(நீதிக்கட்சியின் நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை)
நீதிக் கட்சி ஆட்சியில் அரிசனங்கள் எவரும் அமைச்சராக்கப் படவில்லை என்ற குற்றச்சாட்டை ம.பொ.சி.யின் ‘தமிழ்நாட்டில் பிற மொழியினர்’ என்ற நூலிலிருந்து மேற்கொள்ளாகக் கொடுத்துள்ளார் வழக்குரைஞர் பா. குப்பன் (பக்கம் -81). இது வழக்கமான குற்றச்சாட்டுதான். இதே மேற்கோளைப் பழ. நெடுமாறன் தனது ‘உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்துப் பாசிசமும்’ என்ற நூலிலும் கொடுத்துள்ளார். இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1919 இல் இயற்றப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டப் படி நடைபெற்றது நீதிகட்சி ஆட்சி, இரட்டை ஆட்சி முறையாகும். நீதிக் கட்சி ஆட்சிக் காலம் முழுவதும் ஒரு முதலமைச்சர் 2 அமைச்சர்கள் என மொத்தம் 3 இந்தியர் மட்டுமே அமைச்சர்களாக இருந்தனர். 1935 ஆம் ஆண்டு இயற்றபட்ட சட்டப்படி இரட்டை ஆட்சி முறை நீங்கி விட்டது. முழுப் பொறுப்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் களுக்கே இருந்தது.
1937 இல் அமைந்த இராஜாஜி ஆட்சியில் முதலமைச்சர் உட்பட 10 பேர் அமைச்சர்களாக இருந்தனர். 10 அமைச்சர்களில் தாழ்த்தப்பட்டவர் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் அல்ல. 10 அமைச்சர்களில் முதலமைச்சர் இராஜாஜி, டி. பிரகாசம், டாக்டர் டி. எஸ். எஸ். இராஜன், வி. வி. கிரி ஆகிய 4 பேர் பார்ப்பனர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள். சபாநாயகரும் புலுசு சாம்பமூர்த்தி என்ற ஆந்திரப் பார்ப்பனரே. இது நியாயமா என்பதை ம. பொ. சி அன்பர்கள்தான் கூற வேண்டும். இராஜாஜி ஆட்சியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த வி.ஐ.முனிசாமிப் பிள்ளை என்பவரை பொம்மையாக ஆட்சியில் அமரவைத்துக் கொண்டு ஆதித்திராவிடர்களுக்கு எதிராகப் பல காரியங்களை இராஜாஜி செய்தாரே அது நியாயமா?
15.8.1938 அன்று எம்.சி.ராஜா ஆதித்திராவிடர்கள் கோயில் நுழைவு மசோதா ஒன்றைச் சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். “உடனே பிரதம மந்திரியார் எழுந்து தடுமாற்றத் துடன், தர்க்கதியற்ற விதமாய், ஒருவரும் நம்ப முடியாத வகையில் அம் மசோதாவை எதிர்த்துப் பேசியது மிக்க ஆச்சரியத்தை விளைவித்தது.... பிறகு முதலமைச்சர் உருக்கமாகப் பேசி இந்த மசோதவை நிறுத்தி வைக்கும் படி எம்.சி.ராஜாவிடம் சொன்னார்..... அதற்கு எம்.சி.ராஜா பதில் அளிக்கும் போது “நான் அவரை (முதலமைச்சரை) நம்பினேன்.
ஆனால் இப்பொழுது அவர் கூறுவதைச் செவியுற்றுக் கேளுங்கள்! இம் மசோதாவை வாபாஸ் பெற்றுக் கொள்ளவும். சபையிலே இவ்விஷயம் விவாதிக்கப்படாமலிருக்கவும் வேண்டிய முயற்சி களை இப்பொழுது செய்கிறார் இப்பிரதம மந்திரியார். இது அவ ருக்கே நியாயமாகத் தோன்றுகிறதா? நான் இவ்விஷயத்தில் பெரிதும் ஏமாற்றமடைந்தேன்” என்று சட்டசபையிலேயே பேசினார்.
முதலமைச்சர் இராஜாஜி 45 நிமிடங்கள் இம் மசோதாவை எதிர்த்துப் பேசி, காங்கிரஸ் கட்சியினர் யாரும் இதற்கு வாக்களிக்கக் கூடாது என்று கூறினார். வாக்கெடுப்பில் எம்.சி.ராஜாவின் ஆதித் திராவிடர் கோயில் நுழைவு மசோதா வுக்கு ஆதரவாக 24 வாக்குகளும் எதிராக 130 வாக்குகளும் கிடைத்தன. (ஆதாரம்: “ஆரிய ஆட்சி” பதிப்பாசிரியர் வாலாசா வல்லவன் பக் - 50 முதல் 56 வரை.).
நீதிக் கட்சி ஆட்சியில் ஆதித்திராவிடருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்றாலும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுக்கவில்லை. ஆனால் இராஜாஜி ஆட்சியில் பொம்மையாக ஒரு அமைச்சரை உட்காரவைத்துக் கொண்டு, அவரை அந்தச் சமூகத்துக்கு எதிராக வாக்களிக்க வைத்தார் இராஜாஜி. நீதிக்கட்சி ஆட்சியில் மாபெரும் சமூகப் புரட்சிக்கு வித்திடப்பட்டது. இதை வெறும் தெலுங்கர்கள் ஆதிக்கம் செலுத்திய ஆட்சி என்று புறந்தள்ளி விட முடியாது.
நீதிக்கட்சி ஆட்சியைத் தெலுங்கர்கள் ஆதிக்கம் மிகுந்த ஆட்சி என்று குறை சொல்லும் தமிழ்த் தேசியர்கள், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இராஜாஜி முதல்வராக இருந்தபோது 1937, 1952 ஆண்டுகளில் என்ன நிலைமை என்பதை மூடி மறைக்கின்றனர்.
1937 இல் இராஜாஜி முதல்வராக இருந்த போது அவர் உள்பட 10 பேர் அமைச்சர்களாக இருந்தார்கள். அதில் டி.பிரகாசம், வி.வி.கிரி, பெசவாட கோபால ரெட்டி, மூவர் ஆந்திரா வைச் சேர்ந்த அமைச்சர்கள், தமிழ் நாட்டைச் சேர்ந்த ப.சுப்பராயன், வி.ஐ.முனிசாமிப் பிள்ளை, எஸ். இராமநாதன், டி.எஸ்.எஸ். இராஜன் என்கிற பார்ப்பனர் ஆக நால்வர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்களாக இருந்தார்கள். மற்ற அமைச்சர்கள் கேரளாவையும், கன்னடப் பகுதியையும் சேர்ந்தவர்கள். சபாநாயகர் புலுசு சாம்பமூர்த்தி ஒரு ஆந்திரப் பார்ப்பனரே.
1952இல் இராஜாஜி அமைச்சரவையில் 15 பேர் அமைச்சர்களாக இருந்தார்கள். அதில் என். ரங்கா ரெட்டி, எம். வி. கிருஷ்ணாராவ், என். சங்கர ரெட்டி, பட்டாபி ராமராவ், டி. சஞ்சீவய்யா ஆகியோர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் ஆர். நங்கன்னகவுடா, ஏ.பி.ஏ.ஷெட்டி கர்நாடகப் பகுதியைச் சேர்ந்தவர்கள். வெங்கடசாமி நாயுடு தமிழ்த் தேசியவாதிகள் பார்வையில் தெலுங்கர் குட்டி கிருஷ்ணன் நாயர், கேரளாவைச் சேர்ந்தவர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ப. சுப்பராயன், வி.சி.பழனிச் சாமி, எம்.ஏ.மாணிக்கவேலர் (‘பொதுநல’க் கட்சியைக் கலைத்து விட்டு வந்ததால் அமைச்சர் பதவி) சண்முக ராஜேஸ்வர சேதுபதி என 15 பேர் கொண்ட இராஜாஜி அமைச்சரவையில், 4 பேர் மட்டுமே தமிழர்கள். இதையெல்லாம் ம.பொ.சி எழுதமாட்டார். ஏனெனில் ராஜாஜி அவருடைய குருநாதர். நீதிக்கட்சியைப்பற்றிக் குறைக் கூறும் தமிழ்த் தேசியவாதிகள் இனியேனும் இப்படிப்பட்ட உண்மையை உணருவார்களா?
நீதிக்கட்சி ஆட்சியில் ஆதித்திராவிடர்கள் பெற்ற நன்மைகள்:
“பள்ளர், பறையர் என்று இழிவாக உள்ள பெயரை மாற்றி ஆதித்திராவிடர் என்ற பெயரை எங்கள் சமூகத்திற்கு இட்டு அழைக்க வேண்டும்” என்று, எம்.சி.இராசா 20.02.1922இல் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. அதன் அடிப்படையில் இனி இச்சமூகத்தினரை “ஆதித்திராவிடர்கள்” என்றே அனைத்து ஆவணங்களிலும் பதியவேண்டும் என்று அரசாணை எண் 217 சட்டம் (பொது) நாள் 25.03.1922இல் பிறக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.
- ஆதித்திராவிடர் பிள்ளைகளைப் பொது பள்ளிகளில் கட்டாயமாகச் சேர்க்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. G.O.No.87 கல்வி நாள் 6.1.1923
- அரசு மானியம் பெறும் பள்ளிகளில் ஆதித்திராவிடர் பிள்ளைகளைச் சேர்க்க மறுத்தால் அரசு மானியம் இரத்துச் செய்யப்படும் என அரசு ஆணை பிறப்பிக் கப்பட்டது. G.O.No.88. கல்வி நாள் 16.1.1923.
- திருச்சி மாவட்ட நிர்வாகம் (னுளைவசiஉவ க்ஷடியசன) ஆதித்திராவிடர் பிள்ளைகளை தனி இடத்தில் தங்கிப் படிக்க அனுமதி கோரியதை அரசு ஏற்க மறுத்து, ஆதித்திராவிடப் பிள்ளை களையும், மற்ற சாதிப் பிள்ளைகளையும் ஒன்றாகத்தான் படிக்க வைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. G.O.No.2015 கல்வி நாள் 11.2.1924.
- தொடக்கப்பள்ளிகளுக்குக் கட்டடங்கள் கட்டத் தொடங்கும் போதே ஆதித்திராவிடப் பிள்ளைகள் அணுக முடியுமா? ஏனெனில் கோவில், அக்கிரகாரம், போன்ற இடங்களில் ஆதித்திராவிடர் பிள்ளைகளை மற்ற சாதியினர் அனு மதிக்க மறுப்பார்கள் என்பதால் அதை ஆய்ந்து பார்த்து ஆதித்திராவிடர் பிள்ளைகள் வருவதற்குத் தடையில்லாத இடத்தில் பள்ளிக் கட்டடங்களைக் கட்ட அரசு ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. G.O.No.2333 நாள் 27-11-1922
- இந்தியாவிலேயே முதன் முதலாக ஆதித்திராவிட மாணவர்கள் இலவசமாகத் தங்கி படிக்க. ஆதித்திராவிடர் மாணவர் விடுதி திறக்கப்பட்டது. G.O.No.2563 நாள் 24.10.1923.
- இதைக் கட்டுவதற்கான பணம் முழுவதையும் ஆதித் திராவிடர் தலைவர் எம்.சி.ராஜா அவர்களிடமே கொடுத்து கட்டுவித்தார்கள்.
- 1931க்குள் ஆதித்திராவிட மாணவர்களுக்கு மூன்று விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன. (T.G.Boag ICS. Madras Presidency 1881 - 1931 பக்கம் 132)
- ஆதித்திராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 1243. நாள் 5.7.1922)
- ஆதித்திராவிட மானவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதத் தேர்வுக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 1241 சட்டம் (கல்வி) நாள் 17.10.1922)
- ஆதித்திராவிட மாணவர்களின் கல்வி நிலையைப் பற்றிய விவரத்தை அரசுக்கு அளிக்கவேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 859 நாள்.22.06.1923)
- ஆதித்திராவிட வகுப்பு மாணவர்களுக்கு நான்காம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்கிட அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 1568 சட்டம் (கல்வி) நாள் 06.11.1923)
- ஆதித்திராவிட மாணவர்களுக்குச் சில பள்ளிகளில் தனி வகுப்பறைகள் இருந்ததை அரசு கண்டித்தது. ஆதித் திராவிட மாணவர்களை அதிக எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்களுக்கு அதிக அளவில் அரசின் பண உதவி அளிக்கப்படும் என்று அரசாணை பிறக்கப்பட்டது. (அரசாணை எண் 205 கல்வி நாள் 11.02.1924)
- மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஆதித்திராவிடர் மற்றும் பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 866 (பொது) சுகாதாரம் நாள் 17.06.1922)
சிதம்பரத்தில், சாமி சகஜானந்தம் ஆதித் திராவிடப் பிள்ளைகளுக்கென 1916இல் ஒரு பள்ளியைத் தொடங்கினார். ஆங்கில அரசிடம் நிலம் கேட்டார். அவர்கள் கொடுக்கவில்லை. அவர் திண்ணைப் பள்ளி மாதிரி நடத்தினார். பனகல் அரசர் தான் 50 ஏக்கர் நிலம் கொடுத்து, அதை நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தி அங்கீகாரம் கொடுத்து, ஆண்டு தோறும் அரசின் நிதியுதவி கிடைக்கவும் வழி செய்தார்.
சென்னையில் எல்.சி. குருசாமி அருந்ததியர்களுக்கு 5 பள்ளிகளைத் தொடங்கினார். அதில் நான்கு இரவுநேரப் பள்ளிகள். ஒன்று பகல் நேரப்பள்ளி. பனகல், எல்.சி. குருசாமியை மேலாளராக இருக்க வைத்து அய்ந்து பள்ளிகளுக்கும் அரசின் நிதி உதவியை எல்.சி. குருசாமியிடமே கொடுத்து வந்தார்.
பனகல் அரசர் காலத்தில்தான் ஆதித்திராவிட மாணவர்கள் 3 பேருக்கு வகுப்புரிமையின் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் இடம் கிடைத்தது. அதேபோல் பொறியியல் மற்றும் வேளாண் கல்லூரியிலும், கால்நடை மருத்துவக் கல்லூரியிலும் இடங்கள் கிடைத்தன. மற்ற பல அரசுப் பணிகளிலும் ஆதித்திராவிடர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆதித் திராவிடர்களின் நலனைக் காப்பதில் அவருக்கு நிகர் அவரே. இதுவும் பெரியாரை பனகல் பக்கம் இழுத்துச் சென்றதற்கு மற்றொரு காரணம் ஆகும்.
இந்தியாவில் இருந்த வேறு எந்த மாகாணத்திலும் இல்லாத அளவிற்கு நீதிக் கட்சி ஆட்சியில் ஆதித் திராவிடர்களுக்குப் பஞ்சமி நிலத்தைப் பிரித்து வழங்கியது. நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை, 1920-21 ஆதித்திராவிடர்களுக்குக் கொடுக்கப் பட்டிருந்த பஞ்சமி நிலம் 19,251 ஏக்கர் மட்டுமே. ஆனால் நீதிக் கட்சி ஆட்சியில் 1931 வரை பிரித்துக் கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலம் 3, 42, 611 ஏக்கர் ஆகும். (சென்னை மாகாண அரசின் புள்ளிவிவர அதிகாரி எழுதிய Madras Presidency 1881 - 1931 என்ற நூல் பக்கம் 132.) மேலும் 1935 மார்ச் 31 வரை ஆதித்திராவிடர் களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தின் அளவு 4, 40, 000 ஏக்கராக உயர்ந்துள்ளதை ஜஸ்டிஸ் ஏடு, 19.7.1935 இல் சுட்டிக் காட்டியுள்ளது.
கல்வி, சுகாதாரம், பொதுப்பணி போன்ற முக்கியப் பணிகளை அப்போது உள்ளாட்சி நிர்வாகங்களே கவனித்து வந்தன. அந்த நிறுவனங்களில் ஆதித்திராவிடர் ஒருவரை அரசு நியமனம் மூலம் அமர்த்தி அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களித்தது நீதிக் கட்சியே. சென்னை மாகாணத்தில் உள்ளாட்சியில் ஆதித் திராவிடர் பிரதிதித்துவம் பெற்றிருந்த விவரம்:
1920-21 | மொத்த எண்ணிக்கை |
ஆதித்திராவிடர் நியமனம் பெற்றவை |
மாவட்டக்கழகங்கள் (District Boards) | 25 |
17 |
வட்டக்கழகங்கள் (Taluk Boards) | 125 |
66 |
நகராட்சிகள் (Municipalities) | 79 |
46 |
1924-25 | மொத்த எண்ணிக்கை |
ஆதித்திராவிடர் நியமனம் பெற்றவை |
மாவட்டக்கழகங்கள் (District Boards) | 24 |
20 |
வட்டக்கழகங்கள் (Taluk Boards) | 126 |
72 |
நகராட்சிகள் (Municipalities) | 80 |
61 |
1928-29 | மொத்த எண்ணிக்கை |
ஆதித்திராவிடர் நியமனம் பெற்றவை |
மாவட்டக்கழகங்கள் (District Boards) | 25 |
25 |
வட்டக்கழகங்கள் (Taluk Boards) | 129 |
128 |
நகராட்சிகள் (Municipalities) | 81 |
81 |
1921 இல் இருந்து 1928க்குள் ஆதித்திராவிடர்கள் உள்ளாட்சி நிர்வாகங்களில் 100ரூ நியமனம் செய்யப்பட்டனர்.
(T.G. Boag ICS Madras Presidency 1881-1931 P No. 134)
இந்தியா முழுவதும் 1928இல் இருந்த தாழ்த்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை - மாகாணம் வாரியாக
வ.எண் | மாகாணம் | உறுப்பினர் எண்ணிக்கை |
1. | சென்னை | 10 |
2. | பம்பாய் | 2 |
3. | வங்காளம் | 1 |
4. | அயக்கிய மாகாணம் | 1 |
5. | பஞ்சாப் | - |
6. | பீகார் | 2 |
7. | மத்திய மாகாணம் | 4 |
8. | அஸ்ஸாம் | - |
9. | பர்மா | - |
சான்று (“எம்.சி. ராஜா வாழ்க்கை வரலாறு எழுத்தும் பேச்சும்” ஜெ. சிவசண்முகம் பிள்ளை பக். 35, 36)
இந்தியா முழுவதும் ஆங்கிலேயர்தான்ஆண்டனர். ஆனால் சென்னை மாகாணத்தில் மட்டும் தான் சட்ட மன்றத்திற்குத் தாழ்த்தப்பட்டவர்கள் 10 பேர் நியமிக் கப்பட்டனர்.
1935 அரசியல் சட்டம் நடப்புக்கு வரும்வரை தாழ்த்தப்பட்டவர் நியமனம் மூலம் மட்டுமே பதவி வகித்தனர். அப்போது டெல்லியில் இருந்த சட்டசபைக் குப் பெயர் (MLA) Member of Legislative Assembly 1928இல் சென்னை சட்டமன்றம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி சட்டசபைக்கு அனுப்பப்பட்ட முதல் தாழ்த்தப்பட்ட உறுப்பினர் எம்.சி.ராஜாதான். நீதிக் கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் ஆட்சியில்தான் அது நிறைவேறி யது. அவர் டெல்லி சென்றதால்தான் அகில இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஒருங்கிணைக்க முயற்சி செய்தார்.
ஆதித்திராவிடர் பொது இடங்களில் புழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று இரட்டை மலை சீனிவாசன் 22.08.1924 இல் சென்னை சட்ட மன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தையும், வீரய்யன் 24.02.1925 இல் கொண்டு வந்த தீர்மானத்தையும் ஏற்றுக் கொண்டு சத்திரம், சாவடி, அரசு அலுவலங்கள், பொதுச் சாலைகள், பொதுக் கிணறுகள், போன்ற பொதுவான இடங்களில் ஆதி திராவிடர்கள் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு ரூ 100 அபராதம் விதிக்கப்படும் என்று அரசாணையில் (Gazete Notification 08.04.1925 Part IV)) தெரிவிக்கப்பட்டது. இந்த அரசாணையைத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளில் வெளியிட்டதோடு தண்டோரா மூலம் சென்னை மாகாணம் முழுவதும் பொது மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆதித்திராவிடர்களுக்கு இருந்த சமூகத் தடைகளை நீக்க வழிவகை செய்தது நீதிக் கட்சியே.
1927 முதலே சுயமரியாதை இயக்கத்தினரும், நீதிக் கட்சியினரும் பல்வேறு கோயில்களில் ஆதித்திராவிடர்களை உள்ளே அழைத்துச் சென்று ஆதித்திராவிடர்களின் உரிமைகளுக்காகப் போராடினர். (பார்க்க கோவில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கங்களின் பங்களிப்பு வாலாசா வல்லவன்)
அரசுப்பணிகளில் தாழ்த்தப்பட்டோருக்கும், மற்ற பார்ப்பனரல்லதார்களுக்கும் முதன் முதலில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது நீதி கட்சி ஆட்சிதான்.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளித்து நிறைவேற்றப்பட்ட முதல் அரசாணை எண் 613 நாள் 16.09.1921இல் வெளியிடப்பட்டது.
இரண்டாவது வகுப்புரிமை ஆணை எண் 652 நாள் 15.08.1922இல் பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையின் படி வகுப்புரிமை அடிப்படையில் பணியிடம் நிரப்பப்படுவதை உறுதி செய்யும்படி துறைத் தலைவர்கள், உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் ஆறுமாதத்திற்கு ஒருமுறை அரசுக்கு அளிக்க வேண்டும் என்று ஆணை இடப்பட்டது.
1921 - 22 இல் வகுப்புரிமை ஆணைகள் பிறப்பிக்கப் பட்ட போதிலும், பார்ப்பனர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து அதை நடைமுறைப் படுத்தாவண்ணம் இடையூறு செய்து வந்தனர்.
1924 இல் அரசுப் பணிகளில் வேலைக்கு ஊழியர்களை அமர்த்துவதற்காக ஒரு ஆணையம் உருவாக்கப்பட்டது.
‘Staff Selection Board ‘ என்று அதற்குப் பெயர். அது தான் இப்போது T.N.P.S.C ஆக மாறியுள்ளது. 1925 முதல் அரசாங்க ஆண்டறிக்கைகளில் வகுப்பு வாரியாக அரசு ஊழியர்கள் விவரம் காலாண்டுதோறும் வெளியிடப்பட்டு வந்தது.
பனகல் அரசர் ஆட்சிக்காலத்தில் 1927-1926க்குள் ஆதித்திராவிடர்கள் காவலர் பணியில் 382 பேரும், தலைமைக் காவலர் பணியில் 20 பேரும், துணை ஆய்வாளர் பணியில் ஒருவரும் அமர்த்தப்பட்டனர். 1935இல் துணைக் கண் காணிப்பாளர் வரை ஆதித்திராவிடர் பதவி உயர்வு பெற்றனர். 1927 இல் தான் ஆதித் திராவிடர் ஒருவர் இன்ஸ்பெக்டராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். (‘Staff Slection Board அறிக்கை பக் 120.) அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆதி திராவிடர்களைக் காவல் துறையில் காவலர்களாக கூடச் சேர்த்துக் கொண்டதில்லை என்று எம்.சி ராசா 1928 இல் மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியுள்ளார். (எம்.சி. ராசா வாழ்க்கை வரலாறும் எழுத்தும் பேச்சும் ஜெ. சிவசண்முகம் பிள்ளை, பக் 42)
‘Staff Slection Board ‘ இல் 7.2.1925 சி. நடேச முதலியார் கொண்டு வந்த சட்ட மன்றத் தீர்மானத்தின் படி, கீழ்க்கண்டவாறு இடஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதனால் முதன் முதலாக பார்ப்பனரல்லா தாரிலும், ஆதித்திராவிடர்களிலும் பலர் அரசு வேலைக்குச் செல்ல முடிந்தது.
1. | பார்ப்பனரல்லாத இந்துக்கள் | 44 |
2. | பார்ப்பனர்கள் | 16 |
3. | முகமதியர்கள் | 16 |
4. |
ஆங்கிலோஇந்தியர், இந்தியக் கிறித்துவர் |
16 |
5. | ஆதி திராவிடர்கள் | 8 |
1930 இல் இராமநாதபுரம் மாவட்டக் கழகத் தலைவராக இருந்த ஊ.அ.பூ. சௌந்தரபாண்டியன் பேருந்து முதலாளிகளுக்கு ஒரு உத்தரவை அனுப்பினர். பேருந்துகளில் ஆதித்திராவிடர்களை ஏற்ற மறுத்தால் பேருந்து உரிமங்கள் இரத்துச் செய்யப்படும் என்று உத்தரவிட்டார். அந்த மாவட்டத்தில் அக்காலத்தில் சுப்பிரமணியம் என்ற அய்யர் பேருந்தை நடத்தி வந்தார். அவர் பேருந்துப் பயணச் சீட்டுகளிலேயே ஆதித் திராவிடர்கள் பேருந்தில் ஏற்றிக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று அச்சடித்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிக் கட்சி ஆட்சிக்காலத்தில் எதிர்க் கட்சி வரிசையில் இருந்த டாக்டர் சுப்பராயன் 2.11.32 ஆதி திராவிடர்கள் கோயில் நுழைவு மசோதா ஒன்றைக் கொண்டு வந்தார். அந்த மசோதா சட்ட சபையில் தாக்கல் செய்வதற்கு முன்பே, பெரியார்அதை ஆதரித்துக் “குடி அரசில்” ஒரு தலையங்கம் எழுதினார். அதில் நீதிகட்சியினரையும் அம்மசோதாவை ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டார். “ஜஸ்டிஸ் கட்சியினரோ, சமூகச் சீர்திருத்தத்தக் கொள்கையையே அடிப்படை நோக்கமாகக் கொண்டவர்கள்.
அவர்கள் பல ஆண்டுகளாக எல்லா வகுப்பினருக்கும் ஆலயங்களில் சம உரிமை இருக்க வேண்டும் என்னும் விஷயத்தை ஆதரித்து வருபவர்கள், ஆகையால் அவர்கள், தமது எதிர்கட்சித் தலைவர்களால், கொண்டு வரப்படும் மசோதா என்ற அற்பமான காரணத்தை மாத்திரம் கருதி, இந்த நல்ல மசோதாவை எதிர்க்க மாட்டார்கள் என்றே நாம் நிச்சயமாக நம்புகிறோம்.
ஒரு சமயம் ஜஸ்டிஸ் கட்சியினர் திரு சுப்பராயன் அவர்களுடைய கட்சிக்கும் தமது கட்சிக்குமுள்ள அரசியல் அபிப்பிராயங்களை முன்னிட்டும் எதிர்கட்சியினர் எந்த நல்ல மசோதாவைக் கொண்டு வந்தாலும் அதை எதிர்ப்பதே எமது கடமை என்னும் அரசியல் வஞ்சம் தீர்க்கும் கொள்கையை முன்னிட்டும், இம்மசோதாவை ஆதரிக்காமல் நடுநிலைமை வகித்தாலும், அல்லது எதிர்த்தாலும், அது மிகவும் வெறுக்கத் தக்க செய்கையாகு மென்றே நாம் கூறி எச்சரிக்கிறோம்.”
(“குடிஅரசு” 30.10.1932) நீதிக் கட்சியின் சார்பில் டாக்டர் நடேச முதலியார் ஆதரித்துப் பேசினார், இரட்டைமலை சீனிவாசன், என். சிவராஜ் ஆகியோர் பேசிய பின்பு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஆதரித்து 56 பேர் வாக்களித்தனர். 19 பேர் நடுநிலையாக இருந்தனர். எதிர்ப்பே இன்றித் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. ஆனால் பார்ப்பனர்கள் ஆளுநரிடம் தங்களுக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி இம்மசோதாவைச் சட்டமாக்காமல் தடுத்து நிறுத்திவிட்டனர்.
- தொடரும்