சென்ற டிசம்பர் மாத இறுதியில் சென்னையில் கூடிய நாடார் மகாநாடு, நாடார் வாலிபர் மகாநாடு, நாடார் கல்வி மகாநாடு ஆகியவைகளின் தலைவர்களின் சொற்பொழிவுகளும், தீர்மானங்களும் இன்று நமது பத்திரிகையின் வேறிடத்து பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடியால் பல்வேறு தொல்லைகளுக்குட்பட்டு வரும் உலகிற்கும், சுயமரியாதை இழந்து பரிதவிக்கும் இந்திய மக்களுக்கும் நாடார் மகாநாட்டுத் தலைவர்களின் சொற்பெருக்குப் போதிய வழி காட்டியாயிருக்கும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமின்று.வாலிபர்கள் மகாநாட்டிற் றலைமை வகித்த தோழர் கூ. கா. ஆ. பெரியசாமி அவர்களின் தம் சொற்பொழிவு பல நுண்பொருளை அடக்கிக் கொண்டிருக்கிறது என்பதில் ஒரு சிறிதும் மிகையாகா. வறுமை நோய், வேலையில்லாத் திண்டாட்டம்! பொருளாதார நெருக்கடி!! பஞ்சம்!!! என்று துன்ப வாழ்வைப் போக்க வழி தெரியாது பரிதவிக்கும் உலகிற்கு, “ருஷிய தேசத்தின் மாஸ்கோ என்ற நகரிலுள்ள 8 முதல் 13 வயது வரையுள்ள பள்ளிச் சிறுமிகள் ஒரு சங்கமாகச் சேர்ந்து படிக்கும் நேரம் நீங்கலாக மற்ற நேரங்களில் படியாத தொழிலாளர்கள் வசிக்குமிடங்களுக்குச் சென்று அவர்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கிறார்கள். மற்றும் தேச முன்னேற்றத்திற்கான வழிகளில் சித்தத்தைச் செலுத்தி வருகிறார்கள். சிறு பிராயத்திலிருந்தே இவர்களுக்குத் தொழில் விவசாயம், ரசாயனம் முதலிய கல்விகளோடு தேகப் பயிற்சிக்கான வகையிலும் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. தேசப்புனருத்தாரண கைங்கிரியத்தில் சிறுவர் சிறுமிகள் ஈடுபடுகிறார்கள். இதனாலன்றோ, வேலையில்லாத் திண்டாட்டமும் வறுமைப் பிணியும், வியாபார மந்தமும், பொருளாதார நெருக்கடியும், அடிமைத் தனமும் அந்நாட்டிலில்லை. ருஷியாவின் முற்போக்கைக் கண்டு இதர வல்லரசுகளும் திடுக்கிடுகின்றதென்றால் அந்நாட்டின் செல்வச் சிறப்பை சொல்லவும் வேண்டுமோ” என்று குறிப்பிட்டிருப்பது நாம் அடிக்கடி உலகப் பொருளாதாரக் கஷ்ட நிவர்த்திக்கு சமதர்மமே வேண்டுமென்று கூறி உண்மையை வலியுறுத்தியிருப்பது நாடார்கள் மட்டுமல்ல மக்களனைவருமே கவனிக்கத் தக்கதாகும்.
மகாநாட்டின் தீர்மானங்களிற் பெரும்பாலும் நமது சமதர்மக் கொள்கைகளை ஆதரித்தே இருக்கிறதென்று கூறலாம். நாடார் மக்கள் தங்கள் தலைவர்களின் சொற்பொழிவுகளையும் தீர்மானங்களையும் நன்குணர்ந்து யாண்டும் சமதர்மம் நிலவச் செய்ய ஆவண புரிய முன் வருவார்களாக.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.01.1933)