சிவனிய சமயம் என்பது ஆரிய சமயமா?
மறைமலை அடிகளார், குன்றக்குடி அடிகளார், பேரூர் சாந்தலிங்க அடிகளார் போன்றோர் தமிழர்களின் நெஞ்சங்களில் நிற்கிறார்கள்.. தமிழ் மீட்பு வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறார்கள்.. ஆனால் வேறு எந்த மடங்களின் ஆதீனங்களும் வரலாற்றில் மக்களிடம் அறியப்பட்டிருக்கிறார்களா?
மயிலாடுதுறையில் நவம்பர் 1 முதல் பத்து வரை நடைபெறுகிற தருமபுரம் ஆதீனத்தின் மணி விழா மாநாட்டின் நிகழ்ச்சிகள் முழுக்க முழுக்க ஆரியச் சார்புடையனவாகவே நடைபெறுகின்றன..
மாநாட்டின் இரண்டாம் நாள் கலந்து கொண்ட ஆளுநர் ஆர் என் இரவி கலந்து கொண்டார்.. இந்திய அரசின் அதிகாரத்தில் இருக்கிறார் என்பதைக் கடந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை.. அவர் சிவனியரும் அல்லர்; தமிழ் உணர்வினரும் அல்லர்..
திருஞானசம்பந்தர் அவர்களால் தொடங்கப்பட்ட தருமபுரம் ஆதீனமடம் சிவனியத்தை வளர்ப்பதற்காகத் தொடங்கப்பட்டது.. சனாதனத்தோடு எவ்வகைத் தொடர்புமற்றது..
அதன் கட்டுப்பாட்டில் ஏறத்தாழ 20 கோயில்கள் உள்ளன.. 40 பள்ளிக்கூடங்கள் இயங்குகின்றன..
பெரும்பாலான கோயில்களுக்குத் தமிழில் பெயர் இல்லை.. சிவலோகத்தியாகர் கோயில், வைத்தீஸ்வரன்கோயில், மகாலட்சுமீசர் கோயில், வீரட்டேசுவரர் கோயில், உத்தவேதீசுவரர் திருக்கோயில், உசிரவனேசுவரர் கோயில், அமிர்தகடேசுவரர் கோயில், அருணஷடேசுவரர் கோயில், உஜ்ஜீவநாதர் கோயில், கைலாசநாதர் ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் கோயில், தர்ப்பாரண்யேசுவரர் கோயில் போன்றவை தமிழ்ப் பெயரற்ற கோயில்கள்
அங்கு நடைபெறுகிற பூசைகளின் பெயர்களைப் பாருங்கள்:
கோ பூஷை, ஸ்ரீ அஷ்டதசுபுஷ துர்க்கை அபிஷேகம், க்ஷ பூஷை, அஸ்வ பூஷை, அஷ்பூஷை பஞ்ச கல்யாணி பூஷை போன்றவை நடைபெறுகின்றனவாம்..
வேதபாராயணம், திருமுறை முற்றோதல் இரண்டும் நடத்தப்பெறுகின்றன..
இந்நியிலயில், சிவனியமும் வைதீகக் கருத்துடைய சனாதனமும் ஒன்றுதான் என்று சிவனிய மூலவர்கள் எவரும் சொல்லியதில்லை..
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் - என்பதற்கு நீ ஆரியனாய் இருக்கின்றாய் நீ தமிழனாகவும் இருக்கின்றாய் என்று சுனித் குமார் சாட்டர்ஜி உள்ளிட்டோர் பொருள் திரித்து உரைத்ததைப் பாவாணர் அவர்கள் "அவன் ஆரியன் காண்; அவன் தமிழன் காண் என்று படர்க்கைக் கூற்றுகளேயன்றி, முன்னிலைக் கூற்றுகளல்ல" என்று விளக்குவார்..
மாணிக்கவாசகர் காட்டுகிற விளக்கங்களையெல்லாம் மறைமலையடிகள் மிகவும் விரிவாகவே எடுத்துரைப்பார்..
சிவனியம் இந்து மதத்திற்குச் சிறிதும் தொடர்பற்றது; சிவனியர்கள் இந்துக்கள் அல்லர் என்பதை மறைமலையடிகளாரும், குன்றக்குடி அடிகளாரும், பேரூர் சாந்தலிங்கம் அடிகளாரும் படித்துப் படித்து சிவனியர்களுக்கு எடுத்து விளக்கியிருக்கின்றனர்..
ஆனால், தருமபுரம் ஆதீனம் சிவனிய சமயப் பெருமக்களின் வழிகாட்டல்களை ஏற்றுக் கொண்டதுபோல் தெரியவில்லை..
சனாதனம் வருணாச்சரமத்தை வலியுறுத்துவது..
சிவனியம் வருணாச்சரமத்தை ஏற்பதில்லை..
ஆனால், தருமபுரம் ஆதீனங்களின் சாதிய நடைமுறை கடைபிடியோ வருணாச்சிரமம் போன்றது..
பாவாணர் அவர்களே தன் வாழ்வில் சிவனிய மடங்களில் சாதிய நிலையில் பட்டபாடுகளை எழுதியுள்ளார்..
ஆக, சிவனிய(சைவ)ர்கள் தமிழ் உணர்வோடும், பொதுமை அற உணர்வோடும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இவற்றை எழுத நேர்ந்தது..
ஆரியத்தாலும், சமசுகிருதத்தாலும் தமிழ்நாடும் தமிழும் எந்த அளவு அடிமைப்பட்டுப் போயிருக்கிறது என்பதையும், அவற்றை மீட்க மறைமலை அடிகளாரும், குன்றக்குடி அடிகளாரும், சாந்தலிங்க அடிகளாரும் எந்த வகையில் எல்லாம் பாடாற்றினர் எனத் தங்களுக்குச் சான்றாளர்களாக எண்ணிச் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்..
- பொழிலன்