மாலை வேளை. மங்கும் ஒளியும் பெருகும் இருளும் சூழ்ந்த நேரம். மிக அழகான பல வர்ணப் பூக்கள் பூத்துக் குலுங்குகிறது அந்த பூங்காவில். கதிரவன், இன்று இவ்வளவு நேரம்தான் பூக்களை பார்த்து இரசிக்க இயலுமோ எனும் ஏக்கத்துடன் விடைபெற்றுக்கொண்டிருந்தது. தூரத்தில், பூங்காவின் பூக்களுக்கு போட்டியாக, இரண்டு சிறுவர்கள் புன்னகைப் பூ பூத்துக்கொண்டு ஒய்யாரமாய் ஓடி ஆடி பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் ஏன் தூரத்தில் இருந்து பார்க்க வேண்டும்? சற்று அருகில் சென்றே பார்ப்போமே! வாருங்கள்.

இரு சிறாரும் பந்தை ஒருவர் மாற்றி ஒருவர் எறிந்து விளையாடும் போது,

“பந்து”

“பொந்து”

“சந்து”

“வந்து”

என்று தமிழ்ச்சொல்லை எதுகை மோனையில் மாறி மாறிச் சொல்லி விளையாடுகிறார்கள். மகிழ்ச்சியாய் இருக்கிறது கேட்கவே.

சிறுவர்கள் பெயர் அறிவன் மற்றும் ராம்.

ராம் ஆர்வ மிகுதியில், பந்தை வேகமாக வீசியதில், பந்து தூரத்தில் உள்ள மரச்செறிவில் உள்ள இருள் புதரில் மாட்டிக்கொண்டது. அறிவனும் ராமும் அந்த இருண்ட புதர் நோக்கி பந்தை எடுக்க மெல்ல மெல்ல நடந்தார்கள். இருவரின் கால்களும் ஆரம்பத்தில் ஒரே சீரான வேகத்திலேயே நடந்தன. சிறிது நேரம் செல்ல செல்ல, ஒருவர் நடக்கும் வேகம் மட்டும் சற்றே குறைந்தது. மற்றொருவரின் கால் மட்டும் அதே சீரான வேகத்துடன் புதர் நோக்கி மேலும் மேலும் நடந்தது. இருள் புதரின் மிக அருகில் சென்ற அறிவன் அப்போதுதான் கவனித்தார், தன்னுடன் இதுவரை கூடவே நடந்து வந்த அந்த கால்களை காணவில்லையே என்பதை. திரும்பிப் பார்த்தால், ராமோ தூரத்திலேயே நின்றுவிட்டார்.

அறிவன், “ஏய் ராம் வாடா. ஏன் அங்கேயே நிக்கற?”.

ராம், “ஏய் வேணாம்டா. அங்க ஒரே இருட்டா இருக்கு. எனக்கு பயமா இருக்குடா”.

“இதுல என்னடா பயம்? அதான் ரெண்டு பேரு இருக்கோமே. சேர்ந்துதான போறோம். இருட்டு நம்மள சாப்பிடாதுடா, வா!” என புன்னகைக்கிறார்.

“இருட்டு சாப்பிடாதுடா! ஆனா அங்க பேய் பிசாசு எதாவது இருக்குமோன்னு பயமா இருக்குடா.”

“சரிதான்! இதுக்கே பயந்தா எப்படிடா? ராத்திரியானா வீட்ட விட்டே வெளிய வர மாட்ட போல இருக்கே” என சிரிக்கிறார் அறிவன்.

“போடா! போ! நீயே பேய்கிட்ட மாட்டிக்க” அப்டின்னு, ராம் பயத்தால் பின்னங்கால் பிடறியில் அடிக்க தெறித்து ஓடிவிடுகிறார்.

அறிவன் சிரித்துக்கொண்டே, தன் கைக்கடிகாரத்தில் உள்ள டார்ச் லைட்டை அடித்து இருளை விலக்கி ஒளி உண்டாக்கி, மேலும் காரிருளுள் சென்று பந்தைத் தேடுகிறார். பந்தைச் சுற்றி சில பூச்சிகள் இருப்பதைப் பார்த்து, ஒரு குச்சியை எடுத்து பந்தை நகர்த்தி நகர்த்தி தன் பக்கம் இழுத்து, பந்தை கையில் எடுக்கிறார். பந்தை எடுத்துக்கொண்டு மீண்டும் வெளியே வந்து பார்த்தால், பூங்காவில் ஆள் நடமாட்டமே இல்லை. சரியென இல்லம் வந்து சேர்கிறார் அறிவன்.

இல்லம் வந்தவுடன், கால் கை முகம் அழம்பிவிட்டு, தன் வீட்டுப் பாடங்களை செய்ய ஆரம்பிக்கிறார். திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தன் அம்மாவிடம் போய்,

“அம்மா, பேய்ன்னா என்னம்மா?” என்கிறார்.

அம்மா சாந்தமாய், “சொல்றேம்ப்பா. ஏம்ப்பா கேக்கறீங்க?” என்றார்.

“அது வந்தும்மா, இன்னைக்கி சாங்காலம் பூங்கால வெளாடும்போது, பந்து புதர்ல உழுந்துட்டு. அத எடுக்க போனப்ப, ராம் அங்க போக வேணாம் பேய் பிசாசு இருக்கும்ன்னு சொல்லிட்டு ஓடிட்டான்ம்மா” என்றார் சிரித்துக்கொண்டே.

அம்மா இதைக்கேட்டு புன்னகைக்கிறார். “ம்.. ராமுக்கு இருட்டுன்னா பயமா இருக்கலாம். அதப் பாத்து, அந்த பயத்துக்கு பேரா பேய்ன்னு சொல்லி இருக்கலாம். ஆனா, பேய் பிசாசு அப்படின்னெல்லாம் ஒன்னுமே கெடயாது. அதெல்லாம் சும்மா கற்பனைப்பா.”

“ஓ! அப்படியாம்மா. என் பாட புத்தகத்துல, பள்ளிக்கூடத்துலல்லாம் பேய் பிசாச பத்தி சொல்லித் தரல, அப்புறம் எப்படி ராமுக்கு மட்டும் அப்படி ஒன்னு இருக்குன்னு தெரியும்?”

“சுட்டிப் பையன்! எல்லா விஷயத்தையும் பள்ளிக்கூடத்தில மட்டும் சொல்லித்தர மாட்டாங்க. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, சித்தப்பா, சித்தி, அப்படின்னு நம்மள சுத்தி பல பேரும் பல விஷயத்த சொல்லித்தருவாங்க.”

“அப்ப, நீங்க ஏன் எனக்கு பேய் பிசாசு பத்தி சொல்லித்தரல?”

“ஏன்னா? அது உண்மை இல்லை. அதனால சொல்லித்தரல. அதான்” என்றார் அம்மா.

“ஓ!”

…….

…….

…….

…….

அறிவன் சிறிது நேரம் யோசித்தபடியே, மீண்டும் கேட்டார், “பேய் உண்மை இல்லைன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?”

அம்மா மனதுக்குள், [இவன் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லியே மாளாது போலயே] என்று பெருமையாய் எண்ணிக்கொண்டு, “அருமை! இப்படித்தான் நெறய கேள்வி கேட்கனும்.”

அம்மா தொடர்ந்து, “பேயை கண்ணால பாக்க முடியுமா?”

அறிவன், “முடியாது.”

“பேயை காதால கேக்க முடியுமா?”

“முடியாது”

“பேயை கையால தொட முடியுமா?”

“முடியாது”

“பேயை வாசனையா உணர முடியுமா?”

“முடியாது”

“பேயை வாயால சாப்பிட முடியுமா?”

அறிவன் சிரித்துக்கொண்டே, “ம்! முடியாதும்மா”.

அம்மா, “அப்போ, பேய் உண்மையா? பொய்யா?”

அறிவன், “பொய்”

…….

…….

…….

அறிவன் மீண்டும் சிறிது நேரம் யோசித்தபடியே கேட்டார், “பாக்டீரியா கூடத்தான் கண்ணுக்குத் தெரியல. அப்ப பாக்டீரியா பொய்யா?”

“இல்லைப்பா. பாக்டீரியா ஒரு நுண்ணுயிரி. அது கண்ணுக்குத் தெரியாது. ஆனா பாக்டீரியாங்கறது உண்மைதான்.”

“எப்படி?”

“போன மாசம் நாம அருங்காட்சியகம் போனப்ப ஒரு சின்ன மைக்ரோஸ்கோப் வாங்கினீங்களே, ஞாபகம் இருக்கா?”

“ம், இருக்கு அம்மா. அத வெச்சுதான் துக்னியோண்டு புள்ளிய எல்லாம் பெருசாக்கி பாத்து வெளாடுவேன்.”

“அந்த மைக்ரோஸ்கோப்ப விட சக்தி வாய்ந்த மைக்ரோஸ்கோப்ல பாத்தா, பாக்டீரியாவ கண்ணால பாக்கலாம்.”

“ஓ! அப்ப பாக்டீரியாவயும் பாக்க முடியுமா?”

“ம்.. ஆமாம்ப்பா முடியும்! அப்ப பாக்டீரியா உண்மையா? பொய்யா?”

“உண்மைதாம்மா. அப்ப, பயம்தான் பேய்ன்னு ஆயிடுச்சாம்மா?”

“ஆமாம் கண்ணா. பயம்தான் பேய்”

……….

……….

……….

சிறிது நேரம் யோசித்தபடியே, அறிவன் புன்னகையோடு துடுக்குடன் கேட்டார், “ஏம்மா, அப்பா எப்பப் பாத்தாலும் உங்கள பாத்தா பயப்படறாங்களே, அப்ப அந்த பயத்துக்கு பேர் என்னம்ம்மா?” என்று கலகலவென சிரித்துக்கொண்டே கூறிவிட்டு அம்மா கைக்குச் சிக்காமல், அம்மாவில் அன்புப் பிடியை தவிர்க்க புயலென புறப்பட்டார் அறிவன்.

அறிவான பிள்ளைதானே அறிவன்!              

Pin It