tamilar games 350தமிழர்களிடையே ஜாண் ஏறினால் முழம் சறுக்குது என்று ஓர் பழமொழி இருக்கிறது. இது வாழ்கையில் ஒருவன் மிகக் கடினமாக உழைத்து மேலே உயரும் போது திடீர் என ஏற்படும் சறுக்கலைக் குறிப்பிட இந்த பழமொழியைப் பயன்படுத்துவதுண்டு. பழமொழிகள் பெரும்பாலும் தேன்கூட்டிலிருந்து தேன் எடுப்பது போல மக்களின் வாழ்வில் இரண்டற கலந்த வாழ்வியல் நிகழ்வில் இருந்தே தேன் போன்று பிழிந்து எடுக்கப்படும் சொலவாடைகள் ஆகும். இந்தப் பழமொழி எப்படித் தோன்றியிருக்கும் என்று எண்ணும் போது நம் மனதிலும் நினைவிலும் நிழலாடும் தமிழர் விளையாட்டுதான் வழுக்கு மரம் ஏறுதல். இது பெரும்பாலும் கிராமங்களில் பொங்கல் பண்டிகை அல்லது ஊர் திருவிழா போன்ற பொதுவான நிகழ்வின்போது ஆடவரால் விளையாடப்படும் விளையாட்டு. சல்லிக் கட்டு, சிலம்பம் போல வழுக்கு மரம் அல்லது கழு மரம் ஏறும் விளையாட்டும் வீர விளையாட்டாகும். வீரம் என்பது வெறும் தோளோடுதோள் மோதி உடல் வலிமையை மட்டும் கொண்டு விளையாடப்படும் விளையாட்டல்ல. வீர விளையாட்டு என்பது உடல் வலிமையையும், மன வலிமையையும், மூளையின் வலிமையையும் ஒருங்கே சேர்த்து விளையாடும் விளையாட்டாகும். அந்த வகையில் பார்த்தால் இந்த விளையாட்டும் வீர விளையாட்டேயாகும்.

நல்ல உடல் வலிமையுடைய ஆடவர்களால் திறந்த வெளியில் விளையாடப்படும் குழு விளையாட்டான வழுக்கு மரம் விளையாட்டு எப்படி விளையாடுவது என்று பார்ப்போம்.

நன்கு வழுவழுப்பாகச் செதுக்கப்பட்ட 50 அல்லது 60 அடி உயரமுள்ள பாக்கு மரத்தை நட்டு அதன் மேல் சோற்றுக் கற்றாழை. கேழ்வரகு, விருவிச்சாறு, விளக்கெண்ணெய் மற்றும் பலவிதமான எண்ணெய்களை தடவி பாக்கு மரம் மேலும் வழுவழுப்பான மரமாக மாற்றப்படுகிறது. அதுமட்டுமன்றி வழுக்கு மரம் ஏறுபவர்கள் மீதும், மரத்தின் மீதும், போட்டியின் போது மஞ்சள் தண்ணீர் ஊற்றப்படுகிறது. மரத்தின் உச்சியில் பண முடிப்பு மற்றும் பரிசுப் பொருள்கள் கட்டப்பட்டிருக்கும். எந்த குழு அல்லது தனி நபர் வழுக்கு மரத்தில் ஏறி அந்தப் பண முடிப்பையும்  பரிசுப்பொருளையும் எடுக்கிறார்களோ அவர்களுக்கே அது சொந்தமாகும். அவ்வளவு எளிதாக அந்தப் பண முடிப்பையும் பரிசுப்பொருளையும் கையில் எடுத்துவிட முடியாது. கண்ணுக்கு எட்டினது கையிக்கு எட்டுவதில்லை. நல்ல உடல் வலிமையுள்ள இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு இப்போட்டியில் கலந்து கொள்வது அவர்களுக்கு மகிழ்ச்சி என்றால் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் ஒன்றுகூடி வேடிக்கைப் பார்ப்பதே அவர்களுக்கு மகிழ்ச்சியாகும். வழுக்குமரத்தில் ஏறும்போது மரத்தின் மீதும் மரம் ஏறுபவர் மீதும் மஞ்சள் தண்ணீரை அடிப்பதால் ஏற்கனவே உள்ள வழுவழுப்போடு தண்ணீரும் சேர்ந்து ஏறியவர் வழுக்கிக்கொண்டு கீழே வருவதைக் கண்டு கூடி நிற்பவர்கள் கைகொட்டி சிரித்து மகிழ்வர். கேளி, கிண்டல் செய்பவர்களையெல்லாம் மீறி, மரத்தின் உச்சியில் ஏறி அதில் உள்ள பரிசுப் பொருளையோ பணமுடிப்பையோ எடுக்க வேண்டும். வழுக்கு மரத்தில் ஏறிப் பண முடிப்பையும் பரிசுப்பொருளையும் எடுக்கும் இளைஞர் வெற்றி பெற்றவராவர். அவரே சிறந்த வீரராகவும் கருதப்படுவார். இன்று உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வெற்றி பெற்று திரும்பும் விளையாட்டு வீரருக்கு மேலும் மேலும் குவியும் பாராட்டையும் பரிசையும் போல இதில் வெற்றி பெற்ற இளைஞருக்கும் மேலும் பல பண முடிப்புகளும் பரிசுப்பொருள்களும் பாராட்டுகளும் குவியும். இன்றும் ஒரு சில கிராமங்களில் பொங்கல் மற்றும் ஊர்த் திருவிழாவின் ஒரு பகுதியாக இவ்விளையாட்டு நடத்தப்படுகிறது. சல்லிக்கட்டு போல் இதுவும் ஒரு யாதவர்களின் மரபு விளையாட்டாகும் என்கிறார்கள் நமது முன்னோர்கள்.

அப்படி இந்த விளையாட்டால் என்ன பயன் என்று கேட்கலாம். இந்தப் போட்டியில் அணி அணியாக ஒருவர் மீது ஒருவர் ஏறி வழுக்கு மரத்தின் உச்சியில் உள்ள பண முடிப்புகளை எடுக்க முயலும் போது எளிதில் வென்றுவிடாமல் இருக்க கீழிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தடைகளை ஏற்படுத்துவார்கள், அவற்றையெல்லாம் கடந்து ஒருவன் வழுக்கு மரத்தின் உச்சியில் உள்ள பண முடிப்பை எடுப்பானானால் அவனை மக்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். இது வழுக்கு மரம் விளையாட்டுக்கு மட்டு மல்ல எந்த ஒரு செயலிலும் ஒருவன் தனி ஆளாகப் போராடிக்கொண்டிருக்கும் போது யாரும் கண்டுகொள்ளாமல் தடைகளை ஏற்படுத்தியும் மனம் தளரும் படியும்  பேசும் சமூகம், அதே செயலில் ஒருவன் விடாது முயன்று சாதித்தால் அவனைக் கொண்டாடும் என்கிற வாழ்க்கைப் பாடத்தை இதைவிட வேறு எந்த விளையாட்டு அவ்வளவு தெளிவாகவும் எளிமையாகவும்  சொல்லிக்கொடுக்க முடியும்? இந்த விளையாட்டில் அணி அணியாக கலந்து கொள்ளும் போது குழு ஒற்றுமை ஓங்குகிறது. இன்றெல்லாம் மென்பொருள் நிறுவனங்களில் டீம் வொர்க்கில் இணைந்து செயல்படவேண்டும் என்பதற்காக பயிற்சிகள் வழங்குகிறோம் என்று சொல்லி தம்பட்டம் அடித்துக்கொள்வதை எல்லாம் விளையாட்டாகவே  இளைஞனுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது தமிழ்ச் சமூகம். மனிதநேயத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் இந்த வழுக்குமரம் என்னும் விளையாட்டு தமிழகத்தைத் தாண்டி மேலும் பல அயல் நாடுகளிலும் பல்வேறு பெயர்களில் ஒரு சில மாறுதல்களுடன் கொண்டாடப்படுகின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிசிலியில் வழுக்குமரம்(கிரீஸ் போல்) என்னும் விளையாட்டு தொடங்கியதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். பின்பு இத்தாலியில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த மீனவர்களால் இந்த வழுக்கு மரம் ஏறும் விளையாட்டு கிரீஸ் போல் என்ற பெயரில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாலி மீனவர்கள் தங்களின் மதிப்பிற்குரிய துறவியான புனித பீட்டரின் நினைவாக பல பாரம்பரிய கலை மற்றும் உணவுத் திருவிழாவை நடத்தினர் அதில் இந்த வழுக்கு மரம் ஏறும் விளையாட்டு பெறும் வரவேற்பைப் பெற்ற விளையாட்டாகும். பாஸ்டன் நகரில் உள்ள ஐபிஎ என்னும் தனியார் அறக்கட்டளை நடுத்தர வருமானம் உள்ளவர்களின் வாழ்வையும் கல்வியையும் அவர்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வகையில் பாரம்பரிய கலை மற்றும் விளையாட்டுப்போட்டிகளை நடத்துகின்றன, அதிலும் வழுக்குமரம் ஏறும் விளையாட்டு மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இங்கு நடத்தப்படுகிற வழுக்குமரம் ஏறும் விளையாட்டு நமது ஊரில் உள்ளது போல் நேராக நட்டுவைத்து ஏறுவதோடு மட்டுமல்லாமல் சற்று சாய்வாக நட்டுவைத்தும் கிடைமட்டமாக படுக்கவைத்தும் அதன் மீது ஏறிச் சென்று அதன் நுனியில் கட்டிவைத்துள்ள அவர்கள் நாட்டுக் கொடியை கைப்பற்றுபவர் வெற்றி பெற்றவராவர். வென்றவருக்கு பரிசுகளும் பண முடிப்பும் வழங்கப்படும். சுமார் 60 அடி நீளமுள்ள மரக்கொம்பை கடலின் நீர் மட்டத்தில் இருந்து சுமார் 40 அடி உயரத்தில் கிடைமட்டமாக வைத்து அதில் கிரீஷை பூசி அதன் ஒரு முனையில் அவர்கள் நாட்டு கொடியும் கட்டி வைப்பர். அதன் அடுத்த முனையில் இருந்து போட்டியில் பங்கெடுத்துக்கொள்ளும் தகுதியுள்ள இளைஞர்கள்  வரிசையாக வந்து அந்த வழுக்கு மரத்தின் மீது நடந்து சென்று அடுத்த பக்கத்தில் கட்டிவைத்துள்ள கொடியை கைப்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். வெற்றி பெற்றவருக்கு 100 டாலர் பரிசாக வழங்கப்படும். வழுக்குமரத்தின் மீது மிக கவனமாக நடக்க வேண்டும் சற்று தவறினாலும் கடலில்தான் விழவேண்டும். ஒருவேளை யாருமே கொடியைக் கைப்பற்றவில்லை எனில் அந்த பரிசுத் தொகை முழுவதும் ஏழைகளுக்கு கொடுக்கப்படும். வழுக்குமரம் ஏறும் விளையாட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் ஒரு சில மாற்றங்களுடன் விளையாடப்படுகிறது. குறிப்பாக இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ், நெதர்லாந்த், கனடா போன்ற பகுதிகளிலும் இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது.

இன்றெல்லாம் கிராமங்களில் இருந்து இளைஞர்கள் வேலைதேடி நகரங்களிலும் மாநகரங்களிலும் குடியேறிய காரணத்தால் வயதானவர்கள் மட்டும் வாழ்கிறார்கள். அவர்களால் உயர்ந்து நிற்கும் பனைமரம் மற்றும் தென்னை மரத்தில் ஏறமுடியாமல் இயந்திர மனிதனையோ அல்லது மரம் ஏறும் கருவியையோ சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை மாற்றி கிராமத்து இளைஞர்களே பனைமரம், தென்னை மரம் போன்ற கிளைகள் இல்லாத உயர்ந்த மரத்தில் ஏறமுடியும் என்ற சூழலை வழுக்குமரம் ஏறும் விளையாட்டுகள் போன்ற விளையாட்டுகளால்தான் ஏற்படுத்த முடியும்.

வாழ்க்ைகயில் எவ்வளவு முறை தோல்வியை தழுவினாலும், வழுக்கி விழுந்தாலும் இலக்கை அடைந்தே தீர வேண்டும் என்று ஊக்குவிக்கும் வழுக்குமரம் ஏறும் விளையாட்டை நமது குழ்ந்தைகளுக்கும் சொல்லிக்கொடுப்போம், அவர்களும் வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளட்டும். நம்பிக்கையுள்ள எதிர்காலத் தலைமுறையை விளையாட்டின் மூலம் உருவாக்குவோம்.

இன்னும் விளையாடலாம்

Pin It