peri 450ஜஸ்டிஸ் கட்சி முனிசிபல் கவுன்சில் பார்ட்டியின் கூட்டம் ஒன்று 16.10..29 தேதி இரவு 8 மணிக்கு தியாகராய மெமோரியல் கட்டிட மேல் மாடியில் கூடிற்று. 19 அங்கத்தினர்கள் விஜயமாயிருந்தார்கள். திருவாளர்கள் ஜி.நாராயண சாமி செட்டியாரும், அவர் குமாரரும் மற்றுமிரண்டொருவரும் வரவில்லை, என்பதாகத் தெரிகின்றது.

கூட்டத்தில் இரகசியமாய் ஓட்டு எடுத்ததில் திரு.ராமசாமி முதலியாருக்கு 15 ஓட்டும், டாக்டர் நடேச முதலியாருக்கு 2 ஓட்டும் கிடைத்தன. அப்படி இருந்தும் இருவரும் தேர்தலை போட்டி போடப் போவதாகவே முடிவு செய்து கொண்டு போயிருக்கிறார்கள்.

ஏறக்குறைய இருவருமே சுயராஜ்ஜியக் கட்சி கவுன்சிலர்களின் ஓட்டுகளை நம்பிக் கொண்டிருப்பதோடு சுயராஜ்ஜியக் கட்சி கவுன்சிலர்கள் வீட்டுக்கும் தலைவர்கள் வீட்டுக்கும் இரு அபேட்சகர்களும் நடந்த வண்ணமாய் இருக்கின்றார்கள்.

வெள்ளைக்காரர்கள் ஓட்டுகளையும் இருவரும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஜஸ்டிஸ் கட்சி கவுன்சிலர்கள் ஓட்டு அநேகமாய் சரிசமமாய்ப் பிரியாவிட்டாலும் இரண்டு பேருக்குமாகத்தான் பிரியக் கூடும் போல் தெரிகின்றது.

சுயராஜ்ஜியக் கட்சி ஓட்டுகளும் அதேமாதிரிதான் பிரியும் போல் தெரிகின்றது. வெள்ளைக்காரர்களின் ஓட்டுகள் நாலில் மூன்று பாகம் ஒருவருக்கும் ஒரு பாகம் ஒருவருக்கு மாகப் பிரியலாம்.

மற்ற ஓட்டுகளும் சரிசமமாகப் பிரியலாம். எனவே, தேர்தலில் இருவர் போட்டியும் பலமாக இருக்கக் கூடும் நம்மைப் பொறுத்தவரை முடிவைப் பற்றி கவலையில்லாவிட்டாலும், அதன் பயனாய் ஏற்படக் கூடிய கக்ஷிப்பிளவு பார்ப்பனரல்லாதார் கட்சியையும் அக்கட்சியின் அடுத்த சென்னை சட்டசபைத் தேர்தல்களையும் பாதிக்காமல் இருக்க முடியாதென்றே கருதி கவலைப்படுகின்றோம்.

தேர்தல்கள் வரும்போதெல்லாம் நிலைமையையும் நியாயத்தையும் உரிமையையும் சிறிதும் லட்சியம் செய்யாமல் பலத்தையும் தந்திரத்தையும் சண்டித்தனத்தையும் ஆதாரமாக வைத்தே முடிவு செய்வதாயிருந்தால், அந்தக் கட்சிக்கு எந்த விதத்தில் யோக்கியதையும் நம்பிக்கையும் இருக்க முடியும் என்பது நமக்குப் புரியவில்லை.

அநேகமாக 5, 6 மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் வரக்கூடுமாதலால் திரு.ராமசாமி முதலியாரைப் போன்றவர்கள் கார்ப்பொரேஷன் தலைவராயிருந்தால் கக்ஷி தேர்தலுக்கு அனுகூலமாயிருக்கக் கூடும் என்னும் காரணம் திரு.ராமசாமி முதலியாருக்கு அனுகூலமாக சொல்லிக் கொள்ளப்படுகிறது.

டாக்டர். நடேச முதலியார் இந்த கட்சியில் சேர்ந்த காலம் முதல் கொண்டு கஷ்டப்படுகின்றவரானதினாலும் ஒவ்வொரு சமயத்திலும் இம்மாதிரி சாக்குகள் வந்தே அவருடைய உரிமை நழுவ விடப்படுவதாலும் அவரும் இதனாலேயே அடிக்கடி கோபித்துக் கொண்டு கட்சியில் கலகம் விளைவிப்பதும் வெளியில் போவதும் மறுபடி சமாதானமும் ஆசையும் சொல்லி அழைக்கப்படுவதாலும், ஏதாவது ஒரு தடவை அவருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டியது ஒற்றுமையை உத்தேசித்தாவது அவசியம் என்கின்ற விஷயம் டாக்டர்.

நடேச முதலியாருக்கு அனுகூலமான காரணமாக சொல்லிக் கொள்ளப்படுகிறது. இரண்டு காரணங்களும் சரி என்று வைத்துக் கொண்டாலும் திரு.நடேச முதலியாருக்கு விட்டுக்கொடுப்பது இந்தத் தடவையா அல்லது அடுத்த தடவையா என்பதை வேண்டுமானால் மற்ற தலைவர்களும் சேர்ந்து யோசனை செய்து ஒரு முடிவு கட்ட வேண்டியதான விஷயம்.

அப்படிக்கில்லாமல் எப்படியோ போகட்டும் என்று மற்ற தலைவர்களும் இயக்கத் தலைவரும் அலக்ஷியமாயிருப்பதும் சிலர் இருவருக்கும் நல்ல பிள்ளைபோல் நடந்து கொள்ளுவதும் உள்ளுக்குள் அவர்களுக்கு இஷ்டமானவர்களுக்கு வேலை செய்வதுமான காரியங்களானது அவற்றின் பலன் எப்படியானாலும், அவை தலைவர்களின் பொறுப்பற்ற தன்மையையும் கோழைத் தனத்தையும் சுயநலத்தையும் காட்டுவதாகும்.

நெல்லூர் மகாநாட்டு நடவடிக்கை ஒருவாறு நமது இயக்கத்தில் உள்ள கட்சிகள் இவ்வளவு என்பதைக் காட்டிவிட்டது. ஆனால் அடுத்துவரும் கார்ப்பொரேஷன் தலைவர் தேர்தலானது அக்கட்சிகளின் தனித்தனி வேலை துவக்கத்தை காட்டக் கூடியதாகிவிடுமோ என்றே பயப்படுகின்றோம்.

ஆகையால் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் உடனே ஒரு கூட்டத்தைக் கூட்டி இருவரையும் தருவித்து இன்னார்தான் நிற்க வேண்டும் என்று தீர்மானம் செய்ய வேண்டியது அவருடைய முக்கியமானதும் கடமையானதுமான வேலையாகும்.

அப்படிக்கில்லாமல் அலட்சியமாயிருப்பதோ அல்லது தனது தலைவர் ஸ்தானம் கவுரவிக்கப்பட மாட்டாது என்பதோ காரணம் கொண்டு சும்மா இருப்பதானால் அவரும் பொறுப்பை உணராத தலைவர் என்றுதான் சொல்லித் தீரவேண்டியிருப்பதற்கு வருந்துகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 20.10.1929)

Pin It