லெனின்

கேள்விக்குறிகளை

வியப்புக்குறியாக்கியவன்!

உழைக்கும் கைகளில் இவன்

செவ்வாளாய் மிளிர்ந்தவன் !

அதிகாரவர்க்கக் கோட்டை

பொடிபொடியானது!

இவன் கட்டி எழுப்பிய

மக்கள் செம்படையால்!

ஏட்டில் எழுதியதை

நாட்டில் அரங்கேற்றினான்!

உழுபவனுக்கே நிலம்

உழைப்பவர்க்கே அதிகாரம்!

அடிமைச்சங்கிலி அறுந்து

விழுந்தது!

மண்ணில் முதலாய்

சமத்துவம் செழித்தது!

அண்ணல் அம்பேத்கர்

தொட்டால் தீட்டு

பார்த்தால் தீட்டு

அத்தனைக்கும் மொத்தமாய்

வைத்தான் வேட்டு!

இவன் எழுத்துக்களெல்லாம்

தோட்டாக்களாய் துளைத்தது!

சாதி அழுக்கு கோட்டையை

நொறுக்கித்தகர்த்தது!

முடங்கிக் கிடந்த சமூகத்தை

ஓயாமல் தட்டினான்!

என்றோ ஒருநாள் விழிக்குமென்ற

நம்பிக்கையில்!

கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய்

கூடவே கலகம் செய்தான்!

காட்டாறாய் சீறிஎழுந்தது

கண்ணீர் துடைத்து மானுடர்கூட்டம்!

தந்தை பெரியார்

மனிதனை மனிதனாக மட்டும்

பார்த்தவன்!

சூத்திரன்,பஞ்சமன் என்றவனை

வீதியில் தீயிட்டு எரித்தவன்!

முடங்கிக்கிடந்த சமூகத்தில்

நொண்டியாய்க் கிடந்தவனுக்கு

ஊன்றுகோலானது;

ஈரோட்டுக் கைத்தடி!

அடுப்படி தாண்டாத பெண்களை

ஆகாயம்வரை கூட்டிச்சென்றது

இவனின் சிந்தனைச் சிறகுகள்;

இதோ பார்முழுதும் பறவைகளாய்

பாராளும் வீராங்கனைகள்!

வெள்ளைக்காரன் கொடுத்த

விடுதலை கொள்ளைக்காரனுக்கு!

துள்ளிகுதிக்க ஏதுமில்லை

இனி விடுதலைபெறுவதே

முதல்வேளை; நாள்தோறும்

முழங்கினான் போர்முழக்கம்

டெல்லிக்காரனின் உறவைமுறி

விடுதலைக்கனலை காற்றில் எறி

பூணூல் தேசம் பொசுங்கட்டும்

அன்னைத்தமிழகம் விழிக்கட்டும்;

வீதிதோறும் இவனின் கலகக்குரல்!

இவனின் காலடி தடத்திலெல்லாம்

மானுடம் தழைத்தது!

தமிழ்த்தேசம் தாண்டி மானுடம்

செழித்தது!

புரட்சியாளர்களே!

உங்களை சிலையென

நினைத்தது மூடர்கூட்டம்

இல்லையில்லை

விடுதலைத்தனல் என

கொதித்தது அகிலம் எங்கும்!

பூணூல் கயிறு பதுங்கிக்கொண்டது

கயவர்கூட்டம் நடுங்கிநின்றது

மானுட விடுதலை முடியாமல்

உங்கள் போர்க்குரல் என்றும் ஓயாது!

Pin It