கடந்த 23/02/2023 அன்று தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர்.வீரபாண்டியன் அவர்கள் பட்டுக்கோட்டையில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி பரக்கலக்கோட்டை எனும் இடத்தில் அவரது இருசக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது பிற்பகல் 3.00 மணியளவில் அவர் வண்டியின் பின்புறத்தில் இருந்து வந்த ஒரு மகிழுந்து அவரது வண்டியின் மீது மோதியுள்ளது. இதனால் நிலை தடுமாறிக் கீழே விழுந்து காயங்களுடன் கிடந்த தோழர் வீரபாண்டியனை மகிழுந்தில் இருந்து இறங்கிய அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட குழுவினர் அவர்கள் மகிழுந்திலிருந்து எடுத்துவந்த உருட்டுக் கட்டைகளால் கடுமையான கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதோடு நில்லாமல் கொலை செய்யும் நோக்கில் அவர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளனர். அதைத் தோழர் வீரபாண்டியன் தடுத்தபோது அவரது கையில் கடுமையான வெட்டுக்காயம் ஏற்படுகிறது.

அந்த நேரத்தில் அவ்வழியே மக்கள் வருவதைப் பார்த்த அக்கும்பல் அப்படியே அவரை விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. அவர்கள் வந்த அந்த மகிழுந்து வெளிர்மஞ்சள் நிறத்தில் இருந்துள்ளது. அடைபட்டுக் கிடந்த மயக்கத்தில் அம்மகிழுந்தின் பதிவெண்ணைப் பார்க்க முடியவில்லை. கத்தியால் குத்தும் போது அக்கும்பலில் இருந்த ஒருவன் "நீ முத்துப்பேட்டையில் பெரிய ஆளாடா; நாங்கள் இல்லாட்டியும் வேறு யாராவது உன்னைப் போட்டுத் தள்ளாமல் விடமாட்டார்கள்; சீக்கிரம் உன்னைக் கொலை செய்வோம்; உன் இயக்கத்தை வைத்து எங்களை ஒன்றும் புடுங்க முடியாது." எனக் கொலை மிரட்டல் விடுத்துள்ளான்.

தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத் தோழர்களுக்கு உடனே தகவல் கொடுக்கப்பட்டுத் தோழர்கள் விரைந்து சென்று தோழர் வீரபாண்டியனை மீட்டுத் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வெட்டுப்பட்ட இடத்தில் ஆறு தையல்கள் போடப்பட்டு உள்நோயாளியாக ஐந்து நாள்கள் சிகிச்சை பெற்றுப் பின்னர் வீடு திரும்பி இருக்கிறார்.

இந்த நிகழ்வு குறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் கடந்த 25/02/ 2023 அன்று முறையீடு கொடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று பரக்கலக்கோட்டையில் உள்ள ஒரு கண்காணிப்பு 'கேமரா'வை ஆய்வு செய்ததில், குறிப்பிட்ட நிகழ்வு நடந்த அந்த நேரத்தில் வெளிர்மஞ்சள் நிற டாட்டா இண்டிகோ மகிழுந்து அந்த வழியே வேகமாகச் சென்றுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். தோழர் வீரபாண்டியன் கொடுத்த முறையீட்டின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை எண்:48 இந்திய தண்டனைச் சட்டம் 279, 337, 341, 324, 506(2)உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அதிராம்பட்டினம் காவல்துறையினர் மேற்படி அப்பகுதிகளில் சுற்றியுள்ள கண்காணிப்புக் கேமராக்களை மேலும் ஆய்வு செய்யவும் இல்லை, அடுத்தபடியாக வழக்கு குறித்த எந்த மேல் உசாவலையும் நடத்தி முறையீட்டாளருக்கு இதுவரையில் தெரிவிக்கவும் இல்லை.

எனவே தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் சார்பாக "பரக்கலக்கோட்டையில் மகிழுந்தைக் கொண்டு மோதியும், கத்தியால் குத்தியும் கொலை செய்ய முயற்சி செய்த மர்மக் கும்பலை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், தோழர் வீரபாண்டியன் அவர்களுக்கு ஆயுதம் ஏந்திய காவலர் பாதுகாப்பும் வழங்க வலியுறுத்தியும்" மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் முத்துப்பேட்டையில் நடத்த முடிவு செய்யப்பட்டு இசைவு கோரப்பட்டது. ஆனால் அப்பொதுக் கூட்டத்திற்கான அனுமதியும் முத்துப்பேட்டை காவல் துறையினரால் மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் முத்துப்பேட்டையில் தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் கிளை அமைக்கப்பட்டுக், கொடி ஏற்றப்பட்டுப், பெயர் பலகையும் வைக்கப்பட்டது. ஆனால் அந்நிகழ்வை முத்துப்பேட்டையில் இயங்கி வரும் பாஜகவினர் கடுமையாக எதிர்த்துள்ளனர். தோழர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் அவர்கள் கூட இருக்கலாம் என்று தோழர்கள் ஐயம் கொள்கின்றனர்.

எனவே, தஞ்சை மாவட்டக் காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்துத் தாக்குதல் நிகழ்வில் ஈடுபட்ட அந்தக் கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக மக்கள் முன்னணி வலியுறுத்துகிறது.

Pin It