சென்னை மாகாணத்தில் சிறப்பாக தமிழ் நாட்டில் சுமார் 10 வருஷங்களுக்கு முன்பாக பார்ப்பனரல்லாதார் சங்கம் ஏற்பட்டதும் அதை ஏற்படுத்த ஸ்ரீமான் டாக்டர் நாயர் அவர்கள் முதன்மையாகவும், சர்.தியாகராய செட்டியார் உதவியாகவும் இருந்து அதை உலகினர் ஒப்புக் கொள்ளும்படி செய்து, தங்களது கொள்கைகளையும் நிலை நிறுத்தியது உலகமறிந்த விஷயம்.
ஆனால் இன்றைய தினம் நம்மில் பெரும்பான்மையான மக்கள் அக்கட்சியின் பெயரைச் சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுகிறார்கள். காரணமென்ன? தமிழ்நாட்டில் இக்கட்சியின் கொள்கைகளைப் பிரசாரம் செய்ய பணமில்லாதிருந்ததா? பத்திரிகை இல்லாதிருந்ததா? உத்தியோகமும், அதிகாரமும் இல்லாமலிருந்ததா? எல்லாமிருந்தும் இக்கதி ஆவானேன்? எதிரிகளின் சூழ்ச்சியும் தந்திரமும் என்று சொல்லலாம். ஸ்ரீமான்கள் நாயரும் செட்டியாரும் உள்ள காலத்திலும் இவ்வெதிரிகள் இருந்தவர்கள் தானே? இப்பொழுது மாத்திரம் இவர்கள் சூழ்ச்சி பலிப்பானேன்? ஒருசமயம் நமக்குள்ளாகவே எதிரிகள் ஏற்பட்டுவிட்டார்கள் என்று சொல்லலாம்.
அப்படியானால் இனிமேலாவது நமக்குள்ளாக எதிரிகள் ஏற்படாமலிருக்க இப்போது என்ன செய்யப் போகிறோம்? இனிமேலாவது எதிரிகளின் சூழ்ச்சியிலிருந்து தப்புவதற்கு என்ன செய்யப் போகிறோம்? மகாநாடு கூடிக் கலைந்தால் போதுமா? முதலாவது, நம்முடைய லட்சியம் என்ன என்பதை பாமர ஜனங்கள் அறியும்படி செய்திருக்கிறோமா? பாமர ஜனங்களின் அனுதாபத்தை பெற நாம் ஏதாவது வழி செய்தோமா? கவலையாவது கொண்டோமா? மக்களின் உண்மையான தேவை என்ன என்பதிலாவது நாம் அபிப்பிராய பேதமில்லாமல் இருக்கிறோமா? நமது நாட்டினிடமாவது, நமது மக்களிடமாவது அபிமானம் உள்ளவர்கள் என்பதற்கு நம்மிடம் ஏதாவது ஒரு அடையாளமிருக்கிறதா? உத்தியோகங்கள் பெற்றோம்; பட்டங்கள் பெற்றோம்; பதவிகள் பெற்றோம். இதனால் நமது மக்களுக்கு அடிப்படையான நன்மை என்ன செய்தோம்?
பார்ப்பன ஆதிக்கம் வளராமல் இருக்க இவைகளை உபயோகித்துக் கொண்டோம் என்கிற வரையில் இவற்றைப் பெற்றது சரி. பாமர ஜனங்கள் மூட நம்பிக்கையுடையவராய், ஏழை ஜனங்களாய், தொழிலாளர்களாய், கூலிகளாய் உள்ள நமது மக்களின் குறைகளை நீக்கி என்ன நன்மையை உண்டாக்கினோம்? பார்ப்பன மாய்கையில் மூழ்கி, விவகாரத்தில் சிக்கி அல்லல்பட்டு அழியும் குடியானவர்களுக்கு நாம் என்ன செய்தோம்? அறிவீனத்தில் மூழ்கி மதுவருந்தி, ஒழுக்கங் கெட்டு நாசமாகும் ஏழைக் குடும்பங்களுக்கு என்ன பந்தோபஸ்து செய்தோம்? உத்தியோகம் ஒப்புக் கொண்ட அளவில் உத்தியோகத்தைக் கொண்டு எவ்வளவு செய்யக் கூடுமோ அவ்வளவு செய்திருக்கிறோம் என்கிற பதில் போதுமா? உத்தியோகத்திற்கு வெளியில் செய்யக் கூடிய வேலைகளில் ஏதாவது செய்தோமா? நமது மனதையே நாம் கேட்டுப் பார்ப்போம்.
நமது எதிரிகளான பார்ப்பனர்கள் தேசத்தின் பெயரையும் காங்கிரஸ் பெயரையும் சுயராஜ்யம், உரிமை என்கிற பெயர்களையும் வைத்துக் கொண்டு பாமர ஜனங்களை ஏமாற்றி உத்தியோகமும் பதவியும் பெற்று தங்கள் ஆதிக்கத்தை பலப்படுத்திக் கொள்ளுகிறார்களே அதுபோலவும், நம்மில் பல கூலிகள் பார்ப்பனருக்கு ஒத்துப்பாடி அவர்களும் தேசம், சுயராஜ்யம், தேசீயம், உரிமை என்பவைகளைச் சொல்லி வயிறு வளர்க்கிறார்களே அதுபோலவும் நாமும் செய்தால் பார்ப்பனரல்லாத மக்கள் முன்னேறி விடுவார்களா? இவற்றை மகாநாட்டுக்கு வரும் பொது ஜனங்கள் நன்றாய் யோசிக்க விரும்புகிறோம்.
உத்தியோகம் பதவி பட்டம் பெற வேண்டாமென்று நாம் இப்போது சொல்ல வரவில்லை. ஆனால் அதுவே நமது லட்சியமல்லவென்பதையும் அதனாலேயே நமது குறைகள் முழுவதும் நிவர்த்தியாகி விடாது என்பதையும் தெரிவித்துக் கொள்ளாமலிருக்க முடியவில்லை. ஆதலால் உண்மையில் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கு தகுந்த கொள்கைகளும் திட்டங்களும் வகுத்து பாமர மக்களிடை தாராளமாய் பிரசாரம் செய்யத்தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். உத்தமமான தலைவர்களையும், உண்மையான தொண்டர்களையும், உறுதியான கொள்கைகளையும், யோக்கியமான பிரசாரகர்களையும் கொண்டு சரியான படி ஒரு வருஷத்திற்கு வேலை செய்தால் நமது சமூகம் சுயமரியாதையையும் சுதந்திரத்தையும் அடைந்து விடலாம். இதற்கு முதலாவது எல்லோரும் கதரை ஒப்புக் கொள்ள வேண்டும். தீண்டாமை விஷயத்தில் வெளிப்படையாய்ச் சொல்லி விட வேண்டும். அதாவது மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்று ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு விஷயத்தில் ஆnக்ஷபணை உள்ளவர்கள் சுதந்திரத்துக்கும் சுயமரியாதைக்கும் விரோதிகள் என்றே சொல்லுவோம். அங்கத்தினர் உறுதி மொழிப் பத்திரத்திலேயே இவைகள் குறிக்கப்படவேண்டும்.
மற்றபடி “ஒத்துழையாமையோ’ ‘ஒத்துழைப்போ’, ‘பரஸ்பர ஒத்துழைப்போ’, ‘முட்டுக்கட்டையோ’, ‘சட்டவரம்பிற்கு உள்பட்ட கிளர்ச்சியோ’, ‘வெளிப்பட்ட கிளர்ச்சியோ’, ‘பிரிட்டீஷ் குடைக்குள் சுயராஜ்யமோ’, ‘குடைக்கு வெளியில் சுயராஜ்யமோ’, ‘இரட்டை ஆட்சியோ’, ‘ஒத்தை ஆட்சியோ’, ‘சாதாரண சுயராஜ்யமோ’, ‘பூரண சுயராஜ்யமோ’, அவரவர்கள் கொள்கை அவர்களுடனேயே இருக்கட்டும். இது சமயம் இவைகள் எல்லாம் அடியோடு புரட்டு என்றும் பார்ப்பனர்களும், ஆங்கிலம் படித்தவர்களும், பாமர ஜனங்களையும் சர்க்காரையும் ஏமாற்றி வயிறு வளர்க்கச் செய்யும் தந்திரங்கள் என்றும் நாம் உறுதியாய் நம்புவதால் அதைப்பற்றி யாருக்காவது கெடுதியோ நன்மையோ ஒன்றும் ஏற்பட்டு விடப்போவதில்லை. ஆதலால் அவைகள் ஒவ்வொரு மனிதனின் தனித்தனி அபிப்பிராயமாய் இருந்து கொள்ளலாமே தவிர சங்கத்தின் கொள்கைகளில் கலக்க வேண்டியதில்லை. சுயமரியாதையும் சுதந்திரமும் பெறுவது என்பதை லட்சியமாக வைத்துக் கொண்டாலே போதுமென்று நினைக்கிறோம். ஏனெனில் பார்ப்பனரல்லாதார் என்றால் பார்ப்பனரல்லாதார் சமூகத்தில் 100 - க்கு - 90 பேர்களாயிருக்கும் பாமர மக்களையும் ஏழை மக்களையும் குறிக்குமே அல்லாமல் 100-க்கு 5 பேர் கூட இல்லாத ராஜாக்களையும் ஜமீன்தாரர்களையும் பிரபுக்களையும் வக்கீல்களையும் மாத்திரம் குறிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம் என்பதும் 100-க்கு 90 பேர்களின் முன்னேற்றத்தையும் சேர்த்து குறிக்குமேயல்லாது 100- க்கு 5 பேர்களின் முன்னேற்றத்தை மாத்திரம் குறிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். இச்சங்கம் உண்மையான பார்ப்பனரல்லாதார் முன்னேற்றச் சங்கமா அல்லது யாரோ சில குறிப்பிட்ட நபர்களின் முன்னேற்றச் சங்கமா என்பது வெளியாக இது ஒரு தக்க சமயமாய் ஏற்பட்டு விட்டதால் ஒவ்வொரு தலைவரும் பொறுப்புடனும் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதாக விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம்.
(குடி அரசு - தலையங்கம் - 26.12.1926)