69 ஆவது தேசிய விருதுகள் பட்டியலை ஆகஸ்ட் 24 அன்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சரகம் வெளியிட்டது. அதில் பல ஐயங்களும் குழப்பங்களும் நிலவுவதாக எண்ணுகிறேன்.

அவர்கள் வெளியிட்ட விருது பட்டியலில் ஜெய் பீம், கர்ணன், சார்பட்டா பரம்பரை போன்ற குமுக அக்கறை கொண்ட திரைப்படங்கள் இடம்பெறவில்லை. மாறாக காஷ்மீர் பைல், ஆர் ஆர் ஆர் போன்ற பல திரைப்படத்திற்கு விருதுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

தேர்வு(ஜூரி)க் குழுவில் இடம்பெற்றுள்ள எம் எம் ஸ்ரீலேகா அவர்கள், ஆர் ஆர் ஆர் திரைப்படத்திற்காகச் சிறந்த பின்னணி இசைக்கான விருதைப் பெற்ற எம் எம் கீரவாணியின் சகோதரி ஆவார். தேசிய விருதுகளுக்கான விதிமுறைகளின்படி அவரின் வாக்கு எடுத்துக் கொள்ளப்படாது. அவர் வாக்கு செலுத்தவில்லை என்றாலும் மற்ற நடுவர்களை அவர் செல்வாக்குச் செலுத்தக் கூடும். இதனால் இந்தத் திரைப்படத்திற்கு கிடைத்த 6 விருதுகளும் சந்தேகத்திற்குள்ளாகின்றன.

திரைப்பட விழாக்களின் இயக்ககம் (Directorate of film festivals) -கடந்த ஆண்டு டிசம்பர் 31 அன்று இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் (NFDC) என்ற அமைப்புடன் சேர்க்கப்பட்டது. ஆனால் NFDC நிறுவனம் திரைப்படங்கள் தயாரிப்பதால் இந்தத் தேசிய விருதுகளையும் அவர்கள் செய்ய இயலாது என்பதால் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த ஆண்டு நேசனல் பிலிம் அவார்ட்சு செல் என்ற ஆணையத்தை உருவாக்கி அமைச்சகத்தின் கீழ் வைத்திருந்தது. ஆனால் நடுவர்(ஜூரி) தேர்வு செய்தவுடன், அதன் நகலை NFDC இடம் பகிர்ந்துள்ளது. அது மட்டுமின்றி எந்த அரசாணையும் இன்றித் தேசிய விருதுகள் தொடர்பான அனைத்து பண பரிவர்த்தனைகளை அந்த நிறுவனத்திடம் ஒளிவு மறைவாக தந்துள்ளது. குறிப்பாக இந்த விருதுப் பட்டியலில் NFDC தயாரித்த ஒரு திரைப்படமும் விருது வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி சென்ட்ரல் பேனல் எனப்படும் இறுதிச் சுற்றில் NFDC நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருக்கிறார். இதன் மூலம் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. NFDC நிறுவனம்தான் இந்த ஜூரிகளுக்கான சிட்டிங் பீ எனப்படும் தொகையையும் தருகிறது. அது மட்டுமின்றி இந்தத் தேசிய விருதுக்கான திரையிடல் NFDC நிறுவனத்தில்தான் நடந்துள்ளது. இதன் மூலம் குறிப்பாக விருது பரிந்துரைப்பில் பல அரசியல் தலையீடுகள் இருந்துள்ளன.

 தேர்வு(ஜூரி)க் குழுவில் முக்கியமாக அனைத்து தேர்வு உறுப்பினர்களும் பா. ச. க-வை சார்ந்தவர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். ஆகவே நல்ல நல்ல திரைப்படங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தேசியத் திரைப்பட விருதுகளின் விதிமுறைகளின்படி மறுஆக்க (ரீமேக்)த் திரைப்படங்கள் போட்டியில் பங்கேற்க இயலாது. ஆனால் அதை உடைக்கும் விதமாக மிமி என்ற தலைப்பு கொண்ட இந்தி மொழித் திரைப்படம் விருது வென்றுள்ளது. இத் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக மராட்டியப் படத்தைத் தழுவி எடுத்ததாகும்.

இத்தகைய பல குளறுபடிகள் இதில் உள்ளன. மேலும் குறிப்பாக NFDC யின் தலையீடால் இந்த விருதுகளின் மீது மேலும் பல ஐயங்கள் வலுக்கின்றன.

- தில்லிநம்பி

Pin It