கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

குடிஅரசு வெயியீட்டு விழாவில், “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு நேரடியாக பெரியாரால் எழுதிவைக்கப்படாத சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும்” என்று பெரியார் திராவிடர் கழகம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அதைக் கண்டித்து திராவிடர்கழகம் சார்பில் கவிஞர் கலி. பூங்குன்றன் பூனைக்குட்டி வெளியே வந்தது! என்ற தலைப்பில் விடுதலையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது இலட்சக்கணக்கில் அச்சிடப்பட்டு திராவிடர்கழகப் பொதுக்கூட்டங்களிலும், புத்தகச் சந்தைகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

பெரியார் சொத்துக்களை அரசு எடுத்துக்கொண்டால் கடவுள் மறுப்புத் தத்துவங்களைப் பிரச்சாரம் செய்வார்களா? விடுதலை நாளிதழ் வருமா? பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு கடும்புலி வாழும் காடு எனப் பிரச்சாரம் செய்வார்களா? அரசு கையில் உள்ள செங்கல்வராயன் அறக்கட்டளை, பச்சையப்பன் அறக் கட்டளைகளின் நிலைபோல ஆகாதா? பார்ப்பன அரசு வந்தால் பெரியார் கொள்கையைப் பரப்புமா? என்றெல்லாம் ஆணித்தரமான வாதங்களை வைத்து பெ.தி.க வை அதிர வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கட்டுரைக்குமுன் வீரமணி அவர்களோ பெ.தி.க தலைவர் கொளத்தூர் மணியை “வீரப்பன் காட்டில் பெய்த மழையில் நனைந்தவர்”,  “துள்ளும் துரோகத்தின் முதுகெலும்பை ஒடிப்போம்” என்றெல்லாம் இ.கு.க கட்சியின் வட்டச்செயலாளர் வண்டுமுருகனைப் போல முழங்கி வருகிறார். இதற்கெல்லாம் பதில் சொல்லி தமது தரத்தைத் தாழ்த்திக்கொள்ள விரும்பாமல் பெ.தி.க எந்த மறுப்பும் வெளியிடாமல் அமைதியாக இருக்கிறது.  எனவே பெரியார் அறக்கட்டளைக்கு நன்கொடை கொடுத்த இலட்சக்கணக்கான தமிழர்களின் சார்பில் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.

நாய் பெற்ற தெங்கம்பழம்

திருச்சி ஓயாமாரிச் சுடுகாட்டில் பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி என்ற இரண்டு சட்ட எரிப்பு வீரர்களின் நினைவிடம் இருக்கிறது. இவற்றிற்கு ஒரு வரலாறு இருக்கிறது. இவர்கள் இருவரும் 1957 ஆம் ஆண்டு ஜாதி ஒழிப்புக்காக அரசியல் சட்டத்தை எரித்து கடுங்காவல் தண்டனை பெற்றவர்கள். சிறைக்குள்ளேயே சிறைக் கொடுமைக்குப் பலியானவர்கள். இப்போராளிகளின்  உடலைக்கூட அப்போதைய காங்கிரஸ் அரசு வெளியில் தோழர்களிடம் தராமல் சிறைக்குள்ளேயே  புதைத்தது. அன்னை மணியம்மையார் வீராங்கனையாக வெகுண்டெழுந்தார். “ உயிருடன் அனுப்பினோம் - பிணத்தையாவது கொடுங்கள்” எனப் போராடி, அரசு கொடுத்த சிதைந்த  உடல்களை இலட்சக்கணக்கான தோழர்கள் புடைசூழ தனது தலைமையில்  திருச்சி ஓயாமாரிச் சுடுகாட்டில் புதைத்து அங்கே ஒரு நினைவுச் சின்னத்தையும் உருவாக்கிவைத்தார். ஆயிரக்கணக்கான தோழர்கள் அப்போராளிகளின் உடலின் முன்பு எங்கள் வாழ்வில் எங்கள் குடும்பத்தில் இனி ஜாதி மறுப்புத் திருமணங்களைத்தான் செய்வோம் என உறுதி எடுத்துக்கொண்டு நடத்தியும் காண்பித்தனர். அப்போது சிறையில் இருந்த பெரியார் விடுதலை ஆனபிறகு அந்த நினைவிடங்களில் தானே தலைமையேற்று கல்வெட்டுக்களைத் திறந்து வைத்துள்ளார். இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போராளிகளின் நினைவிடத்தின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இதோ கீழேயுள்ள படத்தைப் பாருங்கள். 

 periyarists_cemetry_1
.ஈழத்தில் புலிகளின் ஆட்சிக் காலத்தில் வீரஞ்செறிந்த யுத்தங்களுக்கு இடையே எதிரிகளின் குண்டுமழை பொழிந்துவந்த காலத்திலும் மாவீரர் துயிலும் இல்லங்கள் எவ்வளவு கவனமாக பேணி பாதுகாக்கப்பட்டன என்பதை நாம் அறிவோம். தற்போதைய களத்தில் புலிகள் பின்னடைவான பிறகு மாவீரர் துயிலும் இல்லங்களை சிங்களன் சீரழிக்கிறான். ஆனால் எந்த முக்கிய வேலையும் இல்லாமல் ஆட்சிகளுக்கு காக்காய் பிடிப்பதையே முழுநேரப் பணியாகச் செய்துவரும் திராவிடர் கழகத் தலைமை - பெரியார் ட்ரஸ்ட் தலைமை - அரசுக்கு சொத்து போய் விட்டால் சொத்து நாசமாகிவிடுமே என கவலைப்படும் வண்டுமுருகன்கள், இந்த இயக்கத்துக்காக கொள்கைக்காக உண்மையாகவே உயிர்விட்ட போராளிகளின் நினைவிடத்தை - பெரியாராலும் அன்னை மணியம்மையாராலும் உருவாக்கப்பட்ட நினைவிடத்தை எதிரிகளால் இல்லாமல் தாமே அழித்துச் சிதைத்துவிட்டனர்.

பெரியார் காலத்தில் திருச்சி மாநகரத்தில் மாபெரும் செயல்வீரராகத் திகழ்ந்தவர் பெரியாரின் போர்ப்படைத் தளபதி திருச்சி பிரான்சிஸ். திருச்சியை பெரியாரின் கோட்டையாக வைத்திருந்த தளபதி பிரான்சிஸ். ஆசிட் தியாகராசன், குடந்தை ஜோசப் போன்ற பல செயல்வீரர்களின் பாசறையாகத் திருச்சியை உருவாக்கி வைத்தவர் பிரான்சிஸ். அவரது மறைவுக்குப் பிறகு பெரியாரே நேரடியாக பிரான்சிஸ் வாழ்ந்த வீட்டுக்குச் சென்று அந்த வீட்டருகே பிரான்சிஸ் நினைவுப் படிப்பகத்தைத் திறந்து வைத்தார். திருச்சியின் மையப்பகுதியான உப்புப்பாறையில் பெரியார் திறந்துவைத்த அந்த பிரான்சிஸ் நினைவுப் படிப்பகம் இப்போது அந்தப் பகுதி மக்களின் கழிப்பிடமாக மாறிவிட்டது. பிரான்சிஸ் வாழ்ந்த வீடு குட்டிச்சுவராக இடிந்து மண்ணாகிப் போய்விட்டது.  இப்படிப்பட்ட கொள்கை அடையாளங்கள் தரைமட்டமாகிப் போய்விட்டன.

சாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை பெற்று சிறை சென்றதால்  திருச்சியில் தான் சொந்தமாக நடத்திவந்த இரண்டு உணவுவிடுதிகளையும் இழந்து குடும்பத்தினரை வறுமையில் வாடவிட்டு இன்னும் மீடேற முடியாமல் செல்வச்செழிப்புடன் வாழ்ந்த அதே இடத்தில் அதே பகுதியில் கழிவறையைச் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு அதன்மூலம் கிடைக்கும் மிகச்சிறு வருமானத்தைக்கொண்டு வாழ்க்கையின் மீதிக் காலத்தைக் கடத்தி வருகிறார் 80 வயதைக் கடந்த சட்ட எரிப்புவீரர் மாரியப்பன்.  இவரது நிலை குமுதம் ரிப்போர்ட்டர் இதழிலும், பல இணையதளங்களிலும், வலைப்பூக்களிலும் பதிவாகி உள்ளது. வெளி உலகுக்கும் வந்துள்ளது. இவற்றைப் பார்த்து பார்ப்பன சிரிப்பு நடிகன் எஸ்.வி.சேகர் கூட ஒரு இலட்ச ரூபாய் தரமுன்வந்தான். பெரியார் அறக்கட்டளை ? ? ?

இதே காலகட்டத்தில் இலட்சக்கணக்கில் வருமானம் வரக்கூடிய பெரியார் கல்விநிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு நவீன கட்டிடங்கள் கட்டப்பட்டு பேணிப்பாதுகாக்கப்பட்டு அவற்றுக்கு வாரிசாக ஒரு 'மாபெரும் தத்துவவாதி', 'ஆற்றல்மிக்க செயல்வீரன்', 'போராளி' அன்புராஜ் நியமிக்கப்படுகிறார். 

கொள்கையையும் கொள்கைக்காரர்களையும் பாதுகாக்கத்தான் பெரியார் சொத்துக்களைச் சேர்த்தார். மறைந்த போராளிகளின் நினைவிடத்தையும் அந்த சொத்தால் பாதுகாக்க முடியவில்லை, சுயமரியாதைக் காலத்தின் அடையாளங்களாக இன்னும் வாழ்ந்துவரும் மாரியப்பன் போன்ற போராளிகளையும் காப்பாற்றப் பயன்படவில்லை என்றால் அந்தச் சொத்து அரசுக்குப் போனால்தான் என்ன தவறு? ஆயிரங்கோடி சொத்து இருந்தும் கழக வளர்ச்சிக்காக பெரியாராலேயே உருவாக்கப்பட்ட படிப்பகங்கள் கழிப்பிடங்களாகவும், மணியம்மையாரால் உருவாக்கப்பட்ட நினைவிடங்கள் உருக்குலைந்து முட்புதர்களாகவும், செயல்வீரர்களின் பாசறைகள் குட்டிச்சுவர்களாகவும் சிதைந்துபோய்க் கிடப்பதை திருச்சியில் நேரில் இன்றும் காணலாம். நாய்பெற்ற தெங்கம்பழமாக - நாய்க்குக் கிடைத்த தேங்காய் போல எதற்கும் பயன்படாத சொத்துக்கள் அரசுக்குப் போனால்தான் என்ன தவறு?

அரசுக்குப் போய்விட்டால்...

அரசுக்குப் போய்விட்டால் கடவுள் மறுப்புப் பிரச்சாரம் செய்வார்களா? என்று கேட்டுள்ளனர். மலையாளி என உங்களால் இகழப்பட்ட எம்.ஜி.ஆர் தனது ஆட்சிக்காலத்தில் மாவட்டந்தோறும் பெரியார் நினைவுச்சுடரை நினைவுச் சின்னத்தை உருவாக்கினார். பெரியார் பெயரில் மாவட்டத்தை அமைத்தார். அவரது வாரிசாக வந்த பார்ப்பன ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் பெரியாரின் குடிஅரசு இதழ்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழியாக அரசு சார்பாக அச்சிட்டு மக்களிடம் கொண்டு செல்ல உத்தரவைப் பிறப்பித்தார். அப்போது உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்த இராமர் இளங்கோ அவர்களுக்கு ஒப்புதலை அளித்தார். அந்நிறுவனத்தின் நடவடிக்கைக் குறிப்புக்களில் ஆதாரம் இருக்கிறது. அப்போது அந்த அரசு குடி அரசை வெளியிட்டுவிடக் கூடாது என இரகசியமாகத் தடை போட்டவர் பெரியார் ட்ரஸ்டை இயக்கும் தமிழர் தலைவர் தானே? அரசு செய்யும் பெரியாரியல் பணிகளைத் தடை போடத்தானே ட்ரஸ்ட் பயன்பட்டுள்ளது?

“பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு கடும்புலி வாழும் காடு” என அட்சரம் பிசகாத பெரியாரின் இந்த முழக்கம் மத்திய பார்ப்பன அரசாங்கத்தில் அனுமதி பெற்றுத்தானே அச்சிடப்படுகிறது. தனியாக யாருக்கும் தெரியாமல் அடர்ந்த காடுகளில் அச்சிடப்பட்டு, உழைக்கும் அடித்தட்டு மக்களிடம் இரகசியச்சுற்றாகவா விடுதலை விநியோகிக்கப்படுகிறது? பார்ப்பனமயமாக உள்ள மத்திய அரசுதானே பார்ப்பன எதிர்ப்புக் கருத்துக்கள் அடங்கிய விடுதலைக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது. அந்த பதிவு எண்ணை தினமும் விடுதலையில் 8 ஆம் பக்கத்தில் போட்டுத்தானே  பத்திரிக்கை நடத்துகிறீர்கள்?

பெரியார் பார்வையை அடிப்படையாகக்கொண்ட பெண்விடுதலை, ஜாதி ஒழிப்பு, பொதுவுடைமை பூத்த தனித்தமிழ்நாட்டுக்காக அந்தக் கொள்கைகளை மக்களிடையே தினந்தோறும் பரப்பிவரும் வீரமணியின் விடுதலை, உண்மை இதழ்கள் அரசே நடத்தும் நூலகங்களில் அவசியம் வாங்கப்படவேண்டுமென அரசாலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வாங்கப்பட்டுத்தானே வருகின்றது?

பெரியார் தி.க கொடுத்த நெருக்கடியால் தற்போது நீங்கள் வெளியிடுட்டுவரும் குடியரசு தொகுப்புகள் கூட தமிழ்நாட்டு அரசின் அனைத்து நூலகங்களிலும் வாங்கப்படுகின்றனவே? பார்ப்பன ஜெயலலிதாவின் ஆட்சியிலும் நூலகங்களில் விடுதலை, உண்மை இதழ்கள் தொடர்ந்து வாங்கப்பட்டுத்தானே வந்தன? பிறகென்ன அப்பாவித் தொண்டர்களிடம் நாடகம்? அரசுக்குப் போய்விட்டால் பிரச்சாரமே நடக்காது; பெரியார் கருத்துக்கள் பரவாது என பித்தலாட்டப் பிரச்சாரம். அரசுக்குப் போனாலாவது பெரியார் கருத்துக்களால் பலனடைந்தவர்கள் பலமுறை பொறுப்புக்கு வருவார்கள். உங்களைவிட சிறப்பாக பணிகள் நடக்கும்.

அரசைவிட அறக்கட்டளையில்தான் சமூகநீதிக்குப் பஞ்சம்

பெரியார் கல்வி நிறுவனங்கள் சமூகநீதிக்கண்ணோட்டத்தில் செயல்படுகிறதா? அரசு நடத்தும் கலை, பொறியியல், மருத்துவக்கல்லூரிகளில் இன்றும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.  தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பாக பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்காக அரசு ஒதுக்கீட்டுக்கு பாதி இடங்களை கேட்டுள்ளது அரசு. அரசுக்கு இடங்களைக் கொடுத்தால் அவற்றில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு அவசியம் பின்பற்றப்பட்டிருக்கும்.  சமூகநீதியை அரசு செய்யுமா என தற்போது கேள்வி எழுப்பும் மடாதிபதிகள் இன்றுவரை பெரியார் கல்வி நிறுவனங்களில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவே இல்லை. தெம்பிருந்தால் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு நிலையை வெளிப்படையாக நாணயமாக அறிவியுங்களேன்? ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற மத்திய அரசு கல்விநிறுவனங்களே அவற்றை வெளிப்படையாக இணையதளங்களில் வெளியிடுகின்றன. இந்திய ஆட்சிப்பணிக்கு அதிகாரிகளைத் தேர்வு செய்யும் நிறுவனமே ஐ.ஏ.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு நிலை என்ன என விளக்கமாகப் பட்டியலோடு வெளியிடுகிறது.  அரசைவிட அதிகமாக சமூகநீதியை நிலை நாட்டவேண்டிய பெரியார் ட்ரஸ்ட் நடத்தும் கல்விநிறுவனங்கள் இடஒதுக்கீட்டு நிலையை வெளிப்படையாக அறிவிக்குமா?

பெரியார் கல்விநிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு இல்லை. அது போகட்டும், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு இருக்கிறதா, தமிழ்நாடு முழுவதுக்கும் 31 சி சட்டத்தைக் கண்டு பிடித்து இடஒதுக்கீட்டைப் பாதுகாத்தோம் என மார்தட்டிக்கொள்ளும் அறக்கட்டளைத் தலைவர் வீரமணி அவர்களே!

முதலில் இதுவே பித்தலாட்டம். 31 சி சட்டத்தின் அடிப்படையில் 69 விழுக்காட்டு இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவேண்டும் என்ற சட்டமுன்வரைவைத் தயாரித்தவர் நீதியரசர் வேணுகோபால்தான். வீரமணி அல்ல. நீதியரசர் உருவாக்கிய சட்ட முன்வடிவைச் சட்டமாக்கியவர் அப்போதைய முதல்வர் பார்ப்பன ஜெயலலிதா. இடையில் இவர் செய்தது போஸ்ட்மேன் வேலை மட்டுமே. இந்த ஒரு எளிமையான செயலை பெரியார் 1951 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்தையே முதன்முதலாகத் திருத்திய போராட்டத்தோடு தொடர்புபடுத்திப் பிரச்சாரம் செய்வது என்ன பிழைப்போ தெரியவில்லை. அது கிடக்கட்டும்.

தோழர் வீரமணியின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியார் அறக்கட்டளையிலாவது சமூகநீதி உள்ளதா? அங்கு 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவாரா?  ஒரே ஒரு தாழ்த்தப்பட்டவராவது அறக்கட்டளை யில் உறுப்பினராக உள்ளாரா? சட்ட எரிப்புப்போராட்ட வீரர்களாவது யாராவது அறக்கட்டளையில் இருக்கிறார்களா?  மூச்சுக்கு மூச்சு கலைஞர் ஆட்சியைக் காப்பாற்றத் துடிப்பவர்கள் கலைஞரையாவது அவர் குடும்பத்தையாவது அறக்கட்டளையில் சேர்ப்பார்களா?

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகவோ, இணைவேந்தராகவோ வரமுடியுமா? சமயபுரம் மாரியம்மன் கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவராக இருக்கும் பக்தசிகாமணி வி.கே.என். கண்ணப்பனை விட இயக்கத்துக்கு இன்னும் உழைத்து உழைத்து கருப்பு மெழுகுவர்த்திகளாக உருகும் கவிஞர்.கலி. பூங்குன்றன், உரத்தநாடு குணசேகரன் போன்றவர்கள் தாழ்ந்தவர்களா? இப்படி தற்போது உழைக்கும் தோழர்களும் இல்லாத, உழைத்து ஓய்ந்த போராளிகளும் இல்லாத, இவர்கள் யாருக்கும் பயன்படாத, அரசு நிறுவனங்களில் உள்ள சமூகநீதிகூட நடைமுறைப்படுத்தப் படாத அறக்கட்டளை சொத்துக்கள் அரசுக்குப் போனால்தான் என்ன தவறு?

அரசு சார்பில் சாலைபோடுதல், தொழில்நிறுவனங்கள் உருவாக்குதல் போன்ற பல பணிகளுக்காக நிலங்களை வழங்கியவர்களின் வாரிசுகளுக்கு அந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அல்லது தொழில் வாய்ப்புகளை அரசு வழங்குகிறது. ஆனால் பெரியார் அறக்கட்டளைக்குச் சொத்துக்களை வழங்கியவர்களின் வாரிசுகளின் நிலை என்ன? அரசுக்குக் கொடுத்திருந்தாலாவது அவர்களுக்கு ஒரு பயன் இருந்திருக்கும். அல்லது சொத்துக்களைக் கொடுக்கும் நோக்கங்களாவது நிறைவேறியிருக்கும்.

இது எங்கள் சொத்து, இதையெல்லாம் கேட்க நீயார் எனக் கேட்கலாம். அவை உங்கள் சொத்து அல்ல; அன்புராஜ் ரிலையன்ஸ் அம்பானியுடன் ஒப்பந்தம்போட்டு சம்பாதித்துக் கொடுத்த சொத்து அல்ல; ஹிந்துஸ்தான் லீவரோடு இணைந்து சம்பாதித்துக் கொடுத்த சொத்து அல்ல. எங்களைப் போன்ற அடிமட்டத் தொண்டர்கள் ஊர் ஊராக துண்டேந்தி, பிச்சை எடுத்து சேர்த்துக் கொடுத்த நிதி. திருமண வயதில் வீட்டில் பெண் இருக்கும்போதுகூட தான் அணிந்திருந்த ஒரே ஒரு நகையையும் கழட்டிக் கொடுத்து சேர்ந்த நிதி. தன் வாரிசுகளை நடுத்தெருவில் பிச்சை எடுக்க வைத்துவிட்டு பெரியார் கொள்கையைப் பரப்ப சொத்துக்களை கொடுத்து சேர்ந்த நிதி. உங்களைவிட ஆயிரம் மடங்கு கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு உண்டு.

தனியார் துறையிலும் இடஒதுக்கீடு கேட்கும் யோக்கியதை உங்களுக்கு உண்டென்றால் இந்த தனியார் அறக்கட்டளையிலும் சமூகநீதியைக் கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்காதா? அரசின் உதவியில்லாமல் அரசின் தயவில்லாமல் தனியாக வானத்திலா மிதக்கிறது இந்த அறக்கட்டளை? அரசின் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தித்தானே அறக்கட்டளை நடத்துகிறீர்கள்?  உங்கள் அறக்கட்டளையின் அனைத்துப் பணிகளும் அரசின் கண்காணிப்புக்கு உட்பட்டுத்தானே நடக்கிறது. இது மக்கள் அரசல்ல, மக்களுக்கான அரசல்ல, இந்த அரசைப் பெரியார் ஏற்கமாட்டார் என கொள்கைத் துணிச்சலுடன் அறிவித்து அரசுக்கு வருமானவரி கட்டாமல், தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யாமல், அரசின் சலுகைகளைப் பெறாமல், அறக்கட்டளையை அரசின் கண்காணிப்புக்கு உட்படுத்தமாட்டோம் என அறிவிக்கத்தயாரா? யாரை ஏமாற்றுகிறீர்கள்? இப்போதும் அரசுக்குக் கட்டுப்பட்டுத்தான் எந்த அறக்கட்டளையும் செயல்படமுடியும். அது முழுமையாக அரசுக்குப் போனால்தான் என்ன தவறு? நீங்கள் பொறுக்கித் தின்ன முடியாது என்ற ஒரே ஒரு குறைதான். அதைத் தாங்கமுடியாமல்தான் “விநாசகாலே விபரீத புத்தி” என சமஸ்கிருத புத்திமதிகள்.

இந்து அறநிலையத்துறை

இந்துக் கோவில்களில் கோவில் சொத்துக்களை நிர்வகிக்கும் பார்ப்பனக் கும்பல்களின் கொட்டத்தை அடக்க வந்ததுதான் இந்து அறநிலையத்துறை. அதனால்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோதே அதன் எதிர்க்கட்சியான நீதிக்கட்சி கொண்டுவந்த தேவஸ்தான மசோதாவை - சென்னை இந்துபரிபாலன மசோதாவை பெரியார் ஆதரிக்கிறார்.

“ இந்தச் சட்டமானது மேலே குறிப்பிட்டபடி  தர்ம சொத்துக்களை அதன் கிரமமான உபயோகத்திற்கு  அன்றி, தங்களுடைய சுயநலத்துக்காக உபயோகித்துக்கொண்டு வந்த சில மடாதிபதிகளுக்கும், பொதுமக்கள் தர்ம சொத்தைத் தங்கள் வகுப்பார்களே உண்ணவேணும் என்னும் கருத்தின் பேரில் சூழ்ச்சி செய்து  பொது மக்களிடம் பணம்பறித்து, தங்கள் வகுப்பார்க்கே பொங்கிப்போட்டுக் கொண்டிருந்த சில சமயாச்சாரிகளென்போரான சில பிராமணர்களுக்கும், அதன் பலனாய்த் தின்று கொழுத்துத் திரிந்து கொண்டிருக்கும் சில திண்ணைத் தூங்கிகளுக்கும், இவர்களின் தீச்செயல்களுக்கு அனுகூலமாயிருந்து பணம் பறித்துக் கொண்டிருந்த வக்கீல்கள், பஞ்சமகா பாதகத் தரகர்கள் முதலியவர்களுக்கும் விரோதமாயிருந்தபடியாலும் இக்கூட்டத்தார் பெரும்பாலும் பிராமணர்களென்று சொல்லப்படுவோராயிருந்து விட்டபடியாலும், இவைகளுக்கு ஏராளமான சொத்துக்கள் விட்டவர்களும், இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கிறவர்களும், பிராமணரல்லாதாராயிருப்பதனாலும் இந்த சட்டமானது பிராமணர்களுக்கு விரோதமாகவும் பிராமணரல்லாதார்களுக்கு அனுகூலமாகவும் இருப்பதாக ஏற்பட்டுப் போய்விட்டது. ..."

என்று குடி அரசில் பெரியார் எழுதுகிறார். இந்தப் பத்தியில் பிராமணர் என்ற சொல் வரும் இடங்களில் வீரமணி குடும்பம் என்ற சொல்லைப் போட்டுப் பாருங்கள். இன்றைய சூழல் புரியும்.

....“ மதம் போச்சு ; தர்மம் போச்சு; இந்துமதத்தில் சர்க்கார் பிரவேசிக்கிறார்கள்”   என்று பொய்யழுகை அழுகிறது தவிர வேறொன்றும் சொல்வதே கிடையாது. எந்த உலகத்தில் மதவிஷயங்களை அரசாங்கத்தார் திருத்த பிரவேசிக் காதிருக்கிறார்கள்? 1817 - லும், 1863 - லும் பிரவேசித்த காலத்தில் இந்த ஜாதியார் எங்கு போயிருந்தார்கள். அரசாங்கத்தார் தாமதமின்றி உடனே பிரவேசித்துத் தக்கது செய்யவேண்டும் என்று காங்கிரசிலும், கான்பரன்ஸிலும் தீர்மானித்த காலத்தில் இந்த ஜாதியார் எங்கு போனார்கள்?" என்றும் குடி அரசில் பெரியார் எழுதினார்.

இதே போலத்தான் இப்போது தோழர் வீரமணியும் பொய்யழுகை அழுகிறார். கோடிக்கணக்கான மக்களின் சொத்துக்களை ஒருசில பார்ப்பனர்கள் கொள்ளையடிப்பது தவறு எனும்போது அப்படிச்சொன்ன பெரியாரின் சொத்துக்களை ஒரு சிலர் கொள்ளையடிப்பது நியாயமா? கோவில்களை நிர்வகிக்க தனி அறவோர் வாரியம் அமைக்கவேண்டும்; கோவில் நிர்வாகங்களில் அரசு  தலையிடக்கூடாது என ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் போராடி வருவதற்கும் பெரியார் அறக்கட்டளையில் அரசு தலையிடக்கூடாது என வீரமணிகள் துடிப்பதற்கும் என்ன வேறுபாடு?

உச்சநீதி மன்ற வழக்குக்கு பார்ப்பன உதவி

சொத்துக்களை அரசுடமையாக்க உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம் என பெ.தி.க அறிவித்தது  அதற்கு விடுதலை எழுதுகிறது,  “உச்சநீதிமன்றம்வரை போவார்களாம் அந்த அளவுக்கு அவர்களுக்குப் ‘பொருளாதாரப் பின்னணி’ இருக்கிறது. இப்படி ஒரு முயற்சி மேற்கொண்டால் காஞ்சிமடம் வரை கைவாகு கொடுக்க மாட்டார்களா?”

அட அறிவாளிகளா! உச்சநீதிமன்றம் போவதற்கு என்ன பொருளாதாரப் பின்னணி வேண்டியிருக்கிறது? சென்னையில் இருந்து தொடர்வண்டியில் 400 ரூபாய்க்கு டிக்கட் எடுத்து மாதத்திற்கு ஒருமுறை புதுடில்லிக்குப் போய் வழக்கை கவனித்து வருகிறார்கள் பல வழக்கறிஞர்கள். உங்களைப்போல கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸில் எக்ஸ்சிக்யூட்டிவ் க்ளாசில் பறந்து  உச்சநீதிமன்றத்துக் போவதற்குத் தான் சங்கரமட ஆதரவுகள் தேவை. கல்விநிறுவனப் பித்தலாட்ட வழக்குகளை நடத்த நீங்கள் அப்படித்தான் போய்வருவீர்கள் போலுள்ளது. கல்வி நிறுவனங்களுக்காகவும், அறக்கட்டளைகளுக்காகவும், இயக்கத்துக்காகவும் பலமுறை உச்சநீதிமன்றத்துக்கு நீங்கள் போய்வருகிறீர்களே, காஞ்சி மடங்களின் கைவாகு தான் காரணமோ? “தான்திருடி அச  (அண்டை) வீட்டை நம்பமாட்டாள்” என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

புதுடில்லியில் புறநகர்ப் பகுதியில் பெரியார் மய்யம் இடிக்கப்பட்ட போது அதற்குப் பதிலாக புதிதாக இந்தியத் தலைநகரின் மய்யப் பகுதியில் பல நூறு கோடி மதிப்புள்ள இடத்தையும் கட்டடத்தையும் உங்களுக்கு - பெரியார் ட்ரஸ்ட்டுக்கு வழங்கிய அகில இந்திய அரசுக்கான அமைச்சரான எல்.கே.அத்வானி தஞ்சை மாவட்டத் தமிழனா? பார்ப்பனன்தானே!!  அதுவும் லல்லு பிரசாத், கன்ஷிராம் போன்ற உங்கள் நண்பர்களான சமூக நீதித் தலைவர்கள் அல்ல. நீங்கள் பரம வைரியாக கருத வேண்டிய ஆர்.எஸ்.எஸ் கும்பலின் நம்பிக்கை நட்சத்திரமான அத்வானி. அந்தப் பார்ப்பானே உங்கள் ட்ரஸ்ட்டுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்துள்ளானே! பார்ப்பான் இந்த ட்ரஸ்ட்டால் தனக்கு தீமை என்றால்  பலநூறு கோடிகளை அள்ளிக்கொடுப்பானா?

மத்திய பார்ப்பன அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தோடு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் ஒரு ஒப்பந்தம்போட்டு கோடிக்கணக்கான ரூபாய்களை பல்கலைக்கழகத்துக்குப் பெற்று டி.ஆர்.டி.ஓ (DRDO) நிறுவனத்தின் ஆராய்ச்சிகள் நடக்கின்றனவே? பெரியார் நிறுவனத்தால் தனக்கு உண்மையில் ஆபத்து என்றால் பார்ப்பான் பல கோடிகளை உங்களுக்குத் தருவானா? பார்ப்பன அரசின் பாதுகாப்பு அமைச்சகம் உங்களோடு ஒப்பந்தம் போடுமா?

பல்கலைக்கழகத்தை உருவாக்கியபோதும் கல்லூரிகளை உருவாக்கியபோதும் பெரியார் மற்றும் பெரியார் மணியம்மை அறக்கட்டளைகளின் பதிவுப்பத்திரங்கள், சொத்துவிபரங்கள், வங்கிக்கணக்கு விபரங்கள் அனைத்தையும் காட்டித்தான் மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் அனுமதி வாங்க முடியும். இந்த அறக்கட்டளைகள் பார்ப்பனர்களுக்கு எதிர்ப்பானவை என்றால் அந்தத் துறையிலும் மத்திய அரசின் உயர் பதவிகளிலும் நிரந்த ஆட்சி புரியும் பார்ப்பனர்கள் - நம்பூதிரிகளிடம் நீங்கள் அனுமதியே வாங்கியிருக்க முடியாது.

“தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழர்நாட்டையும், தமிழ் வீரத்தையும், கலையையும், நாகரீகத்தையும் மறந்தான்” என்று முழங்கியவர் பெரியார். அந்த இந்திய பார்ப்பன அரசிடம் அடைந்த சரணாகதிக்கு - சமரசத்துக்கு அடையாளந்தான் “ பெரியார் தனித்தமிழ்நாட்டுக்கொள்கையை தன் காலத்திலேயே  கைவிட்டுவிட்டார்” என்ற திரிபுவாதக்கருத்துப் பிரச்சாரமும், அந்தத் திரிபுக்கு எதிராக தோழர் எஸ்.வி. இராஜதுரை எழுதிய மறுப்புக்கு இன்றுவரை பதில் தராததும்.

“காஷ்மீர் விடுதலைப் பிரச்சனையைக் காஷ்மீரிகளே தீர்மானித்துக்கொள்ள விட்டுவிட வேண்டும்” என்றவர் பெரியார். ஆனால் காஷ்மீரிகளை ஒடுக்க நடந்த கார்கில் போரில் இந்திய இராணுவத்துக்கு உங்கள் அறக்கட்டளை நிதி அளிக்கிறது.  அதற்குக் கைமாறுதான் பாதுகாப்பு அமைச்சகம் உங்களுக்கு அளித்த ஆராய்ச்சி நிதிகள்.

இப்படி பார்ப்பனர்களை அனுசரித்து, அவாளின் அகில இந்திய ஜோதியில் கலந்து அவர்களிடமிருந்து கோடிகோடியாக பொருளாதாரப்பலத்தைப் பெருக்கிவரும்  நீங்கள் ஒரு உச்சநீதி மன்ற வழக்குக்குப் போவதையே பார்ப்பனக் கைவாகு என சொல்வதைப் பார்த்து நாடே சிரிக்காதா?

வீரப்பன் காட்டில் பெய்த மழை

வீரப்பன் காட்டில் பெய்தமழையில் நனைந்தவர் என்று கொளத்தூர் மணியை விமர்சிக்கிறார் வீரமணி. வீரப்பன் காட்டில் உண்மையாகவே மழை பெய்தபோது, வீரப்பன் உண்மையாகவே சந்தனக் கட்டைகளைக் கடத்தி, யானைகளைக் கொன்று தந்தங்களைக் கடத்தியபோது, கோடி கோடியாகப் பொருளீட்டியபோது கொளத்தூர் மணி உங்கள் தி.க வில் மாநில அமைப்புச்செயலாளராகத் தானே இருந்தார். தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்பட்டதும், மேட்டூரில் 200 பவுன் தங்கம் வழங்கப்பட்டதும் வீரப்பன் காட்டில் மழை பெய்த போதுதானே? அந்த எடைக்கு எடை வழங்கிய விழாவில் வரவுசெலவுக் கணக்குப் பார்த்து இரண்டரைக் கோடி என கணக்கு முடித்துக் கொடுத்தவர் கொளத்தூர் மணி தானே? அவரது நெருங்கிய நண்பரான தோழர் பொத்தனூர் சண்முகம்தானே தற்போதும் உங்கள் அறக்கட்டளையின் தலைவர்? நியாயமாக ஒரு விசாரணைக் குழுவை அரசே அறிவிக்க வேண்டும். மேட்டூரில் 200 பவுன் தங்கம் யார் வழியாக உங்களுக்குக் கிடைத்தது என ஆராய வேண்டும்.
 
வீரப்பன் இராஜ்குமாரைக் கடத்திய விவகாரத்தில் பலகோடிகளைச் சுருட்டியதாகப் பரவலாகக் குற்றம்சாட்டப்பட்ட நக்கீரன் கோபால் தமிழர் தலைவருக்கு நெருங்கிய நண்பர்தானே? கோபாலுக்கு தமிழ்நாடு அரசின் பெரியார் விருது வழங்கப்பட்டபோது “வீரப்பன் காட்டில் பெய்த மழையில் நனைந்தவருக்கு” பெரியார் விருதா என ஏன் கேட்கவில்லை? கேட்காவிட்டாலும் பரவாயில்லை. நக்கீரன் கோபாலுக்கு பாராட்டுப் பத்திரமே வாசித்தீர்களே! வீரப்பன் காட்டு மழைச்சாரலில் கொஞ்சம் நனைந்துவிட்டீர்களோ?  அந்த மழையைப் பெய்வித்த மூலவரான தமிழினத்தலைவர் செம்மொழிகொண்டார் கலைஞரை பக்கத்தில் வைத்துக் கொண்டு கொளத்தூர் மணியை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?  வீரப்பன் பிடியில் இருந்த இராஜ்குமாரை மீட்டால் அதற்கு வீரப்பன் எப்படி பணம் தருவான்? இராஜ்குமாரோ அல்லது இந்தக் கடத்தலால் ஆட்சி போய்விடக்கூடாதே என்று நடுங்கிக்கொண்டிருந்த கலைஞரோ, எஸ்.எம். கிருஷ்ணாவோ தான் கொளத்தூர் மணி உள்ளிட்ட மீட்புக்குழுவுக்குப் பணம் கொடுத்திருக்க முடியும்.

“கலைஞர் ஆட்சியைக் காப்பாற்ற நீங்கள் யார்? உங்களால் இந்த ஆட்சி காப்பாற்றப்பட்டால் ஜெயலலிதா கோபித்துக்கொள்வார். காட்டுக்குள் போக வேண்டாம் மணி” என கொளத்தூர் மணியை நீங்கள் எச்சரித்தும் இருமாநிலங்களில் வாழும் தமிழர்களின் உயிரை மனதில்கொண்டு இராஜ்குமாரை மீட்டு வந்ததற்காக - கலைஞர் பாராட்டியதற்காகத்தானே கொளத்தூர் மணியை நீக்கினீர்கள்?  உங்களால்  கலைஞர் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என சிவாஜிகணேசன் பாணியில் நடிக்கத்தான் முடியும். அன்றைய காலத்தில் அதைச்செய்து காட்டியவர் கொளத்தூர் மணி. அதற்குப் பரிசாக கலைஞர் வேண்டுமானால் கொளத்தூர் மணிக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்திருக்கலாம். அந்தப் பணத்தில்தான் குடி அரசு வெளியிட்டார்கள் என்றும் பிரச்சாரம் செய்கிறீர்கள். வீரப்பன் காட்டில் மழை பெய்தது என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. எனவே வீரமணி அவர்களே துணிச்சலுடன், அறிவு நாணயத்துடன் இந்த இரண்டும் உங்களுக்கு இருந்தால் கிடைத்த தகவலை வெளியிடுங்கள்.

இராஜ்குமார் மீட்பில் பணம் விளையாடியது உண்மையானால் அதற்கு மூல காரணம் கலைஞராகத்தான் இருக்கமுடியும். அப்படிக் கொடுக்கப்பட்ட பணம் அரசுப்பணமா? யாருடைய வங்கிக்கணக்கில் இருந்து சென்றது? அரசின் எந்தத் துறையில் அந்தக்கணக்கு காட்டப்பட்டுள்ளது? அல்லது கணக்குக் காட்டாமல் பணம் கொண்டுசெல்லப்பட்டது உங்களுக்கு எப்படித் தெரியும்? யாருடைய கருப்புப் பணம்? தெளிவாகத் தெரியாவிட்டால் உங்கள் நெருங்கிய நண்பர் தமிழக முதல்வரிடம் கேட்டுச் சொல் லுங்கள். அல்லது அவரது நண்பர் மத்திய அமைச்சர் கிருஷ்ணாவிடம் கேட்டுச் சொல்லச் சொல்லுங்கள். நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால்கூட கொள்ளைக்காரன் வீரப்பன் பணம்கூட குடியரசு வெளியிடப் பயன்பட்டுள்ளது. கொள்கைக்காரர் பெரியாரின் பணம் அதற்குப் பயன்படவில்லையே. அப்படிப் பயன்படாத பணம் அரசுக்குப் போனால்தான் என்ன?

“தான் திருடி அச வீட்டை நம்ப மாட்டாள்” என்ற பழமொழி பலமுறை உங்களுக்குப் பொருந்திப் போகிறது. கலைஞர் சொன்னதற்காக இராஜ்குமார் மீட்கப்பட்டதில் நமக்குத் தெரியாமல் பெட்டி வாங்கியிருப்பாரோ என யோசிக்கும் சின்னப்புத்தி உங்களுக்கு வந்ததில் ஆச்சரியமில்லை. அந்தக்காலத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை இரகசியமாகச் சந்திக்கச் செல்லும்போதுகூட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களையும் உடன் அழைத்துச் செல்வீர்கள். ஆனால் ஜெயலலிதாவைச் சந்திக்கச் செல்லும்போது மட்டும் தனிஆளாக - டிரைவராகக்கூட வேறு யாரும் வராமல் உங்கள் நிழலான ஜெகவீரபாண்டியனை வண்டி ஓட்டச்செய்து அவரையும் வெளியில் நிற்கவைத்துவிட்டு தனியாகச் சென்றீர்களே, ஏன்? அப்படிப்பட்ட ஜெ. சந்திப்புகளால்தான் நீலாங்கரையில் ஒரு பங்களா உருவானது என்றெல்லாம் அப்போது சிக்கல்கள் வெடித்தனவே! அந்த ஜெயலலிதாவைப்போல கலைஞரை நினைத்துவிட்டீர்கள் போலுள்ளது.       

எது வளர்ச்சி?

ஊன்றிப்படித்து உண்மையை உணருங்கள் என அறிக்கை வெளியிட்டீர்கள். நாங்கள் புத்தகச் சந்தை நடத்துகிறோம். இலட்சக்கணக்கில் புத்தகம் போடுகிறோம் என்றீர்கள்.  குடியரசு வெளியிட்டால் மக்களுக்குப் பயன்படாது என்றீர்கள். அதன்பிறகு நீங்களே வெளியிடுகிறீர்கள். பெரியார் திராவிடர் கழகம் குடியரசுக்கு அறிவிப்பு வெளிட்ட பிறகுதானே நீங்கள் போட்டிக்கு வெளியிட்டீர்கள்? அதுவும் அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே 10 ஆண்டுகளுக்கான குடியரசு இதழ்கள் எங்களிடம் இல்லை. யாராவது அனுப்பி உதவுங்கள் என விடுதலையில் அறிவிப்புக் கொடுத்தீர்கள். பெரியார் இதழ்களை 10 ஆண்டு புத்தகங்களைத் தொலைத்துவிட்ட நீங்களா பெரியார் கருத்தைப் பாதுகாக்கமுடியும்? 

தமிழ்நாட்டில் 1  கோடி மக்கள் தொகை இருந்த காலத்தில் 2  விழுக்காடு மக்கள் மட்டுமே அதாவது சுமார் 2 இலட்சம் படித்த தமிழர்கள் இருந்த காலத்தில் 20 ஆயிரம் குடி அரசு இதழ்களை அச்சிட்டுப் பரப்பியவர் பெரியார். இன்று மக்கள் தொகை 7 கோடி. எழுதப் படிக்கத் தெரிந்தோர் 90 விழுக்காடு. இன்றைய நிலையில் விடுதலை சுமார் 5 கோடி சந்தாக்களை  வைத்திருந்தால் அந்த நிலையை பெரியார் காலத்தை அப்படியே தக்க வைத்துள்ளீர்கள் என்று சொல்லலாம். 5 கோடிக்கு மேல் ஆறு கோடி சந்தாக்கள் வைத்திருந்தால் அதைத்தான் வளர்ச்சி என்று சொல்ல முடியும். வெறும் 5000 சந்தாக்களை வைத்துக் கொண்டு ஊன்றிப்படியுங்கள், ஊன்றிப் படியுங்கள் என்றால்? முதலில் ஊன்றி எழுதுங்கள்.

குடியரசு 27 தொகுப்புக்களையும் 11,000 பக்கங்களையும் இணையதளத்தில் ஏற்றி, இலவசமாக யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை வழங்கியுள்ளதே பெரியார் தி.க!  உங்கள் இணையதளத்தில் பெரியார் ட்ரஸ்ட்டால் இயக்கப்படும் இணையதளத்தில் ஒரே ஒரு 32 பக்க புத்தகத்தையாவது  பதிவிறக்கம் பண்ண முடியுமா?  இதற்குக்கூட பயன்படாத சொத்து அரசுக்குப் போனால்தான் என்ன தவறு?

அரசுடடைமை ஆகிவிட்டால் பெரியார் பிரச்சாரங்கள் நடைபெறுமா எனக் கேள்விகேட்பவர்களே, உலகில் எந்தப் போராளி இயக்கம் ட்ரஸ்ட்டை நம்பி உள்ளது? பெரியார் ஒரு புரட்சிக்காரர், சமுதாயத்தை அடியோடு மாற்ற விரும்பியவர், சமுதாயப் புரட்சிக்கு வாய்ப்பாக ட்ரஸ்ட்டோ, அரசோ எதையும் பயன்படுத்தியவர். ட்ரஸ்ட் இல்லாவிட்டால் இயக்கமே நடத்தமுடியாது எனப் புலம்பியவர் அல்ல. 1952 வரை ட்ரஸ்ட் இல்லாமல்தானே இயங்கியுள்ளார். அவர் மட்டுமல்ல உலகின் எந்தப் புரட்சி இயக்கமும் அறக்கட்டளை இல்லாவிட்டால் செயல்படவே முடியாது என அலறித்துடிக்காது. அறக்கட்டளைகள் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். நீங்கள் இயக்கத்தை கருவியாக்கி அறக்கட்டளையைக் காப்பற்றுவதையே கொள்கையாக்குகிறீர்கள்.

பெரியார் தி.க எந்த அறக்கட்டளையை வைத்து குடியரசை வெளியிட்டது?  அறக்கட்டளையில் இருந்து பணம் கொடுத்துத்தான் திராவிடர் கழகத் தோழர்கள் இயங்குகிறார்களா? சொந்தச் சோற்றைத் தின்றுவிட்டு மக்களுக்கு வேலை செய்பவர்கள் மட்டும் இங்கே வாருங்கள் என அறிவித்து வேலை வாங்கினாரே பெரியார்! நீங்கள் தி.க தோழர்களுக்குப் பணம் கொடுத்துத்தான் வேலை நடக்கிறதா? அப்படி இல்லையே. தி.க தோழர் களும் கடுமையாக உழைத்து தத்தம் சொந்தச் செலவில்தான் இயக்கம் நடத்துகின்றனர். பிரச்சாரம் செய்கின்றனர். அறக்கட்டளை இல்லாவிட்டால் பிரச்சாரமே நடத்தமுடியாது எனக்கூறி அந்தச் சக தோழர்களைக் கொச்சைப்படுத்தாதீர்கள். சொத்து இல்லாவிட்டால் இயக்கமே இருக்காது எனக்கூறி உங்களையும் எங்கள் சகோதரர்களையும் கேவலப்படுத்தாதீர்கள்.

நீ யாரடா வழக்குப் போடுவதற்கு? நானே அரசுக்கு வீசி எறிகிறேன். இதேபோல் ஆயிரம் மடங்குச் சொத்துக்களை பெரியாருக்காக - பெரியார் கொள்கைக்காக நான் உருவாக்குவேன் என அறிவித்திருந்தால் நீங்கள்தான் பெரியாரின் வாரிசு என தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடியிருப்போம். பிரபாகரன் எந்த அறக்கட்டளையை வைத்து அமைப்பைத் தொடங்கினார்? தனிஅரசை நடத்தினார்? எப்படி அனைத்தையும் தானே உருவாக்கினார்? பெரியார் எப்படி ஒரு அறக்கட்டளையைப் புதிதாக உருவாக்கி வளர்த்தார். அந்தத் தெம்பு, திராணி உங்களுக்கு இருக்க வேண்டாமா? அப்படிப்பட்ட  ரோசக்காரனாக - சுயமரியாதைக்காரனாக - எதையும் உருவாக்குபவனாக உங்களைப் பார்க்க முடிந்தால் அதற்குப் பெயர்தான் வளர்ச்சி.

மணியம்மையார் கவசம்

மிகப்பெரிய குற்றம் ஒன்றை கவிஞர் பூங்குன்றன் கண்டுபிடித்துள்ளார். திருச்சி செல்வேந்திரன் என்ற தி.மு.ககாரர் எழுதிய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் குறித்த சிறு கட்டுரையில் பெரியாரையும் மணியம்மையாரையும் சிறுமைப்படுத்தி எழுதி அதை பெரியார் தி.க வெளியிட்டதாம். அது மாபெரும் தவறாம். மணியம்மையாரைக் கொச்சைப்படுத்தியிருந்தால் அது யார் செய்திருந்தாலும் தவறுதான். குற்றம் தான். ஆனால் அந்தக் குற்றச்சாட்டைச் சொல்லும் யோக்கியதை வீரமணியாருக்கு  உண்டா?

தி.மு.க என்ற ஒரு கட்சி உருவானது ஏன்? எதற்கு? பெரியாரையும் மணியம்மையாரையும் கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தி உருவானதுதானே தி.மு.க?  தி.மு.க என்ற ஒரு அமைப்பு இருக்கும்வரை, அந்த தி.மு.க வுக்கு தி.க ஆதரவாக இருக்கும்வரை மணியம்மையாரைப் பற்றி பாராட்டிப்பேசக்கூட உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. அறிவு நாணயம் இருந்தால், நீங்கள் பெரியார் வாரிசாக இருந்தால், துணிவிருந்தால் தி.மு.க தலைவர் கருணாநிதியை அறிவிக்கச் சொல்லுங்கள். “தி.மு.க தொடங்குவதற்கு நாங்கள் சொன்ன காரணம் மிகப்பெரும் தவறு. அதற்காக வருந்துகிறோம். மணியம்மையாரையும் பெரியாரையும் கேவலப்படுத்தி அதனால் உருவான இந்த அரசியல்கட்சியை இன்றே கலைக்கிறேன்” என அறிவிக்கச் சொல்ல முடியுமா?

சரி, அது வேண்டாம். தி.மு.க இல்லாவிட்டால் இந்தப் பார்ப்பனரல்லாத சமுதாயம் படுபாதாளத்தில் வீழ்ந்துவிடும்! எனவே, “தி.மு.க ஒரு தவறான முடிவால், தவறான பார்வையால்  உருவாக்கப்பட்டுவிட்டது.  பெரியார் மணியம்மை திருமணம் மிகச்சரியானது; பொருந்தாத்திருமணம் என அன்று விமர்சித்தது மிகப்பெரும் தவறு; அத்திருமணத்தைக் காரணமாகச் சொல்லிதி.மு.க தொடங்கியதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்” என ஒரு சிறு அறிவிப்பாவது அறிவிக்க வைக்கத்தயாரா? இதுமுடியாவிட்டால் பெரியார் தி.க வைக் குற்றம் சொல்லும் யோக்கியதை உங்களுக்கு இல்லை என்பதுதானே உண்மை?

மணியம்மையாரை காலம்பூராவும் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்கும் ஒருவர் தோழர் ஆனைமுத்து. அவருக்கு பெரியார் தனது கைப்பட புத்தகங்கள் அச்சிட அனுமதி கொடுத்தார் என நீதிமன்றத்தில் சொல்கிறீர் களே? அவரது வெளியீடுகளுக்கு நீங்கள் எந்தத் தடையும் சொல்லவில்லையே? அவரது புத்தகங்களை உங்கள் நண்பர் கலைஞர் வெளியிட்டாரே? மணியம்மையாரைக் கொச்சைப்படுத்தியவரோடு உங்களுக்கென்ன நெருக்கம் என கலைஞரை ஏன் கேட்கவில்லை? தி.மு.கவின் மாநில வெளியீட்டுச்செயலாளர் செல்வேந்திரன் எழுதிய கட்டுரையை பெ.தி.க வெளியிட்டதே தவறு என்றால், அதை எழுதிய செல்வேந்திரன் அவர்கள்  மீது தி.மு.க தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஒரு கோரிக்கைகூட வைக்காதது ஏன்? இதனால் மணியம்மையாரைக் கொச்சைப்படுத்துவதற்கு நீங்களும் துணைபோகிறீர்கள் என்பதுதானே உண்மையாகிறது?

மணியம்மையாருக்கு இணையாக பெரியாருக்கு இயக்கப்பணிகளில் தோளோடு தோள் நின்றவர் அன்னை நாகம்மையார். சுயமரியாதைக் காலத்தில் கடுமையான நெருக்கடிக்காலங்களில் வெள்ளைக்கார அரச பயங்கரவாதத்தையும், பார்ப்பனகூட்டத்தின் சகுனிவேலைகளையும், ஜாதி மத வெறிக்கூட்டங்களின் எதிர்ப்பு களையும் ஒருசேர எதிர்த்துப் போராடிய வீராங்கனை நாகம்மையாரின் பெயரில் உங்கள் காலத்தில் பெரியார் அறக்கட்டளை சார்பில் ஏதாவது ஒரு நிறுவனமாவது உருவாக்கினீர்களா? நாகம்மையார் குழந்தைகள் இல்லமும், நாகம்மையார் பயிற்சிப் பள்ளியும் பெரியார் காலத்தில் பெரியார் உருவாக்கியவை. பெரியாருக்குப் பிறகு மணியம்மையாருக்குப் பிறகு நாகம்மையார் பெயரில் எந்தநிறுவனமும் உருவாகவில்லை. இயக்கப் பணிகளிலும் நாகம்மையார் நினைவுதினமோ, பிறந்ததினமோ நினைவுகூறப்படுவதில்லை. இன்றுவரை அவரது செயல்பாடுகள், பணிகள் பதிவுசெய்யப்படவில்லை. பெரியாரின் தங்கை கண்ணம்மாளின் செயல்பாடுகள் நினைவுகூறப்படுவதில்லை. உங்களுக்குச் சொத்துக் கொடுத்ததற்காக - அந்தக் காரணத்துக்காக - அந்த நன்றிக்காக மட்டும் மணியம்மையாரை உயர்த்திப் பேசுகிறீர்களே ஒழிய பெரியாருடன் இணைந்து பணியாற்றி சக போராளி மணியம்மையார் என்ற நோக்கில் அல்ல. அதற்கு ஆதாரம் தான் நாகம்iமையாரை நீங்கள் புறக்கணித்திருப்பதும், அவரது புகழை, பணிகளை மறைத்திருப்பதும்.

தோழர் வீரமணியின் நாடகம்

தோழர் வீரமணி அவர்களின் உச்சக்கட்ட பித்தலாட்ட நாடகம் ஒன்று அம்பலமாகியுள்ளது. பெ.தி.க கோரிக்கையாக சொல்லப்படுவது என்ன? அறக்கட்டளையை அரசு ஏற்கவேண்டும் என்பதா? இல்லை. அப்படி ஒரு கருத்து அவர்களால் வைக்கப்படவே இல்லை. பெரியாரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பிரச்சாரத்துக்கு வாய்ப்பாக உருவாக்கப்பட்டபெரியார் அறக்கட்டளையை அரசு ஏற்க வேண்டும் என்றோ, அந்த அறக்கட்டளை சார்பில் செயல்படும் விடுதலை, உண்மை, திராவிடன் புத்தக நிலையம் ஆகியவற்றை முடக்கவேண்டும் என்றோ பெரியார் திராவிடர் கழகத்தினர் யாரும் பேசவில்லை; கோரவில்லை; யோசிக்கவே இல்லை. அவர்கள் கோரிக்கையெல்லாம், பெரியார் தனது பெயரிலிருந்து அறக்கட்டளைக்கோ, வேறு எந்த வாரிசுகளுக்குமோ மாற்றாத சொத்துக்களை - தனிப்பட்ட கூட்டமொன்றின் பிழைப்புக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் சொத்துக்களை அரசு காப்பாற்றி மக்களுக்கு என ஆக்க வேண்டும் என்பதுதான். அப்படி யாருக்கும் எழுதிவைக்கப்படாத சொத்துக்களை அரசு ஏற்க வேண்டும் என்பதே தவறு என்றால், அப்படிப்பட்ட வாரிசற்ற சொத்துக்களைத் தனியார்களுக்கு விற்று காசாக்கிக் கொண்டிருப்பது நியாயமா? 

சட்ட எரிப்புப் போரில் 6000 பேர் கைதான இலால்குடியில் இன்று அறுபது பேர்கூட இல்லையே? ஆனால் அதே ஊரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் அறக்கட்டளைக்கு உள்ளது. பெரியார் காலத்தில் திரும்பிய திசையெல்லாம் திராவிடர் கழகக்கொடி பறந்த திருச்சியில் இன்று பள்ளிக்கூடப் பிள்ளைகளை வைத்துத்தான் கூட்டம் காட்டவேண்டிய அவலநிலைதான் உள்ளது.  பெரியார் தன் சொந்த ஊரைவிட்டு திருச்சிக்கு வந்து பணியாற்றவேண்டிய அளவுக்கு தொண்டர்கள் பலம் நிரம்பியிருந்த திருச்சி ஜில்லா - பலகோடி ரூபாய் சொத்துக்கள் உள்ள திருச்சி ஜில்லா, இன்று ஐம்பதுபேர்கூட இல்லாத நிலைக்கு வந்து விட்டதே. பெரியாரது சட்டஎரிப்புப் போராட்ட அறிவிப்பு மாநாட்டில் ஒரு இலட்சம் பேர் கூடியுள்ளனர். மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனைக்குத் தயாராக  பத்தாயிரம் தோழர்கள் வந்துள்ளனர்; கைதாகினர்.  அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரிசையாக இந்திய தேசப்பட எரிப்பு, தேசியக் கொடி எரிப்பு, பிள்ளையார் உடைப்பு, காந்தி பொம்மை உடைப்பு எனக் கடுமையான போராட்டங்கள் நடந்துள்ளன. அனைத்திலும் ஆயிரக்கணக்கில் தோழர்கள் சிறைசென்றனர்.

ஆனால் இப்போது? மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை என அறிவித்தால் போராட்டத்திலிருந்து பின்வாங்காமல் சிறைசெல்ல ஒரே ஒரு வீரமணியாவது தயாரா? 15 நாள் சிறை என்றால்கூட ஒரு நூறுபேரைத் தயாரிக்க முடியுமா உங்களால்? ஆயிரங்கோடி சொத்துக்கள் இருந்தும் என்ன பயன்? இயக்கத்தை வளர்க்கக்கூட வேண்டாம். பழைய நிலையைக்கூடத் தக்க வைத்துக்கொள்ளக்கூட முடியவில்லையே!

படிப்பகங்களாக, மனையடிகளாக, நஞ்சை நிலங்களாக, வீடுகளாக பெரியாருக்கு சொத்துக்கள் நன் கொடையாக வழங்கப்பட்டதன் நோக்கம் அந்த சொத்துக்கள் வழங்கப்பட்ட பகுதிகளில் இயக்கம் நன்றாகச் செயல்பட வாய்ப்பாக சொத்துக்கள் பயன்படவேண்டும் என்பது தான். அந்த சொத்துக்கள் வழங்கப்பட்டதன் நோக்கங்களுக்கு மாறாக இப்போது அவற்றை யாருக்கும் தெரியாமல் தனியார் நிறுவனங்களுக்கும், தனிப்பட்ட நபர்களுக்கும்  திருட்டுத்தனமாக விற்பனை செய்வதைத்தானே பெரியார் தி.க விமர்சித்தது.

ஏதோ அறக்கட்டளையை அரசு கையகப்படுத்தப்படுத்த வேண்டும் என சொன்னதைப் போல, விடுதலை இதழ் இயங்குமா? உண்மை இயங்குமா? பார்ப்பன எதிர்ப்பு புத்தகங்களை அரசு அச்சிடுமா? என்றெல்லாம் யாரும் எழுப்பாத கேள்விகளுக்கு தேவையில்லாமல் பதில் கேள்விகள் கேட்பது ஏன்? திருடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் திருடன் ஒருவன், தானே “ அய்யோ திருடன் ஓடுகிறான், பிடியுங்கள், பிடியுங்கள்” என சத்தம் போட்டுக்கொண்டு ஓடினானாம். பின்னால் துரத்திக்கொண்டு வந்தவர்கள் திருடனை விட்டுவிட்டு இல்லாத யாரையோ தேடி ஓடினார்களாம். அப்படி தி.க தோழர்களை யாரையோ நோக்கி ஓடவிடப் பார்க்கிறார் தமிழர் தலைவர்.

இந்த அறக்கட்டளை அரசுக்குப் போகவேண்டும் எனச் சொல்லவரவில்லை.  எத்தனையோ சாமியார்கள், எத்தனையோ பார்ப்பனர்கள் இந்த நாட்டில் கல்விநிறுவனங்களை வைத்துக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  பெரியார் அறக்கட்டளை தோழர் வீரமணி காலத்தில்  பெரியார் தொண்டர்களுக்குப் பயன்படவில்லை. பெரியார் கொள்கை பரவ போதிய அளவு பயன்படவில்லை. ஏதோ வேலை நடக்கிறது. கடவுள் மறுப்பை முன்னிறுத்தி இன்றும் பிரச்சாரம் நடக்கிறது. “பார்ப்பான்” என்ற சொல்லை இன்னும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறீர்கள். இந்த அளவுக்காவது பணியாற்ற இன்று வேறொரு அமைப்பு இல்லை. பெரியாரை முன்வைத்து ஒரு போராளிக்கூட்டம் பெரியார் தி.க.வாக வளர்கிறது. அரசை அனுசரித்து காரியம் சாதிக்கும் அமைப்பாக தி.க இருந்துவிட்டுப் போகட்டும். பெரியாரால் முறையாக அறக்கட்டளையாக எழுதி பாதுகாக்கப்பட்டுள்ள சொத்துக்களும் அப்படி எழுதி வைக்கப்படாத வாரிசற்ற சொத்துக்களும் உங்களுக்கே பக்கபலமாக இருக்கட்டும். ஆனால் பெரியார் அந்தச் சொத்துக்களை எந்த நோக்கத்திற்காக உருவாக்கினாரோ அந்த நோக்கங்களுக்கு இனியாவது பயன்படவேண்டும். அப்படிப் பயன்படாவிட்டால் அது அரசுக்குப் போனால்தான் என்ன தவறு என்பதையும், அரசுக்குப் போவதற்கு பல நியாயங்கள் இருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டவே இதைச் சொல்கிறோம். பூனைக்குட்டிகள் வெளியேறிவிட்டன; பெருச்சாளிகளைப் போல விழிபிதுங்கி நிற்கவேண்டாம்.  

 - கருப்புப்பூனை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)