periyar 600இந்திய சட்டசபையில், சட்டசபை நடந்து கொண்டிருந்த காலத்தில் சென்னையில் உள்ள “இந்து பத்திரிகை”க்கும் “மெயில் பத்திரிகை”க்கும் ஒரே நிருபர் இருந்து கொண்டு இரண்டு பத்திரிகைக்கும் இரண்டுவிதமான சமாச்சாரத்தை அனுப்பி வந்தாராம். ‘இந்து’ வுக்கு எழுதும்போது ஒரே கையில், ஒரே பேனாவில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரைப் பற்றி எழுதும் போது ஸ்ரீமான் அய்யங்கார் வந்தவுடன் எல்லோரும் கரகோஷம் செய்தார்கள்,  அற்புதமாய் பேசினார், வெள்ளைக்காரர்கள் வாயை அடக்கி திக்கு முக்காட வைத்து விட்டார்,  புதுப் புது யோசனைகள் வெகு யுக்தி யுக்தியாகப் பேசினாராம்,  அவரே தலைவர் பதவிக்குத் தகுந்தவர் என்று பேசிக் கொண்டார்கள் என்று எழுதுவதும், அதே கை அதே பேனாவில் “மெயி”லுக்கு எழுதும் போது ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் “குரங்கு” குல்லாயுடன் உள்ளே நுழையும் போது எல்லோரும் பரிகாசம் செய்து சிரித்தார்கள் என்றும், இவர்தானா சீனிவாசய்யங்கார்?  கொஞ்சமாவது புத்தியில்லையே! சட்டசபை விதிகள் கூட தெரியவில்லையே,  இவர் தலைமை  வகித்ததற்குத் தானா  காங்கிரஸ் என்று பெயர், இவரை எப்படி காங்கிரசுக்கு  தலைவராக்கினார்கள்.  சீனிவாசய்யங்கார் இந்திய சட்டசபைக்கு வராமலிருந்தாலே அவருக்குக் கொஞ்சம் பெருமை மீதியாயிருக்கலாம் என்றும், இவர் பேசும்போதெல்லாம் சட்டசபை இவரை பரிகாசம் செய்வதே வேலையென்றும் - எழுதுவதும், அதே கையில் அதே பேனாவில் அசோசியேட்பிரசுக்கு எழுதும்போது அதற்குத் தகுந்த மாதிரி எழுதுவதும் ஆகியவைகளை ஒருவரே செய்வதானால் அது எவ்வளவு  ஆச்சரியம்?

(குடி அரசு - கட்டுரை - 08.05.1927)

பொதுப் பணம் போகும் வழி

வங்காளத்தில் கிராம சீர்திருத்தம் என்பதாக தேசபந்து தாஸ் பேரைச் சொல்லி பொது ஜனங்களிடம் நிறைய பணம் வசூலித்து கடைசியாக அந்தப் பணத்தை சுயராஜ்ஜியக் கக்ஷி தேர்தலுக்கு உபயோகப்படுத்திக் கொண்டதாக கோர்ட்டில் விவகாரம் நடக்கிறது.  இங்கும் அதுபோலவே குறிப்பிட்ட காரியங்களுக்கென்று ஒதுக்கி வைத்த ரூபாய்களும் வசூலித்த ரூபாய்களும் தேர்தல்களுக்கே சிலவாகி வருகிறது. ஆனாலும் இங்கு கோர்ட்டில் வியாஜ்ஜியம் போட ஆளில்லை. பின்னையோ மேலும் மேலும் பணம் கொடுக்கத் தான் ஏராளமான சோணகிரிகள் இருக்கிறார்கள்.

(குடி அரசு - செய்திக் குறிப்பு - 08.05.1927)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.