பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தற்பெருமையுடன் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதாலேயே துயரங்களை அனுபவிக்கின்றனர். உயர் வகுப்பினரிடமிருந்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற, அவர்கள் ஓர் அய்க்கிய முன்னணியை உருவாக்க வேண்டும். என்னுடைய கருத்துப்படி, உத்திரப் பிரதேசத்தில் உள்ள 1.5 கோடி பட்டியல் சாதியினரும், ஒரு கோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் - தங்கள் பொது எதிரியை வீழ்த்த கைகோத்தால், சட்டப் பேரவையில் 50 சதவிகித உறுப்பினர்கள் வெற்றி பெற்று, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிவிட முடியும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மேல் சாதியினருக்கு எதிராகத் தனியொரு முன்னணியை ஏற்படுத்துவதில், எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. பட்டியல் சாதியினரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் தங்களுடைய ஆற்றலை உணரவில்லை என்பது வருந்தத்தக்கது.

- டாக்டர் அம்பேத்கர், 24, 25 ஏப்ரல் 1948 அன்று, லக்னோவில் நடைபெற்ற பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் அய்ந்தாவது மாநாட்டில் ஆற்றிய உரை

வறுமையை அதிகரித்து ஒழித்தல்!

“மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவது, 2009 ஆம் ஆண்டுக்குள் நிறுத்தப்படும்’ என்று தேசிய துப்புரவுப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் சந்தோஷ் சவுத்ரி, 16.3.2007 அன்று சென்னை வந்திருந்தபோது - தெற்கு ரயில்வே துப்புரவுப் பணியாளர்கள் சங்கக் கூட்டத்தில் அறிவித்தார். இந்தியா முழுதும் 3 லட்சத்து 42 ஆயிரத்து 468 துப்புரவுப் பணியாளர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் ("தினத்தந்தி' 17.3.2007). அதற்கடுத்து இரண்டு நாட்கள் கழித்து இதே சென்னையில் துப்புரவுத் தொழிலாளர்கள் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக மாநகராட்சி மற்றும் ‘தாட்கோ' உயர் அதிகாரிகளுடன் பேசிய சந்தோஷ் சவுத்ரி, ‘சென்னையில் குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அதிகப் பணி சுமை உள்ளது என்று, துப்புரவுத் தொழிலாளர்கள் புகார் கூறியுள்ளனர். எனவே, அரசு விதிமுறைக்கு ஏற்ப, துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்’ என்றும் கூறியுள்ளார் (‘தினகரன்' 20.3.2007). வறுமையை இரண்டாண்டுகளில் முற்றாக ஒழித்துவிட வேண்டுமானால், அதை முதலில் அதிகரித்து விட்டு பிறகு முற்றாக ஒழித்துவிட வேண்டும் என்று சொன்னால், அது எந்தளவுக்கு முட்டாள்தனமாக இருக்குமோ அதே தன்மையோடுதான் இவ்வாணையத் தலைவரின் உரையும் அமைந்திருக்கிறது.

‘மலமள்ளும் தொழிலை முற்றாக ஒழித்திடுவோம்' என்று தி.மு.க. அரசு சட்டப் பேரவையில் அறிவித்தது. ஆனால், ‘தமிழ் நாட்டில் மலமள்ளும் தொழிலாளர்களே முற்றாக இல்லை' என்று தமிழக அரசு பொய் சொல்வதாக இவ்வாணையத் தலைவர் வருத்தம் தெரிவித்துள்ளார் (‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' 18.3.2007). ஒருபுறம் முற்றாக ஒழிக்க வேண்டுமாம்; பிறகு அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமாம். ஆனால், தமிழக அரசு துப்புரவுத் தொழிலாளர்களே இல்லை என்று சொல்கிறது. பிறகு இல்லாத ஒன்றை தி.மு.க. அரசு எப்படி ஒழிக்கும்? முரண்பாடே உன் பெயர்தான் அரசு எந்திரமோ!

மலமள்ளும் வழக்கத்தை ஒழிப்பதற்குத் தடையாக இருப்பது தொழில்நுட்பக் குறைபாடுகளோ, நிதிப்பற்றாக்குறையோ அல்லது சட்ட ரீதியான செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாததோ அல்ல; அல்லவே அல்ல. சமூக ஒதுக்குதல் மற்றும் பொருளாதாரச் சுரண்டல் என்ற அடித்தளத்தின் மீது கட்டப்பட்டுள்ள நமது ஜாதி உளவியலே இவ்வழக்கத்தை ஒழிப்பதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. எனவே, மலமள்ளுவதை ஒழிக்க விரும்புகின்றவர்கள், அதற்கு இணையாக ஜாதியை அள்ளி அணைப்பதையும் அழித்தொழிக்க முன்வர வேண்டும்.

வெற்றி சரி, லாபம் யாருக்கு?

உத்திரப் பிரதேச தேர்தலை நாடே ஆவலுடன் எதிர்பார்க்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, தமது கட்சி சார்பில் 403 இடங்களுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், பார்ப்பனர்களுக்கு 86 இடங்கள்; தாகூர்களுக்கு 38 இடங்கள்; வைசியர்களுக்கு 14 இடங்கள்; கயாஸ்தாவிற்கு ஓரிடம்; பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 100 இடங்கள்; தலித்துகளுக்கு 93 இடங்கள்; முஸ்லிம்களுக்கு 61 இடங்கள். கான்ஷிராமின் ‘பகுஜன் சமாஜ்' தத்துவத்திற்கு நேர் எதிராக பார்ப்பனர்களுக்கும், ஆதிக்க சாதியினருக்குமே அவர் முக்கியத்துவம் அளித்துள்ளார். ‘பார்ப்பன - தலித் கூட்டணி' வெற்றிபெறும் என்று பரவலாக அறிவுஜீவிகள் தோற்றுவித்த கருத்துக்கு, மாயாவதி செயல்வடிவம் கொடுத்திருக்கிறார். இக்கூட்டணி வெற்றி பெறுமா என்பதைக் காலம் தீர்மானிக்கட்டும். ஆனால், அப்படியே அது வெற்றி பெற்றாலும், லாபம் யாருக்கு?

தமிழ்நாட்டில்கூட இத்தகைய போக்குகளைக் காண முடியும். தலித் இலக்கியத்திற்கெனவும், தலித் இலக்கியவாதிகளை உருவாக்குவதற்காகவும் உருவாக்கப்பட்ட ‘புதிய கோடாங்கி' இதழில், சி.கே. கரியாலி என்ற பார்ப்பன அய்.ஏ.எஸ். அதிகாரி (அதுவும் காஷ்மீர் பார்ப்பனராம்!) தன்வரலாறு எழுதுகிறார். தலித் இலக்கியத்தில் தலித் அல்லாதோருக்கு இடமே இல்லை என்று கறாராக வாதிடும் அவ்விதழில் ‘பாப்பாத்தி இலக்கிய'த்திற்கு மட்டும் விதிவிலக்கு உண்டு போலும்! அதே போல, ஆங்கில நூல்களை வெளியிட ‘நவயானா' என்ற பதிப்பகம் ரவிக்குமாரால் உருவாக்கப்பட்டது. ஆனால், தலித் அல்லாதாரிடம் ரொம்ப கறாராக இருக்க வேண்டும் என்ற ஆழமான கருத்து கொண்ட ரவிக்குமாரின் பங்குதாரராக இருப்பவர் ‘அவுட்லுக்' எஸ். ஆனந்த் என்ற பார்ப்பனர். அண்மையில், ‘நவயானா' பதிப்பகத்திற்கு 7 லட்ச ரூபாய் விருது கிடைத்துள்ளது. இது, தலித் - பார்ப்பனர் கூட்டணிக்குக் கிடைத்த வெற்றிதானே என்று பலரும் கருதலாம். ஆனால், லாபம் (பணமுடிப்பும், விருதும்) கிடைத்ததோ ஆனந்துக்கு; ரவிக்குமாருக்கு அல்ல. இவையெல்லாம் இக்கூட்டணியால் ஏற்படும் பக்கவிளைவுகள்.

சரி, தலித் - பார்ப்பனர் கூட்டணிக்காரர்கள் அனைவரும் சொல்லி வைத்தார் போல, பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்களே? எல்லாம் கூட்டணியைப் பலப்படுத்தத்தான்!
Pin It