காங்கிரஸ் என்பது ஒரு பெரிய தேசத் துரோகமான சபை என்றும், அது பார்ப்பனர்களும் படித்தவர்களுமான சிலர் தேசத்தைக் காட்டிக் கொடுத்து பிழைப்பதற்காக ஏற்படுத்திக் கொண்ட சபை என்றும், நாட்டில் எத்தனைக்கெத்தனை காங்கிரசுக்கு செல்வாக்கிருக்கிறதோ அத்தனைக்கத்தனை தேசத்துக்கும் குறிப்பாய் பார்ப்பனரல்லாதாருக்கும், ஏழை மக்களுக்கும் துரோகமும் கஷ்டமும் ஆபத்துமே அதிகரிக்குமென்றும், எவ்வளவோ ஆதாரங்களுடன் முழு மூடர்களுக்கும் புரியும்படியாக புள்ளி விபரங்களுடனும் உண்மை சம்பவங்களுடனும் எழுதியும் பேசியும் வந்திருக்கிறோம். இது இன்று நேற்றல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஆதார மூலமாய் அறிய வேண்டுமென்கிற ஆவலுள்ளவர்களுக்கு ஒரு விஷயத்தை ஞாபகமூட்டுகிறோம். சுமார் நான்கு வருஷங்களுக்கு முன்பாக சென்னை மைலாப்பூர் மந்தைத் தெருவில் நாம் ஒரு பிரசங்கம் செய்ததற்காக சர்க்கார் ராஜ துவேஷத்திற்காகவும், வகுப்புத் துவேஷத்திற்காகவும் நம்மீது நடவடிக்கை எடுத்துக் கொண்டது நேயர்களுக்கு நினைவிருக்கலாம். அந்தப் பிரசங்கத்திலேயே இந்த விஷயமாய் யோசிப்பது ஆதாரத்தில் இருக்கிறது. ஆதாரத்தில் இன்றும் இருக்கிறது. ஆனாலும் நமது நாட்டில் வெகு பேருக்கு இது சமயம் காங்கிரசே நிவர்த்திக்கும் உத்தியோகத்திற்கும், பிழைப்புக்கும் ஆஸ்பதமான ஸ்தாபனமாய் விட்டதால் இந்தக் கூட்டத்தாருக்கு புத்தி வரும்படி செய்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவது பெருத்த கஷ்டமான காரியமாயிருந்து வருகிறது.

periyar 450நம் நாட்டு பத்திரிகைகளும், பெரும்பாலும் வேறு தொழிலில் பிழைப்பதை மிக கஷ்டமாய் கருதுபவர்களாலேயே நடத்த ஏற்பட்டுப் போய் விட்டதால் தேசத்தையாவது பாமர மக்களையாவது சத்தியத்தையாவது தங்களது மனதில் தோன்றும் உண்மையையாவது ஒரு சிறிதும் கவனிக்காமலும் இம்மாதிரியான தங்கள் தொழிலுக்கு வெட்கப்படாமலும் ஒருவரைப் பார்த்து ஒருவர் அவருக்கில்லாத வெட்கம் நமக்கு ஏன் என்பதாக ஆடுகள் போல ஒரே அடியாய் எல்லாம் தலை குனிந்து கொண்டு ஒன்றன் பின் ஒன்றாய் ‘காங்கிரஸ்’ ‘சுயராஜ்யம்’, ‘தேசீயம்’, ‘உரிமை’, ‘விடுதலை’ என்கிற பெயர்களை வைத்துக் கொண்டு நாட்டைப் பாழ்படுத்தி வாழ்ந்து வருகின்றன.

 ராஜாங்கம் என்பதும் இந்த மாதிரி ‘தேசீய’வாதிகளினுடையவும், அரசியல்காரர்களினுடையவும், பத்திரிகைகாரர்களினுடையவும், நாணயத்திற்கும், யோக்கியதைக்கும் ஒரு சிறிதும் குறைந்ததல்ல. ஆனதால் ஏறக்குறைய இருகூட்டத்தாரும் அந்தரங்கத்தில் ஒன்று சேர்ந்தே இக்கொடுமைகளைச் செய்து வருகிறார்கள் என்று சொல்லத்தக்க மாதிரியே நடந்து வருகிறார்கள் . இந்தக் கொடுமையிலிருந்து மக்களை தப்புவிக்கலாமென்று யாராவது வேலை செய்து, அது ஏதாவது சிறிது பலன் தரக்கூடிய நிலைமைக்கு வந்து விட்டால் அதையும் ஒழிப்பதற்கு அதன் விரோதிகளான முன் சொல்லப்பட்டவர்கள் ஏதாவது ஒரு தந்திரம் செய்து மக்களை ஏமாற்றி விடுகிறார்கள் . இந்த மாதிரி தந்திரத்தின் ஒரு பகுதிதான் இப்போது மகாத்மாவை கூட்டி வந்து, “எல்லோரும் காங்கிரசில் சேருங்கள் . காங்கிரசில் சேருங்கள்” என்று சொல்லச் செய்ததான பார்ப்பன பிரசாரமும் என்பதே நமது அபிப் ராயம். இந்த காங்கிரசில் உள்ள ‘தலைவர்கள்’ ‘தேசாபிமானிகள்’ என்பவர்களைப்பற்றி எழுதுவதென்பது கொஞ்ச இடத்தில் அடங்கக்கூடிய காரியமல்ல. அன்றியும் இந்த வியாசம் அதற்காக எழுதத் தொடங்கினதுமல்ல. ஆதலால் ஒரே ஒரு முக்கிய தலைவரின் பெயரையும், கொடி வழியையும் சொல்லி விட்டால் மற்றத் தலைவர்களைப் பற்றி அவரவர்களே ஞாபகப்படுத்திப் பார்த்துக் கொள்ளலாம்.

அதாவது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி என்பவர் இதுசமயம், சட்டசபை, காங்கிரஸ், சுயராஜ்யக்கக்ஷி முதலியவைகளில் முக்கியஸ்தராயிருப்பதுடன் “நாட்டின் அபிப்ராயத்திற்கு”ம் பிரதிநிதியானவர். கவர்னர், வைசிராய், மகாத்மா காந்தி முதலிய பிரபுக்களிடம் நமக்காகப் பேசுபவர். நாளைக்கு நமக்கு என்ன வேண்டும் என்பதற்கும் திட்டம் போடுபவர்.

நிற்க, இந்த மாதிரியான பெரிய பொறுப்பு வாய்ந்த இந்த நமது ‘தலைவருக்கு’சாப்பாட்டிற்கு கொடுத்துக் கொண்டுவருபவர் யார்? அவர் யோக்கியதை என்ன? இவர்களை தலைவர்களாக்குகிற பத்திரிகைகள் எவை? அவைகளின் யோக்கிய பொறுப்பு எவ்வளவு? இவைகளை எல்லாம் நாட்டு மக்களிடம் அறிமுகப்படுத்தி பின்பற்றுவோர்களையும் சம்பாதித்துக் கொடுக்கும் ஆசாமிகள் யார்? அவர்கள் யோக்கியதை என்ன? அவர்களுக்கு மாதச் சம்பளம், மொத்தக் கூலி எவ்வளவு? கொடுப்பவர் யார்? அவர் யோக்கியதை என்ன? இவைகள் எல்லாம் மகாத்மாவுக்கு தெரியுமா? ஏதாவது சில தெரிந்திருந்தாலும் அவற்றை வெளியிலெடுத்துச் சொல்லவோ, நடவடிக்கைகளில் காட்டவோ, மகாத்மாவுக்கு தைரியம் உண்டா? இந்த மாதிரியான கூட்டத்தாரைத் தவிர வேறு யாருக்காவது மகாத்மாவை அறிமுகப்படுத்தக்கூடிய நிலைமை ஏற்பட முடிந்ததா? என்பதான விஷயங்களை ஒரு மனிதன் நடுநிலைமையில் இருந்து யோசித்துப் பார்ப்பானானால் நாட்டுக்கு ஏற்பட்ட கஷ்டகாலத்தை உணர முடியாமல் போக நியாயமில்லை.

தவிர, இந்த மாதிரியான காங்கிரசையும் அரசியலையும் ஏற்றுக் கொள்ளாதவர்களை (பார்ப்பனரல்லாத கக்ஷியாரை) நமது நாட்டில் இந்த காங்கிரஸ் கூட்டத்தார் (பெரும்பாலும் பிராமணர்கள்) தேசத் துரோகிகள் என்றும், ஏழைமக்களின் விரோதிகள் என்றும், சுயராஜ்ய விரோதிகள் என்றும், பேசினதும், எழுதினதும் பிரசாரம் செய்ததும், இனியும் செய்து கொண்டிருப்பதும் யாரும் அறியாததல்ல. இம் மாதிரியான கூட்டத்திலும் நமது நாட்டு பெரும்பான்மை மக்களான பார்ப்பனரல்லாதார் சிலரும் சேர்ந்து கொண்டு கூத்தாடியதும் யாவரும் அறிந்ததே. அக்கூட்டத்தில் ஒருவரான ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப்பு அவர்களின் விஷயமாகவே இந்த வியாசம் எழுத முன்வந்தோம்.

அதாவது ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப்பு அவர்கள், நமது நாட்டு பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு விரோதமாய் பார்ப்பனர்களால் சென்னை மாகாண சங்கம் என்பதாக பத்து வருஷங்களுக்கு முன் ஒரு சங்கம் ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் தனது பெயரை பார்ப்பனர்களுக்கு கொடுத்தவர். அன்றியும் இவர் மாத்திரமல்லாமல் இவரோடு கூடவே ஸ்ரீமான்கள் வரதராஜுலுநாயுடு, கலியாணசுந்திர முதலியார், சர்க்கரை செட்டியார், ஆரியா, தண்டபாணி பிள்ளை முதலிய மற்றும் சில கனவான்களும் இக்கூட்டத்தில் சேர்ந்தவர்கள். இவர்களில் ஸ்ரீமான் ஜோசப்பு தவிர ஏறக்குறைய மற்றெல்லோரும் பார்ப்பனர்களின் சூழ்ச்சியையும் தங்களது அறியாமையையும் உணர்ந்து ஒவ்வொருவராக பார்ப்பனர்களைவிட்டு வெளிவந்து பார்ப்பனர்களின் யோக்கியதையையும் வெளியாக்கி விட்டார்கள் . சிலர் மறுபடியும் மறுபடியும் அங்கொரு கால் இங்கொரு காலுமாகவும் இருக்க வேண்டி இருந்தாலும் உண்மையை அறிந்து கொண்டதாகவும் தங்கள் குற்றத்தை உணர்ந்து கொண்டதாகவும் தாராளமாய் வெளிப்படுத்தி விட்டார்கள் . எனினும் சிலர் இம்மாதிரி அங்கொருகாலும், இங்கொரு காலுமாய் இல்லாமல் வாழ முடியாத நிலைமையில் தங்களது வாழ்க்கையை சிக்க வைத்துக் கொண்டார்களானதால் அதிகமான கெடுதி அவர்களால் ஏற்படாதிருக்கும் வரையில் இடம் கொடுத்துக் கொண்டு வர வேண்டியதுதான் என்பதே நமது அபிப்பிராயம்.

ஆனால் ஸ்ரீமான் ஜோசப்புக்கு மாத்திரம் பார்ப்பனர்களின் யோக்கியதை தெரிந்திருந்தாலும் தன்னால் பார்ப்பனர்களை ஏமாற்ற முடியாது என்ப தையும், தன்னை விட பார்ப்பனர்கள் கெட்டிக்காரர்கள் என்பதையும் அறிந்து கொள்ள இதுவரை சந்தர்ப்பமே கிடைக்காமல் போய்விட்டது.

நல்ல வேளையாய் இப்போது அவருக்கு கிடைத்துவிட்டது. அவர் அசோஸியேட்டட் பிரஸ் இடம் சொன்னதாவது:-

“காங்கிரஸ்காரர் என்று சொல்லிக்கொண்டு காங்கிரசிடம் விசுவாசம் காட்டாதவர்களும் எனக்கு நேர் விரோதமாய் வேலை செய்தவர்களும் பார்ப்பனர்கள் தான்.

மதுரைப் பார்ப்பனர்கள் தாங்கள் வகுப்புவாதிகளல்ல என்று சொல்லுவது சரியல்ல.

காங்கிரஸ் கமிட்டியார் ஒரு பார்ப்பனரைத் தள்ளிவிட்டு என்னை தெரிந்தெடுத்ததால் காங்கிரஸ் பார்ப்பனர் எனக்கு ஓட்டு செய்யவில்லை”

இந்த மூன்று வாக்கியங்களிலிருந்தே அவரது அபிப்பிராயம் என்ன என்பது வெளிப்படை. அதாவது பார்ப்பனர்கள் காங்கிரசிடம் பக்தி இருப்பதாய் காட்டிக் கொள்வதெல்லாம் மோசடி என்றும், பார்ப்பனர்கள் தங்கள் சுயநல வகுப்புவாதிகள் என்றும் பார்ப்பனர்களுக்கு ஓட்டு கிடைப்பதற்காகத்தான் காங்கிரசை உபயோகப்படுத்திக் கொள்ளுகிறதே தவிர வேறு காரியத்திற்கல்ல என்றும் தாராளமாய் அபிப்பிராயப்பட்டு இருக்கிறார் என்பதுதான்.

ஆனால் இதோடாவது பார்ப்பனர்களை விட்டு விலகுவார் என்று பார்த்தால் ஒருக்காலும் விலக மாட்டாரென்றே சொல்லுவோம். ஏனென்றால் இதற்கு சமாதானமாக வேறு ஏதாவது தனக்கு செய்து வைப்பார்களா இல்லையா? என்று கொஞ்சம் தாமதித்துப் பார்ப்பார் போல் தோன்றுகிறது. எப்படி என்றால் தான் இனி என்ன செய்யப் போகிறார் என்கிற முடிவு சொல்ல இன்னும் கொஞ்சம் சமயம் வேண்டுமாம்.

“நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை” என்பதாக ஒரு பழமொழியுண்டு. அதுபோல் ஸ்ரீமான் ஜோசப்பு அவர்களுக்கு யோக்கியமான முறையில் இரண்டு வழிதான் உண்டு. ஒன்று வகுப்புவாதிகளையே விட்டு விலகவேண்டும். அந்தப்படி வகுப்புவாதிகளை விட்டு விலக முடியாவிட்டால் உலகத்திலுள்ள எல்லா வகுப்புக்காரர்கள் கண்களிலும் மிளகாய் தூளை தூவி விட்டு தங்கள் வகுப்பாரே வாழ வேண்டும் என்கிற - தான் கண்டுபிடித்த - பார்ப்பன வகுப்புவாதிகளை விட்டு விட்டு எல்லா வகுப்புக்காரர்களும் வாழ வேண்டும். ஒரே வகுப்பாரே ஏகபோகமாய் வாழக் கூடாது என்கிற கூட்டத்தாருடன் சேர வேண்டும். அப்படிக்குமில்லாமல் இப்படிக்குமில்லாமல், இனியும் பார்க்கலாம், இனியும் பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனர் தின்ற மீதி எச்சைக்கு காத்துக் கொண்டிருப்பது மனிதத் தன்மை ஆகாது என்பதே நமது அபிப்பிராயம்.

ஆனால் ஸ்ரீமான் ஜோசப்பு அவர்கள் அப்படிச் செய்ய மாட்டார் என்றே நினைக்கிறோம். ஏனென்றால் ஸ்ரீமான் ஜோசப்பு போன்ற மனப்பான்மையுடையவர்களுக்கு நமது நாட்டில் பார்ப்பனர்களைத் தவிர வேறு புகலிடம் கிடையாது. பார்ப்பனரல்லாதார் கூட்டத்திற்கு வந்தால் இவருக்கு திடீரென்று ஒரு நன்மையும் ஏற்பட்டுவிட முடியாது. இவருக்கு முன்னால் எத்தனையோ பேர்கள் வெகு நாளாய் காத்துக் கொண்டிருக்கிறார்கள் . அவர்களுக்கெல்லாம் வந்த பிறகுதான் இவருடைய பங்குக்கு சமயம் வரும். ஆதலால் ஸ்ரீமான் ஷண்முகம் செட்டியாரைப் போல் மன்னிப்பு கேட்டுக் கொண்டோ அல்லது மற்றவர்களைப் போல் தாங்கள் பேசியவைகளை மறுத்துவிட்டோ அல்லது வேறு வியாக்கியானம் செய்தோ மறுபடியும் பார்ப்பனர்கள் காலில் நுழைந்துதான் தீரவேண்டும்.

எனவே ஸ்ரீமான் ஜோசப்பவர்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தால் மனிதத் தன்மைக்கோ சுயமரியாதைக்கோ ஒரு வித லாபமும் ஏற்பட்டு விடாது என்பதே நமது அபிப்ராயம்.

(குடி அரசு - கட்டுரை - 11.09.1927)

Pin It