தமிழ் அன்பர் மகாநாடு என்பதாக பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஆதரவு தேடும் ஒரு மகாநாடு சென்னையில் அடுத்த மாதம் கிருஸ்துமஸ் வாரத்தில் நடக்கப் போவதாக அறிக்கைகள் வெளியாகிக் கொண்டு வருகின்றன.

இம்மகாநாட்டைப் பற்றி சென்றவாரத்திற்கு முந்திய வார இதழில் தோழர் அ. இராகவன் அவர்களால் “தமிழ் அன்பர் மகாநாடு மற்றொரு பார்ப்பன சூக்ஷியே” என்னும் தலைப்பின்கீழ் ஒரு நீண்ட வியாசம் எழுதப் பட்டதை “குடி அரசு” வாசகர்கள் படித்திருக்கலாம். ஆனால் அவ் வியாசத்தில் கண்ட இரண்டொரு விஷயங்களை மாத்திரம் நாம் ஆதரிக்க முடியவில்லை.

அவற்றுள் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் “இக் கமிட்டிக்கு கடிதம் எழுதி தமிழர்களுக்காகவும், தமிழுக்காகவும், தைரியமாக அஞ்சாது போரிடும் ஆற்றல்மிக்க தோழர்களான ஈ.வெ.ராமசாமி, நாகர் கோவில் பி.சிதம்பரம், டாக்டர் வரதராஜலு, கா. சுப்பிரமணிபிள்ளை, சாத்தூர் கந்தசாமி முதலியார், சுவாமி வேதாசலம், மதுரை கார்மேகக் கோனார் போன்ற சுமார் 10 பேர்களை சேர்க்க வேண்டும். இன்றேல் அம்மகாநாட்டில் கலந்து கொள்ள மறுக்கவேண்டும்” என்று எழுதப்பட்டிருக்கும் வாசகத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் மேல்கண்ட இப்பதின்மரை சேர்த்துக் கொண்டதால் மாத்திரம் இம்மகாநாடு தமிழன்பர்கள் மகாநாடு என்பதாக தோழர் அ. ராகவன் கருதும் மாதிரியில் ஆகிவிடுமா என்று கேள்க்கிறோம்.

periyar 450 copyஇம்மகாநாட்டின் சூக்ஷிகளிலெல்லாம் முதன்மையான சூக்ஷி என்னவென்றால், பார்ப்பனர்கள் தமிழர்கள் என்னும் தலைப்புக்குள் புகுந்து கொண்டு மக்களுக்குள் இருந்துவரும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற உணர்ச்சியை நசுக்கி, பழயபடி பார்ப்பன ஆதிக்கம் ஒன்று மாத்திரமே இந்நாட்டில் இருக்கும்படி செய்ய வேண்டும் என்பதும் அதற்காக சில பார்ப்பனரல்லாத செல்வவான்களையும், எதையும் விற்று தங்கள் சுய நலத்தையே நாடும் சில பார்ப்பனரல்லாத மக்களையும் சேர்த்துக் கொண்டு பார்ப்பனரல்லாத சமூகம் முழுமையுமே ஏமாற்றிவிடலாம் என்பதேயாகும். இப்படிப்பட்ட சூட்சிக் கூட்டத்தில் மேல் குறிப்பிட்ட ஒரு 10 பேருக்கு இடமிருந்து விட்டதால் மாத்திரமே அக்கூட்டத்தின் கருத்தை நிறைவேறாமல் செய்துவிடமுடியும் என்று நம்மால் நினைக்க முடியவில்லை. அன்றியும் இப் பத்துப் பேர்கள் அக்கூட்டத்தில் சேர்க்கப்பட்டு விடுவார்களானால் அம் மகாநாட்டைக் கூட்டினவர்களது கருத்து நிறைவேறுவதற்கு வசதி அதிகப் பட்டது என்று தான் சொல்ல வேண்டும். அன்றியும் இந்தப் பத்துபேருக்கு சமானமான வேறு பார்ப்பனரல்லாதார்கள் அக்கூட்டத்தில் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.

நமது நாட்டில் தமிழ் கற்றறிந்த பார்ப்பனரல்லாத மக்கள் பெரும் பான்மையானவர்களுக்கு பகுத்தறிவில்லை என்று நாம் சொல்லுவதற்கு தமிழ் பண்டிதர்கள் மன்னிக்க வேண்டுமென்று கோறுகிறோம். ஏனெனில் தமிழ் பாஷையைக்கற்று பண்டிதர்களானவர்கள் 100-க்கு 99 பேர்கள் மதவாதிகளாகவும் மதத்துக்காக தமிழைக் கற்றவர்களாகவும் தமிழில் மதத்தைக் காண்கிறவர்களாகவும் இருந்துவருவதுடன் தங்கள் புத்தியை மதத்துக்கு பறி கொடுத்து மதக் கண்ணால் தமிழைப் பார்க்கின்றவர்களாகவே இருக்கின் றார்கள். தமிழ் நாட்டில் அறிவுக்கு மரியாதை கொடுத்த பண்டிதர் ஒருவரையாவது காண்பது கஷ்டமாகவேயிருக்கின்றது.

ஆனால் பார்ப்பனர்களில் அப்படிக்கில்லை. பார்ப்பான் எவ்வளவு தமிழ் கற்றிருந்தாலும் தன் சுயநலத்தையோ பகுத்தறிவையோ ஒருநாளும் பறிகொடுக்க மாட்டான். அவன் எங்காவது பகுத்தறிவை உபயோகிக்காத வன் போல நடந்து கொண்டாலும் அது தன் சுயநலத்துக்காக பிறத்தியாரை ஏமாற்ற அப்படிக் காட்டிக் கொள்வானே ஒழிய உண்மையில் முட்டாளாக இருப்பது மிக்க அருமை.

மேல்நாடுகளில் பண்டிதர்கள் பெரும்பாலோர்கள் தங்கள் பாண்டித்தியத்தில் சிறிதும் மதத்தைக் கலப்பதுமில்லை, மத நம்பிக்கையைப் பிரயோகிப்பதுமில்லை.

இதற்கு ஒரு காரணம் சொல்லலாம். மேல்நாட்டில் மதத்தைப் படிக்காமல் பண்டிதராகலாம். கீழ் நாட்டிலோ மதத்தைப் படித்தால்தான் பண்டிதராகலாம். ஆதலால் இங்கு பண்டிதர் வேறு, மதம் வேறு என்று சொல்லுவதற்கு இடமே இல்லை. இதனால் தான் நமது நாட்டில் பகுத்தறிவு என்றால் பண்டிதர்களும், பண்டிதைகளும் நடுங்குகின்றார்கள். பகுத்தறிவு என்ற வார்த்தையே பண்டிதர்கள் காதுக்கு “நாராசமாய்” இருந்து வருகின்றது. இந்தக் கூட்ட பண்டிதர்களுக்கு அறிவு உலகில் மதிப்பு ஏற்பட வேண்டும் என்று கருதுவது “சூரியனைக் கையில் பிடிக்க வேண்டும்” என்று சொல்லுவதையே ஒக்கும்.

உதாரணமாக மதத்தையும் மத மேற்கோள்களையும் தள்ளிவைத்து விட்டு ஒரு பதினைந்து நிமிஷம் பேசுங்கள் பார்ப்போம் என்றால் பேசக் கூடிய தமிழ் பண்டிதர்கள் எத்தனை பேர்கள் நம் நாட்டில் கிடைப்பார்கள் என்று பார்த்தால் இவ்வுண்மை விளங்கிவிடும். மதத்தை நீக்கிய - மத சம்மந்தப்படாத தமிழ் புத்தகம் இலக்கிய வடிவத்திலோ இலக்கண வடிவத்திலோ சரித்திர வடிவத்திலோ விஞ்ஞான ஆராய்ச்சி வடிவத்திலோ காண்பதென்பது “குதிரைக் கொம்பாக” இருக்கிறது. இப்படிப்பட்ட நூல்களைப் படித்த பண்டிதர்கள் பரிசுத்த பகுத்தறிவுவாதிகளாக இருப்பார்கள் என்று எப்படி எண்ண முடியும்? பகுத்தறிவுக்காரருக்கு பயந்த சில பண்டிதர்கள் தங்கள் வாய்சாமார்த்தியத்தால் மத சம்மந்தமான சில கோட்பாடுகளையும் ஈரருத்தம் உள்ள சில வாக்கியங்களையும் விஞ்ஞான முறைக்கும் பகுத்தறிவுக்கும் பொருத்த முயற்சிக்கிறார்கள் என்றாலும் விஞ்ஞானத்துக்கு மாறுபட்டதையும் பகுத்தறிவுக்கு மாறுபட்டதையும் தள்ளி வைக்க சம்மதிக்கிறார்களா என்றால் அவர்களுக்கு நம்மை வையத்தான் அல்லது நம் மீது குறைகூறத்தான் தெரியுமே ஒழிய தங்கள் நிலைக்கு வெட்கப்படவோ வருந்தவோ சிறிதும் தெரியவே தெரியாது. இந்த நிலையில் தமிழ்க் கல்வி அமைந்து விட்டதால் இந்தப் படிப்புப் படித்த தமிழ் பண்டிதர்களை பார்ப் பனர்கள் தங்கள் இஷ்டப் படிக்கு ஆட்டிவைத்து தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ளத் துணிவதில் அதிசயமொன்றுமில்லை. இந்த நிலையுள்ள தமிழ் பண்டிதர்கள் “மயிலைக் கண்ட பச்சோந்தியானது தானாகவே வந்து தனது கண்ணை கொத்திக் கொள்ள வசதி கொடுக்கும்” என்று சொல்லும் வாசகம்போல் தமிழ் பண்டிதர்கள் தாங்களாகவே பார்ப்பனர்களுக்கு அடிமையென்று ஒப்புக் கொள்ளுவதிலும் அதிசயமில்லை.

தமிழ் துறையில் பார்ப்பனர்கள் செய்யும் அட்டூழியங்களை இதுவரை எந்த பார்ப்பனரல்லாத பண்டிதர்களாவது எடுத்துச் சொன்னதே கிடையாது. இங்கிலீஷ் பாஷையில் பார்ப்பனர்களுக்கே எல்லா ஆதிக்கமும் இருந்து வருகிறது. உபாத்தியாயர்கள் பார்ப்பனர்கள், புஸ்தகம் எழுதுகிறவர்கள் பார்ப்பனர்கள், இலாக்கா அதிகாரிகள் பார்ப்பனர்கள், பரிக்ஷகர்கள் பார்ப்ப னர்கள் சமஸ்கிருத பாஷையிலோ இதைவிட அதிகமான ஆதிக்கம் புதிதாக வந்து நுழைந்த ஒரு அனாமதேய ஹிந்தி பாஷையிலோ இன்னும் அதிக மான ஆதிக்கம். தமிழ் பாஷையில் பார்ப்பனர்கள் ஆதிக்கத்துடன் பார்ப்பனரல்லாதவர்கள் ஆதிக்கமும் சிறிது உண்டு என்று சொல்லக் கூடுமானால் அந்த சிறிதும் பார்ப்பனர்களின் அடிமைகளான பார்ப்பனரல்லாதார்களாய்த் தான் இருக்க முடியுமே ஒழிய மற்றபடி சுதந்திரப் பார்ப்பனரல்லாதாரை சுலபத்தில் காண முடியாது. இந்தப்படியான கல்வியின் ஆதிக்கம் பாஷையின் ஆதிக்கம், இலாக்காவின் ஆதிக்கம் அவர்கள் கையில் இருந்து வருகின்றதை இன்னும் அதிகமாய் பலப்படுத்திக் கொள்ளவே இந்த சூட்சி மகாநாடு கூட்டப்படுகின்றது என்பதே நம்முடையவும் அபிப்பிராயமாகும்.

பார்ப்பனரல்லாத தமிழ் பண்டிதர்களையும் தமிழில் ஞானமோ தமிழ் மக்களிடத்தில் அன்போ தமிழ் பாஷைக்கும் தமிழ் மக்களுக்கும் உலகில் சுயமரியாதை இருக்க வேண்டும் என்ற கருத்தோ கொண்ட பார்ப்பனரல்லாத மக்கள் இம்மகாநாடு சம்பந்தத்தில் இருந்து கண்டிப்பாய் விலகிக் கொண்டு இதன் சூட்சியைத் தைரியமாய் வெளியாக்க வேண்டுமென்று நாம் எச்சரிக்கை செய்கின்றோம்.

அரசியலின்மூலம் பெருமை பெற்றுப் பணம், கீர்த்தி, பதவி முதலியன சம்பாதிக்கக் கருதும் ஒரு கூட்டமக்கள் மனித சமூகத்துக்கு க்ஷய ரோகம் போன்றவர்கள். தங்களது மானம் - ஈனம் ஜீவகாருண்யம் - பொது நன்மை ஆகியவைகளை அடியோடு துறந்து திரிகின்றவர்களானதால், அப்படிப் பட்டவர்கள் பார்ப்பனர்களைவிட்டுச் சிறிதும் விலகி நிற்கமுடியாத காரணத்தால் பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருந்து அவர்கள் இஷ்டப்படி ஆடட்டும். அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. வெகுசீக்கிரத்தில் அவர்கள் ஒருவர் காதை ஒருவர் பிடித்துக் கொண்டு “உன்னால் நான் கெட்டேன்” “உன்னால் நான் கெட்டேன்” என்று ஒருவரையொருவர் சொல்லிக் கொண்டு தோப்புக்கரணம் போடும் காலம் சீக்கிரம் வரப் போகின்றது.

ஆதலால் அவர்களைப்பற்றி கவனிக்காமல், இந்த மகாநாட்டை காரணமாக வைத்தாவது தமிழ் பண்டிதர்கள் பார்ப்பனர்களை விட்டு விலகி நிற்பார்களாக. இந்தப் பண்டிதர்கள் சுமார் 40, 50 வருஷங்களுக்கு முன்னால் இருந்தே பார்ப்பனர்களை விட்டுவிலகி இருப்பார்களேயானால் இன்றையத் தமிழின் நிலைமையும் தமிழ் பண்டிதர்கள் நிலைமையும் வேறாக இருந் திருக்கும். இன்று அப்படிக்கில்லாமல் பண்டார சன்னதிகள் என்பவர்களிடம் கூட பார்ப்பனத் தமிழ் பண்டிதர்களுக்கே மதிப்பு இருக்கிறது. தமிழ்ச் சங்கம் என்பதில் கூட பார்ப்பனர்களுக்கே ஆதிக்கம் இருந்துவந்திருக்கிறது. அது மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாத தமிழ்க்கற்ற வித்துவான்கள் என்பவர்களை பார்ப்பன வித்துவான்கள் அழுத்தி வைக்கவே பார்க்கிறார்கள்.

சமீப காலத்தில் தமிழில் மிக மேன்மையாய் தேரிய ஒரு பார்ப்பனரல்லாதாருக்கு அதாவது சென்னை டி.பி. மீனாக்ஷிசுந்திரம், எம்.ஏ., பி.எல். (இவர் பார்ப்பனருக்கு அனுகூலமாகவும் சுயமரியாதை இயக்கத்துக்கு விரோதமாகவும் வேலை செய்வதற்காக காங்கிரசினால் 2,000 ரூ. கொடுத்து உதவி செய்யப்பட்ட தோழர் டி.பி. கிருஷ்ணசாமிப் பாவலரது தம்பியாவார்) இவர் கல்வி விஷயத்தில் மிக்க தேர்ச்சியுடையவர். பல விஷயங்களில் பண்டிதர். தமிழை ஒரு சந்தோஷத்திற்காக படித்து இம்மாகாண மாணவர் களில் உயர்தர வகுப்பில் தேறியவர். தமிழில் உயர்தர வகுப்பில் தேறியவருக்கு பரிசளிக்கவென்று திருவாடுதுறை பண்டார சன்னதியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 1,000 ரூபாய் பரிசை பரிசு முறைப்படிக்கு அடைய தகுதி உடையவர். இப்படிப்பட்ட இவர் பார்ப்பனரல்லாதாராய் இருப்பதால் இவ்வருஷப் பரிசு இவருக்கு வழங்கப்படாமல் போயிற்று. இந்தப் பெருமை தோழர் மகா மகோபாத்தியாயர் வே. சாமிநாதையர் அவர்களுக்கே சேர்ந் தது. பார்ப்பனரல்லாதார் செய்யும் தற்காப்பு காரியங்கள் பார்ப்பன துவேஷமாய் போய்விடுகிறது. பார்ப்பனர் செய்யும் சகலவித கொடுமைகளும் அவர்களை பட்டதாரிகளாகவும் பதவிதாரர்களாகவும் ஆக்கி விடுகிறது.

இம் மகாநாடு கூடி வெற்றியுடன் நடைபெற்றால் (நடைபெறத்தான் பேகிறது) பார்ப்பன ஆதிக்கம் தமிழ் பாஷையை அடிமைப்படுத்தி புஸ்தக மெழுதல் விற்பனை முதலியவைகளைத் தங்கள் சுவாதீனமாகச் செய்து விடும் என்பது உறுதி - உறுதி - உறுதி.

தமிழ் அன்பர் மகாநாடு அறிக்கையின் முதல் வாக்கியத்தில் காணப்படும் விபரம்:

தென் இந்திய மொழிகளிலே உள்ள இலக்கியங்கள் வளம்பெறு வதற்கும், பொது ஜனங்களிடையே கல்வி அறிவு பரவுவதற்கும் உயரிய ஏற்பாடுகளைச் செய்வதற்காக “புத்தக ஆசிரியர்கள், பிரசுர கர்த்தாக்கள், புத்தக வியாபாரிகள், உபாத்தியாயர்கள் புத்தகாலய அதிகாரிகள் முதலியோர்களை சேர்த்து மகாநாடு ஒன்றைக் கூட்டுவிக்க வேண்டுமென்ற புத்தகாலய பிரசுர சங்கம் உத்தேசித்திருக்கிறது” என்று வியக்தமாய் கண்டிருக்கிறது. அதோடு இம் மகாநாட்டைக் கூட்டுகின்றவர்கள் யார்? அக்கமிட்டி அங்கத் தினர்கள் நிர்வாகிகள் யார்? என்பவைகளை தோழர் ராகவன் வியாசத்திலேயே எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. இம்மகா நாட்டின் முக்கிய தீர்மானமாக புஸ்தகம் எழுதுவது, பிரசுரிப்பது விற்பது ஆகிய காரியங்கள் எப்படியாவது பார்ப்பனர்கள் கையிலும் அவர்களது ஆதிக்கத்திலும் சிக்கும்படியாகவும் அவர்களே நிர்வாகஸ்தார்களாகவும் இருக்கத்தக்க மாதிரிக்கு ஒரு தீர்மானம் செய்து பார்ப்பன வாழ்க்கைக்கு ஒரு பெரும் மான்யமாக செய்யப்படப் போகிறது என்பதில் நமக்கு சிறிதும் சந்தேகமில்லை. இதில் சிறிது சிந்தினதும் வழிந்து ஒழுகினதும் ஏதாவது இருக்குமானால் அது பார்ப்பனரல்லாதவர்களுக்குப் பிச்சையாகக் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

இப்படிப்பட்ட சிறுபிச்சைக்கு ஆசைப்பட்டு சில பார்ப்பனரல்லாத தமிழ் பண்டிதர்கள் தங்களுடைய பெயரை இம் மாநாட்டுக்கு கொடுத்து பார்ப்பனரல்லாத மக்களை வஞ்சிக்க இடம் கொடுப்பது மிகுதியும் மோசமான காரியம் என்றே சொல்லுவோம். தோழர்கள் டி.கே. சிதம்பரநாத முதலியார், எஸ். வையாபுரி பிள்ளை போன்றவர்கள் தங்கள் உத்தியோக தாக்ஷண்யத்தால் இதில் கலந்து கொள்ள வேண்டியவர்களானாலும், தோழர்கள் ஆர்.சி. நமசிவாய முதலியார், திரு.வி.கல்யாணசுந்திர முதலியார் போன்றவர்கள் இதில் எப்படி கலந்திருக்க சகிக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. இந்த இரு தோழர்களும் தமிழ் பண்டிதர்கள் என்கின்ற முறையில் தங்கள் தலையிலும், மற்ற தமிழ் பண்டிதர்கள் தலையிலும் மண் போட்டவர்களாகப் போகிறார்கள் என்பதே நமதபிப்பிராயம். நிற்க,

இம் மகாநாட்டுக்கு பார்ப்பன ஆதிக்கத்துக்கு பயப்படாத “தமிழன்பர்கள்” யாராவது போவார்களானால் “புத்தகங்கள் பிரசுரிப்பதில் அறிவுக் கல்வி வேறு, மதக்கல்வி வேறு” என்று பிரித்து தனித்தனியாய் புத்தகம் எழுதப்பட வேண்டும் என்றும், அப்புத்தகம் எழுதும் இலாக்கா அரசாங்கத்திற்கே உட்பட்டிருக்க வேண்டுமே ஒழிய தனிப்பட்ட நபர்களுக்கோ சங்கங்களுக்கோ சற்றும் சம்மந்தம் இருக்கக் கூடாது என்றும் ஒரு தீர்மானம் செய்ய முயற்சிக்க வேண்டும். சர்க்கார் கொடுக்கும் படிப்பு என்பது அறிவுக்கு ஆகவே ஒழிய மதத்துக்காக அல்லவென்பதை உறுதிப்படுத்த வேண்டும். விஞ்ஞானத்திலும் பகுத்தறிவிலும் யார் மேன்மையுற்றிருக்கின்றார்களோ அவர்கள்தான் அறிவுக்கல்வி புத்தகங்கள் எழுதத் தகுதியுடையவர்கள் என்றும் தீர்மானிக்கப்பட வேண்டும். இப்படிச் செய்ய ஆரம்பித்தால் மகா நாட்டின் யோக்கியதை தானாகவே வெளிபட்டு விடும்.

(குடி அரசு - தலையங்கம் - 19.11.1933)

Pin It