periyar and vaaliஸ்ரீமதி டாக்டர் மார்த்தா வோகளி ஆரியா

வீரர் திரு. ஆரியா அவர்களின் வாழ்க்கைத் துணை நல்லார் (பாரியை) ஆகிய ஸ்ரீமதி டாக்டர் மார்த்தா வோகளி ஆரியா ஆ.ஹ.க்ஷ.னு.,ஆ.னு சர்ஜன் அன் பிசிஷன் அவர்கள் குழந்தை வைத்திய விஷயத்திலும் ஸ்தீரிகள் வைத்திய விஷயத்திலும் சிறப்பாக மருத்துவ விஷயத்திலும் தேர்ச்சி பெற மேல்நாடு சென்று ஜெர்மனி முதலிய இடங்களில் உள்ள உயர்தர வைத்திய காலேஜுகளில் படித்து டாக்டர் பட்டம் பெற்று இந்தியாவுக்கு இரண்டு மாதத்திற்கு முன் வந்திருக்கிறார்கள். அவர்கள் இது சமயம் அரசாங்க உத்தியோகம் பெற சம்மதிப்பார்களானால் தக்க பதவியும் உத்தியோகமும் கிடைக்கக் கூடுமானாலும் தேசத்திற்கும் ஏழை மக்களுக்கும் தொண்டு செய்ய வேண்டுமென்கின்ற அவாவின் பேரில் தனியே சொந்தத்தில் ஒரு வைத்திய சாலை ஏற்படுத்தி இருப்பதுடன், யாவருக்கும் வைத்திய உதவி செய்யவும் தயாராயிருக்கின்றார்கள். இப்பேர்ப்பட்ட தயாள குணமும் தாராள நோக்கமும் உள்ள அம்மையார் அவர்களை நாம் மனமார பாராட்டுவதுடன் அவர்கள் எடுத்த காரியம் சித்தி பெற்று யாவருக்கும் பயன்பட வேண்டுமென்று மனதார ஆசைப்படுகிறோம்.

(குடி அரசு - செய்திக்குறிப்பு - 16.09.1928)

திரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்

திரு. செட்டியார் அவர்களைக் குறித்து நான் விரிவாக ஒன்றும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவரை நீங்கள் என்னைவிட நன்கறிவீர்களென்றே நினைக்கிறேன். திரு. செட்டியார் பேசியதை மறந்து அதற்கு விரோதமாக நடப்பவரல்லர் (நகைப்பு). பள்ளிக் கூடத்தில் சிறுவர்களுக்கு சூரியனை பூமி சுற்றுகின்றது. அதனால் இரவும் பகலும் வருகின்றது என்று பல சாஸ்திரீயமான விஷயங்களைப் போதித்து விட்டு வீட்டுக்குச் சென்றதும் மறுநாள் ஆசிரியர் கிரகணம் என்று நூறுதரம் தலைமுழுகி தர்ப்பைப் புல்லால் தர்ப்பணம் செய்வதும் இதற்குப் பொருத்தமான உதாரணமாகும். (நகைப்பு).

மகாத்மா காந்தி வந்து திரு. செட்டியார் வீட்டில் தங்கியிருந்தபோது அவர் காந்தியிடம் நம் நாட்டிலிருந்து மதசம்பந்தமான மூடப் பழக்கங்கள் என்று ஒழிகின்றதோ அன்றுதான் விடுதலையுண்டாகுமென்று தைரியமாய்க் கூறினார்.

நம்நாட்டு மூட பழக்க வழக்கங்களைத் தைரியமாகக் கண்டித்து, மேனாட்டு மேலான கொள்கைகளைச் சிலாகித்து, நேர்மையாக எங்கு வேண்டுமானாலும் பேசுவதற்கும் குற்றங்களைக் கண்டிப்பதற்கும் அவர் ஒரு போதும் பின் வாங்கியதில்லை. கும்பகோணத்தில் கூடிய நாடார் வகுப்பார் மகாநாட்டில் அவருக்கு வாணிபச் செட்டிமார்கள் வாசித்துக் கொடுத்த பத்திரத்திற்குப் பதிலளிக்கும்போது அவர் பிறர் தம்மைக் குறித்து என்ன சொல்லுவார்கள் என்பதைக் கவனியாது தைரியத்துடன் அவ் வகுப்பாரிடத்துள்ள குறைகளையும் மூட நம்பிக்கைகளையும் வெளியிட்டுத் திருத்த முயன்றது பாராட்டத் தக்கதேயாம்.

சமீபத்தில் திரு, செட்டியார் இந்தியா சட்டசபையில் பெண்களுக்கும் சொத்துரிமை அளிக்கப்பட வேண்டுவதையும் மற்ற வித்தியாசங்களை ஒழிக்க வேண்டிய அவசியத்தையும் வற்புறுத்தத் தீர்மானமொன்று கொண்டுவர உத்தேசித்திருப்பதாகக் கூறினார். அக் கமிட்டியில் திரு. செட்டியார் அவர்களும் ஒருவராயிருக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டபோது அவர் அதற்கு ஒப்புக் கொண்டு தம்மாலான வகையிலெல்லாம் அவ்வியக்கத்திற்கு உதவியளிப்பதாக வாக்களித்தார். திரு. செட்டியார் தம்மைக் குறித்து பிறர் என்ன சொல்லிக் கொள்ளுகின்றார்கள் என்பதைப் பொருட்படுத்தாது தம் மனசாட்சியின்படி நடப்பவர் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய மாசற்ற மனத்துடன் அறிவாற்றலும் பொருந்தியவர்களுள் நம் நாட்டிலிருக்கும் பெரியார்களில் திரு. செட்டியார் முக்கியமானவர். நீங்கள் அவர் அந்நாட்டிலும் இந்நாட்டிலும் செய்துள்ள வேலைகளைப் புகழ்ந்து பாராட்டுவதை விட அவருடைய அபிப்பிராயத்தை அறிந்து அதனைப் பின்பற்ற முயல்வதுதான் உசிதமாகும். இன்று திரு. செட்டியாரைக் குறித்து சில வார்த்தைகள் சொல்ல இக்கூட்டத்தில் எனக்கு சந்தர்ப்பமளித்ததற்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தாருக்கு என் நன்றியறிதலையும் சந்தோஷத்தையும் தெரிவித்துக் கொள்கறேன்.

(குறிப்பு: 06.09.1928 ஆம் நாள் சென்னை டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் பச்சையப்பன் மண்டபத்தில் திரு.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களுக்கு உபசாரப் பத்திரம் வழங்கிய நிகழ்வில் சொற்பொழிவு.

குடி அரசு - சொற்பொழிவு - 16.09.1928)

Pin It