“உருண்டைக்கு நீளம் புளிப்புக்கு அவளப்பன்” என்பதாக ஒரு பழமொழி உண்டு. அதாவது ஒரு ராஜாவைப் பார்க்க எல்லோரும் எலுமிச்சம் பழம் கொண்டு போனார்களாம். திருவாழ்தான் என்பவன் ஒரு புளியம்பழம் கொண்டுபோய் கொடுத்துப் பார்த்தானாம். ராஜா திருவாழ்தானைப் பார்த்து இது என்ன என்று கேட்டாராம். அதற்குத் திருவாழ்தான் “உருண்டைக்கு நீளம் புளிப்புக்கு அவளப்பன்” என்றானாம். என்னவெனில் எலுமிச்சம்பழம் உருண்டை, புளியம்பழம் நீளம். புளிப்பு விஷயத்தில் இது அதைவிட அதிகமான புளிப்பு என்று சொன்னானாம்.

periyar 355அதைப் போலவே ஜஸ்டிஸ் கட்சி மந்திரி காலம் மிகக் கொடுமையாகவும், தேசத் துரோகமாகவும் இருந்ததாகப் பார்ப்பனர்களால் கூறப்பட்டு வந்தது. நமது நற்காலமாகவே ஜஸ்டிஸ் மந்திரி ஆட்சியும் மறைந்தது. இரட்டை ஆட்சியை வெட்டிப் புதைப்போம், மந்திரிகளை எதிர்த்தே தீருவோம் என்ற நமது அய்யங்கார்கள் சுப்பராய மந்திரிக்கட்சியை அமைத்தார்கள். இது உருண்டைக்கு நீளமாகவும் புளிப்புக்கு அதனப்பனாகவும் ஏற்பட்டு விட்டது. நாம் இந்த ரகசியத்தை முன்னமேயே வெளியிட்ட பொழுது நேற்று வரை மந்திரி கட்சிக்கும் எங்களுக்கும் சம்பந்தமேயில்லை, நாஸ்திகரும் பார்ப்பன துவேஷியானவருமான நாயக்கர் சொல்வதை நம்பாதீர்களென்று பார்ப்பனர்களும், பார்ப்பனப் பத்திரிகைகளும் கத்தி வந்தன. ஸ்ரீமான் எஸ்.முத்தைய முதலியார் போன்றார்கள் எக்காரணத்தினாலோ பார்ப்பனர்களை..... அ. இ. கா. கூட்டத்தில் தாக்க ஆரம்பித்ததும் உண்மை விஷயம் பார்ப்பனர்கள் வாயிலிருந்தே கக்கப்பட்டு விட்டது. அதாவது :-

“தற்காலமிருந்துவரும் மந்திரி ஆட்சியில் தேசீய மணம் கமழ்கின்றதும் காங்கிரஸ் நிர்மாணத் திட்டத்தை நிறைவேற்ற இம்மந்திரிகள்தான் லாயக்குள்ளவர்கள். அதற்காகவே இம்மந்திரிகளை உபயோகப்படுத்திக் கொள்ளுகிறோம். வகுப்புவாதக்காரர்களான ஜஸ்டிஸ் கட்சியார் தேசத் துரோகிகள் அவர்கள் மந்திரியாய் வராமல் பார்த்துக் கொள்ளவும் சுப்பராய மந்திரி சபையை ஆதரிக்க நேர்ந்தது. மறுதேர்தலை உண்டாக்க ஜஸ்டிஸ் கட்சி இன்னமும் முயற்சிப்பதால் தான் இனியும் சுப்பராய மந்திரி ஆட்சியை எப்படியாவது ஆதரிக்கப் போகிறோம்” என்பதாகச் சொல்லி பார்ப்பனர்கள் தங்களது அயோக்கியத்தனத்தைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டார்கள். எப்படியாவது உண்மை வெளிவந்தமை குறித்து நாம் மகிழ்ச்சி அடைய வேண்டியதே. ஆனால் தேசீய மணம் கமழும் சுப்பராயன் மந்திரி ஆட்சியின் யோக்கியதை என்ன? என்பதைப் பொது ஜனங்கள் அறிய வேண்டாமா?

பார்ப்பனர்களுக்கு வலது கை கொண்டு கால் அலம்பி விடும் எந்த பார்ப்பனரல்லாதாரும் இன்றைய அய்யங்கார் ஆட்சியில் சிறிது இன்பமனுபவிக்கலாம் என்பது மட்டும் உண்மைதான். நம் நாட்டு வேளாள குலத்தில் ஜனித்தவர்களே பெரும்பாலும் நமது அரசாங்க பெரிய உத்தியோகங்களில் வர வேண்டுமென்பது நமது நீண்டகால அவாவாகும். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் ஸ்ரீமதி அவ்வைப் பிராட்டியாரும் அப்படியே சொல்லியிருக்கிறார். ஆனால் இவ்வளவு தூரம் மோசமான ஒரு வேளாளர் மந்திரியாக வருவதால் நமது நாட்டுக்காவது சமூகத்திற்காவது யாதொரு நன்மையும் ஏற்படாதென்றே சொல்லுவோம். இப்போது கனம் சுப்பராயன் மந்திரியாக இருக்கிறார் என்பது உண்மை. ஆனால் எந்த யோக்கியதையுடன் மந்திரியாக இருக்கிறார்? இயற்கையாக அவருக்குள்ள குலம், கல்வி, செல்வம், சக்தி ஆகிய இதுகளின் வன்மையால் இருக்கிறாரா என்று பார்த்தால் ஒருக்காலும் இல்லவே இல்லை. பின் எப்படியென்றாலோ பார்ப்பனர்களின் தயவில் அவர்களால் ஆட்டி வைக்கப்படும் பொம்மையாய் இருப்பதினாலேயே மந்திரியாய் இருக்கிறார்.

நாடு சிரிக்கவும், சமூகம் வெட்கப்படவும் மந்திரி வேலை பார்ப்பது நண்பர் சுப்பராயன். அதன் பலனை அடைந்து உத்தியோகம் பதவி பெற்று தின்று கொழுப்பது பார்ப்பனர்கள். இதை எண்ணும்போதும் நாம் மிக வருத்தப்படுவதுடன் அவ்வேளாள சமூகத்திற்கே இம்மாதிரியான ஒருவரை அடைந்த துர்பாக்கியத்திற்கும் நாம் அனுதாபப்படாமலிருக்க முடியவில்லை.

இதுவா தேசீய மணம்?

மந்திரியாக வந்த கதை இதுவென்றால் நடந்த கதைதான் என்ன? என்று பார்த்தால், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் முதலிய முனிசிபாலிட்டிகளிலும், கோபிசெட்டிபாளையம் தாலூகா போர்டிலும், மகாத்மா காந்தியடிகளுக்கு வரவேற்புப் பத்திரமளிப்பதென்று தீர்மானித்தார்கள். இதை சுப்பராய மந்திரியார் தடுத்துவிட்டு ஓர் சுற்று உத்திரவையும் சகல ஸ்தாபனங்கட்கும் அனுப்பியிருக்கிறார். இவ்வுத்திரவைப் பார்ப்பன மித்திரன் மந்திரி உத்திரவு என்று சொல்லாமல், திருட்டுத்தனமாய் “சர்க்கார் உத்திரவு” என்கிறான். இதே உத்திரவு பனக்கால் காலத்தில் ஏற்பட்டதற்கு “பனக்காலின் தேசத் துரோகம்,” “பனக்காலின் ராஜ்யம் பாழ்” “மகாத்மாவுக்கே உபசாரம் கூடாதாம்” என்று கூறினான். ஏனென்றால் பனக்கால் மந்திரி பார்ப்பன அடிமையல்ல.

பெல்காம் மகாநாட்டின் பொழுது மகாத்மாவுக்கு பத்திரமளிக்க 100 ரூபாய் செலவுடன் ஒரு கலெக்டர் (ஐ.ஊ.ளு. ஆங்கிலேயர்) தலைவராய் உள்ள முனிசிபாலிட்டியில் தீர்மானித்தார்கள். ஆனால் அ. இ. தலைவர் அய்யங்காரின் ஆதரவு பெற்ற நமது கனம் மந்திரியின் செய்கையோ ஓர் ஆங்கிலேயரின் செய்கை அளவு கூட யோக்கியமாய் நடந்து கொள்ள முடியவில்லை. உண்மையில் பனக்கால் காலத்திலாவது மகாத்மா காந்தி ஆங்கிலேய ஆட்சிக்கு ஒரு ஆபத்தான மனிதராய் விளங்கினார் என்று சொல்லிக் கொண்டார்கள். ஆகவே “சர்க்கார் விரோதிக்கு” “சர்க்காரை ஆதரித்த” கட்சியார் ஆதரவு அளிக்காதது ஒரு விதத்தில் பொருந்தும். இன்றைய மகாத்மா காந்தியோ மிக சாதுவாய் விட்டார். சர்க்கார் மனிதர்களும், மன்னர்களும், திவான்களும் விருந்தாளியாக அழைக்கும் அவ்வளவு தூரம் சாதுவாகிவிட்டார். இப்படிப்பட்ட சாது காந்திக்கு “தேசீய மணம்” கமழும் மந்திரி பொதுஜனங்கள் பணத்தில் உபசாரம் அளிக்கக் கூடாது என்பாரானால் அம்மணம் தேசீய மணமா? தேசத் துரோக மணமா? “தேசீய மணமான” சுயமரியாதையற்ற மணமா? என்று தான் மகாஜனங்களைக் கேட்கிறோம்.

சேலம் தேர்தல்

சேலம் ஜில்லா போர்டு தேர்தல் விஷயமாக மந்திரி நடந்து கொண்டதென்ன? அந்நடத்தைக்குப் பார்ப்பனப் பத்திரிகைகள் செய்யும் வியாக்யானம் என்ன? நியாயமாக நடந்த ஜில்லாபோர்டு தேர்தல் தடை செய்யப்பட்டது. இதற்குத் திருநெல்வேலியிலும் தஞ்சையிலும் அகப்பட்டது போல் ஏமாந்தவர்கள் சேலத்தில் கிடைக்காததினால் முழுவதும் மோசமானதான தாறுமாறான விளையாட்டுப்பிள்ளை உத்திரவுகளை பிறப்பிக்கும்படி மந்திரி கையைப் பார்ப்பனர்கள் பிடித்து எழுதி தந்தி கொடுத்து வருகிறார்கள். இந்த மந்திரி ஆட்சியை மந்திரி ஆட்சி என்பதா? “ரி” யை தள்ளி ‘மந்தி’ ஆட்சி என்பதா?

முதல் முதல் சேலம் ஜில்லாபோர்டு தலைவர் தேர்தல் நடத்த மந்திரியே தான் உத்திரவிட்டார். அதாவது தற்கால பிரசிடெண்டு ராஜினாமாவை போர்டு ஒப்புக்கொண்டு, பிறகு தேர்தல் நடத்தலாம் என்று உத்திரவு செய்தார். அந்தப்படியே நடந்த தேர்தலை பார்ப்பனர்கள் வார்த்தையைக் கேட்டுக் கொண்டு ரத்து செய்துவிட்டார். மறுபடியும் மே 23 - ந் தேதி நடத்தும்படி உத்திரவு செய்தார். அந்தப்படியே 23 - ந்தேதி தேர்தல் நடக்கும் சமயம் பார்த்து அந்தத் தேதியிலும் நடக்கக் கூடாது என்று உத்திரவு அனுப்பிவிட்டார். பிறகு ஜுன் மாதம் 4 - ந் தேதி நடத்த வேண்டுமென்று தந்தி கொடுத்திருக்கிறாராம். இத்தகைய சிறுபிள்ளைத்தனமான உத்திரவைப் பிறப்பித்துப் பார்ப்பனரல்லாதார் சமூகத்தை அவமானப்படுத்தவே நமது கனம் சுப்பராயன் பார்ப்பனர்களுக்கு ஓர் அடிமையாய் விளங்குகிறார் என்பதை நினைக்கும் போது இதை உடனே ஒழிக்காமல் வேறு என்ன செய்வது?

இவ்வளவு அக்கிரமங்களையும் ஸ்ரீமான் சுப்பராயனை செய்யச் சொல்லி அவரையும் கெடுத்து நமது சமூகத்தையும் ஒழிக்கப் பாடுபட்டுவிட்டு நாளைய தினம் வெள்ளைக்காரர்கள் முன்னால் இவ்விஷயங்கள் பிரஸ்தாபிக்கப்படும் போது இதே பார்ப்பனர்கள் என்ன சொல்வார்கள் என்றால் “பார்ப்பனரல்லாதார் உயர்ந்த வேலைகள் பார்க்க யோக்கியதை உடையவர்கள் அல்ல. வெறும் ஆசைப்படுவதும் பார்ப்பனர்களின் மீது பொறாமைப் படுவதுமாய் இருக்கிறார்களே ஒழிய வேலை கொடுத்தால் இம்மாதிரி சுப்பராய மந்திரியைப் போல்தான் நடந்துவிடுகிறார்கள். ஆதலால் கொடுப்பதாயிருந்தால் பார்ப்பனர்களாகிய எங்களுக்குக் கொடுங்கள், இல்லாவிட்டால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று பச்சையாய் சாட்சி சொல்லப் போகிறார்கள். இதை நினைக்கும் போது வேளாளசமூகத்திற்கு மாத்திரமல்ல பார்ப்பனரல்லாத சமூகத்திற்கே ஒரு சொத்தை ஏற்படும்படியாக ஏற்பட்டு விட்டதே என்கிற மன வருத்தம் நம்மை மிகுதியும் வாட்டுகிறது.

இவ்வளவு கெட்ட பெயரும் ஊரார் சிரிப்பும் அவமானமும் அடைந்தும் சமூகத் துரோகமும் செய்தும் தானாவது ஒரு லாபத்தை அடைகிறாரா என்று பார்ப்போமானால் அய்யோ பாவம் அதுவுமில்லை என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் பார்ப்பன சட்ட சபை மெம்பர்களும் கனம் சுப்பராயன் மந்திரி ஆவதற்கு உதவிய சில பார்ப்பனர்களும் வரும் சம்பளத்தில் பகுதிக்கு மேல் பிடுங்கிக் கொள்ளுகிறார்களாம். கதருக்கென்றும், காங்கிரசுக்கென்றும், கட்சிப் பிரசாரத்திற்கு என்றும், வாயாடி வம்பருக்கென்றும், கோவிலுக்கென்றும், உபநயனமென்றும், இன்னமும் எத்தனையோ இழவுக்கு என்றும் பிடுங்கித் தின்று விடுகிறார்களே அல்லாமல் ஒரு காசாவது வீடு வந்து சேருவதற்கும் வழியில்லை. போராக்குறைக்கு சிபார்சு ஆள்களும் வீதிவீதியாய்த் திரிகிறார்கள். அதாவது உனக்கு என்ன வேண்டும் கனம் சுப்பராயனால் ஏதாவது வேலை ஆகவேண்டுமா சொல் உடனே செய்து வைக்கிறேன். சுப்பராயன் என்ன நம்ம தம்பி கைக்குள்ளாகத்தானே, நம்ம அத்தான் சட்டப் பையில்தானே, நமது சத்தியமூர்த்தி டிக்கெட் பாக்கெட்டில் தானே இருக்கிறார். இப்பொழுது சொல் நாளை கெஜட்டில் பார்த்துக் கொள். சாயந்திரம் 3 மணிக்கு தந்தி வருகிறதா இல்லையா பார். ஆனால் எனக்கு என்ன தருகிறாய் என்கிற வியாபாரம் அக்கிரகாரத் தெருவுகளில் தூண்கள், பந்தக் கால்கள், எச்சைத் தொட்டிகள் எல்லாம் பேசுகின்றதுகள். கூடிய சீக்கிரத்தில் கனம் சுப்பராயன் பெயர் இதை விட இனி மேல் கெடுவதற்கு ஒன்றுமில்லை என்கிற மாதிரிக் கெட்டுப் போய்விடும் என்பதில் சந்தேகம் தோன்ற இடமில்லைபோல் தெரிகிறது. ஆனாலும் இதற்கு யார் என்ன செய்யக்கூடும். பார்ப்பனர்கள் பேச்சைக் கேட்டவர்கள் யாராவது முன்னுக்கு வந்திருந்தால் நமது கனம் சுப்பராயன் முன்னுக்கு வராததைப் பற்றி வருத்தப்படலாம். உலகம் பிறப்பதற்கு முன் உண்டான சட்டம் சுப்பராயன் விஷயத்தில் மாத்திரம் எப்படி மாறக்கூடும்.? ஆதலால் அனுபவிக்க வேண்டியதுதான்.

(குடி அரசு - கட்டுரை - 29.05.1927)

Pin It