ஈரோடு தாலூகா போர்டு தலைவர் தேர்தல் சம்மந்தமாய் ஏற்பட்ட வழக்குகள் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதுசமயம்

1. ஹைகோர்ட்டில் இரண்டு அப்பீல்கள் ஸ்டே புரசீடிங்ஸ் ஆர்டர்களுடன் இருந்து வருகின்றன.

2. ஈரோடு டிஸ்டிரிக்ட் முன்சீப் கோர்ட்டில் இன்ஜங்ஷனுடன் ஒரு சூட் இருந்து வருகிறது.

3. ஈரோடு ஸ்டேஷனரி சப்மேஜிஸ்டிரேட் கோர்ட்டில் பழய பிரசிடெண்டு மீது சட்டப்படி அதிகாரமில்லாத காலத்தில் பிரசிடெண்டு செய்ய வேண்டிய வேலைகளை செய்ததாக ஒரு பிராது, ஆக 3 இடங்களில் விவகாரங்கள் நடக்கின்றன.

periyar 178ஈரோடு தாலூகா போர்டு பிரசிடெண்டாயிருந்த தோழர் பழைய கோட்டை பட்டக்காரர் அவர்கள் கோயமுத்தூர் ஜில்லா போர்டு வைஸ்பிரசி டெண்டானவுடன் ஈ.தா.போ. பிரசிடெண்டு வேலைகாலியானதினால் அதற்கு முன்பு ஈ.தா.போ. வைஸ் பிரசிடெண்டாயிருந்த தோழர் வி.எஸ். ராஜாக் கவுண்டரும், தோழர் எஸ்.கே. சென்னியப்ப கவுண்டரும் அபேக்ஷகர்களாயிருந்ததில் தோழர் வி.எஸ்.ராஜாக்கவுண்டர் வெற்றி பெற்றார். தோல்வி உற்றவர் இந்த எலக்ஷனை மாற்றி தன்னை தெரிந்தெடுத்ததாகக் கருத வேண்டுமென்று ஆnக்ஷபித்து ஒரு விண்ணப்பம் கொடுத்ததால் எலக்ஷன் (ஓட்டுகள் வெளிப்படையாய் செய்யப்பட்டிருக்கிறபடியால்) செல்லாது என்றும் வேறு எலக்ஷன் நடைபெற வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டு விட்டது. இந்த தீர்மானத்தை ஒப்புக் கொள்ளாமல் வாதி, பிரதிவாதிகள் இருவரும் தங்கள் தங்களையே தெரிந்தெடுக்கப்பட்டதாக தீர்மானிக்க வேண்டுமென்று ஹைகோர்ட்டில் அப்பீல் செய்திருக்கிறார்கள்.

இதன் மத்தியில் இந்த பிரசிடெண்டு எலக்ஷன் ஆனபிறகு அவரது வைஸ் பிரசிடெண்டு வேலை காலிஆகிவிட்டதால் வை.பி.எலக்ஷன் ஆனதில் சித்தோடு தோழர் ராமசாமிக் கவுண்டர் வை.பி. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பழைய வைஸ் பிரசிடெண்டு தோழர் வி.எஸ்.ராஜாக் கவுண்டருக்கு பிரசிடெண்டு எலக்ஷன் கேன்சல் ஆனவுடன் அவர் தானே வைஸ் பிரசிடெண்டு என்பதாக சொல்லி புதியதாய் எலக்ஷனான வைஸ் பிரசிடெண்டு ராமசாமி கவுண்டருக்கு சார்ஜ் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் வைஸ் பிரசிடெண்டு தோழர் ராமசாமி கவுண்டர் டி.மு.கோர்ட்டில் தன்னை வைஸ் பிரசிடெண்டாக கருத வேண்டுமென்று சொல்லி ஒரு தாவா போட்டு தோழர் ராஜாக்கவுண்டர் வைஸ் பிரசிடெண்ட் வேலை பார்க்கக் கூடாது என்று இன்ஜங்ஷன் வாங்கி இப்போது தானே வைஸ் பிரசிடெண்டாய் இருந்து வருவதுடன் பிரசிடெண்டு வேலைகள் பூறாவும் பார்த்து வருவதுடன் பிரசிடெண்டு எலக்ஷனுக்கு (தோழர் ராஜாக்கவுண்டர் தான் வைஸ் பிரசிடெண்ட் என்று கருதி இம்மாதம் 1-ம் தேதி குறிப்பிட்டிருந்ததை மாற்றி தோழர் ராமசாமிக் கவுண்டர் வைஸ் பிரசிடெண்ட் உத்தியோகம் ஏற்றவுடன்) இம் மாதம் 15 தேதி போட்டிருந்தார். தோழர் ராஜாக்கவுண்டர் இதை ஆnக்ஷபித்து ஹைக்கோர்ட்டில் விண்ணப்பம் போட எலக்ஷன் நடைபெறக் கூடாதென்று ஸ்டே புரசீடிங்ஸ் ஆர்டர் பெற்று இருக்கிறார்.

இதன் மத்தியில் ஒரு மெம்பரான தோழர் கே.எஸ்.பெரியசாமிக் கவுண்டரால் தோழர் ராஜாக்கவுண்டர் தனக்கு அதிகாரமில்லாத காலத்தில் தன்னை வைஸ் பிரசிடெண்டு என்று சொல்லிக் கொண்டு வேலை பார்த்தது குற்றம் என்று ஈரோடு சப் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஒரு பிராது கொடுத்திருக்கிறார்.

இப்படியாக 3 கோர்ட்டுகளில் விவகாரங்கள் இருக்கின்றன. யார் ஜெயித்தாலும் யார் தோற்றாலும் கடைசியில் இந்த செலவுகளுக்கும் மெனக் கேடுகளுக்கும் பரிகாரம் வெற்றி பெற்று பதவி அனுபவிப்பவர்கள். இந்தப் பதவியின் மூலம் தான் பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டிவரும். ஏனெனில் மற்ற போர்டுகளில் அனேகம் இப்படித்தான் நடந்து வருகின்றன.

இன்றைய தினம் ஸ்தலஸ்தாபனங்களில் நடக்கும் நாணையக் குறைவான காரியங்களும், யோக்கியப் பொறுப்பற்ற காரியங்களும், போலீசிலும் இல்லை, வக்கீல்களிடமும் இல்லையென்று தாராளமாய்ச் சொல்லலாம்.

அந்தந்த இடங்களில் இருக்கும் செல்வாக்குள்ள மிராசுதாரர்கள் குடிகளைத் துன்பப்படுத்த மணியம் வேலையை ஒரு லைசென்சாய் உபயோகித்து வந்தார்கள். ஆனால் இப்போது அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஸ்தல ஸ்தாபனங்களின் பதவிகள் அரசாங்கத்தினிடமும் பொது ஜனங்களிடமும் பெற்ற பெரிய லைசென்சாக இருந்து வருகின்றன.

இம்மாதிரி ஸ்தாபனங்களுக்கு தலைவர்களையோ, அங்கத்தினர்களையோ, அரசாங்கத்தார் நியமனம் செய்த காலத்தில் இல்லாத குற்றங்களும், அக்கிரமங்களும் இப்போது ஜனங்கள் தெரிந்தெடுக்கும்போது அதியமாயும் அனேக விஷயங்கள் புதியதாகவும் இருந்து வருகின்றனவே தவிர இதில் ஒன்றும் குறையவே இல்லை என்று சொல்லலாம்.

அதற்கு உதாரணம் வேண்டுமானால் இந்த இருபது முப்பது வருஷ காலமாய் ஸ்தல ஸ்தாபனங்களுக்கு இருந்து வந்த அதிகாரங்களும், நம்பிக்கைகளும் எடுபட்டுப் போய்விட்டது ஒன்றே போதுமானது. இந்தக் காரணங்களாலேயே இப்பொழுது முனிசிபாலிட்டிகளுக்கு நிர்வாக உத்தியோகஸ்தர்களை சர்க்கார் நியமித்து விட்டார்கள். அதுபோலவே ஜில்லா போர்டுகளுக்கும், தாலூகா போர்டுகளுக்கும் நியமிக்க வேண்டியது மிக மிக அவசரமாகும்.

இதுதவிர ஜில்லா போர்டையும், தாலூகா போர்டையும் அடியோடு எடுத்துவிட்டு ஜில்லா போர்டு வேலைகளை கலெக்டர்களைக் கொண்டும், தாலூகா போர்டு வேலைகளை டிப்டி கலெக்டர்களைக் கொண்டும் பார்த்து வரும்படி செய்தால் பணம் சரிபங்கு மீதியாகும். ஜனங்களுக்கும் இரண்டு பங்கு நன்மை ஏற்படும்.

இவைகளையெல்லாம்விட மனித சமூகம் கொள்ளை, திருட்டு, புரட்டு, அயோக்கியத்தனம், கொலை பாதகத்தனம் ஆகிய “அருங்” குணங்களை கற்றுக் கொள்வதற்கு ஆரம்பப்பாட சாலையாக இடங்கொடுத்து வரும் ஒரு தன்மையும் ஒழிந்து மனிதர்களை நன்னடக்கையுடன் இருக்கச் செய்யும்.

ஏனெனில் செல்வவான்கள் எண்ணம் எப்பொழுதும் மோசத்திலும் அயோக்கியத் தனத்திலுமே ஊருகிறது. அதிலும் கிராமங்களிலுள்ள செல்வவான்களது எண்ணத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அதிலும் ஸ்தல ஸ்தாபனப் பதவிகள் என்னும் லைசென்சையும் அவர்கள் கையில் கொடுத்து விட்டால் அதைப்பற்றி விவரிக்கவும் வேண்டுமா என்று கேட்கின்றோம்.

இம்மாதிரியான காரியங்கள் அரசாங்கத்தின் யோக்கியதையையும் அவர்களது நடவடிக்கையையும் தான் பிரதிபலிக்கின்றது என்று சொல்ல வேண்டியிருக்கிறதே ஒழிய வேறு ஒன்றுமே இல்லை. ஆகையால் யோக்கியமான ஆட்சியில்தான் யோக்கியமான நடவடிக்கைகளைக் காண முடியு மென்கின்ற முடிவுப்படி இன்றைய ஆட்சித் தன்மைகளை ஒவ்வொரு துறையிலும் அடியோடு மாற்றியாக வேண்டியதாய் இருக்கின்றது என்பதையும் அதற்காக வெகு தீவிரமான புரட்சி முறைகளையும், கையாள வேண்டியிருக்கிற தென்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 17.09.1933)

Pin It