உலகமயம், தாராளமயம், பெருகிவரும் தனியார்மயம் ஆகியவற்றின் பின்னணியில், பன்னாட்டு அமைப்புகள், நாடுகடந்த நிறுவனங்கள், உலகவங்கி, பன்னாட்டு நாணயநிதியம், உலகவணிகக் கூட்டமைப்பு போன்றவற்றின் செயல்பாட்டுச் சூழலில், குறிப்பாக ஏகாதிபத்தியத்தின் நவகாலனியக் காலக்கட்டத்தில் தேசிய இனச் சிக்கல் முக்கியமானதும் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டுவதுமான பரிமாணங்களைப் பெற்றிருக்கிறது. ஐரோப்பாவில் முதலாளிய ஜனநாயகப் புரட்சியின் தோற்றத்துடன் தேசிய இனச்சிக்கல் அரசியல் பொருளாதார இயக்கமாக முன்னுக்கு வந்தது. ஜெர்மனி, இத்தாலி போன்ற தேசிய அரசுகள் உருவாக்கத்துடன் அது தீர்வினைக் கண்டது.

காலனியக் காலகட்டத்தின்போது காலனிகளாக்கப்பட்டதும் உருவாகிக் கொண்டிருந்ததுமான பல்வேறு தேசங்களும், தேசிய இனங்களும் தங்கள் தேசிய இனச்சிக்கல்களை (தேசிய இன ஒடுக்குமுறைகளை) ஆசியா, ஆப்பிரிக்கா இலத்தீன் அமெரிக்கா நாடுகளைப் போல் காலனித்துவத்திற்கு எதிராகப் போராடுவதன் மூலமும், காலனித்துவ அதிகாரங்களிடம் இருந்து அரசியல் விடுதலை பெறுவதன் மூலமும் அல்லது பிரிந்து செல்வதன் மூலமும் தீர்வு கண்டன..

மேற்கண்ட முதலாளியத்தின் இரண்டு காலகட்டங்களிலும், தேசிய இயக்கம் அதன்சாரத்தில் தேசியத் தொழில்களின் ஒன்றுதிரட்டலிலும் வளர்ச்சியிலும் கவனம் கொண்டதாகவோ அல்லது காலனித்துவத்திடமிருந்து தேசியத் தொழில்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டதாகவோ இருந்தது. ஏகாதிபத்தியத்தின் புதிய காலனித்துவக் கட்டத்தில், புதிய காலனியக் கொள்ளையைக் கணக்கில் கொள்ளும்போது தேசியத் தொழிலை மறுவரையறை செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. பழைய காலனியத்தோடு ஒப்பிடுகையில் புதிய காலனியத்தின் அடிப்படைப் பண்புக்கூறுகளைப் பின்வருமாறு சுருக்கமாகத் தொகுக்கலாம்:blindfolded manபுதிய காலனியம் ஏகாதிபத்தியவாதிகளின் கொள்ளையடிப்புக்கான மறைமுகவழி மட்டுமே அல்ல, அதன் முறைகளும் வழிகளும் நாசகரமானவை மட்டுமே அல்ல, மாறாக அது பழைய காலனியத்திலிருந்து உள்ளார்ந்த வகையிலும் வேறுபட்டது.. சமயங்களில் அது பழைய காலனியத்திற்கு நேர் எதிரானதும் கூட! புதிய காலனியம் மிக நுட்பமாகச் செயல்படுகிறது, நம் ஒட்டுமொத்த வாழ்க்கையின் முழுமைக்குள்ளும் அது ஊடுருவி, வாழ்க்கையின் உள்ளடக்கம், சிந்தனை, செயல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது..

காலனித்துவம் உள்நாட்டுத் தொழிலை நசுக்குவதன் மூலம் அதன் அதிகாரத்தை நிறுவியது. ஆனால் புதிய காலனியமோ உள்நாட்டுத் தொழிலை ‘மேம்படுத்துவதன்’ மூலம் ஆட்சி செலுத்துகிறது! நிலப்பரப்புத்துவம்தான் காலனித்துவத்தின் சமூக அடித்தளமாகும். ஆனால் தரகு முதலாளியமும் நிலப்பிரபுத்துவமும் புதிய காலனித்துவத்தின் அடித்தளங்களாகும். அதற்கேற்ப சமூக அடித்தளம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. புதிய காலனித்துவத்தில் மய்யப்ப்படுத்துதல் என்பது முக்கியமான உந்துவிசையாகும்.

முந்தைய முதலாளிய, காலனியக் கட்டங்களில், அறிவியல் தொழில்நுட்ப மேம்பாடுகள் சமூகத்தை ஜனநாயகப்படுத்த உதவின. ஆனால் புதிய காலனியத்தில் நவீன அறிவியலும், தொழில்நுட்பமும் மனிதனை இயற்கைக்கு எதிராக நிறுத்துகின்றன. இவ்வாறு அவை சமூகத்தை அதிகளவு பாசிசமயமாக்குவதற்குக் காரணமாக அமைகின்றன. மூலதன ஏற்றுமதி என்பது முதலாளித்துவத்தின் சிறப்புப் பண்பாக இருந்தது. ஆனால் நவீன அறிவியல் ஏற்றுமதியும் தொழில்நுட்ப ஏற்றுமதியும் புதிய காலனித்துவத்தின் அடிப்படைகளாக உள்ளன. இவையிரண்டும் கட்டுப் படுத்தவும் சுரண்டுவதற்குமான கருவிகளாக உள்ளன.

சுருக்கமாகச் சொன்னால் “கட்டுப்படுத்தவும் சுரண்டவும் அழித்தொழி” என்பது பழைய காலனியவாதிகளின் மைய முழக்கமாகும். “கட்டுப்படுத்தவும் சுரண்டவும் ‘மேம்படுத்து’” என்பது புதிய ஏகாதிபத்தியத்தின் மையப் பேசுபொருளாகும். எனவே புதிய காலனிய வளர்ச்சி என்பது நமது சமூக, பண்பாட்டுக் கட்டுமானத்தை அழிப்பதோடு மட்டுமின்றி, நமது வாழ்வாதாரத்தையும் அழித்து விடுகிறது. எனவே இது மேலும் நாசகரமானதும், பேரழிவை ஏற்படுத்தக் கூடியதும் ஆகும்.

மேலும் பொதுவாகவே, புதிய காலனியத்தின்கீழ் புதிய காலனிகள் எதிர்கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட ஏகாதிபத்தியம் என்ற ஒன்றில்லை. இதன் காரணமாகப் புதிய காலனிகள், இந்த அல்லது அந்த ஓர் ஏகாதிபத்தியச் சக்தி அல்லது சக்திகளிடமிருந்து என்றில்லாமல், ஒட்டுமொத்த ஏகாதிபத்திய அமைப்பிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது.

மேற்கண்டவற்றின் வெளிச்சத்தில் பார்க்கும்போது, ஏகாதிபத்தியம் ஒர் அமைப்பு என்ற அதன் பிடியிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை என்பதை இன்று தேசிய இனச் சிக்கலின் தீர்வு கவனத்தில் கொள்ளவேண்டி உள்ளது. இவ்வாறு இன்று அது அனைத்தும் தழுவிய விடுதலையாக உள்ளது. அதுவே அதன் சாரமாக உள்ளது. வெறுமனே தேசிய அரசுகள் அமைதல் அல்லது பிரிந்து போதல் என்பதாக இல்லை.

மாறாக, இத்தகையதொரு சூழலில் தமது நிகழ்ச்சி நிரலில் ஏகாதிபத்திய அமைப்பைத் தூக்கி எறியும் கண்ணோட்டத்தைக் கொண்டிராத தேசிய இயக்கங்கள், வேறொரு போர்வையில் அடிமைத்தனத்தைத் தொடர்ந்து நீடித்திருக்கச் செய்வதோடு அவை சாரத்தில் எதிர் விளைவையே உண்டாக்கும். வேறு சொற்களில் கூறுவது என்றால், ஏகாதிபத்தியங்கள் தமது ஏகாதிபத்திய அமைப்பின் நலனை நீடித்திருக்கச் செய்யவேண்டி, சமூக மறு கட்டமைப்பை நோக்கமாகக் கொண்டிராத பிரிவினைகளை ஊக்குவிக்கின்றன.

எது எப்படியிருப்பினும், புதிய காலனிய நாடுகளில் தேசிய இனச் சிக்கலைத் தீர்ப்பதற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கத்தோடு தேசிய விடுநலைப் போராட்டத்தைத் தொடர்வது தேவையாகிறது.

மறுபுறம் தேசங்களின் சிறைக்கூடங்களாக உள்ள புதிய காலனிய நாடுகள் புதிய ஏகாதிபத்திய அமைப்பிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டுமெனில், அவை தேசிய இனச் சிக்கலைத் தீர்க்க வேண்டியது இன்றியமையாதது ஆகும்.    

எனவே தேசிய விடுதலை அரசியல் இயக்கமானது ஏகாதிபத்திய அமைப்பை அகற்றிவிட்டு மாற்றாக அதன் இடத்தில் அந்த நாட்டுக்குரிய (indigenous) மக்கள் அமைப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடு அணிதிரட்டும் போது மட்டுமே, அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதானது பொருத்தமானதாகவும் பொருளுடையதாகவும் இருக்கும். இவ்வகையில் சோவியத் யூனியன் நமக்கு ஒரு முன்னெடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அங்கு முக்கிய துறைகளில் சோசலிச இலட்சியங்களை அடைவதற்குச் சோசலிசம் அற்ற வழிமுறைகள் முயற்சிக்கப்பட்டன,

வழிமுறைகள் நோக்கங்களைச் சிதைத்தன, எந்த அமைப்பை ஒழித்துக் கட்ட அவர்கள் விரும்பினார்களோ, அது மீண்டும் அமைந்திடவும் வலிவு பெறவுமே அவை உதவின.

இந்தியா போன்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வின் ஒட்டுமொத்தப் பரப்பையும் தழுவிய அந்த நாட்டுக்கே உரிய மக்கள் இயக்கம் ஓன்றை வளர்த்தெடுக்கும்போது தான் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமானது பொருள் உள்ளதாக இருக்கும். தேசிய இன சிக்கலைத் தீர்ப்பது அல்லது பல்வேறு தேசிய இனங்களின் இயக்கத்துடன் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தொடர்வது என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் ஓன்றை வளர்த்தெடுப்பதற்குத் தேவையான மூலவுத்தியாக இருக்கும்.

வேறு சொற்களில் சொல்வதென்றால் தேசியக் கட்டமைப்புகள் அனைத்துச் சமூக ஆய்வுகளுக்கும் சமூக வடிவமைப்புக்கும் அடிப்படையாக அமைகின்றன.

மொத்தத்தில் மையப்படுத்துதல் உண்மையாகவே மக்களுக்கு எதிரானதாகும். கூடுதலான தன்னாட்சியையும், மையத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையில் கூடுதலான மூலவளங்கள், வருவாய் ஆதாரங்கள் பகிர்வையும் மாநிலங்கள் கோருவது, மையப்படுத்தலுக்கு எதிரான வளர்ந்து வரும் தேசிய உணர்வின் அறிகுறிகளே ஆகும்.

பல்வேறு ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தனி மாநிலம் அல்லது தன்னாட்சிப் பகுதிகள் என்ற வடிவத்தில் தேசிய அடையாளத்தைக் கோருவது, அதிகரித்துவரும் அரசியல் அதிகார மய்யப்படுத்தலுக்கு எதிரான வெளிப்பாடே ஆகும். எடுத்துக்காட்டு கோர்க்காலாந்து, போடோலாந்து ஜார்கண்டு சத்தீஸ்கர் விதர்பா முதலியவை.

மையப்படுத்தலுக்கு எதிரான இந்த இயக்கங்கள் பொருளுள்ளவையாக இருக்க வேண்டுமெனில், அதிகாரப் பரவலாக்கல் சிற்றூர் அல்லது அதனினும் சிறிய ஊர் மட்டத்திற்கு சென்றடைய வேண்டும். தேசம் அல்லது தேசிய இனத்திற்குள்ளே இருக்கும் சமூகப் பண்பாட்டு அடையாளங்களின் வேறுபாடுகளையும் பன்மைத் தன்மையையும் போற்றவும் அறிந்தேற்கவும் வேண்டும்

நமது சமூகத்தை வலிந்து ஒருமைப்படுத்த முயற்சிப்பது மையப்படுத்தலின் இன்னொரு நீட்சி தான். இந்துத்துவச் சித்தாந்தத் திணிப்பும் அகண்ட பாரதத்திற்கான அறைகூவலும் கூட வலிந்து ஒருமைப்படுத்தலின் வெளிப்பாடுகளே. இந்தி பேசாத மக்கள் மீது இந்தியைத் திணிப்பதும் கூட சமூகத்தை இந்து-இந்தித் தேசமாக ஒருமைப்படுத்துவதற்கான மற்றுமொரு முயற்சிதான். சமூக, பண்பாட்டு, மொழி சார்ந்த கட்டுமானத்தின் பன்மைத் தன்மையையும், வேறுபாடுகளையும் நோக்குகையில், வலிந்து ஒருமைப்படுத்துதல் நடைமுறைப்படுத்தப்படுமானால், அது ஒருவர் தன் சொந்த அடையாளத்தை வன்முறை வடிவத்தில் வலியுறுத்துவதற்குத் தவிர்க்க இயலாமல் வழி வகுக்கும்.

புதிய காலனியமானது ஒரு சர்வதேச அமைப்பாக இருக்கும் போது தேசிய விடுதலை இயக்கங்கள் தன்னந்தனியானவையாக இயங்க முடியாது. உள்நாட்டு மக்களின் அரசியல், பண்பாடு, சமூக, நில உரிமைகளை வலியுறுத்தும் தேசிய ஜனநாயக இயக்கங்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், பொதுஎதிரிக்கு எதிரான சாத்தியமான நடைமுறை ஏற்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளவும், பல்வேறு இதர மக்கள் இயக்கங்களோடு ஒரு கூட்டணியை உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது. இவ்வாறு இந்தியத் துணைக்கண்டத்தில் பல்வேறு தேசிய ஜனநாயக இயக்கங்கள் ஒன்றுபட்டு இயங்க ஏதுவான கூட்டமைப்பு உருவாவதோடு மட்டுமின்றி, ஆப்பிரிக்கா ஆசியா, இலத்தீன் அமெரிக்கா இயக்கங்களோடு சேர்ந்தியங்கும் அமைப்பாகவும் அது உருவெடுக்கும்.

சில தேசிய இயக்கங்கள் இனவெறி பாசிச ஆற்றல்களாகச் சீரழிந்து போயுள்ளதை நாம் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. புதிய காலனி நிலைமைகளின் கீழ் தேசிய இனச் சிக்கலைச் சரியாகப் புரிந்து கொள்ளாததாலும், மரபான தப்பெண்ணங்களின் காரணமாக இடதுசாரிகள் தேசிய இனச் சிக்கலை ஆதரிக்கத் தவறியதாலும், அவ்வியக்கங்களுக்குத் தலைமை தரத் தேவையான முன் முயற்சிகளை எடுக்கத் தயங்கியதாலும் இது நிகழ்ந்துள்ளது. இத்தகைய நிலைமைகளில் இந்த இயக்கங்களை முன்னெடுத்துச் செல்லும் முதலாளிய மற்றும் குட்டி முதலாளிய ஆற்றல்கள் தம்மோடு இனவாத பண்புக் கூறுகளையும் எடுத்துச் செல்வது வியப்பளிக்கக்கூடிய செய்தி அல்ல. இந்த இயக்கங்களில் பெண்கள் தலித்துகள் அந்த நாட்டு மக்கள் ஆகியோரின் அதிகரிக்கும் பங்களிப்பு மட்டுமே, இந்த இயக்கங்களின் ஜனநாயக கண்ணோட்டத்தையும் உணர்வையும் நீடித்திருக்கச் செய்வதற்கான ஒரே வழியாகும்.

சுற்றுச்சூழல் இயக்கங்கள், சூழலிய இயக்கங்கள், அணு எதிர்ப்பு இயக்கங்கள், பெண்கள் இயக்கங்கள் மத, தேசிய சிறுபான்மையினர் இயக்கங்கள் ஆகியவை கூலி -உழைப்பு, மூலதனம் என்ற சட்டகத்தைத் தாண்டி நம்மைப் பார்க்க வைத்தன; மேலும் அவை ஒரு மாற்று அமைப்புக்குத் தேவையான கண்ணோட்டத்தின் பரிணாம வளர்ச்சிக்கும் குறிப்பிடத் தகுந்த அளவிற்குப் பங்களிப்புச் செய்தன. இதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இருந்த போதும், இந்த இயக்கங்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேசிய விடுதலை என்ற உள்நாட்டு மக்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலையும், தேசிய உள்ளடக்கத்தையும், தற்சார்பை நோக்கிய வடிவத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒருங்கிணைந்த ஒரு முழுமையாகத் தம்மை ஒன்றிணைத்துக் கொள்ளாவிட்டால், அவை பயனற்றவையாக மாறுவதோடு, எந்த மக்களுக்காகப் போராட வந்தார்களோ, அவர்களுக்கே எதிரான ஓர் ஆற்றலாகச் சீரழிந்து போய்விடுவார்கள்.

புதிய காலனிய நிலைமைகளில் தேசிய விடுதலை இயக்கம் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆற்றலாக உருவெடுக்காமல் தேசிய இன சிக்கலைத் தீர்க்க முடியாது. அதே சமயம் தற்சார்புத் தேசியத்தை வடிவமாகவும், ஏகாதிபத்தியத்தை அகற்றுவதை உள்ளடக்கமாகவும் கொண்ட ஆற்றலாகத் தன்னை வளர்த்துக் கொள்ளாதவரை, எந்த ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமும் பொருண்மை ஆற்றலாக உருவாக முடியாது.

இடதுசாரிகளின் தேச உடமையாக்கல் என்ற முழக்கமானது இன்று அரதப் பழசாக மாறிவிட்டது. புதிய காலனியம் இந்த முழக்கத்தை கேலிக்கூத்தாக்கி விட்டது. தற்சார்பில்லாத சுதேசி என்ற முழக்கமும் கூட ஒரு கேலிக்கூத்து தான்.

பசுமைப் புரட்சியானது உயிர் பிழைத்திருத்தலையே அழித்துக் கொண்டிருக்கும் போது, வேதியல் உரத்தொழிற்சாலை ஒன்று உள்ளூர்க்காரருக்கு உடமையாக உள்ளதா அல்லது வெளியூர்க்காரருக்கு உடமையாக உள்ளதா என்ற கேள்வி பொருள் அற்றதாகும். உழவுத்தொழில் மேலும் வணிகமயமாகுவதை நீடித்திருக்கச் செய்யும் தொழில்நுட்பம் மக்களைத்தம் நிலம் சுற்றுச்சூழல்களிலிருந்து அந்நியமாக்குவது தவிர்க்க முடியாதது. நிலத்தைப் பயன்படுத்தும் விசயத்தில் தற்சார்பை இழப்பதும், அதன் விளைவாக ஒருவரது தன்னம்பிக்கையை அழிப்பதும், இறுதியில் நம்மை அக வகையிலும் புற வகையிலும் அழித்துவிடும்.

புதிய பொருளியல் கொள்கையின் தாக்கத்தில் முழுதாக அகற்றப்படும் நிலையை எதிர்கொண்டிருக்கும் பொதுத்துறை அலகுகள், தேச உடைமையாக்கல் என்ற முழக்கத்தை எழுப்புவதன் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது. தொடர்புடைய மக்கள் சமூகமயமாக்கல் நிகழ்வுப் போக்கை மேற்கொள்ளும் போதுதான் தேச உடைமையாக்கல் (பரந்துபட்ட சமூகத்தின் நிலைத்திருக்கத்தக்க நலன்களுக்காகப் பண்டங்களின் உற்பத்தியும் பகிர்வும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே சமூகமயமாக்கலின் பொருளாகும்.) என்பதன் உயிர்ப்புப் பாதுகாக்கப்படும். இது வெறுமனே தற்சார்பு (சுதேசி) பற்றிச் சிறுபிள்ளைத்தனமாகப் பிதற்றிக் கொண்டிராமல் தற்சார்பை ஊக்குவிக்க வேண்டும்.

- பொன்.சந்திரன்

Pin It