kuthoosi gurusamy 300“நாங்கள் ஆண்டால் ஆள்வோம்; இல்லாவிட்டால் பிரிட்டிஷாரின் துப்பாக்கி முனைகள் இந்நாட்டை ஆளுமேயொழிய, பிற்போக்காளரிடம் இந்த ஆட்சியை இனி ஒப்படைக்க மாட்டோம்,” என்று திரு. ஸி.ஆர். முதன் மந்திரியாயிருக்கும்போது அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார். “என்ன நெஞ்சழுத்தம் இவருக்கு?” என்று என்னைப் போன்ற பலர் முணுமுணுத்ததுண்டு.

பிறகு ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய பெரியார், “இந்த நாட்டைத் திராவிடர்களாகிய நாங்கள் ஆளாத வரையில் எவர் ஆண்டாலும் எங்களுக்கு ஒன்றுதான். வெள்ளையன் ஆட்சி போய், ஆரியன் ஆட்சி வந்து விடுவதனால், அதை எமது சொந்த ஆட்சி என்று கருதிக் கொள்வோமா? இந்த நாட்டை எத்தனையோ அன்னியர் இதுவரை ஆண்டிருக்கின்றனர். ஏன்? ஒரு ஜோடி செருப்பே ஆண்டிருக்கிறதே!” என்று கூறினார். கை தட்டல் ஓய்வதற்கு ஒரு நிமிஷம் பிடித்தது!

இப்போது மத்திய சர்க்காரானது அய்.ஸி.எஸ். உத்யோகஸ்தர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. வைக்கோல் போரில் படுத்திருக்கும் நாய், தானும் தின்னாது; மாட்டையும் தின்ன விடாது. இந்திய சுயேச்சைக்காகப் பாடுபடும் கட்சியான காங்கிரசோ, தானும் பொறுப்பேற்றுக் கொள்ளாது; முஸ்லிம் லீகிடமும் பொறுப்பை ஒப்படைக்காது. அம்பேத்கார் - இராமசாமி முதலியார் கோஷ்டி மட்டும் பதவியில் இருக்கக் கூடாது! அவ்வளவு தான்! அய்.சி.எஸ்.காரார் இருந்தாலும் பரவாயில்லை! அவர்கள் எல்லோருமே வெள்ளையர்களாய் இருந்தால் கூடப் பரவாயில்லை! இந்த மாதிரித் தேசபக்தியை எந்த நாட்டின் வரலாற்றிலும் நான் படித்ததாக நினைவில்லை. நீங்கள் படித்திருக்கிறீர்களா?

- குத்தூசி குருசாமி (3-7-1946)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It