சென்னையின் யோக்கியதையை அறிந்து போக வெளியிடங்களிலிருந்து யார் வந்தாலும் அவர்களை நமது பார்ப்பனர்கள் எப்படியாவது மயக்கி குல்லாய் போட்டு தங்கள் சுவாதீனம் செய்து கொள்ளும் தந்திரமும் சௌகரியமும் நம்மவர்களிடத்தில் இல்லை என்பதை எல்லோரும் அறிந்த விஷயம். தேவஸ்தான சட்ட சம்மந்தமாய் இந்தியா நிர்வாக சபை மெம்பர் ஸ்ரீமான் எஸ்.ஆர்.தாஸ் இங்கு வந்த பொழுது அவருக்குப் பார்ப்பனர்கள் செய்த விருந்தும், பெண்களைக் கொண்டு ஆடல் பாடல் கச்சேரிகள் செய்ததும், மடாதிபதி மகந்துகளையும் கூட்டி அறிமுகம் செய்து வைத்ததும், அந்த விருந்துக்கு ஒத்துழையாத பார்ப்பனர் என்பவர்கள் முட்டுக் கட்டை பார்ப்பனர் என்பவர்கள், பூரண சுயேச்சை பார்ப்பனர் என்பவர்களும், அரசாங்க உத்தியோகஸ்தர் வெள்ளைக்காரர்கள் ஆகியவர்களின் அரசாங்க சம்மந்தமான களியாட்டு காரியங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்ற பார்ப்பனர்களும், காந்தி குல்லாயும் தேசீயக் கொடியும் பிடித்து இரும்புச் சட்டத்தைத் துலைக்க வேண்டும் என்று சொல்லித் திரியும் பார்ப்பனரும், “அரசாங்கத்திற்கு குலாமல்லாத” பார்ப்பனர்களும், மற்றவர்களை நக்கிப் பொருக்கி, குலாம், சர்க்கார், பூஜாரி என்று சொல்லும் பார்ப்பனர்களும், சென்று நன்றாய் தின்று குடித்து களியாட்டத்தில் கலந்திருந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.
அது போலவே இம்மாதத்திலும் இந்தியா நிர்வாக சபையில் இருந்து சர் அலெக்ஸாந்தர் மட்டிமென் என்கிற ஒரு துரை மகன் வெள்ளைக்காரர் வந்ததற்கு அதே ஸ்ரீமான் ரங்காச்சாரியார் கொடுத்த விருந்திற்கு ஒத்துழையாமை, முட்டுக்கட்டை, சர்க்கார் சம்மந்த விருந்து பஹிஷ்காரம், பூரண சுயேச்சை ஆகிய பல பார்ப்பனர்களின் தத்துவ தலைவருமான ஸ்ரீமான்கள் எஸ்.சீனிவாசய்யங்கார், எ. ரங்கசாமி அய்யங்கார் முதலியவர்கள் போய் உண்டு, குடித்து, களித்து புரண்டதோடு ஒன்றாய் உட்கார்ந்து படம் பிடித்துக் கொண்டார்கள் என்றால் இதன் அர்த்தமென்ன? “
ஒரு ஊரில் ஒரு புராணப் பிரசங்கியார் ஒரு விதவா ஸ்ரீரத்தினத்தை வைப்பாக வைத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் புராணப் பிரசங்கம் செய்யும் போது விதவா சம்மந்தம் கூடாது என்றும், அது இருவருக்கும் பாவமென்றும், மேல் லோகத்தில் நெருப்பில் காச்சிய இரும்புத் தூணைக் கட்டி பிடிக்கச் சொல்லுவார்கள் என்றும், அதனால் சிரேய்சு குறைந்து போகுமென்றும் இன்னமும் பலவிதமாக ஞானோபதேசம் செய்தார். சாஸ்திரியாரின் வைப்பாட்டியான விதவை அம்மாள் அவர்களும் அந்தப் பிரசங்கத்திற்குப் போயிருந்தார்கள். சாஸ்திரியார் வீட்டுக்கு வந்த உடன் நீர் இனிமேல் என்னைத் தொடாதீர்! இவ்வளவு பாவமும் தோஷமும் மேல் லோகத்தில் இவ்வளவு கஷ்டமும் இருக்கிற சங்கதி எனக்கு இது வரையில் தெரிவிக்காமல் சாஸ்திரிகள் சம்மந்தத்தால் மோக்ஷம் புண்ணியம் என்று சொல்லி என்னை ஏமாற்றி விட்டீர்! போதும், போதும் எட்டி நில்லும் என்று சொல்லி விட்டாள்.
சாஸ்திரியார் உடனே அம்மாள் காலில் விழுந்து நான் அது ஊரார்களை ஏய்த்து வயிறு வளர்க்கச் சொன்னதே தவிர நமக்கும் உனக்கும் அது கட்டுப்படுத்தாது. எங்காவது ஒரு ஸ்திரீ எவ்வளவுதான் பதி விரதையானாலும் புருஷனில்லாமல் இருக்க முடியுமா? புருஷன்தானாகட்டும் எப்படிப் பட்டவனானாலும் ஸ்திரீ இல்லாமல் இருக்க முடியுமா? இயற்கைக்கு விரோதமாய் எங்காவது பாவமும் தோஷமும் ஏற்படுமா?” என்று சாஸ்திரியார் வேதாந்தம் போதித்தாராம். அது போல் நமது சென்னைப் பார்ப்பனர்கள் வெளியில் செய்யும் புராணப் பிரசங்கம் வேறு, தாங்கள் நடந்து கொள்ளும் இயற்கை வேதாந்தம் வேறு. இதை நமது பாமர ஜனங்கள் சரிவர உணராமல் ஏமாந்து போகிறார்கள். என்ன செய்வது? வயிற்றுக் கொடுமையும் பேராசையும் நம்மவர்களைப் போட்டு நசுக்கும் போது எப்படி யோக்கியமாகவும் ஏமாறாமலும் இருக்க முடியும்.
(குடி அரசு - கட்டுரை - 26.12.1926)