periyar policeசென்னை மாகாண சுகாதார மந்திரி திரு.எஸ்.முத்தையா முதலியார் அவர்கள் மதுவிலக்கு விஷயமாய் கவர்ன்மெண்டாரின் கொள்கையை திட்டப்படுத்தவும் மக்களுக்கு மதுவிலக்கில் அதிக முயற்சி உண்டாக்கவும் வருஷம் ஒன்றுக்கு நாலு லட்ச ரூபாய் போல் செலவு செய்து நாட்டில் மதுவிலக்குப் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்தது யாவருக்கும் தெரிந்ததாகும்.

அதை இந்நாட்டுப் பார்ப்பனர்கள் கண்டு உண்மையில் நமது நாட்டில் மதுவிலக்கு ஏற்பட்டுவிட்டால் எங்கு அதனால் பிழைக்கும் தங்களது உத்தியோகத் தொழிலும் வக்கீல் தொழிலும் மற்றும் மதுபானத்தின் பலனாய் ஏற்படும் பலவிதத் தொழிலும் நின்றுவிடுமோ எனக்கருதி பலவித தந்திரத்தாலும் மந்திரி கனம் முத்தையா முதலியாருக்குக் கெட்ட எண்ணம் கற்பித்தும், கவர்ன்மெண்டை தூண்டி முத்தையா முதலியாரின் கொள்கையை ஒப்புக்கொள்ளாமல் இருக்கச் செய்ய முயற்சித்தும் பயன்படாமல் போய் இப்போது சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கு பிரசாரம் நடை பெறுவதும் யாவருக்கும் தெரிந்ததாகும்.

தவிர, காந்தி மடத்தின் சட்டாம் பிள்ளையாகிய திரு. இராஜகோபாலாச்சாரியார் தினமும் இந்தக் கொள்கையையும் பிரசாரத்தையும் தூற்றிக் கொண்டு வருவதும் யாவருக்கும் தெரியும்.

மந்திரி கனம் முத்தையா முதலியார் அவர்களின் இந்தக் கொள்கையை இப்போது இந்தியாவில் பல பாகங்களும் மேல்நாடுகளில் பல பாகமும் பின்பற்ற துடங்கிவிட்டன. அதாவது, ஐக்கிய மாகாணமாகிய அலகாபாத் மாகாண அரசாங்கத்தால் இந்தக் கொள்கையைப் பின்பற்றி அந்த மாகாணம் முழுதும் இப்பிரசாரம் செய்யத் துடங்கிவிட்டார்கள்.

மைசூர் அரசாங்கத்தாரும் இக்கொள்கையை பின்பற்றி பல ஆயிரம் ரூபாய்கள் ஒதுக்கிவைத்து பிரசாரம் துவக்கி விட்டார்கள். அமெரிக்கா அரசாங்கத்தார் இதைப் பின்பற்றி ஐம்பதாயிரம் டாலர்கள் ஒதுக்கிவைத்து பிரசாரம் துவக்கி விட்டார்கள்.

நியூசிலெண்ட் தீவு அரசாங்கத்தாரும் இதே முறையில் மதுவிலக்குப் பிரசாரம் துவக்கிவிட்டார்கள். இவ்வளவு பேர்கள் ஒப்புக் கொண்டாலும் நமது நாட்டு பார்ப்பனர்களுக்கும். அவர்கள் சிஷ்யர்களுக்கும், காந்தி சிஷ்யர்களுக்கும் மாத்திரம் இது பிடிக்கவில்லையாம்.

ஏன்? மதுவிலக்குப் பிரசாரத்தின் பெயர் சொல்லி பார்ப்பனர்களுக்கும் அவர்களது கூலிகளுக்கும் ஓட்டு வாங்கிக் கொடுக்க முடியாமல் போனதும் மதுபானத்தால் பிழைக்கும் பார்ப்பனர்களின் வயிற்றில் மண் விழுவதாலும் தான்.

ஆகவே இனியாவது ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாத பொது மக்கள் இந்த அருமையான சந்தர்ப்பத்தை விட்டுவிடாமல் மதுவிலக்குப் பிரசாரத்திற்கு வரும் தொண்டர்களுக்கு வேண்டிய உதவி புரிந்து கூட்டம் கூட்டியும் மற்றும் பல விதத்திலும் பிரசாரம் செய்வதற்கு வேண்டிய ஆதரவுகளளிக்க வேண்டுவதுடன் ஜில்லா தாலூகா போர்டு தலைவர்களும், முனிசிபல் சேர்மென்களும், ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் திரு.சௌந்தர பாண்டியன் அவர்களை பின்பற்றி தங்கள் ஆதிக்கத்திற்குள் உள்ள அதிகாரிகளும் மற்றும் சம்பந்தப்பட்ட அங்கத்தினர்களும் இந்த பிரசாரத்துடன் ஒத்துழைத்து ஆதரவு செய்து கொடுக்க வேண்டுகின்றோம்.

(குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 24.11.1929)

Pin It