இந்த நாட்டில் பல காலமாக ‘சமஸ்கிருதம்’ என்கின்ற ஒரு வடமொழியை (ஆரிய மொழியை) ஆரியர் இந்நாட்டில் புகுத்தி, அதற்குத் ‘தேவ பாஷை’ எனப் பெயரிட்டுக் கடவுள்கள் - தேவர்கள், சமயம், சாத்திரம் ஆகியவைகளுக்கு அதில் சொன்னால்தால் புரியும் - பயன்படும் என்று காட்டி, நமது பரம்பரை இழிவிற்கு நிரந்தரப் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நாடு நம்முடைய நாடு; இந்நாட்டில் நாம் தமிழர்கள் 100-க்கு 97 பேர் வாழ்கிறோம். நமது நாட்டு மொழி தமிழ் மொழி. இந்த நிலையில் - நமது மொழிக்கும், நம் கலாச்சாரத்திற்கும், நம் பழக்க வழக்கங்களுக்கும் சம்பந்தமில்லாத - நம் நாட்டு மக்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு 3 பேராக உள்ள - இந்நாட்டிற்குப் பிழைக்க வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்களுடைய தாய்மொழியாக உள்ளதும், எழுத்தே இல்லாததுமான சமஸ்கிருதம் என்னும் மொழிக்கு இன்று இருந்து வரும் செல்வாக்கு, தமிழுக்கு உண்டா? இவ்வாரியர் புகுதலுக்குப் பின் இருந்திருக்கிறதா? இன்றைய இளைஞர்கள், வாலிபர்கள் பலருக்கு ஒரு முப்பது, நாற்பது வருடங்களுக்கு முந்திய நிலைமை எப்படி? தமிழுக்கு அப்பொழுது இருந்த மரியாதை, அந்தஸ்து என்ன? பார்ப்பன ‘மேலோர்’ மொழியாக - சமஸ்கிருதத்திற்கு இருந்த அந்தஸ்து என்ன? என்பது பற்றிய பல விஷயங்கள் தெரியுமா? தெரியாது என்றே நினைக்கின்றேன். சுமார் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு வேளை தெரியக்கூடும்.

முன்பெல்லாம் ஒரு காலேஜில் ஒரு சமஸ்கிருத புரொஃபசர் வாங்கும் சம்பளத்துக்கும், தமிழ்ப் பண்டிதர் (புரோஃபசர்) வாங்கும் சம்பளத்துக்கும் மலை அளவு வித்தியாசம் இருக்கச் செய்தது. அரசாங்கத்தில் சமஸ்கிருதம் படித்தவனுக்கு அவ்வளவு சலுகை! சமஸ்கிருத புரோஃபசருக்கு 350 ரூபாய் சம்பளம்! தமிழ்ப் பண்டிதருக்கு (புரோஃபசருக்கு) 75 ரூபாய்தான் சம்பளம். சமஸ்கிருத ஆசிரியருக்குப் பெயர் ‘புரோஃபசர்’; தமிழ் ஆசிரியருக்குப் பெயர் - ஆசிரியர்.

காலஞ்சென்ற பேராசிரியர் திரு.கா.நமச்சிவாய முதலியார் அவர்கள் பிரசிடென்ஸி காலேஜில் புரோஃபசராக இருந்தபோது வாங்கின சம்பளம் ரூபாய் 81 என்பதாகத்தான் ஞாபகம். அதே நேரத்தில் அங்கு சமஸ்கிருத புரோஃபசராக இருந்த திரு.குப்புசாமி சாஸ்திரி (என்ற ஞாபகம்) என்பவர் வாங்கின சம்பளம் சுமார் ரூ. 300க்கு மேல்! ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தில் முதல் மந்திரியாக இருந்த திரு.பனகல் இராஜா அவர்களே இதைக் கண்டு மனம் கொதித்து என்னிடத்தில் நேரில் சொல்லி, ‘நீங்கள் இதைக் கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள்’ என்றும் சொன்னார். அவர் சமஸ்கிருதம் படித்தவர்; புலமை வாய்ந்தவர் என்றபோதிலும் கூட அந்தமாதிரி அந்தஸ்திலும், சம்பளத்திலும் வேறுபடுத்திய கொடுமையைக் கண்டித்தார். பிறகு அரசாங்க உத்தரவு போட்டு அதன்மூலம் இவ்வேற்றுமையை ஒழித்தார். அன்று நாங்கள் போட்ட கூப்பாடும், ஜஸ்டிஸ் மந்திரி சபையின் உத்தரவும் இல்லாதிருந்தால் இன்றும் தமிழ்ப் பண்டிதர்கள் இதே நிலைமையில்தான் இருக்கக் கூடும்.

பிறகு, திரு. இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் 1937-ல் இந்தியைக் கொண்டு வந்ததன் உள்நோக்கமே சமஸ்கிருதத்துக்குச் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்து வருவதைத் தடுத்து அதை உயர்த்தவும், அந்த சமஸ்கிருத எதிர்ப்பு உணர்ச்சியை அழிக்கவுமேயாகும். இதை அவர் வெளிப்படையாகவே பல கூட்டங்களில் பல சொற்பொழிவுகளின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். இதை நாம் இப்பொழுது விட்டால் நமது இனத்திற்கும், தன்மானத்திற்கும், உரிமைக்கும் பேராபத்து என்று கருதித்தான், ஆச்சாரியாரின் கட்டாய இந்தித் திணிப்பைப் பலமாக எதிர்த்துப் போராட்டம் துவக்கி சுமார் 2000 பேர்களைச் சிறைக்கு அனுப்பியதோடு, நானும் மூன்று ஆண்டு கடின காவல் தண்டனை பெற்றேன்.

இன்று தமிழ்நாட்டில் ‘சமஸ்கிருதம்’ என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா? எதற்காவது பயன்படுகிறதா? அதற்கும் நமக்கும் கடுகத்தனையாவது, ஒற்றுமை - பொருத்தம் எவ்வகையிலாவது இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் - தமிழர்கள் வாழ்வில், சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், விஞ்ஞானத்தில் மற்றும், ஏதாவது ஒரு காரியத்திற்கும் இந்த சமஸ்கிருதம் பயன்படுகிறதா? மற்றும், தமிழ் மக்கள் தமிழில் எவ்வளவுதான் மேதாவிகளாய் இருந்தாலும், அவர்களால் சமஸ்கிருதத்தைச் சரியானபடி உச்சரிக்க முடிகிறதா? தமிழர் யாராய் இருந்தாலும் சமஸ்கிருதம் உச்சரிப்பது என்றால் அது சிறிதாவது கஷ்டமானதும் சரிவர உச்சரிக்க முடியாததுமானதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் சீதோஷ்ண நிலைக்குப் பொருந்தாது உச்சரிப்பதனால் சரியானபடி உச்சரிக்க முடிவதில்லை; மனிதனின் சக்தியை அதிகம் பயன்படுத்தி ஆக வேண்டும். குளிர்நாட்டு மொழி, சமஸ்கிருதம்; ஆகவே, அது நமக்குப் பேச்சு வழக்குக்கு உதவாததாகும்.

ஒரு மொழியின் தேவை முக்கியத்துவமெல்லாம் அது பயன்படுகின்ற தன்மையைப் பொறுத்ததே ஆகும். அது எவ்வளவு பெரிய ‘இலக்கிய காவியங்களையும்’, ‘தெய்வீகத் தன்மையும்’ தன்னிடத்தே கொண்டது என்று சொல்லிக் கொள்ளப்படுவதனாலும் - அது மக்களது அன்றாட வாழ்க்கையில், அவர்களது அறிவை வளப்படுத்தும் தன்மையில் எந்த வகையில் உபயோகப்படும்படி இருக்கிறது என்பதையே அளவுகோலாகக் கொண்டு அளக்க வேண்டும்.

உதாரணமாக, இன்று இங்கிலீஷ் மொழி சிறந்த மொழி என்று பலராலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றதென்றால், அது ‘புராதன மொழி’ என்பதோ அல்லது ‘தெய்வாம்சம் உள்ள மொழி’ என்பதோ அதற்குக் காரணம் அல்ல. அதனுடைய உலக உபயோகமும், அது உலக மக்களது அறிவை, வாழ்வை வளப்படுத்த உதவிய, உதவுகின்ற தன்மையையும் பொறுத்ததேயாகும்.

1. ஒருவன் ஆங்கில மொழியைச் சுலபமாகக் கற்றுக் கொள்ள முடியும்.
2. ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்பி வர இயலும்.
3. ஆங்கில மொழியானது அறிவைத் தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, அது சுதந்திரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங்கிட்டதாக ஒரு போதும் கிடையாது.

இம்மாதிரிக் காரணங்களால் அது சிறந்த மொழி என்று கருதப்படுகிறது. வெறும் அழகை மாத்திரம் வைத்துக் கொண்டு இப்படிச் சொல்லாமல், அதன் பயனைக் கணக்கிட்டுத்தான் அதனைப் பாராட்டித் தீரவேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.

இதற்குரிய யோக்கியதாம்சங்களில் ஏதாவது ஒன்றாவது நம் நாட்டில் உள்ள மொழிகளுக்கு இருக்கிறதா? அதிலும் குறிப்பாக - ‘தேவ பாஷை’யான சமஸ்கிருதத்துக்கு உண்டா? என்ற கேள்விக்கு இன்றல்ல - பல ஆண்டுகளுக்கு முன்பே, ‘இல்லை’ என்ற பதில் கிடைத்துவிட்டது. அது, ‘பேச்சு வழக்கு இல்லாத’ ஒரு பாஷை ஆகும். இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள சுமார் 40 கோடி மக்களில் எத்தனை பேர்களுக்கு சமஸ்கிருதம், ‘தாய்பாஷை’? எத்தனை பேர்கள் பேசுகிறார்கள்?

Pin It