விருத்தாஜலம் தாலூகா பெண்ணாடம் போர்டு எலிமெண்டரி பாடசாலையில் ஒரு பார்ப்பன தலைமை உபாத்தியாயர் இருப்பதாயும் அப் பள்ளி கூடத்தில் வாசிக்கும் ஆதிதிராவிட பிள்ளைகளை மேற்படியார் அதிகக் கொடுமையாகவும், கொஞ்சமும் இரக்கமின்றியும் நடத்துவதாகவும் பலர் நமக்கு செய்திகளனுப்பி பத்திரிகையில் வெளியிடும்படி வேண்டினர்.
இவ்விஷயத்தை மேற்படி போர்டு அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்திப் பின்னர் தக்கது செய்யலாமென்ற முடிவின் பேரில் அவ்வாறே போர்டு அதிகாரிகளுக்கு நிலைமையை விளக்கி எழுதியிருந்தோம்.
அவர்களிடமிருந்து வந்த பதிலில் முன்னமே ஒரு தரம் அது சம்மந்தமாய் கவனித்திருப்பதாயும் மீண்டும் அதை விசாரித்து உண்மையறிந்து தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்வதாயும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி பாடசாலையில் உண்மையாய் நடப்பவை என்ன? ஆதி திராவிடப் பிள்ளைகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள், எவ்வளவு காலமாக இவ்விதம் நடைபெறுகிறது, அது சம்மந்தமாக மேலதிகாரிகள் எவ்விதம் கவனித்து என்ன பரிகாரம் செய்திருக்கிறார்கள் என்ற முழு விபரத்தையும் நமக்கு எழுதியனுப்பும்படி அவ்வூர் அன்பர்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.09.1930)