நகரங்களில் ஓரமாக ஓடுகின்ற நல்ல ஆற்றுத் தண்ணீரில் நகரத் துச் சாக்கடைகளைக் கொண்டு போய் விடுவதைப் பல ஊர்களில் கண்டிருக்கின்றேன்.

kuthoosi gurusamy 300ஆரியச் சாக்கடையும் அது போலத்தான்! தமிழனின் நல்ல ஊற்று நீரையெல்லாம் பாழாக்கி விட்டது! சுத்தமான-தெளிவான ஊற்று நீரைத் தமிழன் குடிக்கவே முடியாது! அத்தனையிலும் ஆரியச் சாக்கடைக் கலப்பு!

பொங்கல் பண்டிகைக்குச் “சங்கராந்தி” என்ற ஆரியப் பட்டம்! அதற் கேற்ற அபாசக் கற்பனை!

இதோ, இந்த ஆண்டு மகர சங்கராந்தி பலன்! பஞ்சாங்கத்திலுள்ள படியே தருகிறேன்.

‘மகோதரி’ என்ற சங்கராந்திக் கடவுள், எருமை வாகனத்தில் ஏறி வருகிறாளாம்! இவளால் ஏற்படும் பலன்களைக் காண்க:-

பூக்காரர்களுக்குப் பீடை! பொது மக்களுக்கும் பீடை! ஆனால் திருடர்களுக்குச் சுகமாம்! பிராமண - க்ஷத்திரியர்களுக்கும் சுகமாம்!”

கலியுகத்தில் க்ஷத்திரிய ஜாதி கிடையாது என்கிறார்கள். சண்டை போடுகிறவனே க்ஷத்திரியன். ஆதலால் அணுகுண்டு வைத்திருக்கின்ற அமெரிக்காக்காரனே க்ஷத்திரியன்! அவனுக்குத்தான் சுகம்!

அடுத்தபடி திருடர்களுக்குச் சுகம்! போலீஸ்காரரும் சொத்துக்காரரும் சோம்பேறிகளாக அல்லது கோழைகளாக இருந்தாலொழியத் திருடர்களுக் கேது சுகம்? ஆதலால் இன்றைய சமுதாயத்தில் “திருடர்கள்” என்பது சுரண்டல்காரர்களைத்தான் குறிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். காங்கிரஸ் இன்னும் சில ஆண்டுகள் வரையில் ஆட்சி நடத்தியே தீருவார்களாதலால் சுரண்டல்காரர் (திருடர்)களுக்குச் சுகம் என்பதும் மெய்யாகவே இருந்தாலும் இருக்கும்!

ஆனால் “பிராமணர்களுக்குச் சுகம்” என்றிருப்பது சரிதானா? எனக் கென்னமோ இதில் மட்டும் சந்தேகமாயிருக்கிறது! மகரசங்கராந்தி தேவதையின் பார்வை தெற்கு முகமாயிருப்பதனால் பிராமணர்களுக்குச் சுகம்”, என்கிறது பஞ்சாங்கம்! பிராமணர்கள் நடந்து கொள்கிற மாதிரி யைப் பார்த்தால் அவர்கள் இனிமேல் சுகமாக இருப்பார்களா என்பது சந்தேகமாகவே இருக்கிறது! தெலுங்கு நாடு தனியாகப் பிரிந்து விட்டால் அதன்பிறகு தமிழ்நாட்டுப் பிராமணர்கள் “பூணூல் சொக்கப்பனை” விழா நடத்தினாலொழிய எப்படி அவர்களைச் சுகமாக இருக்கவிடப் போகிறார்கள், தமிழ்நாட்டு மக்கள்?

அவர்கள் எந்த ஆட்சியிலும், எப்பேர்ப்பட்ட சமுதாயத்திலும் சுகமாக வாழ்ந்து விடுவார்கள் என்று சிலர் கூறலாம். அதெல்லாம் அந்தக் காலத்தில்.

அதாவது தர்ப்பைப் புல்லைக் காட்டிப் பயமுறுத்திய காலத்தில்! இப்போது ரிவால்வரைக் காட்டினால்கூட, எட்டிச் சிண்டைப் பிடிக்கக்கூடிய இளைஞர்கள் லட்சம் லட்சமாக இருக்கிறார்கள் என்பது எல்லா எதிரிகளுக் கும் தெரியும்! போனால் போகட்டுமென்று இவர்களெல்லாம் இன்று சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! அதுகூட எதற்காகத் தெரியுமா? வீண் பொழுது போக்குக்காக அல்லவே அல்ல! சினிமா மூலம் காதல் உணர்ச்சியை அறிந்து, அதிலிருந்து வீர உணர்ச்சியைப் பெருக்கிக் கொண்டு, அதன்பிறகு பிற்போக்கு சக்திகளின் மீது பாய்ந்து கழுத்தைப் பிடித்து நெறிப்பதற்காகத் தான்!

உஷார்! எங்கள் தமிழ்நாட்டு இளைஞர்களைக் கிள்ளுக்கீரையாக யாரும் நினைத்துவிட வேண்டாம்! இப்போது சினிமா க்யூ வரிசையில் நிற்பதே ஒருவிதமான இராணுவப் பயிற்சி என்பது நினைவிருக்கட்டும்! காலுக்கு உறுதி! ஒழுங்குக்கு ஒத்திகை! தெரியுமா?

பிற்போக்குச் சக்திகள் பிராமணியத்தின் உருவத்தில் இருந்தாலும் சரி; முதலாளித்துவத்தின் உருவத்தில் இருந்தாலும் சரி; காங்கிரஸ்காரர் உருவத்தில் இருந்தாலும் சரி; கடவுள் உருவத்தில் இருந்தாலுஞ் சரி; தமிழ்நாட்டு இளைஞர்கள் எதிர்க்கத் தொடங்கிவிட்டால் தூள்! தூள்! செந்தூளாகி விடும்! எந்தப் பஞ்சாங்கத் திட்டமும் நடைபெறாது!

ஆதலால் இந்த “மகர சங்கராந்தி”யின் பஞ்சாங்க பலன்கள் அடுத்த பொங்கலுக்குள் எப்படியாகுமோ தெரியாது! பஞ்சாங்கமே இல்லாது போய் விட்டாலும் போய் விடலாம்! அதுவரையில்,-

பஞ்சாங்கப் பாரத் மாதா-கீ, ஜே!

குத்தூசி குருசாமி (13-1-1953)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It