மண்ணாசை!

பெண்ணாசை!

பொன்னாசை!

- என்று ஆசையை மூன்றாக வகுத்தனர், முன்னோர்.

kuthoosi gurusamy 268இம்மூவகை ஆசைகளையும் துறந்தவர்களை முனிவர் என்றும், சித்தர் என்றும், துறவி என்று அழைத்தனர்.

இந்திரவதன் என்ற 19-வயது சமண இளைஞர் (பம்பாய் மாகாணம்) பல லட்சத்துக்குச் சொந்தமானவராம்! எல்லாச் செல்வங்களையும் துறந்து விட்டு நேற்று முதல் இவர் துறவுக்கோலம் பூண்டுவிட்டாராம்!

இந்தக் காலத்தில் இது பெரிய அதிசயந்தான்! ரமண ரிஷி போன்ற ‘பகவான்’கள் கூட ஊரார் சொத்தைச் சுரண்டித் தன் தம்பி குடும்பத்துக்கு ‘உயில்’ எழுதி வைத்துவிட்டு, வால் நட்சத்திரமாக மறைந்து வரும்போது, ஒரு 19-வது வயது இளைஞர் கோடீஸ்வரர் பதவியை விட்டுத் துறவியாவதென்றால் யாரால் நம்ப முடியும்?

ஒருக்கால் உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், மூன்று ஆசைகளையும் துறந்து விட்டதாகவே வைத்துக் கொண்டாலும், நான்காவது ஆசையை மட்டும் இந்தச் சிறுவனால் துறக்க முடியாது என்று பந்தயங்கட்டிக் கூறுவேன்!

நான்காவது ஆசையா? அது என்ன?

அதுதான் நான் கற்பித்திருக்கின்ற நவீன ஆசை! அந்தக் காலத்து முனிவர்களும் சித்தர்களும் இன்று இருந்தால், நிச்சயம் இந்த நான்காவது ஆசைக்கு அடிமையாகியிருப்பார்கள்!

தாயுமானவரையோ, பட்டினத்தாரையோ, இராமலிங்க அடிகளையோ, விஸ்வாமித்திரரையோ, வால்மீகியையோ, எப்பேர்ப்பட்டவரையும் ஏமாற்றி விடக்கூடிய நான்காவது ஆசை ஒன்றிருக்கிறது!

அது என்ன என்பதை நமது ஸ்ரீலஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்!

துறக்க முடியாத ஆசை; மறுக்கமுடியாத ஆசை! ஆயிரம் இளம் பெண்கள் ஒன்று சேர்ந்து காட்டும் ஆசையைக் கூடத் துறந்த விடலாம்! கூடை கூடையாகப் பவுன்களை அபிஷேகஞ் செய்தாலும், அப்பரைப் போல் அவைகளை வாரிக் குளத்தில் கொட்டினாலும் கொட்டி விடலாம்!

ஆனால் பதவி ஆசையை மட்டும் துறப்பதற்கு யாராலும் முடியாது! கலெக்டர் வேலை பார்த்து ரிட்டயரானவன், ஆக்டிங் கர்ணம் வேலையை ஒப்புக் கொள்வதுபோல், கவர்னர்-ஜெனரல் வேலை பார்த்து ரிட்டயரான ஒரு துறவி, கவர்னர் நாமினேஷன் மூலம் மந்திரியாகிறார் என்றால், அடாடா! இந்த மந்திரி பதவி ஆசை என்பது அற்பமானதா? இதனால்தான் சாதாரண மாணிக்க வேலர்கள் கூட மக்களை மறந்து விடவேண்டி வந்து விட்டது!

மந்திரி பதவி என்பது வெறும் ஆசைமட்டுமல்ல! அது ஒரு போதை! ஒரு தடவை குடித்து விட்டால் மீண்டும் மீண்டும் மொந்தையை உருட்டிப் பார்க்கச் சொல்லும்! ஆச்சாரியாரையோ – பக்தவத்சலனாரையோ குறிப்பிட வில்லை! பொதுவாகவே சொல்கிறேன்!

இனிமேல் துறவு நிலை பற்றிக் கூற வேண்டுமானால் நான்காசையும் துறந்தவர்கள்- என்று தான் குறிப்பிடவேண்டும்! நான்காவது ஆசை தான், பதவி ஆசை! அல்லது அதிகார ஆசை!

பண்டிட் நேருவை பாருங்களேன்! எல்லாம் அவரே! அரசியல் சட்டத்தில் மட்டும் இடமிருந்தால், அவரே குடியரசுத் தலைவராகவும் இருப்பார்! அகில மாகாண முதலமைச்சராகவும் இருப்பார்! பார்லிமெண்ட் தலைவராகவு மிருப்பார்! கிருஷ்ணன் கதையிலிருப்பது போல் ஒரே சமயத்தில் எல்லா இடங்களிலும் தாமே இருப்பதற்கு முடியவில்லையே என்பது தவிர அவருக்கு வேறு மனக்குறையே கிடையாது!

புரட்சி வீரர்கள் இரத்தஞ் சிந்தினார்கள்! புரட்டுக்காரர்கள் அந்த இரத்த ஆற்றில் உல்லாசப் படகோட்டிக் கொண்டிருக்கிறார்கள்!

- குத்தூசி குருசாமி (16-05-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It