"ஓய்! பச்சையப்ப பிள்ளை! இப்படி வாருமய்யா! உம்மாலே! வெகு தொல்லையாயிருக்கிறதே! நீர் குளத்தங் கரையில் என்ன பேசினீர்?”

kuthoosi gurusamy 300“எப்போது? யாருடன்? -என்று சொல்லாமல் இப்படிக் கேட்டால்? நான் தினமும்தான் குளத்துக்குப் போறேன். காண்பவர்களோடு பேசுகிறேன்.”

“அது தெரியுமய்யா, எனக்கு! ஒரு மாதத்துக்கு முன்னே இந்த ஊர் புரோகிதன் மகன் வெங்கிட்டுகிட்டே ஏதாவது பேசினீரா?”

பச்சையப்ப பிள்ளை யோசித்துப் பார்த்தார், மூக்கில் விரல் வைத்தபடியே.

“ஆமா ஆமா! இப்போது ஞாபகம் வந்தது! ரேஷன் அரிசி அரை வயிற்றுக்குக் கூடப் போதவில்லையென்று சொல்லி, அவன் தந்தையிடம் கேட்டு 4 படி அரிசி விலைக்கு வாங்கி வர முடியுமா என்று கேட்டேன். அதிலென்ன தப்பு?”

“அதில் ஒன்றும் தப்பில்லை. அதற்கு அவன் என்ன பதில் சொன்னான்?”

“எங்கப்பா சில்லறையாகக் கொடுக்க மாட்டார். மாதக் கடைசியிலே மூட்டையாகத்தான் கொடுப்பார்! ஒரு மூட்டை வேண்டுமானால் கேட்கட்டுமா சார், என்றான், ‘எனக்கு எதற்கப்பா ஒரு மூட்டை அரிசி, அதுவும் இரட்டிப்பு விலை கொடுத்து’ என்று சொன்னேன். அதற்கு அவன், ‘ஏன், சார் வித்வான் படிப்பெல்லாம் படித்து புரோகிதாளா போயிட்டா, மாதம் 100-200 ரூபாயும் ஒரு மூட்டைக்குமேல் முனை முறியாத பச்சரிசியும், விற்கக்கூடிய அளவுக்குக் காய்கறியும், வேண்டுமான நெய்-எண்ணெயும், போதுமான துணி மணியும் - எல்லாம் கிடைக்குமே ஸார்? என்று கேட்டான்.”

“அது சரி, கேட்டானா? அதற்கு நீர் என்ன சொன்னீர்?” என்று அதட்டிக் கேட்டார், பள்ளிக்கூடத்து மானேஜராகிய ஆழ்வார் செட்டி.

பண்டிதர் பச்சையப்ப பிள்ளை நடுங்கிப் போய் விட்டார்.

 “நான் சொன்னதைக் கேட்கிறீர்களா? ‘உன் அப்பா பிறவியிலேயே உயர்ந்த ஜாதியப்பா! அவர் புரோகிதம் செய்தால் பல முட்டாள்கள் கொடுப்பார்கள்; நான் புரோகிதம் செய்தால் எவனப்பா ஒரு காசு கொடுப்பான்? உங்கப்பாவுக்குத் தேவ பாஷை தெரியும். அதிலே மந்திரம் சொன்னால்தான் பிதிர்களுக்குத் திருப்தி ஏற்படும்! நான் தமிழில்தானே சொல்வேன்! பிதிர்களுக்குத்தான் தமிழ் தெரியாதே! உங்கப்பா பிரம்மாவின் முகத்திலிருந்த பிறந்தவர்; பிராமணர். நான் காலிலிருந்து பிறந்தவன். பிராமணர் வாங்கப் பிறந்தவர்கள்; மற்றவர் கொடுக்கப் பிறந்தவர்கள். இதுதானப்பா இந்து மதம்! இல்லாவிட்டால் நான் ஏன் 30 ரூபாய்க்குப் பஞ்சாய்ப் பறக்கிறேன்? உன் அப்பா எப்படி மாடி வீடு கட்டுவார்? உன் அப்பாவின் வாய் இருக்கிறதே, அது பரலோகத்து அன்ரிஜிஸ் டர்ட் பார்சல் போடும் தபால் பெட்டியப்பா! போ! போ! என் வயிற்றெரிச்சலைக் கிளப்பாதே!” என்று, இந்த மாதிரி இன்னும் எதை எதையோ சொன்னேன். இதிலென்ன தவறு? நான் சொன்னது பொய்யா?”

“நீர் சொன்னது பொய்யா? மெய்யா? அதுவல்ல, நான் கேட்பது. உம் வாய்த்துடுக்கு என் தலைக்கல்லவா கல்லாக வந்திருக்கிறது?”

“ஏன், உங்களுக்கென்ன தொல்லை ஏற்பட்டது?”

“எனக்கா? இதோ, பாரும். சர்க்காரிலிருந்து கேட்டிருக்கிறார்கள்:-

“உன் பள்ளிக்கூடத்துத் தமிழ்ப் பண்டிதர் பச்சையப்ப பிள்ளை, இந்து மதத்தைக் கிண்டல் செய்தும் தூஷித்தும், இந்துமத பழக்க வழக்கத்தை வெறுத்தும் குளத்தங்கரையில் தன் மாணவனிடம் பேசியதாக அவன் தந்தை புரோகிதர் பூதேவ சாஸ்திரியார் அவர்கள் ரிப்போர்ட் செய்திருப்பதனால், அத்தகைய ஆசிரியரை உன் பள்ளியில் வைத்திருப்பதற்காக ஏன் சர்க்கார் கிராண்டை நிறுத்திவிடக் கூடாது என்பதற்கு 24 மணி நேரத்திற்குள் காரணங் கூறவும்.”-

“பார்த்தீரா, ஓய், உம்மால் எனக்கு வந்த வினையை உமக்கு ஏன் காணும் இந்த இழவெல்லாம்? நன்றாய்த் தான் படித்திருக்கிறீர்! வெகு பேஷாய்த்தான் சொல்லிக் கொடுக்கிறீர்! உம் வாயை மட்டும் மூடி வைத்திருக்க மாட்டேனென்கிறீரே!”

“நான் பள்ளியில் கூடச் சொல்லவில்லையே! குளத்தங்கரையில்தானே பேசினேன்! அது கூடவா தவறு?”

“பள்ளிக்கூடத்திலோ, வெளியிலோ மத நம்பிக்கைகளைக் கிண்டல் செய்யக்கூடாது”, என்று உத்தரவு கூறுவதைப் படித்தீரே ஓய்! மறந்தா போய்விட்டீர்? நம் கல்வி மந்திரி ஒரே மதவெறி பிடித்துத் திரிகிறார்; அவர் மந்திரியாயிருக்கும் வரைக்குமாவது,- ஏதோ சில மாதங்களுக்கு-வாயை அடக்கி வையும் என்று தலை தலையாய் அடித்துக் கொள்கிறேனே, கேட்கிறீரா? உம்மைப் பற்றிக்கூட எனக்குக் கவலையில்லை. நீர் எங்கேயோ போய் ஒரு வெற்றிலை பாக்குக்கடை வைத்தால் கூட மாதம் 100-200 சம்பாதித்து விடுவீர். ஆனால் இவ்வளவு குறைந்த சம்பளத்தில் எனக்குத் தமிழ்ப் பண்டிதர் கிடைக்க மாட்டாரே! அதுதானே சங்கடமாயிருக்கிறது!”

“செட்டியார்வாள்! பயப்படாதீர்! நான் எழுதித் தருவதை மேற்படி மந்திரியாருக்கே அனுப்பும்,”

என்று கூறி கீழ்க்காணும் வரிகளை ஒரு சிறு காகிதத்தில் எழுதி மந்திரிக்கு அனுப்பச் செய்தார்:-

பார்ப்பன மாந்தர்காள்! பகர்வது கேண்மின்!

இறந்தவராய் உமை இவ்விடை இருத்திப்

பாவனை மந்திரம் பல பட உரைத்தே

உமக்கு அவர் புத்திரர் ஊட்டின போது

அடு பசியாற் குலைந்து ஆங்கவர் மீண்டு

கையேந்தி நிற்பது கண்டதார் புகல்வீர்!

அருந்திய உணவால் யார் பசி கழிந்தது?”

 - கபிலர்.

- குத்தூசி குருசாமி (16-1-1948)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It