பேசிவிட்டே சுயராஜ்யம் பெறலாம் என்று
பெரியபல தீர்மானக் கோவை செய்து
காசுபணப் பெருமையினால் தலைவ ராகிக்
காங்கிரசை நடத்தியதைக் கண்டு நொந்து
‘தேசநலம் தியாகமின்றி வருமோ?” என்று
திலகர்பிரான் செய்தபெருங் கிளர்ச்சி சேர்ந்தே
ஓசைபடா துழைத்தசில பெரியோர் தம்முள்
உண்மைமிக்க சிதம்பரனும் ஒருவ னாகும்.

உழுதுபல தொழில்செய்தே உழைப்போ ரெல்லாம்
உணவும்உடை வீடின்றி உருகி வாடப்
பழுதுமிக அன்னியர்க்குத் தரக ராகிப்
பசப்புகின்ற வீணருக்கோ சுகங்கள்! என்றே
அழுதுருகித் தொழிலாளர் இயக்கம் கண்டே
அந்நாளில் சிதம்பரன்முன் நட்ட வித்தாம்
விழுதுபல விட்டபெரு மரமாய் இன்று
வெவ்வேறு கிளைகளுடன் விளங்கக் காண்போம்.

கள்ளமற்றுக் கலகலத்த பேச்சுக் கேட்கும்;
கறுப்பெனினும் சிரிப்புமுகம் கருணை காட்டும்;
குள்ளமென்னும் ஓர்உருவம் இருகை கூப்பிக்
குண்டெடுத்துக் கடைந்ததெனக் குலுங்க நிற்கும்;
வெள்ளையன்றி வேறுநிறம் அறியா ஆடை
வேதாந்த சித்தாந்த ஒளியே வீசும்;
கொள்ளைகொள்ளை சிறையிருந்த குறிகள் தோன்றும்
குலவுபிள்ளைச் சிதம்பரத்தை நினைவு கூர்ந்தால்.

- நாமக்கல் கவிஞர்

Pin It