சினிமா உலகில் காலாவதியாகிப் போன கதாநாயகன் ரஜினி பல ஆண்டுகளாக எப்படி சொல்வது என்று தெரியாமல் ஆன்மீக அரசியல், ஆன்மீக அரசியல் என்று உளறிக் கொண்டு இருந்ததை இன்று வெளிப்படையாக தமிழ்ச் சமூகத்தின் முன் காட்டி இருக்கின்றார். அதையும் தன்னுடைய ஆன்மீக குருமார்கள் நிறைந்த பாப்பார பஜனை மடத்தில் நின்று கொண்டு வெளிப்படுத்தி இருக்கின்றார். சென்னையில் நடைபெற்ற துக்ளக் வார இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினி, "1971ல் சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ தான் துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார்" என்று மறைந்த பார்ப்பனத் தரகன் சோ.ராமசாமியை புகழ்ந்து தள்ளி இருக்கின்றார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முற்போக்குவாதிகளும் எப்போதுமே சொல்லி வருகின்றோம், இந்த ஆன்மீக அரசியல், தமிழ்த் தேசிய அரசியல் என்று சொல்லிக் கொண்டு ஊருக்குள் சுற்றிக் கொண்டிருக்கும் அத்தனை பயல்களும் அடிப்படையில் பெரியாரை எதிர்க்கக் கூடியவர்கள், அவர்களின் ஒட்டுமொத்த நோக்கமும் தமிழ்நாட்டில் பெரியாருக்கு இருக்கும் மதிப்பையும் அவர் கட்டி எழுப்பிய பார்ப்பனிய எதிர்ப்பு மரபையும் எப்படியாவது சிதைக்க வேண்டும், திமுக என்ற கட்சியை அழித்து பாஜகவை தமிழ்நாட்டில் வேர் கொள்ளச் செய்ய வேண்டும் என்பதுதான். ஏற்கெனவே அதிமுகவை பாஜக கபாளிகரம் செய்து விட்டதால் மிச்சமிருக்கும் திமுகவை வீழ்த்துவதுதான் இப்போதைக்கு பாஜகவின் ஒரே குறிக்கோள்.
இதற்காக பல்வேறு கைக்கூலிகளை அது தமிழ்நாட்டில் பணிக்கு அமர்த்தியுள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு டிசைனில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்வார்கள். ஒருத்தன் ஆன்மீக அரசியல் என்பான், இன்னொருவன் தாங்கள்தான் மையம் என்பான், இன்னொருவன் மலம் அள்ளுபவர்களை தங்களின் பிழைப்பைக் கெடுக்க வந்த எதிரி என்பான், கோயிலுக்கு வெளியே சூத்திரன் (பார்ப்பானின் வைப்பாட்டி மகன்) என்று பட்டம் கொடுத்து நிறுத்திய கும்பலையும் தமிழ்ச் சமூகத்தின் அறிவு வளர்ச்சியை முடமாக்கிய முட்டாள் பயல்களையும் முப்பாட்டான், பெரும்பாட்டன், பெரும்பாட்டி என்று ஹை டெசிபலில் கதறுவான். ஆனால் இவர்கள் அனைவரும் ஒன்றுபடும் புள்ளி என்பது பார்ப்பனியம். நீங்கள் நன்றாகக் கவனித்தால் இந்தக் கும்பல்கள் ஒன்றுகூட தமிழ்நாட்டின் ஜீவாதாரமான எந்தப் பிரச்சினைகளுக்காகவும் களத்தில் இறங்கி உயிர்ப்பாக, உண்மையான அக்கறையோடு போராட்டம் செய்திருக்க மாட்டார்கள். ஆர்ப்பாட்டம், போராட்டம் என்பதை எல்லாம் தேசவிரோத செயலாகப் பார்க்கும் பார்ப்பன - முதலாளித்துவ சிந்தனையை ஊக்குவிப்பவர்களாகவும் இருப்பார்கள். மேலும் இன்று முஷ்டியை முறுக்கும் இவர்கள் அனைவருமே பார்ப்பன ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் அவருக்கு ஓட்டு கேட்ட, மன்னிப்பு கேட்ட, காலில் விழுந்த வீரர்கள்தான்.
இப்படி பார்ப்பனியத்திற்கு அடியாள் படையாக செயல்படும் இவர்கள் யாருமே சுயமாக சிந்தித்துப் பேசும் ஆற்றலற்றவர்கள். இவர்கள் என்ன பேச வேண்டும், எப்படி சர்ச்சையைக் கிளப்ப வேண்டும் என்பதெல்லாம் ஏற்கெனவே நாக்பூர் நரிகள் மூலம் திட்டமிடப்பட்டு வழிகாட்டப் படுகின்றது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இவர்கள் அனைவருமே ஏதோ தனிப்பட்ட அரசியல் கொள்கைகளுடன் இருப்பவர்கள் போலத் தெரிவார்கள். ஆனால் அவர்களின் அரசியலின் மையக் கருத்தை ஆராய்ந்தால் அனைத்துமே பார்ப்பனிய ஆதரவு என்பதாகத்தான் இருக்கும்.
ஒரு வகையில் நாம் ரஜினியை பாராட்டத்தான் வேண்டும். காரணம் அவர் வெளிப்படையாகவே பெரியார் எதிர்ப்பைப் பேசி, தான் திராவிடம் என்ற பார்ப்பனிய எதிர்ப்பு மரபுக்கு எதிரி என்பதைக் காட்டி விட்டார். முழுவதும் நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று நினைத்திருக்கலாம் இல்லை தேர்தல் வருவதால் பிஜேபி ஒரு சீட்டை மட்டும் தற்போதைக்கு இறக்கி விட்டு ஒத்திகை பார்க்கின்ற முயற்சியாகவும் இது இருக்கலாம். தற்போதைக்கு ரஜினி ஒரு மகா பொய்யன் என்பதும், பிஜேபியின் ஊதுகுழலாகத்தான் அவர் செயல்பட்டு வருகின்றார் என்பதும் பட்டவர்த்தனமாக தமிழ்நாட்டு மக்கள் முன் அம்பலமாகி இருக்கின்றது.
எந்தவித ஆதாரமும் இன்றி நாக்பூர் நரிகள் எழுதிக் கொடுத்ததை அப்படியே வாந்தி எடுத்த ரஜினி, தற்போது அதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளதால் வேறு வழியின்றி 2017ல் அவுட்லுக் பத்திரிகையில் அது பற்றி செய்தி வந்ததாகவும், அதைத்தான் தான் சொன்னதாகவும் கூறி மன்னிப்பு கேட்க முடியாது என்று திமிர்த்தனமாக பதில் கூறி இருக்கின்றார்.
மத்தியில் பிஜேபியும் மாநிலத்தில் அதன் அடிமைகளும் ஆட்சி செய்வதால் தன்னை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற நம்பிக்கையில்தான் ரஜினி அப்படி சொல்கின்றார். ஏற்கெனவே விசமத்தனமாகவும், பொறுக்கிகள் போன்றும் பேசித் திரியும் எச்.ராஜா, எஸ்.வி சேகர் ஒய்.ஜி.மகேந்திரன் போன்ற பார்ப்பனர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் தற்போதைக்கு ரஜினி நிம்மதியாகவே இருப்பார்.
இருப்பினும் ரஜினி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ரஜினியின் உருவப் பொம்மையை எரித்து ஆதித் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகம் செய்திருக்கின்றது. அதே போல பெரியார் பற்றிய பொய்யான தகவலைப் பரப்பி பெரியாரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன் வதந்தி பரப்பும் வகையிலும், பொது அமைதியைக் குலைக்கும் வகையிலும் பேசியதாக, நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால், வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரஜினி என்ற காரியவாதக் கழிசடை தற்போது முற்று முழுக்காக அம்பலமாகி இருக்கின்றார். ஆனால் இன்னும் சில கழிசடைகள் குயுக்தியான வழிகளை மேற்கொண்டு இன்னும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றன. பெரியார் எதிர்ப்பு என்பது திராவிடம் என்ற பார்ப்பனிய எதிர்ப்பு மரபுக்கு எதிரானது, அது சாதியை நக்கிப் பிழைப்பது, மதவெறியை நக்கிப் பிழைப்பது, பெண்ணடிமைத்தனத்தைக் கொண்டாடுவது, தமிழினத்தின் மீது திணிக்கப்பட்ட சூத்திரப் பட்டத்தைவிட்டு அவர்கள் வெளியேறாமல் கட்டிக் காப்பாற்றுவது. அதனால்தான் திராவிட எதிர்ப்பு பேசும் அயோக்கியர்கள் அனைவருமே அதற்கு மாற்றாக பார்ப்பனியத்தை நக்கிப் பிழைக்குமாறு தமிழினத்திற்கு உபதேசம் செய்கின்றார்கள். பெரியாரையும், திராவிடம் என்ற கருத்தியலையும் எதிர்க்கும் யாருமே ஏன் சாதிக்கு எதிராகவும், பார்ப்பன இந்து மதத்திற்கு எதிராகவும், அதன் குப்பைகளான மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும், பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகவும் பேசுவதில்லை என்பதில் இருந்தே அவர்கள் யார் என்பதை நாம் அடையாளம் கண்டு கொள்ளலாம்.
இவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல பெரியாரின் மீது தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ள நன்மதிப்பையும், அவரால் இந்த மக்கள் அடைந்த பெரும் பயனையும் ஒரு நாளும் அழித்துவிட முடியாது. பெரியாரைப் பற்றி இழிவாகப் பேசும் காரியவாத கழிசடைகளுக்கு நாம் சொல்லிக் கொள்வதெல்லாம் உங்களின் வயது என்ன? அதே வயதில் பெரியார் இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காவும் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். கட்சி ஆரம்பிக்கின்றேன், கட்சி ஆரம்பிக்கின்றேன் என்று 70 வயது ஆகியும் கூட கட்சி ஆரம்பிக்கத் துப்பில்லாமல் நான்காம் தரப் படங்களில் சில்மிசம் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்து கோடி கோடியாய் தமிழ் மக்களின் பணத்தை சுருட்டும் கேடுகெட்ட நபருக்கு பெரியாரைப் பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கின்றது?
ஒருவரை பற்றி விமர்சனம் செய்வதற்குக் கூட குறைந்தபட்சத் தகுதி வேண்டும். சமூக மாற்றத்திற்காக துரும்பைக் கூட தூக்கிப் போடாத ரஜினி போன்ற பிஜேபியின் ஊதுகுழல் கும்பல்களுக்கு பெரியார் என்ற பெயரை சொல்வதற்குக் கூட தகுதி கிடையாது. அதற்காக பெரியார் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்று அர்த்தமல்ல, உண்மைத் தகவல்களுடன் உங்களின் விமர்சனங்களை வையுங்கள். அதற்கு பதில் கூறும் பொறுப்பும், திராணியும் ஓவ்வொரு பெரியாரிய இயக்கத் தோழர்களுக்கும் இருக்கிறது. அதை விட்டுவிட்டு அவதூறு பரப்ப வேண்டும் என்ற தீய நோக்கத்தில் பொய்களின் மீது நின்று கொண்டு அவரின் புகழுக்கு களங்கம் செய்வீர்கள் என்றால், அதற்கான எதிர்வினையை நீங்கள் சந்தித்தே ஆக வேண்டும். பெரியார் இயக்கத் தோழர்கள் ஒன்றும் கோழைகள் அல்ல!
- செ.கார்கி