அய்க்கோர்ட் தீர்ப்பு என்றால் அது தீண்டத் தகாதது, பேசத் தகாதது என்று புனிதத்தன்மை  இருந்து வந்ததைப் பொய்யாக்கிக் கனம் நீதிபதிகள்  வாயினாலேயே எவருக்கும் விமர்சன உரிமை உண்டு என்று ஒப்புக்கொள்ளச் செய்தது நமது வெற்றி யல்லவா?             

- தந்தை பெரியார் 

1956-ஆம் ஆண்டு வாக்கில் இப்போதைய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த ஒரு பார்ப்பனரல்லாத தமிழர் திரு. ஆர் .எஸ் .மலையப்பன் என்பவர் மிகச் சிறந்த நிருவாகி எனப் பெயர் பெற்றவர்.

இவர் ஆட்சித் தலைவ ராக இருந்தபோது பெரம்பலூர் அருகில் உள்ள நாராயண மங்கலம் என்ற ஊரில் நரிக்குறவ மக்களுக்கான வீடுகள் கட்டிக் கொடுத்து அவர்களின் வாழ்வா தாரங்களுக்கு உதவிகள் செய்தார். இது போன்ற பல மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு மக்கள் ஆட்சியராக விளங்கிய அவர், அரசாங்கத்திற்காக ஒரு தனி நபரின் நிலத்தை எடுப்புச் செய்தது தொடர்பாக அந்த நபரால் நீதி மன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நீதிபதிகள் இருவர் தனி நபருக்குச் சார்பாக ஆணை பிறப்பித்ததோடின்றி நில எடுப்புச் செய்த ஆட்சியரை வரம்பு மீறிக் கண்டித்ததோடு அவர் நாட்டில் எங்கும் உயர் பதவிகளில் இருக்க இலாயக் கற்றவர் என்றும் அதில் குறிப்பிட்டி ருந்தனர்.

இந்த ஆணையை (24.10.1956) வழங்கிய இரு நீதிபதிகளும் ஐயங்கார் பார்ப்பனர்கள். அவர் வழக்கறிஞராக அட்வகேட் ஜெனரலாக இருந்தவர் திருவேங்கடாச்சாரி என்ற ஐயங்கார் பார்ப்பனர். இந்தத் தீர்ப்பு வெளியானதும் ‘இந்து’ பத்திரிகையில் அதுபற்றித் தலையங்கத்தில் பார்ப்பன நீதிபதிகளின் தீர்ப்பை  வரவேற்றுப் பலவாக புகழ்ந்து எழுதியிருந்தது. இதைப் படித்த பெரியார் மனதில் பார்ப்பன ஆதிக்கத்தின் வெறியின்  விளைவே இது என்ற எண்ணம் எழுந்தது. அவர் குருதியோடு கலந்துவிட்டிருந்த இன உணர்வு பீரிட்டெழச் சீறியெழுந்தார்.

மாவட்ட ஆட்சியர் திரு. ஆர். எஸ் . மலையப்பன் யாரென்று தெரியாது. அவரை முன்பின் பார்த்தது கிடையாது. அதுபோலவே இந்தப் பார்ப்பன ஐயங்கார் நீதிபதிகளையும் அவர் பார்த்ததும், கேட்டதுமில்லை. இருப்பினும் இந்த நீதிமன்ற ஆணை, பார்ப்பன- பார்ப்பனரல்லாதா ரிடையேயான ஒரு மானப் பிரச்சனை. ஆரிய - திராவிடர்களிடையேயான உணர்வை அடிப் படையாகக் கொண்ட ஓர் உணர்ச்சிப் பிரச்சனை எனக்கருதினார் பெரியார். 4.11.1956 அன்று குறுகிய கால இடைவெளியில் திருச்சியில் ஒரு கண்டனக் கூட்டம் ஏற்பாடு செய்தார். இக் கூட்டத்தில் சுமார் நாற்பதா யிரம் பேர் கலந்து கொண்டனர். மிகுந்த எழுச்சியோடு நடந்த இந்த கூட்டத்தில் சுமார் ஒன்றரை மணிநேரம் பேசிய பெரியார் எவரும் கூறத் துணியாத கருத்துக்களைக் கூறிச்சென்றார்.

“உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றிப் பொது மக்கள் கருத்துத் தெரிவிப்பது கோர்ட்டை அவமானப் படுத்துவதாகும் என்ற பூச்சாண்டியை இனியாவது அம்பலப்படுத்த வேண்டும் .உயர் நீதிமன்றத்து நீதிபதி களும் மனிதப் பிறவிகளானதால் ஆசாபாசங்களுக்கும் சமுதாய உணர்ச்சிகளுக்கும் தவறுகளுக்கும் கட்டுப் பட்டவர்கள். இவர்களை நியமிக்கின்ற இந்தியத் தலைவரையும் அவருக்கு அடுத்தபடியாக உள்ள இந்திய முதலமைச்சரையும்  கண்டிக்கவும், கொடும் பாவி கட்டிக் கொளுத்தவும் இவர்கள் எல்லோருக்கும் மேம்பட்டதாகக் கருதப்படுகின்ற தேசியக்கொடி என்பதையுமே கிழித்துப் போட்டுத் தீ வைக்கவும் ஜனநாயகச் சமூகத்தில் உரிமை இருக்கும்போது, சாதாரண சர்க்கார் உத்தியோகஸ்தர்களில் ஒருவரான நீதிபதியின் தீர்ப்பைத் தவறு என்று கண்டிப்பதற்கு மக்களுக்கு உரிமை வேண்டாமா?”

என்ற அதிர்ச்சியான கேள்வி கேட்ட பெரியார், “தமிழர், தமிழர் கலாச்சாரம், தமிழர் உரிமை,  தமிழர் உத்தியோகம் ஆகியன தொடர்பான வழக்குகளில் இனி ஆரிய நீதிபதிகள் விசாரணை செய்யக்கூடாது” என்று முடிவு ஏற்பட வேண்டும் என்று கருத்துரைத்தார் .

இந்தப் பொதுக் கூட்டத்தில் நியாயமற்ற முறையில் தீர்ப்பு வழங்கிய இரண்டு பார்ப்பன நீதிபதிகளையும் உடனடியாகத் தமிழ்நாட்டை  விட்டு வேறு மாநிலத்திற்கு மாறுதல் செய்ய வேண்டும் என்றும் தன் கடமையைச் சரிவரச் செய்யத் தவறிய அட்வகேட் ஜெனரல்  பார்ப்பனர் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது பொது மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

கூட்டத்திலிருந்த சுமார் 40,000 பேரும் ஒட்டு மொத்தமாகக் கைகளைஉயர்த்தித் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். தந்தை  பெரியாரின்  இந்தப் பொதுக் கூட்டப் பேச்சு விவரம் 6.11.1956  அன்றைய  விடுதலை இதழில், “கோர்ட்டை அவமதிப்பதல்ல” என்ற தலைப்பில் தலையங்கமாக வெளியானது. இது வெளியிடப்பட்டதுமே  அரசாங்கம் இது நீதிமன்ற அவமதிப்பு என்று ‘பேசியக் குற்றத்திற்காக’ பெரியார் மீதும் வெளியீட்டாளர் என்ற முறையில் அன்னை மணியம்மையார் மீதும் வழக்குத் தொடர்ந்தது.

இவ்வழக்கில் 23.4.1957 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் பெரியார் நேரடியாகக் கூண்டில் நின்று தானே படித்து அளித்த முப்பது பக்க விளக்க அறிக்கையானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவொரு ஆவணமாகும். அதனை அப்படியே இங்கு அளிப்பது இயலாத தெனினும் அதில் கண்டுள்ள முக்கியமான சிலவற்றைக் கூறுவது, பெரியாரின் எண்ணத்தின் வலிமையைக் காட்டும். அது “நீதி கெட்டது யாரால்?” என்று பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. அதனை அனைவரும் படித்துணர்வது அவசியம்.

“இந்தக் குற்றச்சாட்டு வார்த்தைகளின் நேரடியான பொருளுக்கு ஏற்ற மாதிரி  நான் யாதொரு குற்றமும் செய்தவனல்ல. பொதுவாக, மனிதசுபாவத்தைப் பற்றியும் நீண்டகாலமாக அது பிரதிபலித்து வருவதைப் பற்றியுமே எடுத்துச் சொல்லி, அதற்குப் பரிகாரம்  தேடவே முயற்சித்து இருக்கிறேன். இந்தத் தீர்ப்பின்மீது என் ஆராய்ச்சிக்கு எட்டிய கருத்து, பாதிக்கப்பட்டவர் பார்ப்பனரல்லாதாராய் இருப்பதாலும்,  தீர்ப்புக் கூறியவர்கள் பார்ப்பனர்களாயிருப்பதாலும் இம்மாதிரி ஏற்பட்டது என்பது எனது தாழ்மையான முடிவு.

மனுதர்ம சாஸ்திரத்தின்படி ஒரு பார்ப்பனரல்லாதவன் (சூத்திரன்) ஒரு நாட்டிலே (பார்ப்பனர்கள் வாழும் நாட்டிலே) நீதிபதியாகவோ, நிர்வாக அதிகாரியாகவோ, அமைச்சராகவோ,  அரசனாகவோ  உயர் பதவியாள னாகவோ இருக்கக்கூடாது என்பது தர்மமாகும். அப்படியிருக்க விடக்கூடாது என்பதும் பார்ப்பனர் தர்மமாகும். இந்த மனு தர்மந்தான்  நீதிபதிகள் கையாளும் இந்து சட்டத்திற்கு மூலாதாரமாகும். இதற்கு உதாரணங்கள் அதிகம். கனம் கோர்ட்டார் அவர்களுக்குக் காட்ட வேண்டியதில்லை  என்றே கருதுகின்றேன் .

சென்னை அய்க் கோர்ட்டு சுமார் நூறு ஆண்டுகள் ஆகியும் சமீபத்தில் 10 - 15 ஆண்டுகளில்தான்  அதாவது, பார்ப்பனத் துவேஷம் என்று சொல்லக்கூடிய சாதிப் புரட்சியும்,  பார்ப்பனர்கள்  நடத்தையை வெளிப் படையாகக் கண்டித்தல் என்ற தன்மையும் சர்வ சாதாரண மாக நாட்டில்  ஏற்பட்ட பிறகுதான் பார்ப்பனரல்லாதவர் களில் ஒருவர், இருவர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகத் தோன்ற முடிந்தது.

ஆகையினால்தான் பார்ப்பனர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், அவர்களுடைய நடத்தையில் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம், பார்ப்பனரல்லாதவர்களை ஒழித்துக் கட்டுவதில் தலையெடுக்க விடாமல் செய்வதில், சரியாகவோ,  தப்பாகவோ  காலாகாலம் பாராமல் தங்கள் முயற்சிகளைச் செய்து கொண்டுதான் வருவார்கள்.  இவர்கள் இப்படி நீண்ட நாட்களாகச் செய்து வருகிறார்கள் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள்  எடுத்துக்காட்ட முடியும் .பின்னாலே தருகிறேன்.

பிரஸ்தாப வழக்கில் சம்பந்தப்பட்ட கலெக்டருடைய (பார்ப்பனரல்லாதார்) உத்தரவு சரியான தென்று வாதடா நான் வரவில்லை. அவரைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியவும் தெரியாது. எங்களுக்குள் அறிமுகமாகும் அளவுக்குக்கூட சந்திப்பு ஏற்பட்டதுமில்லை. இதை உறுதியாகச் சொல்கிறேன். அது போலவே (பார்ப்பனர் களான) கனம் இரு ஜட்ஜ்களையும் நான் சந்தித்ததே கிடையாது. எனக்கு அறிமுகமும் இல்லை. என்னால் அவர்களை அடையாளம் காட்டவும் முடியாது. வெளியில் சொல்வார்கள் கலெக்டர் ரொம்பவும் நேர்மையும், நாணயமும் உள்ளவர் என்று. சம்பந்தப்பட்ட கனம் ஜட்ஜ்களை தமிழர்களின் நல்வாழ்வு விஷயத்தில் விஷமுள்ள பார்ப்பனர்கள் என்றும் பேசிக் கொள்வார்கள்.

நான் பேசியாதாகச் சொல்லப்படும் பேச்சில் இந்த இரு தரப்பினர்களைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் இந்தக் குணங்களைச் சம்பந்தப்படுத்தியோ மனதில் வைத்தோ நான் ஒரு பேச்சும் பேச முற்படவில்லை. தனிப்பட்ட முறையில் இவர்களைப் பற்றி எனக்கு எந்தவிதமான விருப்போ வெறுப்போ கிடையாது.

ஆனால், தீர்ப்பைப் பற்றியப் பார்ப்பனப் பத்திரிகையில் செய்தியைப் படித்தும் அதைப்பற்றிப் பார்ப்பனப் பத்திரிகையான ‘இந்து’ பத்திரிகை எழுதிய தலையங் கத்தைப் படித்ததும், தமிழ் மக்கள் இதைக் கேட்டுப்பதறின  பதட்டத்தையும், காட்டின பரிதாபத் தையும் பார்த்தபிறகு எனக்குத் திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது.  ஆஹா, இந்தக் கலெக்டர் ஒரு பார்ப்பனராய் இருந்தால் கனம் பார்ப்பன ஜட்ஜ்கள் இப்படி எழுதியிருப்பார்களா? அல்லது பார்ப்பனரல் லாதவர்களாய் இருந்திருந்தால் இவ்வாறு கலெக்டரை அனாவசியமாகத் தாக்கி எழுதியிருப்பார்களா? என்ற எண்ணமும் தோன்றியது .

கலெக்டருடைய முப்பது ஆண்டு நிர்வாக நடத்தை களைப் பற்றி எந்தவிதமான குற்றமோ குறையோ கூறப்படவில்லை. இப்படிப்பட்டவர் ஒரு காரியத்தில் தவறுதலான உத்தரவு, அதுவும் தான் தவறு செய்கிறோம் என்கிற எண்ணமே இல்லாமல் அரசாங்க நோக்கத்தைச் சரியாகவோ தப்பாகவோ புரிந்து அதன்பேரில் போடப்பட்ட ஒரு உத்தரவுக்காக, இவ்வளவு பெரிய கொடுமை இழைக்கப் பட்டுவிட்டதுதான் என் உள்ளத்தைப் பெரிதும் வருத்தி விட்டது. பார்ப்பான் நீதிபதியாய் ஆட்சி யாளராய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும். ஆதலால் நாங்கள் புலி வேட்டையாடுறோம். புலி மேலே பாய்ந்ததில் ஒருவர் இருவர் அடிபட வேண்டியதுதான் எல்லா பார்ப்பனர்களும் அப்படித்தானா? என்று கனம் ஜட்ஜ்கள் சிந்தித்து நான் சொல்வது தவறு என்று கருதலாம்.

இதுவரையில் எந்த இந்தியரும் வகித்திராத உயர் பதவி வகித்தவர்கள் என்ற தன்மையில் முதல் வரிசையில் முதல்வராக இருக்கும் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சொல்லுகிறார்கள் .

‘நான் வேத சாஸ்திர புராண இதிகாச உபநிஷத் தர்மங்களில் முழு நம்பிக்கை உடையவன். ஜாதிப்பிரிவில் அதாவது, வர்ணாஸ்ரம தர்மத்தில் மிக்க நம்பிக்கையும் கவலையும் உடையவன். அவைகளைப் பரப்பவும் நிலைநிறுத்தவுமே நான் பாடுபடுகிறேன். இனியும் அதற்காகவே பாடுபடுவேன் என்றுசொல்லுகிறார் எழுதுகிறார். அதற்கு வேண்டிய காரியங்களைச் செய்கிறார் என்றால் இனி யாரை மனதில் வைத்துக் கொண்டு, எல்லாப் பார்ப்பனர்களும் இப்படித்தான் இருப்பார்களா? என்று நினைப்பது - வாயில் –நாக்கில் –குற்றம் இருந்தாலொழிய வேம்பு இனிக்காது தேன் கசக்காது .

பிறவியில் மாறுதல் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது ஆடு மனிதர்களைத் தின்னாது. அது போலவாக்கும் நம் பார்ப்பனர்களின் தன்மை. என்னுடைய பிரச்சினையெல்லாம் ஜட்ஜ்களைக் குறை சொல்லுவதல்ல, பார்ப்பனர்கள் நமக்கு ஜட்ஜ்களாக இருக்கக்கூடாது என்பதுதான். வெள்ளைக்காரர்களைக் குறிப்பிட்டு இந்த முறையில் தானே நமது சுதந்திரப் போராட்டத்தில் போராடியிருக்கின்றோம் . வெள்ளைக் காரன் எவ்வளவு உயர்ந்த அதிகாரியாக இருந்தாலும், அவன் வெள்ளையன் என்கிற முறையில் இதைச் செய்தான், அதைச் செய்தான் என்று ஏராளமான விஷயங்களை எடுத்துக்காட்டிக் கிளர்ச்சி செய்திருக்கிறோம் .

அதே முறையில் கிளர்ச்சி செய்ய வேண்டிய அவசியத்தில் தான் இது நேர்ந்தது என்பதைப் பணிவாகத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஸ்டேட்மென்டில் நான் எடுத்துக்காட்டி இருக்கிற விஷயங்கள் எல்லாம் எவ்வித குரோத, துவேஷ உணர்ச்சியில்லாமல், என் இன மக்களுடைய உண்மையானதும் அவசியமானதுமான நலன் கருதி, ஒரு யோக்கியமான பொதுநலத் தொண்டன் என்கிற தன்மையில். சமூகம் கோர்ட்டார் அவர்களும் கனம் நீதிபதிகளுடைய சித்தம் எதுவோ அதுவே என் பாக்கியம் என்பதாகக் கருதி எதையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன்.

இவ்விளக்கத்தைப் படித்து முடித்ததும் கண்ணியத்திற்குப் பெயர் போன தோழர் பெரியார் “நீதிமன்ற நேரத்தை வீணடித்து விட்டதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்” என்று கூறி அமர்ந்தார் . அட்வகேட் ஜெனரல் திருவேங்கடாச்சாரியாரின் வாதங்களுக்குப் பிறகு தலைமை நீதியரசர் தனது தீர்ப்பில் கூறியிருக்கும்  சில முக்கிய பகுதிகள்.

“இரண்டு அய்யங்கார் நீதிபதிகள் ஒரு தமிழரான கலெக்டரைப்பற்றி எல்லை மீறிய கடுஞ் சொற்கள் அடங்கிய  தீர்ப்பை வெளியிட்டிருக்கின்றனர் என்றும், இது ஆரியர் - தமிழர் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட பிரச்சினையல்ல வென்றும், சுமார் ஒன்றரை மணிநேரம்  விளக்கிக் காட்டிப்  பேசிய பெரியார்,  இந்தியாவிலேயே –ஏன் உலகத்திலேயே எந்தத் தலைவரும் சொல்லத் துணியாத ஒரு உண்மையைச் சொல்லியிருக்கிறார் .

“தமிழர், தமிழர் கலாச்சாரம், தமிழர்உரிமை, தமிழர் உத்தியோகஸ்தர் ஆகியவர்களின் வழக்குகளைப் பற்றி இனி ஆரிய நீதிபதிகள் விசாரணை செய்தல் கூடாது” என்று முடிவு ஏற்பட வேண்டுமென்று அழுத்தந் திருத்தமாகக் கூறினார்

எந்தக் கோர்ட்டின் தீர்ப்பும், அதுவும் குறிப்பாக இந்தக் கோர்ட்டின் தீர்ப்பு தவறானது மட்டுமல்ல  ‘எதிரி ‘ நீதிபதிகளின் வகுப்புக்கு மாறுபட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் இவ்வாறு நீதி வழங்கப்பட்டது என்று சொல்வதும் சந்தேகத்திற்கிடமின்றிக் கோர்ட்டை அவமதிப் பதாகும் என்பது நன்கு தெரிகிறது .

கோர்ட் அவமதிப்பு நடவடிக்கைகள் எப்போதும் பழிவாங்கும் மனப்பான்மையுடன் கூடியவை அல்ல. அவை பெரும்பாலும் கோர்ட்டின் கவுரவத்தைக் காக்கும் பொருட்டே உள்ளன. இதைக் கருத்தில் கொண்டும் முதலாவது எதிர் மனுதாரின் (பெரியார்) முதிர்ந்த வயதைக் கொண்டும் நூறு ரூபாய் அபராதத்தை நாங்கள் விதித்தால், நீதியின் முடிவுக்கு அது போதுமானது என்பது எங்கள் கருத்து”.

பெரியாருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது . மணியம்மையார் எச்சரித்து விடப்படுகிறார் . வழக்கு இத்தோடு முடிகிறது. ஆனால் பெரியாரின் மனதில் எழுந்த அந்த நியாய உணர்வு, எழுந்த ஆத்திரம், அதற்காக அவர் நீதிமன்றத்தில் வெளிப்படையாக வெளியிட்ட பிரகடனம், பெற்ற தண்டனை - யாவும் எண்ணும் போதெல்லாம் மெய்சிலிர்க்கச் செய்யுமே. இன்றும் நீதிமன்றங்களின் இதுபோன்ற நியாயமற்ற நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.  ஆனால் பெரியார் போன்ற போராளி.….?  

Pin It