அல்லியிடையே தாமரை! நாணல் இடையே கரும்பு! சென்னைக் குழாயில் நல்ல தண்ணீர்! பால்காரரிடம் தண்ணீர் ஊற்றாத பால்! ரேஷன் அரிசியில் நல்ல அரிசி!
இவைகளெல்லாம் அபூர்வ நிகழ்ச்சிகள்! உலக அற்புதங்கள்! இவைகளைப் போல பல கூற முடியும், என்னால்! மேலும் பல கூற முடியும், உங்களால்!
உங்களிடையே குமுறிக் கொண்டு கிளம்பும் ஒன்றை மட்டும் இந்தப் பட்டியலில் சேர்த்து விடுகிறேன்! உங்கள் நெஞ்சு வெடித்துவிடக் கூடாது என்பதற்காக!
“பிராமணர்களில் நல்லவர்கள்”!
பழைய சங்கதி ஒன்று என் நினைவுக்கு வருகிறது.
“என்ன நாயக்கர்! பிராமணர்கள் மீது சதா இப்படிக் குறை கூறி வருகிறீரே! யோக்கியமான பிராமணர் ஒருவரைக் கூட நீர் பார்த்ததில்லையா?,” என்று கேட்டாராம், காந்தியார், சுமார் 25 ஆண்டுகளுக்கு முந்தி ஒரு நாள்!
“ஆமாம்! மகாத்மா! ஒருவர்கூட அகப்படவில்லையே!” என்றாராம், பெரியார்.
“அப்படிச் சொல்வது தவறு; நான் ஒரு நல்ல பிராமணனைப் பார்த்திருக்கிறேன். அவர்தான் காலஞ்சென்ற கோக்லே! தன்னை பிராமணன் என்று கனவில்கூடக் கருதாமல் நடந்து வந்தவர்! மிக மிகச் சிறந்தவர்! மகாயோக்கியர்! கள்ளங்கபடமற்றவர்!,” என்று பதிலளித்தாராம், காந்தியார்!
“உலகத்தார் யாவருமே உயர்ந்த குணம் படைத்தவர்கள் என்று கருதியிருக்கும் மகாத்மாவாகிய தங்கள் கண்ணுக்கே ஒரே ஒரு பிராமணர்தான் அகப்பட்டார் என்றால், என்னைப் போன்ற சாதாரணமானவன் கண்ணுக்கு அந்த ஒருவர் கூட அகப்படாததில் ஆச்சரியமென்ன?” என்று கேட்டாராம் பெரியார்!
காந்தியார் சிரித்தாராம்.
இப்படிக் கூறுவதில் ஏதோ துவேஷ உணர்ச்சியிருப்பதாக யாரும் கருதிவிடக் கூடாது! இயற்கைக்கு விரோதமாக இருந்தால் ஆச்சரியந்தானே!
வெள்ளை யானை! வெகுளியான குள்ளநரி! இனிக்கும் வேப்பிலை! கசக்கும் கற்கண்டு!
இவைகள் யாவும் இயற்கைக்கு விரோதமல்லவா?
நேற்று எனக்கொரு திருமண அழைப்பிதழ் கிடைத்தது. அதன் முதற் பகுதியை மட்டும் அப்படியே கீழே தருகிறேன்:-
மக்கள் துணை
பதிவுத் திருமண இதழ்
அன்புடையீர்........................................ வணக்கம்.
ஐயா!
மணமகன் வாழ்க்கை நலனை முன்னிட்டு, துளிரும் திருவள்ளுவர் ஆண்டு (1980) வைகாசித் திங்கள் 23-ம் நாள் ஆங்கிலம் (5-6-49) (ஞாயிற்றுக் கிழமை) மாலை 4-30 மணிக்குமேல் 6 மணிக்குள்ளாக (இராகு காலத்தில்)....... வாழ்க்கை ஒப்பந்தம் நடைபெறும்.
இதைத்தான் நாணல் காட்டிடையே கரும்பு என்றேன்
வீராதி வீரன், வீரமார்த்தாண்டன், புரட்சிப் படையின் தளகர்த்தன், இரத்த ஆற்றில் எதிர் நீச்சு நீந்தும் நிபுணன், பேச்சாலும் எழுத்தாலும் மக்கள் மனதை இறுகக் கட்டித் தூக்குப் போடும் தீராதி தீரன், அண்டர் கிரவுண்டில் ஆறு மாதமும், அப்பர் கிரவுண்டில் அய்ந்த மாதமும் இருந்த புரட்சிப் புழு, கன்னிமரா லைப்ரரியைவிட அதிகமான புத்தகங்களை மண்டைக்குள் வைத்துப் பூட்டியிருப்பவன், பலமொழிப் பண்டிதன், தர்க்க கேசரி, (காஃபி ஹோட்டல் ‘கேசரி’ யல்ல!) ஆராய்ச்சிக் கல்லில் மூளையைத் தீட்டித் தீட்டி ‘சேஃப்டி ரேஸர் ப்ளேடு’ மாதிரிக் கூர்மையாக வைத்திருப்பவன்; எல்லா நாடுகளையும் சுற்றிய அனுபவ முதிர்ச்சியினால் மண்டையில் கருப்பு மயிரே இல்லாத வெள்ளைத் தலையன், “ஞாயிறு திங்கட் செவ்வாய்.... அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே,” என்ற திருப்பதிகம் பாடியும், “கோள் என் செய்யும்” என்று பாடியும், “நாமார்க்கும் குடியல்லோம், நமனையஞ்சோம்- -” என்று அஞ்சாமைப் பண் பாடியும் - வைரம் பாய்ந்த நெஞ்சுடைய சைவன்,- ஆகிய எவராலுஞ் செய்ய முடியாத காரியம் இது!
ஆம்! ஞாயிற்றுக் கிழமை “4-30 மணிக்கு மேல் 6 மணிக்குள்ளாக” என்று மட்டும் குறித்தார்களா? இல்லை! இராகு காலத்தில் என்று கூடச் சேர்த்திருக்கிறார்கள்! திருமணப் பத்திரிகையில்!
“நல்ல நாளும் நல்ல வேளையும்” பார்த்துச் சீர்திருத்தத் திருமணம் செய்வோர் திக்கு நோக்கிக் கும்பிட வேண்டிய இடம் இது!
திராவிடனைப் பேடியாக்கியது பஞ்சாங்கம்! அதிலுள்ள முதல் தரமான பேடிக் கருத்துத்தான் இந்த இராகு காலம்!
தீக்குழி இறங்கும் பக்திப் பூச்சாண்டியை ஊருக்கு ஊர் விரட்டி வருகிறார்கள். நம் தன்மானத் தோழர்கள்! வாகனத்தின்மீது அமரும் அர்ச்சகரைக் கீழே இறக்கி வருகிறார்கள், வாகனந்தூக்கும் தோழர்கள்!
10-15 ஆண்டுகளுக்கு முன்பு பயந்து பயந்து பேசி வந்தது, இன்று வாழைப்பழம் தின்பது போல் நடந்து வருகிறது!
இந்த இராகுகாலப் புச்சாண்டியையும் இப்படித்தான் ஒழிக்கவேண்டும்! இராகு காலத்தில் சாப்பிடுவதனால் விக்கிக் கொண்டு செத்துப் போகிறோமா? உலகில் எந்த நாட்டிலாவது இந்த ராகு காலம் உண்டா? வட இந்தியாவிலேயே கிடையாதே! நம் பிராணனை மட்டும் ஏன் வதைக்கிறது. இந்தப் பீடை?
இராகு காலத்தில் நடக்கும் திருமணம் சரியாயிருக்காது என்றால், இராகுகாலத்தில் அறையும் அறைக்கும் வலியிருக்காது என்று சொல்லி, இராகுகால நடுங்கிகள் ஒருவர் கன்னத்தில் மற்றொருவர் அறைந்து பார்க்க வேண்டாம்! இராகுகாலத்தில் அறைந்தால் கூட கட்டாயம் பல் உதிர்ந்து போகும்! (அதாவது இராகுகாலத்தில் எதுவும் செய்யலாம்; பயனில்லாமல் போகாது!)
- குத்தூசி குருசாமி (06-06-1949)
நன்றி: வாலாசா வல்லவன்