நான் அதிகம் பேச வேண்டும் என்றுதான் நினைத்தேன்.

நாம் சூத்திர ஜாதியாக மட்டும் இருக்கக் கூடாது; அப்பட்டமான சூத்திரனாகவே இருக்க வேண்டும். சூத்திரனாக மட்டும் கூடாது, மடையனாகவே இருக்க வேண்டும்; என்பதுதான் பார்ப்பனர் கருத்து.

periyar 288நாம் எத்தனை டிக்ரி (அளவு) முட்டாளாக இருக்கிறோம் என்பது மட்டுமல்ல. ஒரு டிக்ரிகூட குறையாமல் இருக்கின்றானா என்பதுதான் பார்ப்பான் கவலை; பார்ப்பான் சடங்கிலே நெருப்பிலே நெய் ஊற்றுவதற்குத் தனியாக சுத்தமான நெய்யாகவே வைத்திருப்போமே! நெய்யைப் பார்ப்பான் கொஞ்சம் குறைத்து நெருப்பிலே விட்டாலும் நமக்குப் பொறுக்காது. "சாமி நெய்யைத் தாராளமாக விடுங்கள், இன்னும் நெய் வைத்திருக்கோம்" என்பான். "சரி இவன் சரியான முட்டாள்தான். இன்னும் மாறவில்லை" என்று தெரிந்து கொள்வான்.

ஆனால் பந்திக்குப் பரிமாற கலப்பு நெய்யாகத்தான் இருக்கும். இதைக்கொண்டு "முட்டாள் டிக்ரி" இவ்வளவென்று தெரியும் அவனுக்கு.

சடங்கு முறையில் ஜாதித் திட்டப்படி செய்வார்கள்; ஏன் என்றால் ஜாதியைக் காப்பாற்ற யென்பான்.

உதாரணமாக சொல்கிறேன் இரண்டு அணாவை எட்டணாவால் மூட முடியும். எட்டு அணாவை இரண்டு அணாவால் மூட முடியுமா?

நம் புலவர்கள் சங்கதியென்ன வென்றால் நமக்குயென்று என்ன, எங்கே இருக்கிறதுயென்று தேடுகிறார்கள். அங்கே போனால் அது அவன் (பார்ப்பான்) சடங்காக இருக்கிறது.

கட்டை வண்டியிலிருந்து பஸ் வந்தது. இப்போது ஏரோபிளேன் வந்தது. நான் பிளேனில் ஏறு என்றால், "இரு இரு எங்க அம்மா பாட்டி எதிலே ஏறினார்கள் என்பதைத் தெரிந்துதான் ஏறுவேன்" என்றால் வண்டி போய்விடுமா இல்லையா?

முன்னோர்கள் முறையென்று போனால் முட்டாள்தனம் தான். எங்கள் பாட்டி காலத்திலே சக்கி முக்கி கல் இருந்தது. அதிலே தான் அடித்து நெருப்புப் பற்ற வைத்து சுங்கான் (புகைக் குடிக்கும் குழாய்) குடிக்கிறது. உங்களுக்கு அது தெரியாது. எனக்கு 10-வயதிலே நான் பார்த்திருக்கிறேன். அப்புறம் தீப்பெட்டி வந்தது. இப்போ எலெக்டிரிக் (மின்சார) விளக்கு எரிகிறது.

நீ என்ன என்றால், "இலக்கியம் இலக்கியம்" என்கிறாயே! எதுக்கு ஆகுது? அதுவெறும் சுடுகாடு; ஒரு மைலுக்கு முன்னால் என்ன உண்டு; நாளைக்கு யென்ன? எதிர்காலம் யென்ன? என்பதைப் பற்றிப் பேசுவாயா? இல்லை என் முதுகுப் பக்கமா அப்பறம் குடையடித்து விழவேண்டியதுதான், பின்னோக்கி நேற்று நூறுவருடத்துக்கு முந்தி என்று ஏன் போகிறாய்?

நாம் ரொம்ப ரொம்ப பழமையிலேயே இருக்கிறோம். நாம் படித்தவர்களாக இருக்கிறோம். நமக்குச் சாதி உணர்ச்சி மாறுகிறதா? நமக்கு மாறினாலும் நம் பெண்களுக்குப், பாட்டிமார்களுக்கு மாறுகிறதா?

என் பொது வாழ்வு துவங்கும் போதே 'குடி அரசு' மூலம் புலவர்களைத் தான் தாக்கு தாக்கு என்று தாக்குவேன்; ஆனால் நான் மிகவும் உங்கள் மாதிரி படித்தவன் இல்லை. வல்லினம், மெல்லினம் கூட பார்க்கப்பட்டேன்; முதல் வரியிலே இரண்டு சுழி "ன" போட்டால் அடுத்த வரியிலே மூன்று சுழி "ண" தான் போடுவேன்? அதுலே என்ன இருக்கு? கருத்துதானே முக்கியம். நான் ஒன்றும் மறைக்கவில்லை. அப்படி இருந்தும் இந்தப் புலவர்களைத்தான் தாக்குவேன்.

திரு.வி.க.வையே தாக்கினேன்; கடைசியிலே அவர்தான் சரணாகதியடித்தார்; பார்ப்பானோடே தொல்லை வேறே! அப்படி இருந்தும் நான் ஒன்றும் பின்வாங்காது எனது கருத்தை எடுத்து சொல்லிக் கொண்டு தான் வந்தேன்; என் கூட 4-பேர்தான் இருந்தார்கள். இப்போது புலவர்கள் எல்லாரும் நம் ஆள்களாக ஆகிவிட்டார்கள்.

நான் மதக்காரனையும் விட்டு வைக்கவில்லை. முதலிலே வைஷ்ணவன்; அப்பறம் சைவன்; 3-வது கிறிஸ்தவன்; 4-வது மகம்மதியன். இப்படி அவர்களிடம் இருந்த பிற்போக்கைக் கூட விடுவதில்லை. நானே வைஷ்ணவன். அதனாலே என் மதத்தையே நானே தாக்கினேன். பிறகு சைவனைப் பிடித்தேன். இந்து மதத்தைத் தாக்கியது போல மற்ற மதத்தைப் பிடித்தேன். இந்து மதத்தைத் தாக்கியது போல மற்ற மதத்தைப் பேச முடியுமா என்றான். கிறிஸ்தவனைப் பிடித்தேன். ஏன் அய்யா முகம்மதியனை மட்டும் விட்டு வைத்திருக்கிறாய் யென்றான். இது முடியட்டும்; அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்றேன். பிறகு அதையும் தாக்கினேன். இதனாலே அவர்களும் பலனடைந்தார்கள். அதோட (இரகசியமாக) அரசாங்கத்தையும் சரி பண்ணிக்கொள்வேன்.

நாம் பார்ப்பான், கடவுள், மதம், அரசாங்கம் இத்தனையும் தான் திட்டுகிறோம் இத்தனையையும் பொறுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நம் சக்கரமும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

நாம் ஏன் இப்படி மாற்ற வேண்டும் யென்று வந்தோமென்றால் அரசாங்கமும் நமது போக்குக்கு வந்துவிட்டது. முக்கியமாக பெண்களுக்கு உரிமை வந்துவிட்டது. ஆணுக்குக் கலியாணம் என்றால் பெண் அடிமை ஆவது; பெண்ணுக்குக் கலியாணம் என்றால் அடிமை புகுவது; இப்படித்தான் இப்போதும்.

நமது கையையே எடுத்துக் கொள்வோம். வலது கை பலம் இடது கைக்கு இல்லை. ஏன்? வலது கையை அதிகமாக உபயோகப்படுத்தி விட்டோம். இடது கைக்கு வேலை கொடுப்பதில்லை. ஏதாவது இடது கைக்கு வேலை இருந்தால் பெண்கள் குழந்தை மலத்தையெடுத்து யெறிவதுதான். இப்படியேவிட்டால் இந்தக் கைக்குப் பலமே இருக்காது. இதேபோல் தான் பெண்கள் நிலையும் இடது கையாக ஆகிவிட்டது. அதிக நாளாக பொட்டை, பொட்டை, பொட்டையென்றே தள்ளிக் கொண்டே வந்து விட்டோம்.

பார்ப்பான் முறைப்படி செய்தால் எத்தனை கலியாணம் வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம், கலியாணத்துக்கு முன்பு தேவடியாளை வைத்திருப்பான்; கலியாணமும் நடக்கும். அவளும் வந்திருப்பாள். ஏனென்றால் சொத்து நிறைய இருக்கிறது. பிள்ளை கொடுக்க அவனுக்குச் சக்தி இருக்கிறது. உனக்கு என்னடி? யென்று பெண்களே சொல்வார்கள். சிலப்பதிகாரக் கதையிலும் அப்படித்தானே, இருக்கிறது?

'பெண்களுக்குச் சொத்து உரிமை வேண்டும்' என்று செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்தோம். இதைப் பெண்களே மாநாடு போட்டு எதிர்த்தார்கள் அப்போது. இப்போது பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு என சட்டமே வந்துவிட்டதே! நாம் சொன்னது முழுவதும் நடைமுறைக்கு வந்துவிட்டது. இப்போது இன்னும் என்ன கேட்பதுயென்றே யோசிக்கிறோம்.

இப்போ சமீபத்திலே நடந்ததே அண்டை இராஜ்யத்தில், "என்னடா நாராயணா உன் பெண்டாட்டி ரொம்ப அழகுண்ணு கேள்விப்பட்டேன், அப்படியா?" என்று நம்பூதிரி பார்ப்பான் கேட்பான். நாராயணன் "சந்தோஷமா ஆமாம், இங்கே அழைத்து வருகிறதா அல்லது அங்கேயே வருகிறீர்களா?" என்பானே. அப்படி இருந்தது பார்ப்பான் உயர்வு நிலைமை.

சங்கராச்சாரி பாதத்தைத் தங்கத் தாம்பளத்திலே நிற்க வைத்து அவன் காலிலே தண்ணீரை ஊற்றி (பாத பூசை செய்வது) அதைக் கழுவிப் பெரிய B.A,M.A. M.O.L., B.O.L., Ph.D. M.L.A., M.P. கவர்னர், வெங்காயம் அவன், இவன் எல்லாம் குடிக்கிறானே! அதுவும் சும்மா குடிப்பதில்லை. ஒரு பவுன், 1/2 பவுன் இதுமாதிரி பவுனாக வைத்துத் தானே குடிக்கிறான்?

சாமி தீப்பிடித்து வெந்து போனால் தங்கத்தாலே புதுசாமி செய்துவிடுகிறான்; கோபுரத்திலே இடி விழுந்தால் உடனே புதுசு. இப்படி அல்லவா செய்து கொண்டே போகிறான்! இவற்றையெல்லாம் நாம் கண்ணாலேயே பார்க்கிறோம். அப்பறம் நான் என்ன செய்வது?

இவ்வளவு பலமாகப் பார்ப்பான் காலை ஊன்றிக் கொண்டான். இதிலிருந்து நாம் மீள சகல துறைகளிலும் பார்ப்பானை வெறுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

----------------------------------------
14.07.1959 - அன்று செந்துறை நந்தியன் குடிக்காட்டில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு.”விடுதலை”, 18.07.1959
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It