தலைவரவர்களே! சகோதர சகோதரிகளே!!

இன்று இக்கூட்டத்தில் நான் “காங்கிரஸ் புரட்டும் - காந்தியின் தவறும்”என்னும் விஷயத்தைப் பற்றி பேசவேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருக்கின்றது. இந்தத் தலைப்பைப் பார்த்த சிலருக்கு ஆத்திரமுண்டாகி யிருக்கலாம். கலகம் செய்யலாமா என்றுகூட கருதிக் கொண்டு வந்திருக் கலாம். இந்தப்படி ஆத்திரம் ஏற்படுவது சகஜமேயாகும். ஆனால், நான் மாத்திரம் 5,6 வருஷ காலமாகவே காங்கிரசை ஒரு புரட்டு ஸ்தாபனம் என்றும், அது பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஏற்பட்ட ஸ்தாபனமென்றும் சொல்லி வந்திருப்பதோடு, “திரு காந்தியவர்கள் பார்ப்பனப் பிரசாரகர் என்றும், பார்ப்பனீயத்திற்கு பாடுபடுகின்றவர்” என்றும் சொல்லி வந்திருக் கின்றேன். இந்த அபிப்பிராயம் எனது அனுபவத்தில் நாளுக்கு நாள் பலப்பட்டுகொண்டு வந்திருக்கின்றதேயொழிய சிறிதாவது குறைவுபடவே இல்லை.

periyar and veeramani 451காங்கிரசு ஒரு வகுப்புவாத சபையேயாகும். “தேசிய”ப் போர்வை போர்த்த வகுப்புவாதக் குரங்கேயாகும். அதாவது பிடிவாத வகுப்புவாதமாகும். தேசீயம் என்னும் பித்தலாட்ட வார்த்தையைச் சொல்லிக் கொண்டே வகுப்புவாதங்களை அதாவது “உயர்” வகுப்பு உரிமைகளைக் காப்பாற்றுவதற்கு ஏற்பட்ட ஸ்தாபனமாகும்.

இந்திய தேசீயம் என்னும் வார்த்தை ஒழிந்தாலொழிய வகுப்புவாதம் நமது நாட்டை விட்டு ஒருநாளும் ஒழியப் போவதில்லை. பித்தலாட்டமாகவும், வஞ்சகமாகவும், சூக்ஷியாகவும், வகுப்புவாதத்தை வலியுறுத்துவது தான் இந்திய தேசீயம் என்பதை நினைவில் வையுங்கள். இதை எங்கு வேண்டுமானாலும் ருஜுப்படுத்தத் தயாராயிருக்கிறேன். தேசீயப்புரட்டு ஒழிந்து தீர வேண்டியது எல்லாவற்றையும்விட மிகமிக அவசியமென்றே எனக்கு இப்போது பலமாய்த்தோன்றி வருகின்றது.

நமது பாமர மக்களின் பகுத்தறிவு அற்ற தன்மையும், ஜீவனத்திற்கு வேறு யோக்கியமான வேலையற்ற தன்மையுமே வகுப்புவாத தேசீயத்திற்கு இவ்வளவு ஆதரவு கொடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. இனி அது ஒரு குண்டுமணி அளவும் இருக்க முடியாது. வகுப்புவாத தேசீயத்தின் செல்வாக்கையும், அதனின் காலித்தனத்தையும் கண்டே மக்கள் பயந்து, வெளியில் உண்மையைப் பேசத் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் இருவராவது இந்த வகுப்புவாத தேசீயப் புரட்டை வெளியாக்க உயிர்த் தியாகம் செய்து தீர வேண்டியது மிக்க அவசியமாகும். என்றாலும் சமீப காலத்தில் அதன் யோக்கியதை வெளியாகிவிடும் என்கின்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நன்றாய் சிந்தனா சக்தியுடன் யோசித்துப்பார்த்தால் வகுப்புவாத சூக்ஷி இல்லாத வெரும் தேசீயம் என்னும் வார்த்தையே வகுப்பு வாதத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் என்பது தெளிவாய் விளங்கும். தேசீயத்தின் அடிப்படையே வகுப்புவாதம்தான்.

இன்றைய தினம் நமது தேசீயம் என்பது ஐரோப்பியம், இந்தியம் என்னும் வகுப்புவாதத்தைக் கொண்டதே தவிர வேறில்லை. இந்தியாவில் ஜாதிப்பிரிவு இருப்பதால், இதன் தேசீயம் ஜாதி வகுப்பு வாதமாகவும், மேல் நாடுகளில் தொழில் பிரிவுகள் இருப்பதால் அங்கு தொழில் வகுப்புவாத மாகவும், தேசீயங்கள் நடைபெற்று வருகின்றன. “இந்தியாவை இந்தியர்கள் ஆளவேண்டும்?” என்பதே வகுப்புவாதமா? அல்லவா? என்று யோசித்துப் பாருங்கள். இந்தியாவை இன்னவிதமான கொள்கை, இன்னவிதமான ஆக்ஷி முறைமையில்தான் ஆளப்பட வேண்டும் என்று சொல்வதானால் அதில் வகுப்புவாதம் இல்லை என்று சொல்லலாம். ஆனால் அந்தப்படி சொல்லுவது என்பது நமது தேசீயத்தில் கடுகளவுகூட காண முடியவில்லை. “ராணுவம் இந்திய மயமாக்க வேண்டும், உத்தியோகம் இந்திய மயமாக்க வேண்டும், அதிகாரம் இந்தியமயமாக்க வேண்டும்” என்கின்றதான இந்திய வகுப்புவாதமேதான் இந்திய தேசீயத்தில் மேலோங்கி நிற்கின்றதே தவிர அதில் எவ்வித கொள்கையாவது மேலோங்கி நிற்பதாகக் காணப்பட வில்லை.

அந்தப்படி ஏதாவது ஒரு கொள்கை மேலோங்கி நிற்கின்றது என்று சொல்லுவோமானால் இந்திய தேசீயம் என்பதிலுள்ள எந்தக் கொள்கைக்காவது இந்திய மக்களின் 100-க்கு 10-பேர்களுடைய ஆதரவாவது இருக் கின்றதா? என்று யோசித்துப் பாருங்கள். மக்களின் ஆதரவில்லாத கொள்கைகளை யாரோ சிலர் வாயில் சொல்லிக் கொண்டோ அதிகார உத்தியோக ஆதிக்க சுயநல ஆசைக்கு வியாபாரமுறையில் ஆட்களை வைத்துப் பேசிக்கொண்டோ இருப்பதில் என்ன பயன் ஏற்படக்கூடும்?

ஆகவே தேசீயசபை எனப்படும் காங்கிரஸ், வகுப்புவாதத்தை வேறு முறையில் நடத்தும் ஒரு புரட்டு ஸ்தாபனமே தவிர வேறு அல்ல என்று தைரியமாய்ச் சொல்லுகின்றேன். இந்த இலக்ஷணத்தில் அது மற்றவர்களை அதுவும் கஷ்டப்படும், மிதித்து, அழுத்தி நசுக்கப்படும் - இழிவுபடுத்தப்படும் மக்களின் கஷ்டத்தையும், கூக்குரலையும் பார்த்து சிறிதும் அனுதாபப்படாமல்... பரிதாபப்படாமல், அவற்றை யெல்லாம் ஒரே மூச்சில் வகுப்புவாதம் என்று சொல்லுகின்ற போக்கிரித்தனத்தைப் பார்த்தால் தேசீயத்தில் உள்ள புரட்டு மாத்திரமல்லாமல் அதில் இருக்கும் வகுப்புவாதத் திமிரும் நன்றாய் விளங்கும். இழிஜாதிக்காரனென்று மதத்தின் பேரால் தீர்மானிக்கப்பட்ட பறையன், சக்கிலி, பள்ளன் என்று சொல்லப்பட்ட மக்கள் ஒரு புறம் குடிக்கத் தண்ணீர் இல்லாமல், நடக்கத் தெருவில்லாமல் திண்டாடுகின்றார்கள். தொழிலாளி, குடியானவன் என்று சொல்லப்படுகின்றதான “சூத்திர” வகுப்பு என்கின்ற மக்கள் பாடுபட்டும் கஞ்சியில்லாமல் தவிக்கிறார்கள். “மிலேச்ச” வகுப்பு என்பதில் சேர்க்கப்பட்ட மகமதி யர்கள் தாங்களும் இந்தியர்களாக இருந்தும் தங்களது உரிமை தங்களுக்கு அளிக்கப்படவில்லை என்று கூக்குரலிடுகின்றார்கள்.

இவ்வளவையும் பார்த்தும், கேட்டும் சிறிதும் ஈவு இரக்கமின்றி ஒரே வார்த்தையில் “இதெல்லாம் வகுப்பு வாதம், வகுப்பு வாதக்காரர்கள் எல்லாம் தேசத்துரோகிகள், இது தேசீயத்திற்கு முட்டுக்கட்டை” என்கின்ற ஒரே ஆயுதத்தால் அடித்து நொறுக்கிவிடப் பார்த்தால் இதை யார் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும்? என்று கேட்கின்றேன். காங்கிரஸ் காரியக் கமிட்டியார் தீர்மானங்களையும் அவற்றிற்கு திரு.காந்தியின் மேலொப்பத்தையும், சற்று நாணையத்துடன் கவனித்துப் பாருங்கள். அது வகுப்பு வாதமா? அல்லவா என்று கேட்கின்றேன். அதுவும் நாம் எந்த வகுப்பு வாதத்தை ஒழிக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றோமோ அந்த வகுப்பு வாதத்தை நிலைநிருத்த உறுதிப்படுத்தச் செய்யும் வகுப்புவாதமா? இல்லையா? என்று கேட்கின்றேன். ஆகவே காரியக்கமிட்டியின் தீர்மானம் என்ன? என்பதைச் சொல்லுகின்றேன் கேளுங்கள்.

அதாவது:- “இந்தியாவிலுள்ள சகல வகுப்பாருக்கும் அவர்களது சாஸ்திரங்கள், பாஷைகள், கல்வி, தொழில், மதசம்பந்தமான பழக்க வழக்கம், மத தர்ம ஸ்தாபனங்கள் ஆகியவைகள் தேசீயத்தில் காப்பாற்றப் படும்” என்பதாகும்.

இந்தத் தீர்மானம் வகுப்புவாத தீர்மானமா? அல்லவா? என்று கேட்கின்றேன். பறையன் தொடக்கூடாதவன் என்பதும், முஸ்லீம் தொடக் கூடாதவன் என்பதும், “சூத்திரன்” மற்ற வருணத்தாரை தொடக்கூடாதவன் என்பதும், இந்து மதத்தின் பழக்க வழக்கமா? அல்லவா? என்று கேட்கின் றேன். அன்றியும், இது வகுப்பு வாதமா? அல்லவா? என்று கேட்கின்றேன். இந்த முறை ஒழிக்கப்பட வேண்டுமென்பது வகுப்பு வாதத்தை ஒழிப்பதாகாதா? என்று கேட்கின்றேன், இப்படி இருக்க இந்த வகுப்பு வாதம் ஒழிக்கப் பட வேண்டும் என்கின்ற முயற்சிகளை யெல்லாம் வகுப்பு வாதம் என்று சொல்லிவிட்டு இன்று இந்நாட்டில் இருக்கின்ற இந்த வகுப்புவாதங்கள் காப்பாற்ற உறுதி கூறி காங்கிரஸ் தீர்மானம் செய்திருக்கின்றது. இதற்கென்ன பதில் சொல்லப் போகின்றீர்கள்?

காங்கிரஸ் தீர்மானத்தின் பயனாய் இங்குள்ள மக்களுக்கு சம உரிமை உண்டா? மனிதத்தன்மை உண்டா? என்று யோசித்துப் பாருங்கள் என்று கேட்கின்றேன்.

பார்ப்பனர்கள் வருணாச்சிரம மகாநாடுகளில் செய்யப்படும் தீர்மானங்கள் தான் காங்கிரஸ் காரியக் கமிட்டியில் வேறு பாஷையில் செய்யப் பட்டிருக்கின்றது என்பதல்லாமல் வேறு என்ன? கவனித்துப் பார்க் கப்போனால் வருணாச்சிரம மகாநாட்டுத் தீர்மானங்களைவிட காங்கிரஸ் தீர்மானம் மோசமானதென்று சொல்லுவேன். ஏனெனில், வருணாச்சிரம மகாநாடுகளில் தங்கள் வகுப்பு தர்மங்களில் கவர்ன்மெண்டார் பிரவேசிக்கக் கூடாது என்று மாத்திரம்தான் சொல்லுவார்கள். ஆனால் காங்கிரஸ் தீர்மானத்தில் “வர்ணாச்சிரம தர்மங்களை வகுப்பு தர்மங்களை நாங்கள் காப்பாற்றித் தருகின்றோம்” என்று உறுதி கூறியிருக்கின்றார்கள்.

ஆகவே இப்போது நமது நிலை “பிச்சை போட வேண்டாம். தயவு செய்து நாயைப் பிடித்துக் கட்டு” என்பது போல்தான் இருக்கின்றது. நமக்கு சுயராஜ்யம் வேண்டியதில்லை, வகுப்பு தர்மம் காப்பாற்றப்படாமல் இருந்தால் அதுவே போதும் என்று கேட்டுக் கொள்ள வேண்டியவர்களா யிருக்கின்றோம். இவைகள் எல்லாம் திரு காந்திக்கு தெரியாத விஷயம் என்று கருதி விடாதீர்கள். அவர் சூதாட்டத்தில் இரங்கிவிட்டார். அவர் படித்ததெல்லாம் சீமையில் இருக்கும்போது சட்ட புஸ்தகமும், இந்தியா வுக்கு வந்த பிறகு டால்ஸ்ட்டாய் உபதேசமும், மற்றபடி துளசிதாஸ் இராமாயணமும், பகவத் கீதையுமேயாகும். மற்றபடி, இதைத் தவிர அவருக்கு உலக அனுபவம் போதுமானது இல்லை என்றே சொல்லுவேன். ஏனெனில் மடாதிபதிகள்போல் சிஷ்யர்களிடம் பேசுவதும், பக்தர்கள் கூட்டத்தில் தனக்குத் தோன்றியதைப் பேசுவதுமே தவிர வேறு வழியில் உலக ஞானம் பெற அவருக்கு சந்தர்ப்பம் இருந்ததே கிடையாது. அவரிடம் தெய்வத் தன்மை இருக்கின்றது என்பவர்களுக்கு நான் இதைச் சொல்ல வரவில்லை. அவரும் ஒரு மனிதர்தான் என்று கருதி இருக்கின்றவர்களுக்கே நான் இதைச் சொல்லுகின்றேன்.

ஆகையால் நாம் திரு காந்தியிடம் இராமாயணத் திற்கும் கீதைக்கும் மேற்பட்ட விஷயங்களையும், சட்டத்திற்கும் டால்ஸ்டாய் உபதேசத்திற்கும் மேல்பட்ட விஷயங்களையும் எதிர்பார்ப்பது நமது பிசகேயாகும். பார்ப்பனர்கள் ஆதரவிலிருக்கும்படியான நிலைமை அவருக்கு ஏற்பட்டு விட்டதால், பார்ப்பனீயத்திற்கு பாடுபட வேண்டிய தாகவும் ஏற்பட்டு விட்டது. ஆகவே இனி எந்தக்காரணத்தை முன்னிட்டும் திரு காந்தியிடம் நாம் சமதர்மத்தை எதிர்பார்க்கக் கருதினோமேயானால் நாம் தான் மூடர்களாய்த் தீருவோம். அவரது ஆயுள் காலம் முடியும் வரை அவரிடம் சமதர்மத்தையோ ஒற்றுமையையோ காண முடியாது. அவர் வடநாட்டுப் பணக்காரர்களையும் தென்னாட்டுப் பார்ப்பனர்களையும் தான் மனிதராய் கருதுகின்றார். அவர்களது சாவகாசம்தான் அவருக்கு உண்டு. அவர்களது குறைகளைத்தான் உலகக் குறைகளாகக் கருதுகின்றார். ஆதலால் திரு.காந்தியவர்களின் திட்டமெல்லாம் அவ்விருவருடைய அதாவது பணக்காரன் பார்ப்பான் ஆகிய இவர்களுடைய குறைகளைத் தீர்ப்பதாகத்தான் இருக்குமே ஒழிய ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் கஷ்டங்களையும், குறைகளையும் நீக்குவதாக இருக்க முடியாது.

ஏழைகள் பிழைக்கவும், தாழ்த்தப்பட்டவர்கள் உயரவும் அவருக்கு இரண்டு வழிதான் தெரியும். ஒன்று இராட்டினம் சுற்றுவது இரண்டாவது “தீண்டாமை பாராட்டுவது பாவம்” என்று வாயால் சொல்லுவது. இந்த இரண்டும்கூட மில்லுக்காரனையும், பார்ப்பானையும் கண்ட மாத்திரத்தில் தத்துவார்த்தம் சொல்ல வேண்டி வந்துவிடும். ஆகவே சகோதரர்களே! எனக்குக்கொடுத்த விஷயத்தை தலையாய்க் கொண்டு என் மனதில் உண்மையென்று பட்டதை நான் ஒழிக்காமல் சொல்லி விட்டேன். இவை அவ்வளவையும் கலப்பற்ற உண்மையென்றோ முடிந்த முடிவு என்றோ கருதி கண் மூடித்தனமாய் ஒப்புக் கொள்ளாதீர்கள். நான் இந்த படி சொல்லுவதற்கு எனக்குப்பல காரணங்கள் இருக்கலாம். சுயநலமிருக்கலாம். பொறாமை இருக்கலாம், வெறுப்பு இருக்கலாம். ஆகையால் நீங்கள் இவற்றை ஒவ்வொன்றையும் வைத்து உங்கள் சொந்தப் பகுத்தறிவை நடுநிலை தன்மையையும் கொண்டு ஆராய்ந்து பார்த்து, பிறகு உங்களுக்குப்பட்டபடி முடிவு செய்து கொள்ளுங்கள்.

(குறிப்பு : தஞ்சை மாவட்டத்தில் சுயமரியாதைப் பிரச்சாரத்தை ஒட்டி 15.07.0931 இல் மாயவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 16.07.1931 இல் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்.

குடி அரசு - சொற்பொழிவு - 26.07.1931)