periyar with kamarajarதென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு சென்னை விக்டோரியா மண்டபத்தில் திருவாளர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தலைமையில் நடந்தேறிய விபரமும் தலைவர் உபன்யாசமும் மற்றும் பல விபரங்களும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் இத்துடன் வரும் அநுபந்தத்தில் காணலாம்.

அக்கிராசன உபன்யாசத்தில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களில் சீர்திருத்தக்காரர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்களும், சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய விஷயங்களும், செய்ய வேண்டிய முறைகளும், தெளிவாய் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

முதலாவதாக, அக்கிராசனர் தாம் சீர்திருத்தத்தில் நம்பிக்கையுடையவரல்ல வென்றும், அழிவு வேலையிலேயே நம்பிக்கையுடையவரென்றும், அதாவது ஒன்றை மாற்றியோ அல்லது யெடுத்துவிட்டோ அந்த ஸ்தானத்தில் மற்றொன்றை வைக்க வேண்டுமென்கிற விஷயத்தில் கவலையில்லாதவரென்றும், அவசியமில்லாததும் கொடுமை விளைவிப்பதுமான விஷயங்களை அழித்து விட வேண்டியது என்கின்ற கருத்தின் பேரில் கவலை கொண்டிருக்கும் அழிவு வேலைக்காரரென்றும் சொல்லியிருக்கிறார்.

அதற்கேற்ப இப்போது சமுதாய முற்போக்குக்கும் சமத்துவத்திற்கும் விடுதலைக்கும் புதிதாக நாம் கைக்கொள்ள வேண்டியது என்னவென்றால், அறிவு வளர்ச்சிக்கும் சமத்துவத்திற்கும் தடையாய் இருப்பவைகளை அழித்து விட வேண்டுமென்பதேயாகும். இவ்விதம் அழிவு வேலை மூலம் தடைகளை நீக்கி விட்டால் தானாகவே முற்போக்குக்கு சரியான பாதை ஏற்பட்டு விடும் என்பது அதில் நன்றாய் அறியக் கிடக்கிறது. இந்தக் குறிப்பானது “இருப்பதை எடுத்து விட்டால் வேறொன்று வேண்டாமா?” என்று ஆலோசனை இல்லாமல் பிதற்றிக் கொண்டிருக்கிற விதண்டாவாதிகளுக்கும் பாமர மக்களை ஏய்ப்பதற்குச் சில சுயநலவாதிகள் “நாய்க்கர் எல்லாவற்றையும் அடியோடு அழிக்க வேண்டுமென்கிறாரே, அப்படி அழித்துவிட்டால் மக்களுக்கு வேறு கதியென்ன?” என்று நீலிக்கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் பாஷாண்டிகளுக்கும் தக்க பதிலாகும்.

 மற்றும் ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னால் நடந்து வந்த சீர்திருத்தங்கள் பலிக்காமல் தடைபட்டு போனதற்குக் காரணம், மேல் குறிப்பிட்டதான தடைகளாயிருப்பவைகளை சரியானபடி வேருடன் களைந்தெறிவதான அழிவு வேலை செய்யாததுதான் காரணம் என்றும், தற்காலத்தில் செய்யப்படுவதாய்ச் சொல்லப்படுவதெல்லாம் புரட்டும் சுயநலமும் அடிப்படையாய் கொண்டதென்றும், சீர்திருத்தத்திற்கு விரோதிகளாய் உள்ள உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்பவர்களாலும் “சித்தாந்தக்காரர்”களாலுமே நடைபெற்று வந்ததென்றும் தெளிவாய் எடுத்துக் கூறியிருப்பதிலிருந்து நமது நாடு உண்மையான சீர்திருத்தமடையாமல் போனதற்குக் காரணம் விளங்கும் மற்றும்.

“கபிலரை ஏமாற்றி விட்டோம், புத்தரை ஏமாற்றி விட்டோம் கூன் பாண்டியனை ஏமாற்றி விட்டோம், மூவேந்தர்களை அழித்து விட்டோம், மகமதிய அரசாங்கத்தை ஒழித்து விட்டோம், நாயக்கர் அரசாங்கத்தை பாழ்படுத்தி விட்டோம், கம்பனைக் கொண்டே எங்களைக் கடவுளாகவும் தேவர்களாவும் செய்து கொண்டோம். இப்படிப்பட்ட எங்களுக்கு சில பார்ப்பனரல்லாத கூலிகளைப் பிடித்தே இப்புதிய சீர்திருத்த இயக்கத்தை ஒழித்து எங்கள் ஆதிக்கத்தை பழையபடி நிலைநிறுத்திக் கொள்ளச் செய்வதுதானா ஒரு பிரமாதமான காரியம்” என்று மனப்பால் குடித்துக் கொண்டு இறுமாந்து ஆணவமாய் பிதற்றித் திரிபவர்களுக்கு, அக்கிராசனர் உபந்நியாசத்தில் “அந்தக் காலமும் சவுகர்யமும் அப்போதைய அரசாங்கத்தின் யோக்கிதையும் வேறு, இந்தக் காலமும் இப்போதைய அரசாங்கமும் சீர்திருத்தம் செய்யவோ அழிவு வேலை செய்யவோ விருப்பம் கொண்டவர்களுடைய சவுகரியமும் வேறு” என்று சொல்லியிருப்பது தக்க பதிலாகும்.

இப்போதைய இயக்கம், அடிக்க அடிக்க எழும்பும் பந்து போலவும், வெட்ட வெட்ட தளிரும் கொடிகள் போலவும் பரவி விட்டது, கொஞ்ச காலத்திற்கு முன் ஒருவர் எழுதியது போல், அதாவது “எங்களுக்கு இச்சுயமரியாதை இயக்கம் கண்களை திறந்து விட்டது. இனி எவர் தடுத்தாலும், இந்த இராமசாமி நாயக்கரே மாறி விட்டாலும், இந்த உணர்ச்சியை அடக்கிவிட முடியாது” என்று எழுதியதுபோல் இனி என்றைக்கும் இவ்வியக்கமும் இந்த உணர்ச்சியும் மறையாது என்பதையும் யாரும் அழிக்க முடியாது என்பதையும் வெள்ளிடை மலைபோல் விளக்கி விட்டது.

மற்றபடி பெண்கள் விடுதலைக்கு தடையான அர்த்தமற்ற கற்பும், சம்மதமற்ற விதவைத் தன்மையும் அழிக்கப்பட வேண்டும் என்றும், அவைகள் அழிக்கப்படத்தக்க முறைகளும், அதாவது புருஷன் என்பவன், “பழைய சாதம் சுடுகிறது, விசிறி கொண்டு வீசு” என்றால் உடனே பெண்ஜாதி என்பவள் விசிறி கொண்டு வீச வேண்டியதுதான் கற்பு என்றும், பெண் ஜாதி என்பவள், கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது புருஷன் என்பவன் கூப்பிட்டால், திடீரென்று சேந்தும் கயிற்றை விட்டு விட்டு ஓடி வர வேண்டுமென்றும், ஒடி வந்தால் மாத்திரம் போதாது கிணற்றில் கயிறும் பாத்திரமும் அந்தரமாய் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அப்படி தொங்கிக் கொண்டிருந்தால் தான் கற்பு உள்ளவள், பதிவிரதை யானவள் என்றும் சொல்வதான கற்பையும் பதிவிரதா தன்மையையும் அடியோடு ஒழித்தாக வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதும், விதவைகளுக்கு அவர்கள் தாய் தகப்பன்மாரோ அல்லது சுற்றத்தார்களோ மறு கல்யாணம் செய்து வைக்காவிட்டால், அவ்விதவைகள் தங்களுக்கு இஷ்டமான கணவரை தெரிந்தெடுத்துக் கொள்ள வேண்டியது என்றும், புருஷனுடன் வாழும் மற்ற பெண்களும் இதற்கு உதவி செய்து விதவைகளை கணவனுடன் வாழச் செய்ய அனுகூலமாகயிருக்க வேண்டும் என்றும் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அது மாத்திரமன்றி, குறுகிய நோக்கங்கொண்டோ அல்லது விஷம புத்தி கொண்டோ, “பெண்கள் எப்படி வேண்டுமானாலும் ஒழுக்க ஈனமாய் நடந்து கொள்ளலாமா” என்று கேட்பவர்களுக்கும் சமாதானமாக, அதாவது “கணவன் மனைவி என்பதாக இருவர் சேர்ந்து இல்வாழ்க்கை நடத்துவதற்காக செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பலனாகவோ காதலன், காதலி என்கின்ற முறையில் இருவர்களின் காதல் இன்பத்தின் பயனாகவோ இருவரையும் சம நிபந்தனை கொண்ட கற்பு என்னும் சங்கிலி எவ்வளவு இருக்கக் கட்டினாலும் அது எவ்விதத்திலும் பெண்கள் விடுதலைக்கு இடையூறாக இருக்காது” என்று சொல்லியிருப்பதும் மிகவும் குறிப்பிடத்தக்கது.

மற்றபடி, விதவைகள் என்னும் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள் விஷயத்திலும் “அவர்கள் தங்கள் துக்க நிவர்த்திக்கு இனி பெற்றோர்களையோ உறவினர்களையோ எதிர்பாராமல் தாங்களாகவே தக்க கணவனை தெரிந்தெடுத்து வெளிப்படுத்தி விட வேண்டியதுதான்” என்று குறிப்பிட்டதும், மற்றப்படி “புருஷனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களும் விதவைகளின் மேற்கண்ட முயற்சிக்கு உதவி செய்ய வேண்டியது” என்றும் குறிப்பிட்டிருப்பதும் குறிப்பிடத் தக்கதேயாகும்.

மற்றபடி ஜாதி வித்தியாசம், தீண்டாமை, மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவைகளை ஒழித்தலைப் பற்றியும், கல்வியைப் பற்றியும் குறிப்பிடப்பட்டிருப்பவைகளும் ஊன்றிக் கவனிக்கத்தக்கவைகளாகும்.

மகாநாட்டிலும் அக்கிராசனரின் உபன்யாசத்திற் கண்டபடியே சில தீர்மானங்களேயானாலும் மிக முக்கியமான தீர்மானங்களாகவே தீர்மானிக்கப்பட்டிருப்பதானது குறிப்பிடத்தக்கது.

அதாவது, பெண்கள் சுதந்திரத்திற்குப் பெரிதும் இப்போது இடையூறாயிருப்பது அவர்களுக்கு சொத்துரிமை இல்லாமையால்தான் என்பதை உணர்ந்து இனிமேல் குடும்பச் சொத்தில் பெண்களுக்கு சம உரிமையும், விதவைகள் விதவைத் தன்மையுடன் இருந்து கொண்டு கஷ்டப்பட வேண்டியதற்கு காரணமாயிருப்பது அவர்களுக்கு புருஷன் இறந்தவுடன் மற்றவர்களிடம் ஜீவனாம்சத்திற்கு தொங்கிக் கொண்டிருக்க வேண்டியிருப்பதால்தான் என்பதை உணர்ந்து அது மாறும்படி புருஷன் சொத்து பாத்தியம் முழுவதும் சர்வ சுதந்திரத்துடன் விதவைகளுக்கு அளிக்கப்பட்டு விட வேண்டும் என்றும் தீர்மானித்திருப்பதானது சரியான பரிகாரமாகும்.

மற்றும் தீண்டாதார்கள் என்பவர்கள் கல்வி இல்லாத காரணத்தால் முன்னேற முடியாமல் இருப்பதால், அவர்களுக்கு சாப்பாடு போட்டு கட்டாயக் கல்வி கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்திருப்பதும், மூடப்பழக்கவழக்கங்களை ஒழிப்பதற்காக பள்ளிக் கூடங்களில் குருட்டு பக்தி மூட நம்பிக்கைகளுக்கு இடந்தரும்படியான கல்வி கற்பிக்கக் கூடாது என்றும், மூடநம்பிக்கையும் குருட்டுப் பக்தியும் உள்ள உபாத்தியாயர்களை பள்ளிக் கூடங்களில் பிள்ளைகளை படிப்பிக்க சேர்க்கக்கூடாது என்றும், உபாத்தியாயர்களைத் தயார் செய்யும் பள்ளிக் கூடங்களிலும் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக் கூடங்களிலும் மூட நம்பிக்கையும் குருட்டு பக்தியும் உண்டாக்கத்தக்க எந்த புஸ்தகங்களையும் பாடபுஸ்தகமாக வைக்கக் கூடாதென்றும் தீர்மானிக்கப்பட்டிருப்பதும், மற்றும் சில தீர்மானங்களும், முக்கியமாக மதத்தின் பேரால் பெண்களுக்கு பொட்டுக்கட்டி விபசாரத்திற்கு விடும் வழக்கத்தை ஒழிக்கச் சட்டம் செய்ய வேண்டும் என்று ஸ்ரீமதி டாக்டர் வோகளி ஆர்யா அவர்களால் பிரேரேபிக்கப்பட்டு ஸ்ரீமதி அலமேலு மங்கைத் தாயாரவர்களால் ஆமோதிக்கப்பட்டு ஏகமனதாய் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் குறிப்பிடத்தக்கவை.

எனவே இவ்வளவு முக்கிய தீர்மானம் செய்ததில் மகாநாட்டு பிரதிநிதிகள் காட்டிய ஆரவாரத்திற்கும் ஊக்கத்திற்கும் அளவே இல்லை. மகாநாட்டிற்கு விஜயம் செய்து தீர்மானங்களில் கலந்து கொண்ட பெரியோர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் அரசாங்க இலாகா இப்போதைய மந்திரிகளும், மாஜி மந்திரிகளும், இனி வரப் போகும் மந்திரிகளும், சட்டசபை பிரதிநிதிகளும், பல ஸ்தல ஸ்தாபனத் தலைவர்களும், அரசாங்க உத்தியோகஸ்தர்களும், மதச் சம்மந்தமான ஆராய்ச்சியுள்ளவர்களும், சீர்திருத்தத்தில் பெரிதும் கவலை கொண்டவர்களும், தக்க கல்வியும் அறிவும் உள்ள பெண்மணிகளும், பண்டிதர்களும், வாலிபர்களும், முதியோர்களும் ஆகிய பலதிறப்பட்ட தக்க பிரதிநிதிகளேயாவர்கள். அவர்களில் வெளியூர்களிலிருந்தும் அனேகர் வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஆனாலும் மேல்கண்ட மகாநாட்டை திறம்படவும் சிறப்புடனும் நடத்திய பெருமை மிகுதியும் திரு சுரேந்திரநாத் ஆரியா அவர்களையும், ராவ்பகதூர் எம். கே. ரெட்டி அவர்களையும் சேர்ந்தது என்றே சொல்லுவோம். இதுவரை சீர்திருத்த சம்மந்தமாக எத்தனையோ மகாநாடுகள் நடந்திருந்தாலும் இது போன்ற பிரதிநிதித்துவமும் பலன் தரத்தக்க தீர்மானங்களும் கொண்ட மகாநாடு மிகச் சுருக்கமாகத் தானிருக்கும்.

நிற்க தீர்மானங்கள் எவ்வளவோ முன்னேற்றமுடையதானாலும் அவைகளை நிறைவேற்றி வைப்பதில் அரசாங்க சம்மந்தமான சட்ட உதவிகளும் தேவையிருப்பதால், பொது ஜனப் பிரதிநிதிகளைத் தெரிந்தெடுப்பதில் பொது ஜனங்கள் மேல்கண்ட அபிப்பிராயமுடைய கனவான்களையே சட்டசபை லோக்கல் போர்டு முதலிய ஸ்தாபனங்களில் போய்ச் சேரும்படி பார்க்க வேண்டியதே முக்கிய கடமையாகும் என்பதைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை.

(குடி அரசு - தலையங்கம் - 02.12.1928)

Pin It