kuthoosi gurusamy 263பொதுக்கூட்டத்தில் கலகம் நடப்பதில் இரண்டு வகைகளுண்டு!

  1. கூட்டத்திற்குச் சம்பந்தமில்லாதவர்கள் பிறர் கூட்டத்தில் புகுந்து கலகஞ் செய்வது.
  2. பொது மக்களுக்குப் பிடிக்காத சங்கதியைப் பேசினால், கூட்டத்தின் தலைவருக்குப் பதிலாக, பொதுமக்களே பொறுப்பேற்றுக் கொண்டு கூட்டத்தை ஆரம்பத்திலேயே கலைத்து விடுவது.

கிறிஸ்தவர்களோ முஸ்லிம்களோ தங்கள் மத சம்பந்தமான கூட்டம் கூட்டியிருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தக் கூட்டத்திற்கு அம்மதங்களைச் சேராதவர்கள் சென்று கேள்வி கேட்பதோ, கலகஞ்செய்வதோ முதல் ரகத்தைச் சேர்ந்தது.

பொது மக்களுக்குப் பிடிக்காத சங்கதியை அதாவது அந்தக் கூட்டத்திற்கு விருப்பமில்லாத சங்கதியை, ஒரு பேச்சாளர் எடுத்துக் கூறினால் கூட்டத்தார் எப்படிக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்? உதாரணமாக, ஹிந்து மகாசபை மாநாட்டிற்குச் சென்று மேடை மீதேறி “ஹிந்து மதம் ஒழிய வேண்டும்”, என்று ஒருவர் பேசினால், அக்கூட்டத்தார் கேட்டுக் கொண்டா இருப்பார்கள்? இது இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தது.

சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று கல்காத்தாவில் ஒரு காங்கிரஸ் தேர்தல் கூட்டம் நடந்ததாம்.

மேற்கு வங்காள காங்கிரஸ் பிரசிடெண்ட் அதுல்யாகோஷ் என்பவர் பேசினாராம். அவர் பேசியது மகாஜனங்களுக்குப் பிடிக்கவில்லையாம்! கூட்டத்தார் கூச்சலிட்டார்களாம்! கூட்டங் கூட்டியவர்கள் கம்பி நீட்டி விட்டார்களாம்!

மக்களுக்குப் பிடிக்காததை அப்படி என்ன பேசி விட்டார் என்று கேட்கலாம்!

கடந்த நான்கு ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்த நன்மைகளைப் பற்றி பேசினாராம்!

"காங்கிரஸ் ஒழிக! காங்கிரஸ் சர்க்கார் ஒழிக!” - என்று பொதுமக்கள் அனைவரும் ஒரே குரலில் பதில் கூறினார்களாம். வங்காளிகள் தமிழர்களைப் போன்றவர்களல்லர்; எதையும் கட்டுப்பாடாக, வீரமாகச் செய்வார்கள் என்பது தான் உங்களுக்குத் தெரியுமே!

காங்கிரஸ் தலைவர் பேச்சு முயற்சிக்குப் பிறகு, மற்றொரு பேச்சாளர், உணவுப் பிரச்னையைக் காங்கிரஸ் சர்க்கார் திறமையாகச் சமாளித்து வருவது பற்றிப் பேசினாராம்! உடனே மக்கள் பொங்கி யெழுந்து, “காங்கிரஸ் ஒழிக!” என்று கடலிரைச்சல்போல முழக்கமிட்டார்களாம்!

உடனே கூட்டம் கலைந்து விட்டதாம்.

“இப்படிச் செய்வது ஒழுங்காகுமா? பேச்சு சுதந்திரம் கூடவா கிடையாது?”- என்று சிலர் கேட்கலாம்.

ஒழுங்கல்லதான்! ஆனால் பேச்சு சுதந்தரத்துக்கு இடம், நேரம் கிடையாதா?

ஒருவன் அற்பாயுளில் மாண்டுபோய் விட்டபிறகு. அவனை எரிக்கின்ற சுடுகாட்டில் அவனைச் சேர்ந்தவர்கள் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கின்ற சமயத்தில், அவன் எதிரியொருவன் அங்கு சென்று, செத்துப் போனவனைப் பற்றித் தாக்கிப் பேசுவதற்குப் “பேச்சுரிமை” கேட்டால், என்னவாகும்? செத்துப் போனவனுக்குப் பக்கத்திலேயே இந்தப் பேச்சாளனுக்கும் உடனே இடம் ஒதுக்கப்பட்டு விடுமல்லவா?

நாட்டு மக்கள் வறுமையாலும், பட்டினியாலும், துணிப் பஞ்சத்தாலும், செக்கில் கொட்டப்பட்ட எள்ளைப்போல நசுக்கிப் பிழியப்பட்டு வருகின்ற இந்த நேரத்தில், இவ்வளவையும் உண்டாக்கிய காங்கிரஸ்காரருக்கு இழவு வீட்டில் பேச்சுரிமை என்ன வேண்டியிருக்கிறது?

எலெக்ஷனுக்காக ஏதோ பேசித் தொலைக்க வேண்டுமோ; இல்லாவிட்டால் எதிரிகள் பரிகசிப்பார்களே! - என்று கருதினால், அதற்கும் ஒரு வழியிருக்கிறதே!

“மகாத்மா காந்தியின் மாபெரும் தியாகம்” - என்பது பற்றியோ, “கட்ட பொம்மனின் இணையற்ற வீரம்” - என்பது பற்றியோ, பேசிவிட்டு நழுவி விடக்கூடாதா?

“காங்கிரஸ் ஆட்சியின் 4 வருஷ சாதனை” - “உணவுப் பிரச்னை”- ஆகிய விஷயங்களைப் பற்றிப் பேசி, ஆத்திரத் தீயில் ஆகஸ்ட் பெட்ரோலை ஊற்றுவானேன்? தமிழ்நாட்டு காங்கிரஸ்காரராவது புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்களென்று எதிர்பார்க்கிறேன்! தேர்தல் நெருங்க நெருங்க பொது மக்களின் ஆத்திரமும் பொங்கிக் கொண்டேயிருக்கும்!

  1. சிலப்பதிகாரச் சிறப்பு
  2. வ. உ. சி. யின் தேசசேவை
  3. தமிழ் மூவேந்தர் ஆட்சி -

என்பவைகளைப் போன்ற விஷயங்களை காங்கிரஸ்காரர் எடுத்துக் கொண்டு பேசிவிட்டு ஓடுவது தான் உடம்புக்கு நல்லது! இது என் “மெடிகல் அட்வைஸ்!”

தமிழ் மக்கள் கல்கத்தாவைப் பின்பற்றிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு - போலீசாருடையதல்ல! அவர்களுக்கு ஆகஸ்ட் 42இல் தீ வைத்துக் கொளுத்திய கதர்ச் சட்டைக்காரர் பொறுப்பாகும்!

வந்து-ஏமாத்-றோம்! சே! ஹிந்த்!!

- குத்தூசி குருசாமி (27-11-1951)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It