சகோதரர்களே!

periyar 404இங்கு கூடியிருக்கும் உங்களில் பெரும்பாலோர் எனக்குப் பழைய நண்பர்களாகவே காணப்படுகின்றீர்கள். வியாபார முறையில் இந்த ஊர் சுமார் 30 வருஷத்திய பழக்கமும் அதிகமான பரஸ்பர விஸ்வாசமும் உள்ள ஊராகும். நான் வியாபாரம் நிறுத்திய இந்த 10 வருஷ காலத்திற்குள்ளும் இந்த ஊருக்கு பல தடவை வந்து பல விஷயங்களைப் பற்றிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கின்றேன். ஒத்துழையாமை பற்றியும் தீண்டாமை விலக்கு விஷயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை தெருவில் நடக்க விட வேண்டும் என்பது பற்றியும் இதே இடத்தில் பல தடவை பேசியிருப்பது உங்களுக்கு ஞாபகமிருக்கும்.

சுமார் இரண்டு வருஷத்திற்குள்ளாக இந்த ஊரில் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. கல்பாத்தியில் பார்ப்பனர்கள் குடி இருக்கும் வீதிகளில் ஈழவர்கள் தீயர்கள் என்று சொல்லப்பட்ட சகோதரர்கள் நடக்க பாத்தியம் ஏற்பட்டிருப்பதும் கடைவீதியில் செரமாக்கள் என்னும் மக்கள் நடக்கவிடப்பட்டிருப்பதும் ஒரு பெரிய மாறுதல் என்று சொல்லக் கூடுமானாலும் இன்னமும் அநேகக் காரியங்கள் செய்யப்பட வேண்டியிருக்கின்றன. சில இடங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பார் என்று சொல்லப்படுபவர்களே அத்தெரு வழிகளில் நடக்க சம்மதிப்பதில்லை என்று சொல்லப்படுகின்றது. ஏன் என்றால் அவர்கள் நடக்க பயப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. அவர்களுக்கு தைரியமூட்டி பயத்தை தெளிவிக்கச் செய்ய வேண்டிய பொறுப்பு நம்முடையதென்பதை நாம் உணருவதில்லை.

இன்று நான் பேசுவதற்கு குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயம் தற்கால தேசீய நிலைமை என்பதாகும். தேசீய நிலைமை என்பதற்கு நமது தேசத்தினுடையவும் தேச மக்களுடையவும் நிலைமையைப் பற்றியும் அக்கம் பக்கமுள்ள தேசங்களின் நிலைமைக்கும் நமது தேசத்தின் நிலைமைக்கும் என்ன வித்தியாசம் என்பது பற்றியும் அதற்கு காரணங்கள் என்ன என்பது பற்றியுமே நான் பேச வேண்டும் என்று நீங்கள் கருதுவதாக நான் நினைக்கின்றேன்.

சகோதரர்களே! ஒவ்வொரு நாடும் இது சமயம் தனது பழைய நிலைமையில் இருந்து விடுபட்டு புதிய முறையில் முன்னேற வேண்டும் என்கின்ற ஆசை கொண்டு அதிலேயே ஈடுபட்டிருக்கின்றன. இவ்வழியில் சில நாடுகள் கொஞ்ச நாளைக்கு முன்பே இறங்கி வெற்றி பெற்று பழமையைச் சற்றும் லக்ஷியம் செய்யாமலும் வெறுத்தும் அழித்தும் புதுமைகளில் இறங்கி எவ்வளவோ முற்போக்கடைந்துவிட்டன. சில நாடுகள் பழமையை அழிக்கும் வேலையில் இப்போதுதான் இறங்கி அதிலேயே வெகு கஷ்டத்துடன் ஈடுபட்டு வேலை செய்வதன் மூலம் வெற்றியடைந்தும் வருகின்றன. ஆனால் நமது நாடோ பழமையிலிருந்து ஒரு சிறிது கூட மாற்றமடையக்கூடாது என்னும் குரங்கு பிடிவாதத்தில் இறங்கி பழமையைக் காப்பாற்றப் பாடுபடுவதோடு அதற்கும் முந்தின பழமையை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கி வெகு தீவிரமாய் வேலை செய்கின்றது.

இந்த உபயோகமற்றதும் பிற்போக்கானதுமான காரியத்திற்குச் சிலர் நமது மக்கள் முன் பெரிதும் பொருளற்ற விதத்தில் மதத்தையும் கடவுளையும் கொண்டு வந்து போட்டுக் கொண்டு வெகு பாடுபட்டு குழப்பி வருகின்றார்கள் இவர்கள். பாமர மக்கள் முன்னிலையில் “மதத்திற்காக எதையும் - தியாகம் செய்வேன் உயிரையும் விடுவேன்” என்று வெறும் ஆவேசப் பேச்சு பேசுவதன் மூலமே மக்களின் அறிவைக் கெடுத்து நாட்டின் முற்போக்கை நாசப்படுத்துவதில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

“கடவுளுக்கு ஆபத்து வந்துவிட்டது. ஆஸ்தீக மகாநாடு கூட்டுங்கள்” என்பவர்களும் “தர்மங்களுக்கு ஆபத்து வந்து விட்டது கூட்டுங்கள் வருணாசிரம மகாநாடு” என்பவர்களும் “புராணங்களுக்கும் இதிகாசங்களுக்கும் ஆபத்து வந்துவிட்டது, கூட்டுங்கள் சமய மகாநாடு” என்பவர்களும் இப்போது மிகுதியும் மலிந்து விட்டார்கள். இந்தப்படியே அடிக்கடி மகாநாடுகள் கூட்டித் தீர்மானங்கள் செய்து கொண்டுமிருக்கிறார்கள்.

நாட்டின் நிலையைப் பற்றிய கவலையில்லாத சோம்பேறிகளினுடையவும் சுயநல பண்டிதர்களுடையவும் தொழில் இதுவென்றால் ஆங்கிலம் படித்தவர்களென்னும் ஒரு கூட்டத்தார் மற்றொரு பக்கத்தில் “தேசத்திற்கு இது சமயம் சுயராஜ்ஜியம் மிகவும் அவசியம்” என்று கூப்பாடு போட்டுக் கொண்டு அதற்கேற்றபடி பல ஆள்களை கூலிக்குப் பிடித்து ஏவிவிட்டு தேசம் போச்சுது என்றும் தேசீயம் போச்சுது என்றும் தேசமே பிரதானம் என்றும் கூப்பாடு போடச் செய்து அரசியல் என்றும் காங்கிரசென்றும் தேசீயமென்றும் மகாநாடுகள் கூட்டி பொது மக்கள் பேரால் தீர்மானங்கள் செய்யத் திரிகின்றார்கள்.

ஆனால் இக்கூட்டத்தார் யார் என்று பார்த்தால் தங்கள் குழந்தை குட்டிகளுக்கு வெள்ளைக்காரர்கள் பெயர் வைத்துக் கொண்டும் வெள்ளைக்கார ஆதிக்கத்திற்கு உதவி செய்து பிழைப்பதற்கு தங்கள் பெண்டு பிள்ளைகளைத் தயார் செய்து கொண்டும், வெள்ளைக்காரர் பூட்சு துடைப்பதில் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டும் “வெள்ளைக்காரர்களை விரட்ட வேண்டும்” “வெள்ளையர் ஆட்சியை ஒழிக்க வேண்டும்” என்று கூப்பாடு போடுகின்றவர்கள் ஒரு சிலரும், தொட்டதெற்கெல்லாம் வெள்ளைக்காரர்கள் மீதே பழி போட்டு “வெள்ளைக்கார ஆட்சியிலேயே நமது நாடு அநியாயமாய் பாழாய் விட்டது” என்றும் “என்ன கஷ்டப்பட்டாவது அதை ஒழித்து விட்டால் பிறகு நமக்கு எல்லாம் சரிபட்டுப் போகும்” என்றும் ஆதலால் இன்ன இன்னாருக்கு ஓட்டுக் கொடுங்கள் என்றும் சொல்லிக் கொண்டு உண்மையான காரணத்தை மனதார மறைத்து கூலிக்கு கூப்பாடு போடுகின்றவர்கள் ஒரு சிலரும் ஆவார்கள். எனவே இம்மாதிரியான சூழ்ச்சிகளிலேயே நாட்டின் கவனம் முழுவதையும் ஈடுபடச் செய்து விட்டு அவசியமான காரியத்திற்கு இடையூறுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றதே இது சமயம் நமது நாட்டின் தற்கால தேசநிலைமையாக இருக்கின்றது.

இந்த நிலைமையை அடியோடு மாற்றி மக்களை உண்மையான தேசீய முன்னேற்றத்தில் ஈடுபடச் செய்வதற்கென்றுதான் தேசீய சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இம்மாதிரி கொள்கையில் ஈடுபட்டிருக்கும் இவ்வியக்கம் முன் சொல்லப்பட்ட வேலைகளில் ஈடுபட்டிருக்கும் கூட்டத் தார்களுக்கு பெரிதும் அடியோடு விரோதமாயிருப்பதும் அவர்களால் பழிக்கப்பட்டு திரித்துக் கூறி எதிர்பிரசாரம் செய்யப்படுவதும் உண்மை உணர்ந்தவர்களுக்கும் அறிஞர்களுக்கும் சிறிதும் அதிசயமாகத் தோன்றாது. இப்போது மேற்கண்ட இரண்டு மூன்று கூட்டத்தார்களும் தனித்தனியே புறப்பட்டு ஊர் ஊராய் திரிந்து பிரசாரம் செய்து வருவதை நீங்கள் தினம் பத்திரிகையில் படித்திருக்கலாம்.

வருணாசிரமக்காரர்கள் கூட்டம் கூட்டி அங்கு பேசுவது என்ன என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.

“இந்து மதமே உலகத்தில் சிறந்த மதம், இந்து மதத்திற்கு ஆதாரம் வேதம், வேதத்தின் சாரம் மனுதர்ம சாஸ்திரம், மனுதர்ம சாஸ்திரத்தின் முக்கியம் வருணாசிரம தருமம், வருணாசிரமத்தின் தத்துவம் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், சண்டாளன் ஆகிய பிறப்பில் ஜாதி பிரிக்கும் கொள்கை, ஜாதிக் கொள்கையின் உண்மை பிராமணன் கடவுள் முகத்தில் பிறந்தவன், க்ஷத்திரியனும் வைசியனும் கலியுகத்தில் கிடையாது. சூத்திரன் கடவுள் பாதத்தில் பிறந்தவன். அவன் பிராமணர்களுக்கு அடிமை யாயிருந்து தொண்டு செய்யவே கடவுளால் இழிவான ஸ்தானத்திலிருந்து பிறப்புவிக்கப்பட்டவன். பிராமணனுக்கு அடிமையாயிருந்து தொண்டு செய்து வரவேண்டியவன். அவனது பிறவித் தொழில் தர்மத்தைச் செய்யா விட்டால் சண்டாளனாகின்றான்.

சூத்திரன் படிக்கக் கூடாது; பணம் சேர்க்கக் கூடாது; சுதந்திரமாய் நடக்கக் கூடாது. சூத்திரன் மேற்கண்ட தனது கடமையிலிருந்து விலகியதால் பிராமணனும் தன் கடமையிலிருந்து விலகி சுயநலக்காரனாகவே வேண்டிய தாயிற்று. பெண்களும் விதவைகளும் நாடார்களும் சங்கங்கள் வைத்து சுவ தந்திரியம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் சொல்வதோடு உடன்கட்டையேறும் வழக்கம் ஒழிந்ததைப் பற்றி வருத்தப்படுவதும், “பெண்கள் படிக்கக் கூடாது, விதவைகள் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது, அவர்களுக்குச் சொத்துரிமை இருக்கக்கூடாது. குழந்தை பருவத்தி லேயே கல்யாணம் செய்ய வேண்டும், சூத்திரன் என்ற சொல் மிகவும் பரிசுத்தமானது, சூத்திரன் பிராமணனுக்கு அவசியமானவன்” என்றும்

மற்றும் ஆதலால் “சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க வேண்டும்” என்றும் இது போன்றவைகளையே பேசுகின்றார்கள். இதை அனுசரித்த தீர்மானங்களும் செய்து பொது ஜனங்களுக்கும் சர்க்காருக்கும் அனுப்புகிறார்கள். வருணாசிரமக்காரர்கள் நிலை இப்படியானால், சமயக் காரர்கள் என்பவர்களோ ‘சைவ சமயமே உண்மை மதம். சிவனே முழு முதற்கடவுள். வேத ஆகமமே அதற்கு ஆதாரம் என்பதும்,

புராணக்காரர்களோ “சமயம் போச்சுது” “சமய பெரியாருக்கு ஆபத்து” “சமய நூல்களுக்கு ஆபத்து” “கலைகளுக்கு ஆபத்து” என்பதும் மற்றும் “10 வருஷத்துக்கு முன்னால் அவினாசியில் முதலை விழுங்கிய குழந்தையை முதலை வயிற்றிலேயே வளரச் செய்து 14 வருஷ வாலிபனாய் அந்த முதலை வாயிலிருந்தே கக்கும்படி செய்த 3-வயதுள்ள பெரியோர் களையும், எலும்பை பெண்ணாக்கிய 4-வயதுள்ள பெரியோர்களையும் ஒரு பாட்டில் ஊமைப் பெண்ணை பேச வைத்த 5- வயதுள்ள பெரியோர் களையும், பனை ஓலை நறுக்கை பிரவாக வெள்ளத்தில் எதிர்நீந்திப் போகும் படி செய்த 6-வயதுள்ள பெரியோர்களையும், எண்ணாயிரம் சமணர்களை வாதத்தில் தோல்வியுறச் செய்து கழுவேற்றக் காரணமாயிருந்து சைவத்தை காப்பாற்றிய ஜீவகாருண்ணிய சீலர்களாகிய சைவ பெரியோர்களையும் குற்றம் சொல்கின்றார்களே! இவைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக் கலாமா” வென்றும் “ஆதலால் சுயமரியாதை இயக்கத்தை அழிக்க வேண்டும்” என்றும்,

“60 ஆயிரத்து மூன்று பெண்டாட்டிகளை மணந்து 60 ஆயிரம் வருஷம் வாழ்ந்தும் பிள்ளையில்லாமல் யாகத்தில் பக்குவம் செய்த பாயசத்தை குடித்தவுடன் கர்ப்பமாகி பெற்ற பிள்ளையாகிய ராமனான மகா விஷ்ணுவை குற்றம் சொல்கின்றார்களே, உழும்போது கலப்பையில் பட்டு பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட பரிசுத்த சீதையாகிய மகா லட்சுமியை குற்றம் சொல்லுகிறார்களே” என்றும் “ஆதலால் சுயமரியாதை இயக்கத்தை அழிக்க வேண்டும்” ஆதலால் “ஜஸ்டிஸ் கட்சிக்கு ஓட்டு கொடுக்கக் கூடாது” என்றும் பிரசாரம் செய்வதும் வருணாசிரம சமய புராணக் காரர்கள் தொல்லை இவைகளானால் இனி, அரசியல், தேசீய காங்கிரஸ்காரர்கள் என்பவர்களோ “தேசம் பிரதானம், வகுப்பு வித்தியாசங்களையும் உயர்வு தாழ்வு கஷ்டங்களையும் மறந்து விடுங்கள்.

முதலில் வெள்ளைக்காரனை ஒழித்துவிட்டு அப்புறம் நாம் நமக்குள் இருக்கும் தகராறுகளை தீர்த்துக் கொள்ளலாம், ஜஸ்டிஸ் கட்சியார்கள் வகுப்புவாதம் பேசுகின்றார்கள், சர்க்கார் உத்தியோகத்தை ஒப்புக் கொள்ளுகின்றார்கள், மந்திரிகளை ஆதரிக்கின்றார்கள், சர்க்காருக்கு உதவி செய்கின்றார்கள், சைமன் கமிஷனை வரவேற்று அவர்களிடம் குறைகளைச் சொல்லி தேசத்தின் மானத்தைக் கெடுத்து விட்டார்கள். இந்த காரணங்களால் அவர்கள் தேசத் துரோகிகளாய் விட்டார்கள். அன்றியும் கடவுளையும் மதத்தையும் கண்டிக்கும் சுயமரியாதை இயக்கத்துடன் சம்பந்தம் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் நாஸ்திகர்களாகி விட்டார்கள், மதத் துரோகிகளாகி விட்டார்கள். ஆதலால் தேசத்துரோகத்தையும், மதத் துரோகத்தையும் நாஸ்திகத்தையும் மேற்கொண்டுள்ள ஜஸ்டிஸ் கட்சிக்கு ஓட்டுச் செய்யாதீர்கள்” என்றும்,

“சுயமரியாதை இயக்கம் காங்கிரசை வைகின்றது. மதத்தை அழிக்க வேண்டும் என்கின்றது. கோயில்களை கெடுக்க வேண்டும் என்கின்றது. ஆதலால் அந்த நாஸ்திக இயக்கத்தில் யாரும் சேராதீர்கள், அதை வளர்க்க விடாதீர்கள்” என்றும் பிரசாரம் செய்கின்றார்கள்.

சகோதரர்களே!

இந்த இருபதாவது நூற்றாண்டில் அதாவது உலக அனுபவமும் அறிவு வளர்ச்சியும் மக்களுக்கு தாராளமாய் கிடைக்கக் கூடியதும் சையன்ஸ் அறிவும் மின்சார சக்தியின் வேலையும், பழைய உலகத்தையே தலைகீழாய் கவிழ்த்துக் கொண்டிருப்பதுமான இந்த காலத்திலேயே இக்கூட்டங்கள் இவ்வளவு தைரியமாய் வெளிக்கிளம்பி உலகத்தை ஏமாற்றத் துணிந்திருப் பதை நினைக்கும்போது அய்யோ! பாவம்! என்று கருதத்தக்க ஆயிரம் இரண்டாயிரம் வருஷத்திற்கு முன்னிட்ட பழங்காலமாகிய புத்தர், சமணர் காலத்தில் இக்கொடும்பாவிகளான பாதகர்கள் என்ன என்னவெல்லாம் செய்திருக்கமாட்டார்கள்? என்பதைச் சற்று நினைத்துப் பாருங்கள். கடவு ளைப் பற்றிப்பேசும் ஒவ்வொரு அயோக்கியனும் கடவுள் சர்வசக்தி உள்ளவர் என்பதாகச் சொல்லிக் கொண்டு தனக்கு மாத்திரம்தான் கடவுள் மற்றவனுக்கு இல்லையென்றும், தான்தான் மற்றவனுக்கு காட்டிக் கொடுத்து அக்கடவுளை காப்பாற்ற புறப்பட்டவன் என்றும் நினைத்துக் கொண்டு பேசுவதை பார்க்கும்போது அத்தகையவர்களை எவ்வளவு அறிவீலிகள் அல்லது அயோக்கியர்கள் என்று நினைக்க வேண்டி இருக்கின்றது.

கடவுளைக் காப்பாற்றுவதும் கடவுள் இருப்பதாக உலக மக்கள் அறியச் செய்வதும் என்கின்ற ஒரு தொண்டை ஒருவன் ஏற்றுக் கொண்டு தன்னை மகா புத்திசாலி என்றும் தான் ஒரு பெரிய பரோபகாரியென்றும் சொல்லிக் கொண்டு எவனாவது வெளியில் புறப்பட்டு உங்களுக்கு உபதேசம் செய்யவந்தால் நீங்கள் அதைக் கடவுள் தொண்டென்று நினைக்கிறீர்களா? அல்லது கடவுளை பரிகாசம் செய்து பிழைக்க வேண்டிய நிலையில் உள்ள வயிற்றுப் பிழைப்புத் தொண்டு என்று நினைக்கிறீர்களா? என்று கேட்கின்றேன்.

ஒரு சமயம் யாராவது தங்கள் அறிவீனத்தால் இது கடவுள் தொண்டாயிருக்கலாம் என்று நினைப்பார்களேயானால் அவர்கள் கடவுளைப் பற்றி நினைத்திருக்கும் எண்ணம் தான் என்ன என்று யோசித்துப் பாருங்கள். திரு.சீனிவாசய்யங்கார் தலைவர் என்பதைப் பரப்ப ஒருகூலிக் கூட்டம் அவர் பின்னால் திரிந்து கொண்டு சென்றவிடங்களிலெல்லாம் “சீனிவாசய்யங்கார் என்று ஒருவர் உண்டு; அவர் இந்தியாவுக்கே தலைவர்” என்று கூப்பாடு போட்டு வயிறு வளர்ப்பது போல் கடவுள் என்று ஒருவர் உண்டு அவர் சர்வசக்தி உள்ளவர் என்று சொல்வதன் மூலம் தான் கடவுளை நிலை நிறுத்தவோ அல்லது மக்கள் உணரும்படி செய்யவோ வேண்டியது அவசியமா? என்று கேட்கின்றேன்.

அன்றியும் அதற்காக மனிதன் பூசை உற்சவம் வேண்டுதலை ஆகியவைகளுக்கு ஆக பல கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்ய வேண்டியது அவசியமா? என்று கேட்கின்றேன். பெரும்பான்மையான மக்கள் மழைக்கும் வெய்யிலுக்கும் ஒதுங்கக் கூட இட நிழலும் மறைவும் இல்லாமலும் இரண்டு நாளைக்கு ஒரு வேளை ஆகாரமில்லாமலும் வாடி நடுங்கும்போது இந்த கடவுள்களுக்கு லக்ஷம் பத்து லக்ஷம் கோடி இரண்டு கோடி ரூபாய்களில் ஏழு சுற்று மதில் சுவர்களும் நூற்று இருபது உயர அடி கோபுரங்களும் ஆயிரங்கால் மண்டபங்களும் பத்து நூறு ஆயிரம் லக்ஷம் தீபங்களும் தினம், மூன்று வேளை நான்கு வேளை, நடு ஜாம வேளை பூஜைகளும் வேண்டுமா என்று கேட்கின்றேன்.

வேலை செய்ய சக்தியிருந்தும் ஜீவனத்திற்கு மார்க்கமில்லாமலும் தொழில் இல்லாமலும் பெண்டுபிள்ளைகளுடனும் கிழடு கிண்டுகளுடனும் கர்ப்பத்துடனும் சிங்கப்பூர், பினாங்கு, மோரீசு, தென் ஆபிரிக்கா, நெட்டால், ஆஸ்ட்டி ரேலியா, பிஜி முதலிய இடங்களுக்கு நமது நாட்டிலிருந்து கும்பல் கும்பலாய் கூலிகளாக தூத்துக்குடி, பாம்பன், நாகப்பட்டணம், சென்னை, காக்கிநாடா, மசூலிப்பட்டணம், ரங்கூன் முதலிய துறைகளில் வாரம் பதினாயிரம் இருபதினாயிரம் கணக்காக கப்பல் ஏறிக் கொண்டிருக்கையில் இந்த கடவுள்களுக்கு வருஷம் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவுசெய்து அபிஷேகம், அர்ச்சனை, கல்யாணம், கருமாதி, உற்சவம், ஊர் கோலம், தேர், திருவிழா, தாசி வேசிகள் ஆட்டம், அதிர் வேட்டு, பாணம், முத்தங்கி, வைரக் கிரீடம், மரகத மாலை, தங்கப் பல்லக்கு, வெல்வெட்டு, சரிகை மெத்தை, திண்டு, தலையணை, வைப்பாட்டி, படுக்கை அறை ஆகியதுகளில் செலவு செய்து கொண்டிருக்க வேண்டியது அவசியமா என்று கேட்கின்றேன்.

இந்த மாதிரி வயிறெரிந்து யாராவது எடுத்துக் காட்டினால் அவர்களைப் பார்த்து பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் வெகு சுலபத்தில் நாஸ்திகர் என்று ஒரு வார்த்தையில் சொல்லி மக்களை ஏமாற்றி விடுவார்கள். எனக்கு அதைப்பற்றி கடுகளவுகூட பயமில்லை. இப்படிச் சொல்லுவது நாஸ்திகமானால் தூக்கு மேடையில் இருந்து கொண்டுகூட நான் நாஸ்திகன்தான் அதுவும் நல்ல பரிசுத்தமான நாஸ்திகன்தான் என்று கூப்பாடுபோட்டுச் சொல்லிக்கொள்ள தயாராயிருக்கின்றேன். என்னைப் பற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள். ஆனால் இப்படி ஒரு கூட்டம் கடவுள் பெயரைச் சொல்லி வயிறு வளர்ப்பதன் மூலம் நாடும் நாட்டு மக்களும் மூடர்களாகி பாழாக இன்னும் எத்தனை நாளைக்குப் பார்த்துக் கொண்டிருக்க போகின்றீர்கள் என்பதுதான் எனது கவலையும் சங்கடமுமாகும்.

இது போலவேதான் மதத்தைப் பற்றியும் நான் சொல்வதை சிலர் மதத் துரோகம் என்கின்றார்கள். பிறவியின் காரணமாக மனிதனுக்கு மனிதன் ஒரு நீதியும் ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியும் உள்ள எந்த மதமானாலும் சரி அது ‘கடவுளை நேரே கொண்டுவந்து காட்டி மோக்ஷத் திற்கு அழைத்துச் செல்ல செய்யும் மதமாயிருந்தாலும் சரி அல்லது அது நம்மையே கடவுளாக்கும் மதமாயிருந்தாலும் சரி, அதை அழிக்க வேண்டி யதும் அழிக்க முடியாவிட்டாலும் அந்த அழிக்கும் வேலையில் உயிரைவிட வேண்டியதும் உண்மையான மனிதனது கடமை என்றுதான் நான் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றேன். இதில் சிறிதும் ராஜிக்கு இடமில்லை என்பதை கண்டிப்பாய் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

அது போலவே காங்கிரஸ் என்பதும் தேசீயம் என்பதும் சுயராஜ்யம் என்பதும் அக்கூட்டத்தாரின் சுயநலத்திற்கும் ஒரு கூட்டத்தாரின் வயிற்றுப் பிழைப்பிற்கும் ஏற்பட்டு நாட்டையும் ஏழை மக்களையும் பாழ்படுத்தி வரும் தொல்லைகள் என்றே சொல்லுவேன். தேசத்தின் பேரைச் சொல்லிச் சத்தம் போடும் ஒவ்வொருவரும் சுயநலத்திற்கும், சுயஜாதி நலத்திற்கும் குறி வைத்துக் கொண்டு வேறு வழியில் பிழைக்க முடியாதவர்களை பிடித்து கூலி கொடுத்து கூப்பாடுபோடச் சொல்லும் சூழ்ச்சியே தவிர வேறில்லை. சுய ராஜ்யம் என்றால் என்ன என்று இதுவரை இவர்களில் யாராவது எடுத்துச் சொல்லி இருக்கிறார்களா? இவர்கள் கேட்கும் சுயராஜ்ஜியத்தால் ஏழைகளுக் கும் தொழிலாளிகளுக்கும் குடியானவர்களுக்கும் ஏதாவது பலன் காட்டி யிருக்கின்றார்களா? அல்லது இதுவரை போட்ட சுயராஜ்யக் கூப்பாட்டினால் ஏதாவது அவர்களுக்கு பலன் உண்டாக்கி இருக்கின்றார்களா? என்பதை நடுநிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள்.

எல்லாக் கூப்பாடுகளும் யாரை ஏமாற்றி யார் மந்திரியாவது? யார் உத்தியோகம் பெறுவது? யார் பணம் சம்பாதிப்பது? யார் யாரை அழிப்பது? என்பதைத் தவிர சர்க்காரைப் பற்றியோ ஏழை மக்களைப் பற்றியோ நாட்டின் கதியைப் பற்றியோ யாருக்காவது கடுகளவு கவலையுண்டு என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றேன்.

ஆதலால் தான் இப்போது சிலர் வெகு பிரயாசையுடன் தங்கள் தங்கள் சுயநலத்திற்கும் கூலி பிழைப்பிற்குமாக காப்பாற்ற முற்பட்டிருக்கும் போலிக் கடவுள்களையும் கோவில்களையும் மதங்களையும் சுயராஜ்யங்களையும் ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகின்றேனே ஒழிய மற்றபடி என் சொந்தத்தில் மேற்கண்டவைகளிடம் எனக்கு யாதொரு வெறுப்பும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(குறிப்பு : பாலக்காட்டில் 09.05.1929 ஆம் நாள் நடந்த பொதுக்கூட்டத்திலும் தொடர்ந்து பிற இடங்களிலும் பேசிய சொற்பொழிவுகளின் சுருக்கம்.

குடி அரசு - சொற்பொழிவு - 19.05.1929)

Pin It