‘பீமா கோரே கான் - எல்கர் பரிஷத் வழக்கு: சிறைப்படும் நீதி’ நூல் வெளியீட்டு நிகழ்வு, 11.06.2022 மாலை 5.30 மணியளவில் சென்னை தியாகராயர் அரங்கத்தில் நடை பெற்றது. பீமா கோரே கான் அரசியல் சிறைப்பட்டோர் விடுதலைக் குழு ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுக்கு பேராசிரியர் சரசுவதி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் து. ராசா நிகழ்வில் பங்கேற்று நூலை வெளியிட்டுப் பேசினார். தமிழ்நாடு சிறுபான்மை நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு குடியரசு கட்சித் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செ.கு. தமிழரசன், வன்னி அரசு (வி.சி.க. துணைப் பொதுச் செயலாளர்) மற்றும் தி.வி.க. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர்கள் கருணானந்தம், அ. மார்க்ஸ், சிவக்குமார், நெல்லை முபாராக் (எஸ்.டி.பி.அய்), நாகூர் மீரான் (பி.எஃப்.அய்.), வழக்கறிஞர் ப.பா. மோகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றுப் பேசினர்.முன்னதாக விரட்டுக் கலையைச் சார்ந்த ஆனந்த், தோழர்களுடன் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராகப் பாடல்களைப் பாடினார். தி.வி.க. தோழர்கள் தபசி. குமரன், உமாபதி உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். கோபால் நன்றி கூறினார். டி.எஸ்.எஸ். மணி வரவேற்புரையாற்றினார்.
வழக்கு விவரம்: 1818ஆம் ஆண்டு, பார்ப்பன மன்னன் பாஜிராவின் 28 ஆயிரம் பேர் கொண்ட பேஷ்வா படையை வெறும் 774 பேர் கொண்ட மஹர் ரெஜிமென்ட் படை விரட்டி யடித்து வெற்றிவாகை சூடியது. இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில், 1927ஆம் ஆண்டு பாபா சாகிப் அம்பேத்கர் அவர்கள் அங்கு நிறுவப் பட்டுள்ள நினைவுத் தூணுக்கு சென்று வீரவணக்கம் செலுத்தினார். பேஷ்வாக்களின் வீழ்ச்சியையும் மஹர்களின் வெற்றியையும் கொண் டாடும். இந்நிகழ்வின் மூலமே ஜெய் பீம் எனும் முழக்கம் உருவாகியது. அன்று முதல் அங்கு ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மக்கள் வீர வணக்கம் செலுத்தி வந்தனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் நாளன்று 200ஆம் ஆண்டு வீரவணக்க நாளை சிறப்பிக்க வந்த பொது மக்கள் ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட இந்துத்துவ அமைப்பின் சம்பாஜி பீடே, மிலிந்த் எக்போடே ஆகியோர் தலைமையில் மிகப் பெரிய வன்முறை திட்டமிட்டு நடத்தப்படுகிறது. இச்சம்பவத்தினை உலகமெங்கும் உள்ள தலைவர்கள், தங்களது கடுமையான கண்டனத்தை பல்வேறு வகையில் தெரிவித்தனர். இருப்பினும் இக்கலவரத்திற்கு காரணமான சம்பாஜி பிடே கைது செய்யப்பட வில்லை. மற்றொரு குற்றவாளியான மிலின் எக்போட்டே கைது செய்யப்பட்டு உடனே விடுதலை செய்யப்பட்டார். இச் சம்பவத்தை மூடி மறைக்க குற்றவாளிகள் தரப்பில் 8.1.2018 அன்று எதிர் மனு பெற்றுக் கொண்டு 31.12.2017 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றவர்களின் தூண்டுதலால் வன்முறை ஏற்பட்டதாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அம்பேத்கர் அவர்களின் பேத்தியின் கணவர் ஆன ஆனந்த் டெல்டும்டே, கவிஞர் வரவரராவ், கௌதம் நவ்லாகா, சுதாபரத்வாஜ், ஸ்டேன் சுவாமி உள்ளிட்ட பதினாறு பேரை, பொய் வழக்கு ஜோடித்து மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு உள்ளவர்கள் என்று குற்றம் சாட்டப் பட்டு கைது செய்யப்பட்டனர். இதற்காக சோதனை என்னும் பெயரில் அவர்களின் கணினிகள், கைபேசிகள், அனைத்தையும் கைப்பற்றி சர்வதேச இராணுவரீதியிலான புதிய மென் பொருட்கள் மூலம் ஊடுருவப்பட்டு குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டனர். ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கடந்த காலங்களில் அரசு ஊழியர்களாகவும், பேராசிரியர்களாக வும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். மகளிர் மற்றும் பழங்குடி மக்களின் நலனின் செயல்பாட்டாளர்களாகவும் சிறந்து விளங்கியவர்கள். அதில் ராஜபுத்திரர், மராத்தியரும் இடம் பெற்றிருந்தனர்.
அவர்களுக்கு சிறையில் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ சிகிச்சிகளும் மறுக்கப்படுகின்றன. அருட்தந்தை ஸ்டேன் சுவாமி குற்றம் நிரூபிக்கப்படாமலேயே நீதிமன்ற காவலில் இறந்து போனார்.
இந்நிலையில் மத்திய பா.ஜ.க. அரசு தேசிய புலனாய்வு அமைப்பு இந்த வழக்கை மராட்டிய மாநில அரசின் ஒப்புதலின்றி ஊ.பா. (UAPA) சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனை தற்போதைய மராட்டிய சிவசேனா - தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி அரசின் அமைச்சர்கள் முதல் பல்வேறு எதிர்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்தும் பா.ஜ.க. அரசு தனது பாசிச போக்கை நிறுத்திக் கொள்ளாமல் கள்ள மவுனம் சாதித்து வருகிறது. இவர்களுக்கான நீதியும் மறுக்கப்பட்டு வருகிறது.