திராவிட இயக்கத்திற்கான பொருளைச் சமூகத்தில் தேடாமல், மெத்தப் படித்த சிலர், அகராதிகளிலும், புராண இதிகாசங்களிலும் தேடிக் கொண்டுள்ளனர். ஏழை மக்களின் இடுப்பில் கிடந்த துண்டு, இன்றைக்குத் தோளுக்கு ஏறியிருக்கிறதே...பெண்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் தெருக்களில் செருப்பணிந்து நடப்பது இன்று இயல்பான நிகழ்வாக மாறியிருக்கிறதே... அந்தத் துண்டையும், செருப்பையும் கேட்டால், அவைகூடச் சொல்லும், திராவிட இயக்கம் இந்த மண்ணிற்கும், மக்களுக்கும் என்ன செய்ததென்று !

வரலாற்றில் நேற்று நடந்தவைகளைக் கூட, நாம் எளிதில் மறந்துவிடுகின்றோம். அவைகளை நினைவூட்டுவதற்காகவே இந்தத்தொடர். திராவிட எதிர்ப்பும், பார்ப்பனிய ஆதரவும் வேறு வேறல்ல என்பதைத் தெளிவுபடுத்துவதற்கும் இந்தத் தொடர் உதவும்.

பழைய நிகழ்வுகளையும், ஆய்வாளர்கள் தம் நூல்களில் தந்துள்ள சில அரிய செய்திகளையும் தொகுத்துத் தருவதே, இத் தொடரின் முதன்மையான நோக்கம்.

படியுங்கள் - திராவிட இயக்கக் கொள்கைகளைத் தூக்கிப் பிடியுங்கள்!

1909 ஆம் ஆண்டு மார்ச் மாதம்...

சென்னைப் பல்கலைக்கழகப் பேரவையின் (செனட்) சிறப்புக் குழுக்கூட்டம் நடைபெறுகின்றது. அக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான, பி.ஆர்.சுந்தரம் அய்யர், ஒரு தீர்மானத்தை முன்மொழிகின்றார். கல்லூரி இடைநிலை வகுப்பில் தமிழ் ஒரு பாடமாக இருக்க வேண்டியதில்லை என்பதும், அதற்காக ஒரு தேர்வை நடத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதும்தான் அத் தீர்மானம். மாறாக, சமற்கிருதத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதும், அத்தீர்மானத்தின் பிற்பகுதி.

அவையில் சில எதிர்ப்புகள் எழுகின்றன. ஆதரித்துப் பேச எழுகின்றார் ஜி.நாகோஜிராவ். “இந்நாட்டின் இலக்கியம், தத்துவம், சமயம் அனைத்தும் சமற்கிருத மொழியோடுதான் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. எனவே, வட்டார மொழிகளை விட்டுவிட்டு, சமற்கிருத மொழிக்கே ஊக்கம் தரப்பட வேண்டும்” என்கிறார் ராவ்.

சென்னை மாநிலக் கல்லூரியின் ஆங்கிலத் துறைப் பேராசிரியராக அன்று இருந்த மார்க் ஹன்டர், இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் முன் நிதானம் தேவை என்கிறார். டி.ராமகிருஷ்ண பிள்ளை, “செத்த மொழியான வட மொழிக்கு ஏன் ஊக்கம் தரவேண்டும்? தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் கட்டாயம் பாடமாக இருக்க வேண்டும்” என்கிறார்.

இறுதியில் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்படுகிறது. தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் கிடைத்ததால், சுந்தரம் அய்யர் முன்மொழிந்த, தமிழுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றது.

நீதிக்கட்சி என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோன்றியபின்தான், நிலைமை மாறுகின்றது. அக்கட்சியின் சார்பில், பனகல் அரசர் என்று அழைக்கப்பட்ட இராமராயநிங்கர், வைஸ்ராயிடம் ஒரு மனு அளிக்கின்றார். “சமற்கிருதத்தோடு பல்வேறு சமூக, சமய முரண்களைக் கொண்டிருப்பதால், பார்ப்பனரல்லாத சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் திராவிட மொழிகளே முதன்மையானவை, வடமொழி அன்று” எனக் குறிப்பிட்டு, மீண்டும் தமிழ்ப்பாடம் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றார்.

நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தபின்னர், 1924 பிப்ரவரியில், சென்னை, பச்சையப்பன் கல்லூரியில், தமிழ்க்கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அன்றைய அமைச்சர், டி.என்.சிவஞானம் பிள்ளை தமிழ்ப்பாடத்தின் தேவையை வலியுறுத்திப் பேசுகின்றார்.

இறுதியில், 1926 ஆம் ஆண்டு, இடைநிலை வகுப்பிற்கு மீண்டும் தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு வரப்படுகின்றது.

திராவிடம், தமிழுக்கு எதிரானது என்ற பொய்யும், புனைவும் கட்டவிழ்த்து விடப்படும் இத்தருணத்தில், மேற்காணும் செய்தி ஒரு பேருண்மையை நமக்கு உணர்த்துகிறது. அய்யரும், ராவும் அழிக்க முயன்ற தமிழை, திராவிட இயக்கம்தான் மீட்டெடுத்துள்ளது என்னும் உண்மை புலனாகின்றது.

(சான்று : The Madras Mail, The Hindu முதலான ஆங்கில நாளேடுகள் வெளியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில், கே.நம்பி ஆருரன் எழுதியுள்ள “Tamil Renaissance and Dravidian Nationalism” மற்றும் முனைவர் அ. இராமசாமி எழுதியுள்ள “அண்ணாவின் மொழிக் கொள்கை” ஆகிய நூல்கள்)

,...........................................

07.09.2010 அன்று, சென்னை, பெரியார் திடலில் தொடங்கப்பட்ட, திராவிடர் வரலாற்று ஆராய்ச்சி மய்யத்தைத் தொடக்கி வைத்துச் சிறப்புரை ஆற்றிய மாண்புமிகு நிதியமைச்சர், நம் இனமானப் பேராசிரியர் இரண்டு புதிய செய்திகளை வெளியிட்டார்.

மறைந்த தமிழ் அறிஞர், வ.அய்.சுப்பிரமணியம், குப்பத்தில் திராவிடப் பல்கலைக்கழகத்தைத் தொடக்குவதற்காக முனைந்து பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், அன்றைய பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியில் அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷியைச் சந்தித்திருக்கிறார். பல்கலைக் கழகம் தொடங்க விரையில் அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

அப்போது ஜோஷி சொன்னாராம்... “வேறு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் பல்கலைக்கழகத்தின் பெயர்தான் நெருடலாக உள்ளது. அது ஏன் ‘திராவிடம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றீர்கள்? தென்னாட்டுப் பல்கலைக் கழகம் என்று பெயரை மாற்றிக் கொள்ளலாம் என்றால், உடனே அனுமதி வழங்க ஏற்பாடு செய்கிறேன்” என்றாராம்.

பார்த்தீர்களா... திராவிடம் என்ற சொல்லின் மீது பார்ப்பனர்களுக்கு எவ்வளவு எரிச்சல் என்பதை!

பேராசிரியர் வ.அய்.சு., உடனே திருப்பிக் கேட்டிருக்கிறார், “தேசிய கீதத்தில் உள்ள ‘ திராவிட’ உத்சல வங்காவை என்ன செய்யப் போகின்றீர்கள்” என்று!

இப்படித் திராவிடத்திற்காக, ஒவ்வொரு இடத்திலும் போராட வேண்டியுள்ளது.

இனமானப் பேராசிரியர் இன்னொரு மகிழ்ச்சியான செய்தியையும் வெளியிட்டார்.

அவரும், நாவலரும் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களாக இருந்தபோது, ஹீராஸ் பாதிரியார் சொற்பொழிவாற்ற வந்திருக்கிறார். சிந்து சமவெளியில் காணப்படும் எழுத்து வடிவங்களும், தமிழ் எழுத்து வடிவங்களும் ஒத்த தன்மையுடையன என்பதை ஆய்ந்தறிந்து கூறிய பெருமகன் அவர் என்பதை நாம் அறிவோம். அவரிடம் நாவலரும், பேராசிரியரும் நினைவொப்பம் (ஆட்டோகிராப்) கேட்டுள்ளனர். “I am a Dravidian from Spain” என்று எழுதி அவர் கையயாப்பமிட்டாராம்.

ஸ்பெயின் நாட்டுப் பாதிரியாரின் ஆரிய எதிர்ப்பல்லவா அந்த நினைவொப்பத்தில் பதியப்பட்டுள்ளது !

(தொடரும்)