கைத்தடி இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் மதி பப்ளிகேசன் புத்தக வெளியீட்டு விழா

ஏப்ரல் 01 காலை 10.00 மணிக்கு சென்னை மைலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி மாணவர்களின் வரவேற்போடு துவங்கியது...

நிகழ்ச்சி தொடக்கத்தில் வீ.கயல்விழி அவர்கள் கடவுள் மறுப்பு கூற இனிதே துவங்கியது விழா. முனைவர் கு.முருகேசன் அவர்கள் கைத்தடி களப்பணிக் குழு சார்பில் வரவேற்புரை ஆற்றினார். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் ஆண்டின் முதல் இதழை (கைத்தடி) சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் வெளியிட மும்பையில் இருந்து வருகை தந்து இருந்த வெண்புறா செல்வக்குமார் பெற்றுக்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக மதி பப்ளிகேசன் வெளியீடான ‘புத்தகம் 01 கவிஞர்கள் 50’ நூலினை வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் வெளியிட பெங்களூரில் இருந்து வருகை தந்து இருந்த கலை உட் வொர்க்ஸ் நிறுவனர்

இரா.ராசா அவர்கள் பெற்றுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக புத்தகத்தில் பங்குபெற்று கவிதைகளை வடித்து இருந்த கவிஞர்கள் பெற்றுக்கொண்டனர்.

கைத்தடி இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற நியூஜெர்சி ம.வீ.கனிமொழி, திருப்பத்தூர் ம.கவிதா ஆகியோருக்கு வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் பரிசுகளை வழங்கினார். கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற ஈரோடு அசோக் பிரபு, சென்னை முகமது அலி ஆகியோருக்கு எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

தொடர்ச்சியாக வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கைத்தடி விருதுகள் நிகழ்ச்சி துவங்கியது...

‘துணிச்சல் விருது’

முதல் காணொளித் திரையில் திரையிடப்பட்டது... லாவண்யா அவர்கள் மேடையில் அமர்ந்து இருக்க, கீழே உள்ள வரிகள் காணொளியாகத் திரையிடப்பட்டது.

“லாவண்யா - விஜயாவாடாவை பூர்விகமாகக் கொண்ட இவர் ஹைதராபாத்தில் பிறந்தவர், தன்னுடைய கல்லூரி படிப்பை லண்டனில் முடித்து சென்னையில் உள்ளார் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வருபவர், சில நாட்களுக்கு முன்பு கொள்ளை கும்பலால் தாக்கப்பட்டவர், அந்தச் சம்பவத்தின் போது லாவண்யா அவர்கள் எப்படி துணிச்சலோடு திறம்பட செயல்பட்டார் என்பதற்கே இந்த விருது வழங்கப்படுகிறது, கொள்ளையர்கள் இவரை ஆயுதங்களை கொண்டு தாக்க முற்பட்ட போது அதனை தடுக்க முயன்றுள்ளார். அந்த கும்பல் தொடர்ந்து இரும்பு கம்பி கொண்டு தாக்கி புதருக்குள் தூக்கி எறிந்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனை முறை தாக்கிய போதும் அவரிடம் இருந்த துணிச்சல் அவரை திறம்பட செயல்பட வைத்திருக்கிறது. நாம் எழுந்தால் மீண்டும் தாக்குவார்கள் என்பதனை உணர்ந்த லாவண்யா தரையோடு தரையாக நகர்ந்து சாலையை அடைந்து இருக்கிறார். அங்கு மனிதநேயம் மிக்க காவலர்களால் காப்பாற்றப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று துணிவோடு அவர்களை அடையாளம் காட்டி தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளார் லாவண்யா. அவரின் துணிச்சலை போற்றும் விதமாக அவருக்கு ‘துணிச்சல் விருது’ வழங்கப்படுகிறது.” என்று காணொளி முடிந்தது அதன் தொடர்ச்சியாக சிறப்பு அழைப்பாளர் அ.அருள்மொழி அவர்கள் இரா ராசா, தமிழரசன் முன்னிலையில் விருதை வழங்கினார். விருதைப் பெற்றுக்கொண்ட லாவண்யா ஏற்புரைக் கூறி விருதைப் பெற்றுக்கொண்டார்.

‘ஊடகத்தின் நீதிக்குரல் விருது’

இரண்டாவது காணொளி திரையில் திரையிடப்பட்டது... ஜீவசகாப்தன் அவர்கள் மேடையில் அமர்ந்து இருக்க, கீழே உள்ள வரிகள் காணொளியாகத் திரையிடப்பட்டது.

ஜீவசகாப்தன் மதுரையில் பிறந்து நுண்ணுயிரியல் பாடத்தில் முதுகலை அறிவியல் பட்டம்பெற்றவர், சமுதாயத்தின் மனச்சாட்சியாக தொண்டாற்றுவதும் காலத்தைப் பதிவு செய்வதும் தன்னுடைய இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருபவர், அதன் வெளிப்பாடாக தொடர்ந்து செய்தி ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களிலும் பணியாற்றி வருபவர், குறிப்பாக புதிய பார்வை, பல்சுவை காவியம், கீற்று (இணைய தளம்), பத்திரிகை.காம் (இணைய தளம்) போன்ற இதழ்களில் தொடர்ச்சியாக கட்டுரைகள் மூலம் நிகழ்வுகளை பதிவு செய்து வருபவர், சத்யம் தொலைக்காட்சியில் செய்தியாளராக 1 ஆண்டு பணியாற்றிய இவர் சன்செய்திகளில் செய்தியாளர் அனுபவம் பரந்து பட்டு விரிவான தளத்தில் வளர்த்துக்கொண்டவர், அதன் தொடர்ச்சியாக ஜிடிவி சிறப்பு செய்தியாளராக ஊடகப் பயணத்தின் அடுத்த கட்டத்தை துவங்கியவர், தருமபுரி சம்பவம், திரையரங்குகளுக்கும் ரசிகர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு, மது நுகர்வு சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம், மீனவர் பிரச்சனை, விசுவரூபம் திரைப்பட பிரச்சனை என பல்வேறு விவகாரங்களை அரை மணிநேர ஆவணப்படமாக இயக்கியவர், இமயம் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சிகளையும், நேர்காணல் நிகழ்ச்சிகளையும் பாராட்டி மரியாதை செய்யும் விதமாக, 2015ஆம் ஆண்டின் டாப் 100 மனிதர்கள் பட்டியலில் இவரைத் தேர்ந்தெடுத்து, ஆனந்த விகடன் பத்திரிகை கௌரவம் செய்தது குறிப்பிடத்தக்கது.

நியூஸ் 18 தொலைக்காட்சியில் காலை 7 மணிக்கு தினசரிகளை ஆழமாகத் திறனாய்வு செய்யும் முதல் பார்வை. இரவு நேரத்தில் காலத்தின் குரல் விவாத நிகழ்ச்சி. அரசியல் ஆளுமைகளை நேர்காணல் செய்யும் வெல்லும் சொல் என முக்கிய அரசியல் திருப்பங்களில் நேரலை. கருணாநிதி, காமராசர், பெரியார், மதிமுக, ஆர்.எஸ்.எஸ் வரலாறு, இடஒதுக்கீட்டின் வரலாறு, திராவிட நாடு தொடரும் தர்க்கம், சிலைகள் சர்ச்சை வரலாறு, நடிகர்களின் அரசியல் என பல்வேறு தலைப்புகளில் 20 நிமிட ஆவணப்படங்களையும் எழுதி இயக்கிய ஜீவசகாப்தன் அவர்களுக்கு ‘ஊடகத்தின் நீதிக்குரல் விருது’ வழங்கப்படுகிறது.’’ என்று காணொளி முடிந்தது. அதன் தொடர்ச்சியாக சிறப்பு அழைப்பாளர் பிரபஞ்சன் அவர்கள் சி.ராமசாமி, பிரகாசம் முன்னிலையில் விருதை வழங்கினார். விருதைப் பெற்றுக்கொண்ட ஜீவாசகாப்தன் அவர்கள் ஏற்புரைக் கூறி விருதைப் பெற்றுக்கொண்டார்.

‘சமூகப் போராளி விருது’

மூன்றாவது காணொளி திரையில் திரையிடப்பட்டது... குடந்தை தமிழினி அவர்கள் மேடையில் அமர்ந்து இருக்க, கீழே உள்ள வரிகள் காணொளியாகத் திரையிடப்பட்டது.

குடந்தை. தமிழினி அடிப்படையில் ஆசிரியர். பல வருடங்கள் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் முதல்வராகப் பணியாற்றியவர். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் இவர்களைப் பின்பற்றி சமூகப் பணியாற்றும் எழுச்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையேற்று பல்வேறு பொறுப்புகளில் இருந்து எந்த எதிர்பார்ப்புமின்றி சேவை, பணியாற்றி வருபவர்... குறிப்பாகப் பெண்களை பகுத்தறிவு உள்ளவர்களாக, சுயமரியாதை உள்ளவர்களாக மாற்றுவதில் தந்தை பெரியாரின் கருத்துக்களை குறிப்பாக ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தின் வாயிலாகப் பரப்பி வருபவர்.பல சுயமரியாதைத் திருமணங்களைத் தலைமையேற்று நடத்தியுள்ளேன்... இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வழிகாட்டல்கள் செய்து வருகிறார்.இளைஞர்களையும் இளம்பெண்களையும் சமூக நீதியை நிலைநாட்டும் போராட்டக்களத்தில் புரட்சிகரமாகப் போராட உற்சாகப்படுத்துவதுடன் பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருபவர்... அவரின் சமூகப் பணியை போற்றும் வகையில் அவர்க்கு ‘சமூகப்போராளி விருது’ வழங்கப்படுகிறது.’’ என்று காணொளி முடிந்தது.

அதன் தொடர்ச்சியாகச் சிறப்பு அழைப்பாளர் அ.அருள்மொழி அவர்கள் தம்பிதுரை செங்கை சுந்தரம் முன்னிலையில் விருதை வழங்கினார். விருதைப் பெற்றுக்கொண்ட தமிழினி அவர்கள் ஏற்புரைக் கூறி விருதைப் பெற்றுக்கொண்டார்.

‘மக்கள் மொழிக் கவிஞர் விருது’

நான்காவது காணொளித் திரையில் திரையிடப்பட்டது... குடந்தை. தமிழினி அவர்கள் மேடையில் அமர்ந்து இருக்க, கீழே உள்ள வரிகள் காணொளியாகத் திரையிடப்பட்டது.

பாடலாசிரியர் விவேகா, திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்து அதே மாவட்டத்தில் பள்ளி கல்லூரிப் படிப்பை முடித்து, சென்னையில் பத்திரிக்கையாளராக தன் வாழ்க்கைப் பயணத்தைத் துவங்கியவர். தமிழகத்தின் முன்னணித் திரைக் கவிஞர்களுள் ஒருவர் விவேகா. கவிஞர், பாடலாசிரியர், பேச்சாளர், எழுத்தாளர் என்று இன்றும் சுறுசுறுப்பாக இயங்கும் இளைஞர். ‘நீ வருவாய் என’ என்ற படத்தில் ‘பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா’ என்ற பாடலின் மூலம் தமிழ்த் திரையுலகப் பாடலாசிரியராக அறிமுகமானார். ‘பூங்குயில் பாட்டு புடிச்சிருக்கா’ ‘மின்சாரம் என்மீது பாய்கிறதே’ போன்ற இரண்டாயிரம் பாடலுக்கு மேல் எழுதி இருக்கிறார், சமீபத்தில் கருத்தவன் எல்லாம் களிஜா என்ற பாடலை எழுதினார். இந்தப் பாடல் சமூகப் புரட்சிப் பாடலாக கருதப்பட்டது. அந்தப் பாடலுக்காக ‘மக்கள் மொழிக் கவிஞர் விருது’ வழங்கப்படுகிறது.’’ என்று காணொளி முடிந்தது. அதன் தொடர்ச்சியாக சிறப்பு அழைப்பாளர் பிரபஞ்சன் அவர்கள் தமிழேந்திவீரவேல் முன்னிலையில் விருதை வழங்கினார். விருதைப் பெற்றுக்கொண்ட கவிஞர் விவேகா அவர்கள் ஏற்புரை கூறி விருதைப் பெற்றுக்கொண்டார்.

‘தன்னம்பிக்கையாளர் விருது’

ஐந்தாவது காணொளித் திரையில் திரையிடப்பட்டது... கௌசல்யா சங்கர் அவர்கள் மேடையில் அமர்ந்து இருக்க, கீழே உள்ள வரிகள் காணொளியாகத் திரையிடப்பட்டது.

கௌசல்யா சங்கர் சமூகத்தால் பாதிக்கப்பட்டு சமுகத்தை மாற்ற துடிக்கும் இளம் பெண். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த குமரலிங்கம் கிராமத்தைச் சார்ந்த சங்கர் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சார்ந்த கௌசல்யாவை 2015ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் நாள் திருமணம் செய்தார், இந்த நிலையில் 2016 மார்ச் மாதம் 13ஆம் நாள் உடுமலைப்பேட்டை பேருந்துநிலையம் அருகில் கௌசல்யா குடும்பத்தினர் கூலிப்படையை வைத்து இருவரையும் வெட்டிச் சாய்த்தனர். இதில் சங்கர் சம்பவ இடத்தில் உயிர் இழந்தார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட கௌசல்யா உடல் நலத்தோடும், தன்னம்பிக்கையோடும் தேறினார், தன்னை எந்தச் சாதி இழிவாகக் கருதியதோ அதற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருபவர், ஆணவக்கொலைகளுக்கு தனிச் சட்டம் வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதனை உலகிற்கு உரக்கச் சொன்ன பெண். குற்றவாளிகள் தன்னுடைய பெற்றோராக இருந்தாலும் அவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். என்ற உறுதியோடு செயல்பட்டு வருபவர்.

பெரியார், அம்பேத்கார் புத்தகங்களை வாசித்து அதனை தன் வாழ்வியல் நெறியாகக் கொண்டு செயல்படுவதோடு புதிய இளைஞர்களுக்கு பறை பயிற்சி, சிலம்பம் பயிற்சி போன்றவைகளைக் கொடுப்பதோடு மட்டும்மல்லாமல் ‘சங்கர் சமூக நீதி அறக்கட்டளை’யைத் துவங்கிச் சேவை செய்துவருபவர் ஒவ்வொரு விசைக்கும் அதற்குச் சமமான எதிர் விசை உண்டு என்பதை இளம் வயதில் இந்த சமூகத்துக்கு செயலால் செய்துகாட்டியப் புரட்சிப் பெண் கௌசல்யா அவரின் தன்னம்பிக்கையைப் போற்றும் வகையில் ‘தன்னம்பிக்கையாளர்’ விருது வழங்கப்படுகிறது.’’ என்று காணொளி முடிந்தது. அதன் தொடர்ச்சியாகச் சிறப்பு அழைப்பாளர் அ.அருள்மொழி அவர்கள் செல்வி செல்வம் முன்னிலையில் விருதை வழங்கினார். விருதைப் பெற்றுக்கொண்ட கௌசல்யா அவர்கள் ஏற்புரைக் கூறி விருதைப் பெற்றுக்கொண்டார்.

 ‘வளரும் பெரியாரியல் பேச்சாளர் விருது’

ஆறாவது காணொளித் திரையில் திரையிடப்பட்டது. மணியம்மை அவர்கள் மேடையில் அமர்ந்து இருக்க, கீழே உள்ள வரிகள் காணொளியாகத் திரையிடப்பட்டது.

பா.மணியம்மை சென்னையிலேயே பிறந்து சென்னையிலையே வளர்ந்து, சாதிய கொடுமைகளை நேரடியாக அறிந்துகொள்ளாத பெண், தந்தை பெரியாரை படிக்கத் தொடங்கியதில் இருந்து சாதிய ஆதிக்கத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் ஒழிக்க வேண்டுமென்று தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மாணவப் பருவத்தில் இருந்தே திராவிட இயக்க உணர்வு கொண்டவர். தந்தை பெரியார் சொன்னதை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர். “மனிதன் தானாகப் பிறக்கவில்லை தனக்காக மட்டுமே வாழாமல் தொண்டு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகத்தில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருப்பவர். தந்தை பெரியார் காண விரும்பிய சமத்துவச் சமுதாயத்தை நோக்கிப் பயணம் செய்பவர். அண்ணல் அம்பேத்கர், பச்சைத் தமிழர் காமராசர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் மீது பற்றுக் கொண்டவர், தொடர்ந்து திராவிட இயக்க மேடைகளில் தன்னுடைய பேச்சு கலையால் பகுத்தறிவுக் கருத்துக்களை விதைத்து வருபவர்... அவர்களுக்கு ‘வளரும் பெரியாரியல் பேச்சாளர் விருது’ வழங்கப்படுகிறது.’’ என்று காணொளி முடிந்தது. அதன் தொடர்ச்சியாகச் சிறப்பு அழைப்பாளர் பிரபஞ்சன் அவர்கள் டி.எஸ்.எஸ்.மணி, வனவேந்தன் முன்னிலையில் விருதை வழங்கினார். விருதைப் பெற்றுக்கொண்ட மணியம்மை அவர்கள் ஏற்புரைக் கூறி விருதைப் பெற்றுக்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாகக் கைத்தடி களப்பணி குழுவினருக்கும் எழுத்தாளர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைப் பகிர்ந்தனர்... இந்த நிகழ்ச்சியில்.

களப்பணியாளர்கள்

பார்த்திபன் ப, கா.தமிழரசன், புலவர் நாகை பாலு, அ.செ.செல்வம், சி,வீரவேல், கண்மணி, தே.சுரேஷ், அரவிந்த், கவிதாரமேஷ், எஸ்.ஜெர்லின் பிரீமா, ஆர்.சையத் அன்வர் பாசா, ஜெ.தம்பிபிரபாகரன், தனுவசி தர்மராஜ், ஓவியர் சிகரன், தனுஷவன், ஜோதி வெங்கடாசலபதி, மே.கா.கிட்டு, சண்முக ராமநாதன், செந்தில்குமார்,

எழுத்தாளர்கள்

நா. காமராசன், மு.சி.அறிவழகன், பார்த்திபன் ப, கா.தமிழரசன், சிவா சடையன், கு. முருகேசன், பழனி மதிவதனி, உஷாதீபன், தெ.ரங்கராசன் (எ) திராவிட ராசன், நெல்லை சுப்பையா, டி எஸ் எஸ் மணி, நாகை பாலு, பழ.வெங்கடாசலம், மருத்துவர் யாழினி, ஷாலின், எம் நியான சேகர், பூ கொ சரவணன், அ.தீ.ரமேஷ் கார்த்திக், எஸ்.ஜெர்லின் பிரீமா, மழவை சு.பெ.தமிழமுதன், முரளிகிருஷ்ணன் சின்னதுரை, கா.ந.கல்யாணசுந்தரம், பா.கார்த்திகேயன், வழக்குரைஞர் கிருபா முனுசாமி, ராஜபார்த்திபன் இரவிச்சந்திரன், வழக்குரைஞர் கனிமொழி, கோவை சுபா, மா.கோ. முத்து, உ. திலகவதி, தேன்மொழி, வி.சி.வில்வம், உடுமலை வடிவேல், ச.அஜிதன் சந்திரஜோதி, கல்பாக்கம் சீனு, அகில், காமராஜ், செ.ஜனனி, பு.வேதவள்ளி, கௌசல்யா சங்கர், புதுவை மு.ந. நடராசன், கோபால கிருஷ்ணன், இரா.அன்பரசன், சுசிலா, க.அருள்மொழி,

கல்லூரித் தோழர்கள்

தனுஷவன், திருச்சி சந்தியா, பா. மணியம்மை, கரிஸ்மா, ஓவியா, மகாலட்சுமி, பிரியதர்சினி, நிவேதா பிரியா, பிரகாஷ், கிரிராஜ், வித்தியாசாகர், ஜோதிவேங்கடாசலபதி, ஜெரோம் சகரியா, அஜித், சாம், கார்த்திக், லோகேஷ், ஆகியோருக்குச் சிறப்பு செய்யப்பட்டது.

இதன் பிறகு இரா சின்னசாமி அவர்கள் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து சிறப்புரை ஆற்ற அழைத்தார் அழைப்பை ஏற்றுக்கொண்ட பிரபஞ்சன் அவர்கள், ‘‘40 ஆண்டுகளாக இதழ் ஆரம்பிக்க வேண்டும் என்று கருதி வருகிறேன். இன்னும் நடந்த பாடு இல்லை இனியும் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை’’ என்று கூறியதோடு மட்டும் இல்லாமல் ‘‘கைத்தடி எனக்கு இரண்டு பக்கம் கொடுத்தால் தொடர்ந்து எழுதுவதாக ஒப்புதல் கொடுத்தார், இவ்வளவு தரமான இதழ் தொடர்ந்து வெளிவர வேண்டும்’’ என்று வாழ்த்துகளைக் கூறி அமர்ந்தார்.

தொடர்ந்து வழக்குரைஞர் அ. அருள்மொழி அவர்களுக்கு சி.முனியம்மாள் அவர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றார். அதன் பின் எழுத்தாளர்கள் இதழை வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் இன்னும் கடந்து செல்ல வேண்டிய தூரத்தைப் பற்றிய விரிவான முன்னெடுப்பை முன்வைத்து சிறப்புரையாற்றினார். அத்தோடு இதழின் சிறப்புகளை எடுத்துரைத்ததோடு இதழுக்காக உழைத்தவர்களையும், இதழின் தரத்தையும் முன்வைத்து உரையாற்றினார், தொடர்ந்து பகுத்தறிவுக் கருத்துகள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் அதனை இளைஞர்கள் கையில் எடுத்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று பதிவு செய்து உரையாற்றி அமர்ந்தார்.

இறுதியாக இதழாசிரியர் மு.சி.அறிவழகன் அவர்கள் ஏற்புரையாற்றினார். அவர் பேசுகையில், உங்களுக்கு இப்போது நன்றி சொல்லி உங்களை கடந்து போக விரும்பவில்லை வணக்கம் சொல்லி உங்களோடு தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன் என்று தொடங்கினார், கைத்தடியின் தேவை இன்று அவசியமானது என்று உணர்கிறோம்! அத்தோடு மட்டும் அல்லாமல் இந்த சமூகத்தின் மீதான பற்றை; எங்களுக்கானப் பசியாக உணர்கிறோம் அதற்கான உணவை இப்போது தேடி வருகிறோம், தொடர்து உங்களோடு இணைந்து பயணிப்போம் அதில் மாற்று கருத்து இல்லை என்பதனை முன்வைத்து பேசினார். இவ்வளவு நாள் நேரடியாக மற்றும் மறைமுகமாக உதவிய அனைவருக்கும் நன்றிகள் என்று கண்ணீரோடு உரையை முடித்தார்.

இறுதியாகக் கா.தமிழரசன் அவர்கள் நன்றிஉரை கூறினார்...

நிகழ்ச்சி இறுதியாகச் சிறப்பு அழைப்பாளர்கள், விருந்தினர்கள் நண்பர்கள், வாசகர்கள் என அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றுகூடி உணவு அருந்தி மகிழ்ந்து கலைந்து சென்றனர். (ஒரு குடும்ப விழாவாக அமைந்தது குறிப்பிடத்தக்க ஒன்று)

Pin It