"தேவை! தேவை! உடனே தேவை!! கல்லூரியில் படித்த அழகுள்ள 22 வயது இளைஞருக்குத் திருமணம் செய்ய ஓர் அழகான பெண் தேவை! பெண் எஸ்.எஸ்.எல்.ஸி. வரையிலாவது படித்திருக்க வேண்டும்; குறைந்த பட்சம் எலுமிச்சம் பழம் நிறமாவது இருக்க வேண்டும். திருப்பதி மயிர் உதவியில்லாமல் சடை போடக் கூடியவளா யிருக்க வேண்டும். பள்ளிக் கூடத்தில் கற்றுக் கொடுத்த சமையல் முறையைத் தவிர வேறு எந்தவிதமாகச் சமைக்கத் தெரிந்தாலும் போதும். மணமகன் உயர்ந்த பதவியிலிருப்பதனால் பெண்ணுக்குச் சொத்து இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பெண் உள்ளூராக இருந்தால் சொந்த வீடு உடையவளாக இருப்பது பெரிதும் விரும்பப்படும். சொந்த வீடிருந்தால், பெண்ணின் யோக்யதாம்சங்கள் குறைவுபட்டாலும் பரவாயில்லை. பெண் ஊமையாகவும், கால் நொண்டியாகவும் இருந்தால்கூடப் பாதகமில்லை. கீழ்க்கண்ட விலாசத்துக்கு எழுதவும்:- “அவுட். எம். ஏ., 13-ம் நம்பர் அறை, திவால் ஹோட்டல்.”

kuthoosi gurusamy 268இந்த மாதிரி ஒரு விளம்பரம் வந்தால் யாரும் ஆச்சரியப்பட முடியாது. எல்லா ஊர்களிலும் வீட்டுக்கு அவ்வளவு கிராக்கி. முன்பெல்லாம் தூக்குப் போட்டுக் கொண்ட வீடுகள் எப்போதும் காலியாகவே கிடக்கும்; 10-12 ரூபாய் வாடகைக்குப் பெரிய பெரிய “பேய் வீடுகள்” கூடக் கிடைக்கும். இப்போது அப்படியல்ல; ‘பேய்’கள் வீட்டுக்குள் நுழைவதற்கு இடமில்லாதபடி மனிதர்கள் புகுந்து கொண்டிருக்கின்றனர்! பேய்களும் இந்த ஜன நெருக்கடியில் நாம் குடியேறினால் மூச்சுத் திணறிச் சாக வேண்டியதுதான், என்று பயந்து கொண்டு நகரங்களில் தலை காட்டுவதே இல்லை போலிருக்கிறது!

“நீங்கள் தானே வீட்டுக்காரர்? இந்த வீட்டில் யாரோ ஒருவன் 4 நாளைக்கு முன்பு தூக்குப் போட்டுக் கொண்டு செத்தானாமே? இதில் யாரும் குடி வர மாட்டார்கள். எனக்கு வாடகைக்குக் கொடுப்பதானால் நான் வரத் தயாராயிருக்கிறேன். எனக்கு எந்தவித பயமுமில்லை!” என்று ஒரு வீட்டுக்காரரிடம் கூறினேன்.

“ஆமாம் ஸார்! நீங்கள்தான் தைரியமா யீருப்பீர்கள்? உங்கள் குடும்பத்தார் பயப்பட மாட்டார்களா?” என்று கேட்டார்.

 “பயப்பட மாட்டார்கள்; அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. வாடகை எவ்வளவு?”

“வடகை 20 ரூபாய்தான். தூக்குப் போட்டுக் கொண்டவன் 100 ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்தான். இப்போது நீங்கள் அவ்வளவு கொடுக்க வேண்டாம்! 20 ரூபாய் கொடுத்தால் போதும்!” என்று சொன்னார்.

3 அறைகள் உள்ள இந்தச் சிறு வீட்டுக்கா 100 ரூபாய் கொடுத்தான்? என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டே குடி புகுந்தேன். சரியாக ஒரு மாதந்தான் இருந்தேன். “வாடகை அதிகம் வேண்டும்; இல்லாவிட்டால் காலி செய்துவிட வேண்டும்” என்று நோட்டீஸ் கொடுத்தார், வீட்டுக்காரர். தூக்குப் போட்ட வீட்டில் நான் முதன் முதல் குடி வந்த வரையில் தமக்கு லாபம் என்று நினைத்துக் கொண்டார். வாடகைக் கட்டுப்பாடு உத்யோகஸ்தருக்கு விண்ணப்பம் போட்டேன். அவர் அந்த வீட்டிற்கு 100 ரூபாய்தான் வாடகை என்று தீர்ப்பளித்து விட்டார். அவர் என்ன செய்வார் பாவம்? வீட்டுக்காரர் அவரைப் பணத்தால் அடித்துக் காயப்படுத்தி விட்டாராம்! ஆகவே காலி செய்து விட்டேன்! (ஆனால் தூக்குப் போட்டுக் கொள்ளவில்லை!) வேறு குடியும் வந்து விட்டது. வாடகை 100 ரூபாய்தான்! அதைத் தவிர “மிட்டாய்ப் பணம்” 1200 ரூபாயாம்! அதாவது ரசீது இல்லாத வெகுமதியாம்! வீட்டுக்காரர்கள் இதற்குப் “பகடி” என்றும், “மிட்டாய்ப் பணம்” என்றும் கூறுகிறார்கள். ஆனால் குடியிருப்பவர்கள் இதற்கு “வாய்க்கரிசிப் பணம்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்!

இந்த மாதிரித் தொல்லைப்படுவதைவிட பெரிய பெரிய பங்காளக்களிலும், கோயில்களிலும் போய் பலவந்தமாகக் குடியேறி விட்டால் என்ன என்று தோன்றுகிறது. “உடனே ஜெயிலுக்குள் தள்ளி விடுவார்களே!” என்று நீங்கள் கேட்கலாம். அங்கேயாவது காலியிடம் இருக்குமா? வீடுகளைப் போலத்தான் உட்கார இடமில்லாமலிருக்குமா? இந்தக் கம்யூனிஸ்ட்களை நினைத்தால் எவ்வளவு பொறாமையாக இருக்கிறது தெரியுமா? ஜாம்ஜாமென்று அருமையான கட்டிடங்களுக்குப் போய் முன்னாடியே இடம் பிடித்துக் கொண்டார்களே! இனிமேல் நீங்களும் நானும் போனால் கூட “ஒண்டிக்குடித்தனம்” தானே? ‘எலி வளையென்றாலும் தனி வளை’ தானே நல்லது?

மந்திரிமார்களே! வீடு கிடைக்காதவர்களுக்கு வீடு கட்டித் தர முடியாவிட்டால் போகிறது! ஜெயில்களையாவது விரிவாகக் கட்டிப் போடுங்கள்! குழந்தை குட்டிகளோடு என்னாலே இப்படி அவதிப்பட முடியாது என்று நினைப்பவர்கள் எத்தனையோ ஆயிரம்!

- குத்தூசி குருசாமி (10-04-1948)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It