போன மாதத்தில் ஓர் ஊருக்குப் போயிருந்தேன், பிரசாரத்திற்காக! ஊரில் பிரமாத விளம்பரம்! "குத்தூசியார் குதிகாலைத் தூக்கி நின்று கதறுவார்! கழகத் தோழர்கள் கட்டாயம் வந்து கண்டு கை தட்டுங்கள்! காரியத்தில் செய்யாவிட்டாலும் கை தட்டவாவது வாருங்கள்!” என்றெல்லாம் விதவிதமாக விளம்பரஞ் செய்தார்கள்! கூட்டமும் வந்தது. பேசினேன்! இல்லை; சொன்மாரி பொழிந்தேன்! கேட்டவர்கள் (மனதில்) ஈரத்துடன் நின்று கேட்டார்கள்! திரும்பினேன்!

கூட்டத்துக்குச் செல்லும்போது வழக்கம்போல் வண்டியில் அழைத்துச் சென்றார்கள். கூட்டம் முடிந்து ரயில்வே ஸ்டேஷனுக்குத் திரும்பும்போது நடையாகவே (இதுவும் வழக்கம் போலத்தான்) அழைத்து வந்தார்கள்! ஒரு சிலரைப் போலில்லாமல் பேச்சுத் துணைக்காகக் கூடவாவது நடந்து வந்தார்களே என்ற மகிழ்ச்சிப் பெருக்கால் என் கையிலிருந்த மாலையை (ரேஜாப்பூக்கள் முழுதும் மேஜைமீது உதிர்ந்து விட்டனவாகையால் அவைகள் நீங்கிய மாலைதான்!) அமைப்பாளர் கழுத்தில் போட்டேன். வேடிக்கையாகப் பேசிக் கொண்டே வந்தோம்.

kuthoosi gurusamy 300ஷம்சுடீன் (என் கூட வந்தவர்):-என்ன ஜோசஃப் இந்து மத சாக்கடை எங்கள் வீட்டுக்குள் கூடப் புகுந்து விட்டதே! என்ன செய்வது? எங்களவர்களே அதைப் பார்த்து ஆனந்தப்படுகிறார்களே!

ஜோசஃப்:- நீங்கள் கூறுவது விளங்கவில்லையே! உங்களில் சிலர் நல்ல நாள், ராகு காலம், சகுனம் எல்லாம் பார்க்கிறார்களே, அதைச் சொல்கிறீர்களா?

ஷம்சு:- இவை மட்டுமா? என்ன அக்கிரமம் பாருங்கள்! நாகூரில் போய் மொட்டை யடிக்கிறார்கள்! எதற்காக மயிரைக் கொடுக்கிறார்கள்? யாருக்குக் கொடுக்கிறார்கள்? அதை அநுமதிப்பது சரியா? ஆண்டவன் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்? எதுவுமே எனக்கு விளங்கவில்லை. இந்த மக்கள் எப்படித்தான் திருந்தப் போகிறார்களோ?

ஜோசஃப்:- அதை ஏன் கேட்கிறீர்கள்? எங்கள் வீட்டில் கூடத்தான் அந்தச் சாக்கடை புகுந்து விட்டது. எங்களவர்கள்கூட அந்த நாற்றத்தை முகர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்! கேளுங்களேன், இந்தக் கதையை! நேற்றுத்தான் தூத்துக்குடியிலிருந்து வந்தேன். அங்கே ஒரு கிராமம், அதில் அந்தோணியார் கோவில் என்று ஒன்றிருக்கிறது. ஒரு நாள் இளந் தம்பதிகள் தங்கள் குழந்தையுடன் அங்கு வந்தார்கள். குழந்தைக்கு மொட்டையடிக்க வேண்டுமென்று கேட்டார்கள். மொட்டை யடிப்பவர் “நீங்கள் என்ன ஜாதி?” என்று கேட்டார். “நான் கிறிஸ்தவன்; ஜாதி கிடையாது; அதை ஒழிக்கத்தான் வேதத்தில் சேர்ந்தேன்,” என்றார், குழந்தையின் தகப்பன். “அதெல்லாம் முடியாது; சாமியார் உத்தரவுப்படித் தான் நடப்பேன். ஜாதியைச் சொல்,” என்றார் மொட்டையடிப்பவர். ஏதோ ஒரு ஜாதி பெயரைச் சொன்னார் (அது பொய்யாகத் தானிருக்க வேண்டும்) பிறகு மொட்டையடிக்கப்பட்டது. உண்மையைச் சொல்லியிருந்தால் மொட்டை யடிக்கப்பட்டிருக்காது என்பது நிச்சயம்! இதற்கென்ன சொல்கிறீர்கள்?

ஷம்சு:- ஏன்? வேளாங்கண்ணிக் கோயில் மொட்டையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?

(இந்தச் சமயத்தில் இடைமறித்துப் பேசினார், மொட்டைத் தலை முனுசாமிப் பிள்ளை),

முனி:- நேற்றுத்தான் பழினியிலிருந்து வந்தேன்!

ஷம்சு:- தங்கள் தலையே சொல்கிறதே! அது சரி எதற்காகப் போயிருந்தீர்கள்?

முனி:- இரண்டு மாதம் விடாத வயிற்றுப் போக்கினால் கஷ்டப்பட்டேன்; பழனியாண்டவனுக்கு வேண்டிக் கொண்டேன். அவர் உயிரைத் தந்தார்!

 ஜோசஃப்:- அதற்காக நீர் மயிரைக் தந்தீரோ? ரொம்ப அழகாயிருக்கு! கடவுளை ஏனய்யா இப்படி அவமானப் படுத்துகிறீர்கள்? துருக்கியிலுண்டா? அமெரிக்காவிலுண்டா? இங்கிலாந்திலுண்டா? ரஷ்யாவிலுண்டா? ப்ரான்சிலுண்டா? இத்தாலியிலுண்டா? ஆ;ஃப்கானிஸ்தானிலுண்டா? ஆஸ்ட்ரேலியாவிலுண்டா? சீனாவிலுண்டா? ஜப்பானிலுண்டா? அதெல்லாம் எதற்கு? இந்த நாட்டுப் பார்ப்பனர்ககளிடமுண்டா? எங்கே அய்யா உண்டு, இந்த அக்கிரமமான பழக்கம்? நம் புத்தியைப் பற்றிக் கடவுள்தான் என்ன நினைப்பார்?

* * *

“ஏ! பக்த சிகாமணிகளே! போதும் உங்கள் வழிபாடும் மரியாதையும்! உங்கள் நாட்டிற்குள்ளேயே நான் இனித் தலை காட்டப்போவதில்லை! என் பெயரைச் சொல்லிக்கொண்டு நீங்கள் நடத்தாத அட்டூழியமில்லை! அதில் மயிர் கொடுப்பதும் ஒன்று! அடாடா! அதை நினைக்க நினைக்க எனக்கு எப்படிக் கோபம் வருகிறது தெரியுமா?”-

என்று யாரோ பேசுவதுபோல் கேட்டது. அசரீரியோ என்று நினைத்து அண்ணாந்து பார்த்தோம்! பார்த்தோம்! பிறகு திரும்பிப் பார்த்தோம். பின்புறம் வந்து கொண்டிருந்த கருஞ்சட்டைச் சிறுவன் வாயில் ஒலிபரப்புக் குழாயை வைத்துக் கொண்டிருந்தான்! அவனாகத்தான் இருக்க வேண்டும்; அசரீரி கூடவா கருஞ்சட்டையில் வர வேண்டும்?

- குத்தூசி குருசாமி (19-04-1948)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It