periyar and veeramani 644நமது நாட்டில் இப்போது சில தொண்டர்களுக்கு வயிற்றுப் பாட்டிற்கு வேறு மார்க்கமில்லாததால் ஊராரை ஏமாற்ற வேண்டி “சத்தியாக்கிரகம்”, “சத்தியாக்கிரகம்” என்று சொல்லி அவர்கள் வயிறு வளர்க்கப் பார்க்கிறார்கள். சத்தியாக்கிரகம் என்பதை விளையாட்டுப் பிள்ளைகள் மண்ணுக் கொழிக்கும் வேலை போல நினைத்துக் கொண்டு அதன் யோக்கியதையைக் கெடுக்கும் விஷயத்தில் நம் நாட்டுத் தொண்டர் என்போர்களில் சிலருக்கு வெகு துணிவு ஏற்பட்டு விட்டது. சத்தியாக்கிரகம் செய்யும் முன் சத்தியாக்கிரகம் செய்யவேண்டிய அவசியம் இன்னது என்பதையும் வெளிப்படுத்தி அதற்கு நாட்டினரின் சம்மதி பெற்று சத்தியாக்கிரக விஷயத்திற்கு செல்வாக்கு உண்டாக்கி அதற்குத் தக்க யோக்கியதை உள்ளவர்களால் துவங்கப்பட வேண்டிய காரியம். சத்தியாக்கிரகம் செய்வது பெட்ரோல் எண்ணைக்குப் பக்கத்தில் நெருப்பு புழங்கப்படுவதில் எவ்வளவு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமோ, அதுபோல சத்தியாக்கிரகமெனும் நெருப்பை உபயோகிக்க வேண்டியது. தவறினால் தோல்வி ஏற்படுவது மாத்திரம் அல்லாமல் குறிப்பிட்ட லக்ஷியத்திற்கு அழிவு ஏற்படும் என்றே சொல்லுவோம்.

சத்தியாக்கிரகம் செய்யத் தகுந்தவர்கள் வயிற்றுச் சோற்று வீரர்கள் அல்ல. மற்றவர்களை வைவதற்காக அய்யங்காரிடம் பணம் வாங்கி, வயிறு வளர்த்துக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு உரியதும் அல்ல என்பதை மக்கள் ஜாக்கிரதையாய் உணர வேண்டும். நாகபுரி சத்தியாக்கிரகத்திற்கு மகாத்மாவின் ஆசி இல்லை என்று தெரிந்தவுடன் ஸ்ரீமான் அவாரிக்கு 4 வருஷம் கடுங்காவல் தண்டனை ஏற்பட்டு விட்டது. தமிழ்நாட்டு சத்தியாக்கிரக வீரர்களில் சிலரின் யோக்கியதை நமக்குத் தெரிந்ததே. அவர்கள் ஜெயிலில் நடந்து கொண்ட மாதிரியும், நாகபுரியில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வந்த மாதிரியும், இவைகளின் மூலம் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட அவமானமும் நாம் நேரில் அறிந்ததே. ஆதலால் வாசகர்களே! போலி ஆசாமிகள் வேறு வழியில் சுயநலத்திற்கும் பணம் வசூல் செய்வதற்கும் விளம்பரம் செய்து கொள்ளுவதற்கும் கூலிக்கு மாரடிப்பதற்கும் ஆசைப்படுகிறவர்களான ஆசாமிகள் விஷயத்தில் ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!

(குடி அரசு - கட்டுரை - 12.06.1927)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.