இந்தியாவின் மொத்த ஜனத்தொகை 1931ம் வருஷத்திய கணக்குப்படி (351500000) முப்பத்தைந்து கோடியே பதினைந்து லக்ஷம். 1921ம் வருஷத்தில் (320900000) முப்பத்திரண்டு கோடியே ஒன்பது லக்ஷம். ஆகவே இந்த பத்து வருஷத்தில் 3 கோடிக்கு மேல்பட்ட ஜனங்கள் பெருகி இருக்கிறார்கள். சராசரி நூற்றுக்குப் பத்துப் பேர்களுக்கு மேலாகவே அதிகரித்திருக்கின்றார்கள்.
ஒரு தேசம் அதிலும் கைத்தொழில் வளப்பமில்லாத தேசமாகிய அதாவது கைராட்டினத்தைக் கொண்டு பிழைக்க வேண்டிய நமது இந்தியாவானது, தனது ஜனத்தொகையை இப்படி ஏற்றிக் கொண்டே போனால் பிறகு வேலையில்லாத் திண்டாட்டமும், பஞ்சமும், நோயும் ஏற்படாமல் வேறு என்ன செய்ய முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.
அன்னிய ஆட்சியை நம் நாட்டைவிட்டுத் துரத்தி விட்டதினாலேயே ஜனவிருத்தி குறைந்து விடும் என்று சொல்ல முடியாது. ஆகையால் பஞ்சத்தை ஒழிக்கவும், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவும், அன்னிய நாட்டுச் சாமான்களை பஹிஷ்கரிப்பது என்பதைவிட மக்கள் அதிகமான பிள்ளைகளைப் பெறாமல் தடுப்பதற்கு ஆதாரமான கர்ப்பத் தடை முறையை கையாள வேண்டியதே முக்கியமான வேலையாகும். ஆகையால் உண்மையான தேச பக்தர்களும், தேசியவாதிகளும், இந்தக் காரியத்தைப் பிரசாரம் செய்வதன் மூலம் இந்தியாவிற்கு விடுதலை தேடுவார்களாக.
(குடி அரசு - கட்டுரை - 05.04.1931)