற தூத்துக்குடி வழக்கு விசாரணை அம்சங்கள் இந்த நாவலில் பல இடங்களில் ஒத்துப்போய் இந்த நாவலின் போக்கை ஒரு சமகாலத் தன்மை உள்ளதாகக் கூட மாற்றி விடுகிறது அல்லது நூற்றைம்பது வருடங்களுக்கு முற்பட்ட ஒரு சரித்திர விஷயத்தைச் சமீபத்திய சரித்திர அம்சங்களுடன் கலந்து தருவதில் நம்பகத்தன்மை என்பது பற்றிய ஒரு குழப்பமும் ஏற்படுகிறது. முந்தைய சரித்திர விஷயத்தை இது தேவையில்லாமல் குறுக்கிடுகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் புனைவில் எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்க்கலாம் என்பது விதியாக இருக்கிறது.

சமீபத்திய தூத்துக்குடி வழக்கு விசாரணையின் அம்சங்கள் பல இடங்களில் இழையோடியிருப்பதை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. அப்படியாக கண்டுகொள்ள முயலும்போது இந்த நாவல் ஒரு சமகாலத் தன்மையுடன் செல்ல முயலும் அக்கறையைத் தருகிறது. ஆனால் 150 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த அந்தச் சம்பவங்களை மனதில் கொண்டு பார்க்கிறபோது ஒருவகையில் அதை நிறுவுவதுமாகவும் அமைந்துவிடுகிறது. இவ்வகை விஷயங்களை அதாவது பழைய சரித்திர விஷயங்களையும் சமீப விஷயங்களையும் ஒன்றிணைக்கும் வடிவத்தை இவரின் அப்பல்லோ போன்ற நாவல்களிலும் பார்க்க முடிகிறது. இந்த வகையான வடிவத்தைச் சரித்திர சம்பவமும் சமகாலச் சமூகமும் இணைந்த போராட்டத்தைக் கொண்ட வடிவத்தை அவர் பல படைப்புகளில் கைக்கொண்டு இருக்கிறார். அது அவரின் தனித்துவமான போக்காக நின்றுவிடாமல் இந்த வகை விஷயத்திலிருந்து மாறுபட்டு வேறு வடிவங்களுக்குள் புகுவதன் மூலம் எதார்த்தத்தின் பல சிறப்புகளைக் கொள்ள வைக்கும்.

அந்த வகையில் தூத்துக்குடியில் முன்பு நடந்த துப்பாக்கிச்சூட்டையும் இப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டையும் நினைவு கொள்ளும் விதமாய் அமைந்துள்ள விசாரணைக் காட்சிகள் இந்த நாவலில் முக்கிய பங்காற்றுகின்றன. இது நாவலின் சுவாரஸ்யமான தளமாகவும் அமைந்து விடுகிறது.

வ.உ.சி அவர்களின் குடும்ப நண்பர்களுடன் உரையாடல் மற்றும் நீதி விசாரணை பதில்கள் போன்றவை கூர்மையாக சொல்லப்பட்டிருக்கின்றன. இரண்டு சிறுவர்-சிறுமியர் சார்ந்த விசாரணை குறுக்கீடுகள் மட்டும் புனைவுத் தன்மையுடன் வார்க்கப்பட்டிருப்பது தெரிகிறது. மற்ற கதாபாத்திரங்கள் வ.உ.சியின் குடும்ப நண்பர்களோடும் அரசியல் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்றாக இருக்கிறார்கள்.

இந்த நாவலை கதையாகச் சொல்லுகிற அம்சங்களில் பல இடங்கள் கவித்துவ அம்சங்களாக நிறைந்திருக்கின்றன. தூய்மைப்படுத்திய குடிநீரைப் போல நீதி இருக்க வேண்டும் என்ற அக்கறையில் கொடுக்கப்படும் செய்திகளில் தரம் உயர்ந்ததாக இருக்கிறது. முகத்தில் சிலந்திகள் மீசையாகத் துருத்தி இருப்பது போல இந்த நாவலில் வ.உ.சி படும் துன்பங்கள் நம்மைத் துன்புறுத்திக் கொண்டே இருக்கின்றன. அந்தத் துன்பங்களுக்கு அடிப்படையாக இருக்கிற நீதிமன்றத் தீர்ப்பு சாதிகளின் அடிப்படையில் அமைந்திருப்பதை நாவல் முழுக்க பல இடங்களில் அவர் அலசுகிறார். வ.உ.சி குடும்பத்தினர் மிகுந்த சிரமங்களுக்கு உண்டாகி இருப்பது அறத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது. மனுநீதிதான் தீர்ப்பாக வழங்கப்படுகிறது, அந்தத் தீர்ப்பு இன்று சாதி ரீதியான தீர்ப்பாக அளக்கப்படுகிறது என்பதை நாவல் குறிப்பிடுகிறது.

மனுநீதியின் தாக்கங்கள் எந்தக் காலத்திலும் இந்திய சமூகத்தில் இருந்து கொண்டிருப்பதில் அத்தாட்சியாக அந்த வகைக் கூற்றுகள் அமைந்துவிடுகின்றன. வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா போன்றோர் திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பேசியதாக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அதையொட்டி அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அதன் பின்னால் திருநெல்வேலியில் கலவரம் நடக்கிறது. துப்பாக்கிச்சூடு தொடர்கிறது. அதன் பின்னால் வருகிற வழக்கு விசாரணை ஆகியவை இந்த நாவலில் விரிவாக சொல்லப்பட்ட போதிலும் சமகாலத் தன்மையையும் ஞாபகத்தில் கொண்டு எழுதப்பட்டிருப்பது தெரிகிறது. ஆரம்பத்தில் நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பும் பின்னால் மேல்முறையீட்டு காரணமாக உயர் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பும் விரிவாக உள்ளன. அவற்றின் இடையில் நடக்கும் விசாரணை சார்ந்த விஷயங்களும் வ.உ.சி குடும்பத்தினரின் சிரமங்களும் விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன.

ஒரு காலகட்டத்திய சரித்திரச் சம்பவங் களை, சமகாலத் தன்மையை இணைத்து சொல்லப்பட்டிருப்பதை தமிழக அரசியலைக் கூர்ந்து பார்க்கிறவர்கள் உணர்வார்கள். இந்தவகையில் எப்படியோ அவருடைய படைப்புகளில் அரசியல் தன்மை இடம் பெற்றுவிடும். அதை இந்த நாவலிலும் காட்டியிருக்கிறார். தொடர்ந்து இவர் அரசியல் தன்மையைத் தன்னுடைய படைப்புகளில் அடையாளம் காணத் தகுந்த வகையில் எழுதி வருகிறார். இந்த அரசியல் தன்மை வேறு படைப்பாளிகளிடம் அபூர்வமாகவே காணக் கிடைக்கும். ஆனால் அண்டனூர் சுரா தொடர்ந்து சிறுகதைகளிலும் நாவல்களிலும் இந்த அம்சங்கள் ஊடாகவும் படிமமாகவும் நிறைந்திருப்பதை தேர்ந்த வாசகன் உணர்வான். இந்த அரசியல் தன்மையைப் படைப்புகள் கொண்டிருப்பது வேறுவகை படைப்பாளிகள் கைக்கொள்ள வேண்டிய மாதிரிப் படைப்புக்கு உதாரணமாக சுராவின் படைப்புகளை சொல்ல வைப்பது அவரின் தொடர்ந்த முயற்சிகளில் அழுத்தமாக பதிவாகியிருக்கிறது. எக்காலத்திற்குமான நீதியின் போக்கு, தீவாந்தரம்.

தீவாந்தரம் (நாவல்) | அண்டனூர் சுரா

சந்தியா பதிப்பகம் | சென்னை | ரூபாய் 230

- சுப்ரபாரதிமணியன்