அரசியலின் பெயரால் அரசியல்காரர்கள் தேசீயக்காரர்கள் என்போர்கள் தங்கள் சுயநலத்திற்கு மக்களை எவ்வளவு தூரம் ஏமாற்றி பாழ்படுத்தி வருகிறார்கள் என்று சொல்லி வந்தேனோ, அதைவிடக் கொஞ்சமாவது குறைந்ததல்ல இந்த புரோகிதர்கள் அல்லது பார்ப்பனர்கள் என்கிற ஒரு கூட்டத்தார் மதத்தின் பேரால் நம்மை ஏமாற்றி நமது ஒற்றுமையைக் குலைத்து நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த நமது பொருளையும் கொள்ளை கொண்டு நமது நாட்டையும் சமூகத்தையும் பாழாக்கி நம்மை சுயமரியாதையற்ற மனிதர்களாக நடைப்பிணமாய் வாழும்படி செய்து வருவது. இதன் ரகசியத்தை நாம் கொஞ்சமும் உணராமல் இம்மாதிரியான வஞ்சகச் செயலுக்கும் நாமே உதவியாயும் இருந்து நீடூழி காலம் நம்மையும் நமது பின் சந்ததியையும் நிரந்தர அடிமையாக வேண்டியதான ஆதாரங்களையும் சிருஷ்டித்து வருகிறோம். இதை விளக்குகிறபோது உங்கள் மனம் ஒரு சமயம் பதைத்தாலும் பதைக்கும். தயவு செய்து கொஞ்சம் பொறுமையோடு கவனித்து கேட்ட பிறகு உங்கள் பகுத்தறிவையும் நடுநிலைமையில் இருந்து உபயோகப்படுத்தி பார்ப்பீர்களானால் அதன் உண்மை அதாவது “நான் சொல்லுவது சரியா தப்பா என்பது உங்களுக்கு விளங்காமல் போகாது. அல்லாமலும் நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது கடவுள் வாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும், நாஸ்தீகர்கள் ஆகிவிடுவீர்கள்” என்ற வேதம், சாஸ்திரம், புராணம் போல நான் உங்களை அடக்குமுறைக்குள் ஆளாக்கவில்லை.

periyar 414நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, யுக்தி, அனுபவம் இதுகளுக்கு ஒத்து வராவிட்டால் தள்ளிவிடுங்கள் . ஒத்து வந்தால் காரியத்தில் கொஞ்சமாவது செய்ய முற்படுங்கள். உங்கள் சகோதரர்களுக்கும் இதைச் சொல்லி அவர்களையும் ஈடேற்றுங்கள் என்றுதான் நான் சொல்லுகிறேன். இப்படிச் சொல்லுவதனால் எனக்கு இதில் ஒரு சுயநல பலனும் இல்லை என்பதையும் அறியுங்கள். நான் எந்த மதக்காரனுக்காவது ஏஜண்டு அல்ல, அல்லது நானும் எந்த மதத்துக்காரனுக்காவது அடிமையும் அல்ல. அன்பு, அறிவு என்கிற இரண்டு தத்துவத்திற்குள் மாத்திரம் ஆட்பட்டவன். ஆதலால் எனக்குப் பட்டதை உங்கள் முன் சொல்வதில் எனக்கு ஒரு கடமையும், ஆசையும், மகிழ்ச்சியும் இருப்பதால் சொல்லுகிறேன். மற்றபடி அதைப் பற்றிய உங்கள் கடமைகளை உங்கள் சுதந்திரத்திற்கே அதாவது உங்கள் பகுத்தறிவுக்கே விட்டு விடுகிறேன்.

மதம் என்பது நாட்டிற்கோ ஒரு சமூகத்திற்கோ ஒரு தனி மனிதனுக்கோ எதற்காக இருக்க வேண்டியது? ஒரு தேசத்தையோ, சமூகத்தையோ கட்டுப்படுத்தி ஒற்றுமைப்படுத்துவதற்காகவா, பிரித்து வைப்பதற்காகவா? அது ஒரு மனிதனின் மனச்சாக்ஷிக்கு கட்டுப்பட்டதா? அல்லது ஒரு மனிதனின் மனச்சாக்ஷியை கட்டுப்படுத்தக் கூடியதா? மனிதனுக்காக மதமா அல்லது மதத்துக்காக மனிதனா? என்பவைகளை தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

இந்த முறையில் நமது மதம் என்பதின் யோக்கியதையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் . முதலாது நமது மதமாகிய இந்து மதம் என்பது என்ன என்பது இங்குள்ள எத்தனை பேருக்கு தெரியும்? இந்து மதஸ்தர்கள் என் போர்களில் எத்தனை பேர்கள் அதன் தத்துவத்தை அறிந்திருப்பார்கள் ? இந்து மதம் என்பதாக ஒரு மதம் உண்டு என்று எத்தனை பேர் ஒப்புக் கொள்ளுகிறார்கள் ?

முதலாவது, இந்து என்பது எந்த பாஷை வார்த்தை? உலகத்திலுள்ள எந்த பாஷையிலாவது இந்து என்கிற ஒரு வார்த்தை இருக்கிறதாக யாராவது சொல்லக்கூடுமா? நமது நாட்டிற்கு இந்த வார்த்தை எப்பொழுது வந்தது? என்று பார்ப்பதானால் நம்முடைய தமிழ் இலக்கண இலக்கியங்களிலாகட்டும் அல்லது சங்ககால பழய தமிழ் ஆதாரங்களிலாகட்டும் அல்லது ஆரிய பாஷை, ஆரிய நாகரீக பழக்க வழக்கங்களைக் கொண்ட வேதம், சாஸ்திரம், ஆகமம், சுருதி, ஸ்மிருதி, புராணம், சரித்திரம், கதை முதலிய எவைகளிலாவது இந்து அல்லது இந்துமதம் என்கிற வார்த்தை இருக்கிறதா? அல்லது ஆழ்வாராதிகள், நாயன்மார்கள் என்ற பெரியோர்களது பாடல்களிலாவது, சரித்திரங்களிலாவது இந்த வார்த்தை காணப்படுகிறதா? அல்லது சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் என்று சொல்லப்பட்டவர்களாவது இம்மாதிரி வார்த்தை உச்சரித்ததாகவோ வழங்கினதாகவோ எங்காவது காணக்கிடக்கின்றதா?

மதம் என்பதற்கு நாம் உத்தேசிக்கும் பொருள் தான் என்ன? என்று பார்த்தால் ஆராய்ச்சிக்காரர்கள் மதம் என்பது கொள்கை என்று சொல்லுகிறார்கள் . அப்படியே வைத்துக் கொள்வதானாலும் இந்து மதம் என்பதற்கு என்ன பொருள்?

இந்து கொள்கை என்று வைத்துக் கொள்ளலாம் என்றால், இந்து என்பதற்கு பொருள் என்ன? இந்து மதம் என்பதைத் தவிர மற்ற மதங்கள் என்பவைகள் இம்மாதிரி இல்லாமல் மதம் என்பதற்கு முன்னால் ஒரு தனிப்பட்ட மனிதனின் பெயரை வைத்து பின்னால் மதம் என்பதைக் கூட்டி கிருஸ்து மதம், மகமதிய மதம், புத்தமதம், இராமானுஜ மதம், சங்கராச்சாரிய மதம் என்பது போல சொல்லப்படுகிறது. இம்முறையில் இந்து மதம் என்பது எந்த ஆசாமியை உடையது? யாருடைய கொள்கை என்று பெயர் கொண்டது? ஒன்றுமே இல்லாமல் வெறும் உச்சரிப்பைத் தவிர யாதொரு பொருளுமற்றதான சப்தம் கொண்ட வார்த்தையை நமது மதத்திற்கு பெயராக வைத்துக் கொண்டிருக்கிறோமா இல்லையா என்பதை யோசித்துப் பாருங்கள்.

இரண்டாவது, மற்ற மதங்களைப் போல இந்து மதத்திற்கு யார் கர்த்தா? அதற்கு என்ன வயசு? அதற்கு என்ன கொள்கை? இதற்கு என்ன ஆதாரம் என்பவைகளையாவது யோசித்துப் பாருங்கள் “இந்து மதம் என்பது வேத மதம். வேதம் என்பது கடவுளால் சொல்லப்பட்டது” என்று சிலர் சொல்லுவது உண்டு. அந்த ஆபாசத்தையும் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். கடவுளால் சொல்லப்பட்ட வேதமானால் உலகத்தில் உள்ளவர்கள் எல்லோருக்கும் ஒரே வேதமாயிருக்கக் கூடுமே தவிர ஒருவர் ஒப்புக்கொள்ளவும் மற்றொருவர் மறுக்கவும், மற்றொருவருக்கு தென்படக்கூடாததாயும் ஒரு எல்லைக்குள்ளாகவே அடங்கக் கூடியதாகவும் இருக்க முடியுமா? கடவுளால் சொல்லப்பட்டதானால் அது ஒரு பாஷையில்தானா சொல்லப்பட்டிருக்க வேண்டும்? நமக்கு சொல்லப்பட்ட வேதமானால் நம்முடைய பாஷையில் சொல்லப்பட்டிருக்காதா? வேத பாஷைக்கும் நமக்கும் ஏதாவது சம்மந்தமுண்டா? அன்றியும் நமக்காக கடவுளால் சொல்லப்பட்டதாயிருந்தால் நாம் அதை கேட்கவும், பார்க்கவும், படிக்கவும், அறியவும் கூடாததாயிருக்க முடியுமா? அது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு வேதம் என்பதாகக் கணக்குக்காரருக்கு கட்டுப்பட்டதாக இருக்குமா? தவிர “பிடித்தவனுக்கெல்லாம் பெண்டாட்டி” என்பது போல் அதற்கு ஆளுக்கு ஒருவிதமாக அவரவர் இஷ்டப்படி வியாக்கியானம் செய்யவும் ஒவ்வொரு வியாக்கியானத்திற்கு ஒரு கக்ஷி சேர்க்கவும் தக்கதாக இருக்கக்கூடுமா? ஆகிய இது போன்ற அநேக விஷயங்களை யோசித்தால் வேதம் என்று ஒன்று உண்டா? உண்டாயிருந்தாலும் அது உண்மையானதா? உண்மையானாலும் நம்மை அது கட்டுப்படுத்தத்தக்கதா என்பவைகளை சற்று யோசியுங்கள். தவிர இம் மாதிரியான மத வேத கடவுளைப் பற்றியும் இது போலவே யோசியுங்கள் .

உலகத்திற்கு எத்தனை கடவுள்? அதிலுள்ள எத்தனையோ மதங்களில் ஒரு மதமாகிய இந்து மதம் என்பதற்கு எத்தனை வேதங்கள்! அவைகளுக்கு எத்தனை கடவுள்கள்! இந்த கடவுள்களை ஆராதிக்கிற வணங்குகிற மக்களுக்கு எத்தனை கக்ஷிகள்! ஒவ்வொரு கடவுள்களின் குறிகளுக்கு எத்தனை அடையாளங்கள்! அவைகளுக்காக எத்தனை சண்டைகள்! இந்த கடவுள்களுக்கு எத்தனை கோயில்கள்! எத்தனை ஆதாரங்கள்! எத்தனை கலியாணங்கள்! எத்தனை பெண்டு பிள்ளைகள்! எத்தனை அக்கிரமமான நடவடிக்கைகள்! என்பது போன்றதையும் கவனியுங்கள் . இந்த கடவுள்களின் பக்தர்களுக்குள் எத்தனை வித்தியாசங்கள்! எத்தனை ஜாதிகள்! எத்தனை உயர்வு தாழ்வுகள்! இவைகளிலெல்லாம் ஒரே ஒரு வகுப்பார் மாத்திரம், அதுவும் விரல் விட்டு எண்ணிவிடத்தகுந்த வெகு சிலர் மாத்திரம் எல்லாவற்றிற்கும் பெரியவர்கள், உயர்ந்தவர்கள், உரிமையுள்ளவர்கள் என்கிற நியாயம் ஏன்?

கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர், அவர் எங்கும் உள்ளவர் என்கிற தத்துவம் நம்முடைய மதத்து கடவுளுக்கும் உண்டானால், நாம் கடவுள் கிட்டப் போகக் கூடாது, மற்றவர்கள் கோயில்களுக்குள் வரக்கூடாது, மற்றொருவர் மாத்திரம்தான் கடவுளைத் தொடலாம், கழுவலாம், வேஷ்டி துணி கட்டலாம் என்கிற கொடுமைகள் அதற்கு ஏற்படுத்த முடியுமா?

நாம் இந்த மதத்தை ஒப்புக் கொண்டு, அதில் கண்ட சாமிகளையும் ஏற்றுக் கொண்டு அதற்காக கோயிலும் கட்டி சொத்தும் விட்டு, நாம் வணங்கவும் தினம் போய் வருவதினால் நமக்கு ஏற்படுகிற பலன் என்ன என்பதைப் பற்றி சற்று யோசித்துப் பாருங்கள் .

ஒரு லக்ஷம், ஐந்து லக்ஷம், பத்து லக்ஷம் ரூபாய்கள் என்பதாக செலவு செய்து கோயில் கட்டி அந்த கோயில் 100 வருஷம், 1000 வருஷம், 10000 வருஷம், 100000 வருஷம் என்கிற காலம் நிலைத்திருக்கச் செய்வதில் என்ன நிலைத்திருக்கச் செய்கிறோம் என்பதை சற்று பொறுமையாய் யோசித்துப் பாருங்கள். “இந்த கோயிலிலுள்ள சுவாமியிடம் போகக்கூடாத ஒரு நீச்சன் நான், அந்த சாமிக்கு நேரே பூஜை செய்யக் கூடாத ஒரு இழிந்தவன் நான், என்னை விட ஒரு பெரிய ஜாதி இருக்கிறது, அவர்களைவிட தாழ்ந்த ஜாதியாகிய நான் நிற்பதற்கு இந்த இடம்” என்று பல பல விதமாக நம்மை நாமே இழிவுபடுத்திப் பிரித்து அதை ஒப்புக் கொண்டு “அந்த கல்லும், கோயிலும், கோயிலுக்குள் இருக்கும் சுவாமியும் உள்ளவரை என்னுடைய இழிவும் நீச்சத்தனமும் தாழ்வும் நிலைத்திருக்கத்தக்கது. இதற்கு என் பின் சந்ததிகளும் கட்டுப்பட்டிருக்க வேண்டும். இத்தனை லட்சம் செலவு செய்து கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தது மாத்திரமன்றி என்னைவிட இன்னொரு ஜாதியான் உயர்ந்தவன் என்பதை நிலை நிறுத்தவும், அவன் பசியினால் சாகாமல் இருக்கவும் அவனுக்கு உபயோகப்படும்படியாக அந்த சாமியின் பெயரால் இத்தனை லட்சம் ரூபாய் சொத்துக்களை எழுதி வைக்கிறேன். இதை அவன் கூட்டத்தார் மாத்திரம் சாப்பிட்டுக் கொண்டு பிள்ளை பிள்ளை தலைமுறையாய் கற்பகோடி காலத்திற்கு கல்லும், காவேரியும், புல்லும், பூண்டும் உள் ளவரைக்கும் மேல் ஜாதியாயிருந்து வர வேண்டியது” என்று செய்வதாகிறதேயல்லாமல் வேறு என்ன என்பதையும் கவனித்துப் பாருங்கள்.

இது தவிர இந்த மாதிரி கோயில்களுக்கு மற்றவர்களையும் எவ்வளவு செலவுகள் செய்யச் சொல்லுகிறோம். அதனால் மக்களுக்கு ஏற்படுகிற செலவுகள் எவ்வளவு என்பதை பாருங்கள். “சர்க்கார் நம்மிடம் வரி வாங்குகிறார்கள். கொள்ளை அடிக்கிறார்கள் . அது செய்யவில்லை. இது செய்யவில்லை. வீண்செலவு செய்கிறார்கள் . மக்களுக்கு படிப்பு இல்லை, ஒழுக்கம் இல்லை என்று சத்தம் போடுகிறோமே அப்படிப்பட்ட நாம் இந்த சாமிகளால் அடிக்கப்படும் கொள்ளைகளை கொஞ்சமாவது கவனிக்கிறோமா? அல்லது அவைகளை நிறுத்தவாவது பாடுபடுகிறோமா? என்பதை யோசிக்க வேண்டாமா?

திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள ஒரு 45 கோயில்களை மாத்திரம் கணக்குப் போட்டுப் பாருங்கள். திருநெல்வேலி கோயிலுக்கு வருஷம் ஒன்றுக்கு 70 ஆயிரம் ரூபாய் வரும்படி சங்கரன் கோயிலுக்கு ´ 50,000ம் ரூ. வரும்படி. குற்றாலம் கோயிலுக்கு வருஷம் 40,000 ரூ. திருச்செந்தூர் கோயிலுக்கு 1 1/2 லட்சம் ரூ. வரும்படி. ஆக நான்கு கோயிலுக்கு மாத்திரம் சுமார் மூன்று லட்சம் ரூபாயிக்குக் குறையாமல் வரும்படி வருகிறதாக இந்த தேவஸ்தான நிர்வாகிகளால் கேள்விப்பட்டேன். இது தவிர இந்த கோயிலுக்கு வருகிற பக்தர்கள் போக்குவரவு, தேங்காய்ப் பழம், நெய், தயிர், பஞ்சாமிர்த அபிஷேகம், மேளம் தாளம், தாசி சதிர், பாட்டுக் கச்சேரி, உத்சவம் முதலியவைகளில் செலவு செய்யும் பணம் எவ்வளவு? இவைகளெல்லாம் எதற்காக உபயோகப்படுகிறது? என்பதையும் யோசியுங்கள் . நீங்கள் கீழ்ஜாதி, பூஜை பண்ணுகிறவனும் சிலரும் மாத்திரம் உயர்ந்த ஜாதி, ஆதலால் நீங்கள் கொடுக்க வேண்டியது. மற்றவன் சாப்பிட வேண்டியது என்பதல்லாமல் வேறு எதற்கு உபயோகப்படுகிறது என்பதை நன்றாய் கவனியுங்கள். இந்தமாதிரி செய்யும்படி உங்களை எந்த சாமி கேட்கிறது. அல்லது கட்டளை இடுகிறது.

சில வயிற்றுச் சோற்றுச் சாமி உங்களை ஏமாற்றுவதும், நீங்கள் ஏமாறுவதும் நிஜமாலும் உள்ள சாமிகள் “நமக்கு இப்படியும் முட்டாள் பக்தர்கள் உண்டா?” என்று பல்லைக் காட்டிக் கொண்டு சிரிப்பதும் அல்லாமல் வேறு என்ன பலன் கிடைக்கிறது.

( 4.9.1927 குடி அரசு - சமூக முன்னேற்றம் சொற்பொழிவு தொடர்ச்சி )

குடி அரசு - சொற்பொழிவு - 11.09.1927

Pin It