நான் சொல்லப் போவதை நீங்கள் அப்படியே நம்ப வேண்டுமென்ற கட்டாயம் ஏதுமில்லை; உங்கள் சிந்தனைக்கு வரவேண்டும் என்பதே என் விருப்பம். என்னுடைய வேலையும் ஏதோ என்னால் ஆனதைச் செய்ய வேண்டுமென்பதே; எனக்குப் பணமோ, புகழோ தேவையில்லை; மனிதனாகப் பிறந்தவன் மக்கள் குறையை நிர்வத்திக்க வேண்டும்; அதற்காக நான் பாடுபடுகிறேன். உலக நாட்டிலே இல்லாத குறை நம் நாட்டிலேதான் இருக்கிறது. மனித சமூதாயத்திற்கு இருக்கும் கேடுகள் மூன்று ஆகும் அவையாவன :

periyar 4041. மேல்ஜாதி - கீழ்ஜாதி

2. பணக்காரன் - ஏழை

3. ஆண் - பெண்

இவற்றினால் ஏற்படும் அடிமைத்தனமே நம்முடைய கேடுகளுக்குக் காரணம்.

பார்ப்பான், பறையன், சூத்திரன் என்ற மேல்சாதி கீழ்சாதி இந்நாட்டைத் தவிர வேறு எங்கும் இல்லை. இது ஒழியவேண்டும். பணக்காரன், ஏழை இங்குத் தேவையில்லை; ஆணாகப் பிறந்ததனால் ஆண் உயர்வு; பெண்ணாகப் பிறந்தால் பெண் தாழ்வு; இது நம் நாட்டில்தான்! எவ்வளவு பெரிய பெண்ணாக இருந்தாலும் ஒருத்தனுக்கு அடங்கி இருக்க வேண்டும். கழுத்தை நீட்டுகிறதோ, அதுமாதிரி பெண்பிள்ளை ஆண்பிள்ளைக்கு அடங்கி நடக்க வேண்டுமென்பது ஒழியவேண்டும்.

இப்பேதங்களைக் கடவுள், மதம், வேதம், சட்டம் காப்பாற்றுகின்றன! பார்ப்பானைப் பார்த்து நீ எப்படியடா உயர்வானவன் என்றால் பகவானைப் பார்த்து நீ எப்படியடா உயர்வானவன் என்றால் பகவான் பிறப்பித்தார் என்கிறான்; அதை ஒழிக்கணும். மதம் - அதற்குப் பெயர் இந்து மதம். எங்கே இருக்கிறது என்று கேட்டால் வருணாசிரமம் என்கிறான். இந்து மதத்திற்கு அர்த்தமே பார்ப்பான், பார்ப்பாத்தி, பறைச்சி என்ற வேற்றுமைதானே அர்த்தம்! இஸ்லாம் நெறியிலே கிறித்தவ மதத்திலே இவை இல்லை. இந்து மதத்திலேதான் நம்மைச் சூத்திரர்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

அருமை தோழர்களே! நம்முடைய சர்க்காரும் (அரசும்) அவர்களை ஆதரிக்கிறது; நான் சர்க்கார் என்று சொல்வதில்லை. கொள்ளைக்காரப் பசங்கள் என்று தான் சொல்லுவேன். அரசாங்கம் சாதியைக் காப்பாற்றுகிறது. நாங்கள் சாதியை ஒழிக்கச் சொல்லுகிறோம். அதற்கு எங்களுக்கு ஜெயில் (சிறை) அதேமாதிரி அரசாங்கம் பணக்காரனை ஆதரிக்கிறது. யோக்கியனாக நடப்பவனை அரசாங்கம் ஆதரிப்பதில்லை. கடவுளும், மதமும் பணக்காரனை ஆதரிக்கின்றன. எப்படி என்றால் போன ஜென்மத்தில் (பிறவியில்) செய்த புண்ணியம் என்கிறான்!

அடுத்து ஆண், பெண் வித்தியாசம். பெண்டாட்டியை அடிக்கலாம் என்கிறது சட்டம். மதத்திலும், சாஸ்திரத்திலும் பெண் அடங்கி நடக்க வேண்டும் என்று இருக்கிறது. தேவையில்லாத கொடுமைகள் நம்நாட்டிலிருந்து நீங்க வேண்டுமா? வேண்டாமா? நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

என்றைக்குப் பார்ப்பான் காலைக் கழுவிக் குடித்தோமோ அன்றிலிருந்தே இதே நிலைதான். ஏண்டா இப்படி என்றால் ஜெயில் என்கிறான். இந்தப் பார்ப்பான் யார்? நமக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? இல்லை உலகத்தக்குத் தான் என்ன பயன்?

பார்ப்பான் என்ன செய்கிறான்? எங்கேயாவது வேலை செய்கிறானா? எந்தப் பார்ப்பனத்தியாவது புல் சுமக்கிறாளா? கல்லுடைக்கிறாளா? நாற்றுப் பறிக்கிறாளா? சொல்லுங்களேன் பார்க்கலாம்! ஏர் உழுதால் பாவம் என்கிறான்! நம்முடைய பெண்களையெல்லாம் வைப்பாட்டி - சூத்திரச்சி - என்று எழுதி வைத்திருக்கிறான். இதை ஒழிக்க எவனும் பாடுபடவில்லையே?

சாதி ஒழியவேண்டும்: பார்ப்பான் இந்நாட்டில் ஏன் இருக்க வேண்டும்? ஏன் எங்களைத்தவிர கேட்க ஆள் இல்லை? கேட்டால் பாவம் என நினைக்கிறானே! ஆழ்வார்கள், நாயன்மார்கள் தானாகட்டும் எவனாவது எங்களைத்தவிர "நாம் ஏன் சூத்திரன்?" என்று கேட்டார்களா? கேட்க வேண்டாமா?

நம் நாட்டில் நாமும் பெண்களும் படிக்கவில்லை. பார்ப்பனத்தியைக் கொண்டுவந்து பார். நூற்றுக்கு ஒருத்திகூடப் படிக்காதவள் இல்லை. முட்டாள் பையன்கள் நம்மிடம் ஓட்டுக் கொடுத்துள்ளான். பார்ப்பான் அல்லாதவன் பார்ப்பானிடம் அடிமைப்பட்டுப் பார்ப்பானுக்குக் கைதூக்கத்தான் இருக்கிறார்கள். எப்படி நாம் விதைத்து அறுவடை செய்து பார்ப்பான் தொப்பையிலே கொட்டுகிறோமோ அதுமாதிரி ஆதரித்து ஆட்சிக்கும் அனப்புகிறோம். நம்மக்கள் அவ்வளவு மடமையில் ஆழ்ந்துள்ளார்கள்.

மற்ற நாடுகளில் எவ்வளவு முன்னேற்றமடைந்து விட்டார்கள் இந்த லைட்டைப் (விளக்கு) பாருங்கள். அந்தக் காலத்தில் இப்படி இல்லை; பலர் தீவட்டி பிடிக்க வேண்டும். பலபேர் கிண்டி விடவேண்டும்; வண்ணார்கள் எண்ணெய் ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும்; பெரியதனக்காரர்கள் அதட்டிக் கொண்டிருப்பார்கள். இப்போது அப்படி இல்லை எவ்வளவு மாற்றங்களைக் காண்கிறோம்! அங்கெல்லாம் கடவுளைக் கட்டிக்கொண்டா அழுகிறார்கள்? ரஷ்யாவிலே சாமியைப் பற்றிய பேச்சே இல்லே. பேசினால் அடிவிழும்! அவன் தான் செயற்கைச் சந்திரனை விடுகிறான். அவ்வளவு முன்னேறி விட்டான். அவர்கள் என்ன கெட்டா போய் விட்டார்கள்? ஏதாவது இதைப் பற்றிக் கேட்கிறார்களா?

கடவுள் பெயரால் இவைகளைக் காப்பாற்றுகிறார்கள் என்கிறான். கடவுள் என்றால் யாருக்காவது தெரியுமா?

உலகத்திலே ஒரு பகுதி மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. மற்றப் பகுதி மக்களுக்கு நம்பிக்கை இல்லை. வெள்ளைக்காரனுக்கு இல்லாத கடவுள் நமக்கேன்? அவன் கடவுள் யோக்கியமானது. நம்முடையது அயோக்கியத்தனமானது; அவன் கடவுள் திருடாது, நம்முடையது திருடும். அவன் கடவுள் அமைதியானது. நம்முடையது கோரமானது. வேலாயுதம், சூலாயுதம், கொட்டாப்புளி வைத்திருக்கும் என்கிறான். இவற்றைச் சொன்னால் என்ன ஆதாரம் என்று கேட்க வேண்டாமா? காசு வந்தால் கோவில் கட்டுவது என்ற நிலையிலேயே உள்ளார்கள்!

கடவுளுக்கு ஏன் உருவம்? உலகில் வேறு எங்கு காட்டுகிறான், நாய், பன்றி, பெருச்சாளி, கழுகுகளெல்லாம் கடவுளென்று? கருர் தபாலாஃபீசில் (அஞ்சல் நிலையத்தில்) உட்கார்ந்து கொண்டு இலண்டன்காரனோடு பேசும் இக்காலத்திலும் நாம் ஏன் குழவிக்கல்லைக் கட்டிக்கொண்டு அழவேண்டும்?

எங்கெங்கு கிறிஸ்தவன், முகமதியன் இருக்கிறானோ அங்கங்கு அவனே அவன் நாட்டை ஆளுகிறான். இங்கு நம் நாட்டை நாம் ஆளவில்லை பார்ப்பான் ஆளுகிறான். இது ஏன்? ஆகவே தோழர்களே! நாம் பெரிய மாறுதலுக்கு உட்பட வேண்டியிருக்கிறது.

இன்று தீபாவளி கொண்டாடி இருப்பீர்கள். எதற்காகவென்று யாருக்காவது தெரியுமா? நமக்குப் பாடுபட்ட ஒருவனைக் கொன்று போட்டதைக் கொண்டாடுவதே தீபாவளி. நரகாசூரனைக் கிருஷ்ணன் கொன்றது தீபாவளி. நரகாசூரன் பார்ப்பானை அடக்கி வைத்தான்; அவனைப் பார்ப்பனர்கள் கொன்றார்கள்; கிருஷ்ணனும் இல்லை! வெங்காயமும் இல்லை. இராமன் யார்? பார்ப்பானுக்குப் பிறந்தவன். அவன் அப்பன் குடுகுடு கிழவன்! வேதம் செய்த பார்ப்பானுக்குத் தானம் கொடுத்தான். சினை செய்தார்கள். இராமன் பிறந்தான். ஆற்றிலே விழுந்து செத்தான். பிறப்பும், இறப்பும் உள்ளவன் கடவுளா?

படித்த பி.ஏ.பி.எல். வழக்கறிஞர், புலவன் எல்லாம் தீபாவளி கொண்டாடுகிறான். முட்டாளே! உலகத்தை எவனாவது பாயாகச் சுருட்ட முடியுமா? எப்படி முடியும்? எங்கிருந்து சுருட்ட முடியும்? கக்கத்தில் சுருட்டிக் கொண்டு எப்படி நடக்க முடியும்? எப்படிச் சத்திரத்தில் ஒளிய முடியும்? இதைச் சிந்திக்காது தீபாவளி கொண்டாடுகிறார்களே முட்டாள்கள்? எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறான் - புது உடை உடுத்துகிறான்!

கடவுளுக்குப் பன்றி வேடம், குதிரை வேடம் போட்ட முட்டாள் கடவுள் வைக்கோல், புல் தின்கிற மாதிரி வேடம் போடக்கூடாதா? பன்றி வேடம் போட்டால் எதைச் சாப்பிட வேண்டும்? அசிங்கமாக இல்லை! பன்றி பூமிகிட்ட படுத்துக்கிட்டதாம். குழந்தை பிறந்ததாம்! நம்புகிறோம்!

அவதாரங்கள் அத்தனையும் அயோக்கியத்தனம். வேதம், மச்சாவதாரம் எல்லாம் யாராவது என்னவென்று நினைத்திருக்கிறார்களா? சாமி பொண்டாட்டியை ஒருத்தன் அடித்துக் கொண்டு போய் விட்டான் என்று எழுதுவானா? அதுவும் சினைப்படுத்தி விட்டான் என்று? அதுவும் யாரைப் பார்த்து? நல்ல வரம் பல வாங்கிய இராவணனைப் பார்த்து! அதே மாதிரி இரணியன்.

இந்த 1958-லேயே கூட நமது முண்டங்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றால் நமக்கு அறிவு இல்லை. காரணம் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

நாங்கள் கத்திக்கொண்டே இருக்கிறோம்; நீங்கள் பார்ப்பான் கடைக்குப் போனால் எப்படி நமக்கு மானம் வரும்? நாங்கள் பார்ப்பானை வெளியேறு என்கிறோம். எங்கே போவார்கள் என்று மானமில்லாமல் சொன்னால் என்ன ஆவது? காட்டுமிராண்டிகளாக இருந்த வெள்ளையர்கள் முன்னேறி விட்டார்கள். அவர்கள் நாட்டை அவர்களே ஆளுகிறார்கள். நம் நாட்டிலேதானே பார்ப்பான் ஆளுகிறான்.

சமுதாய இழிவு நீங்கி நாமும் மானத்துடன் வாழ முயற்சி செய்ய வேண்டும். இந்த ஆட்சியிலாவது நன்மை உண்டா? ஜனநாயகம் ஓட்டினால் (வாக்கு) வந்தது; அதில் நாம் எப்படி வாழ்கிறோம் என்றால் எலி, பூனையுடன் பயந்து வாழ்வது மாதிரி வாழ வேண்டியிருக்கிறது. கட்டுப்பாடு வேண்டும்.

இப்பொழுது பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு. இது யாரால்? நமக்குச் சூத்திரத்தன்மை ஒழியாவிட்டாலும், வாழ்வில் முன்னேற்றம், படிப்பில் முன்னேற்றம், நமது ஆள் ஆளுவது ஆகியவற்றில் ஓரளவு பலனைக் கண்டிருக்கிறோம். ஆகவே நம் உழைப்பு ஒரளவு கொஞ்சம் பலனைக் கொடுத்திருக்கிறது. நம்முடைய உழைப்பு கட்டுப்பாடாக இருந்தால் எவ்வளவோ சாதிக்கலாம்.

நம் நாட்டை டில்லிக்காரன் ஆளுகிறான் அதை ஒழிக்க வேண்டும். அதற்கான கிளர்ச்சி நாம் செய்யனும். உலகில் ஜனநாயகப் புரட்டு ஓட்டுப் பித்தலாட்டம் ஒழிந்து வருகிறது. நாம் டில்லி ஆட்சியிலிருந்து விலகவேண்டுமென்று முயற்சி பண்ணகிறோம். கடைசியாக சில வேண்டுகோள்கள்.

1. கோவிலுக்குப் பரிகாரங்கள் அங்குப் பொம்மையைத் தவிர குழவிக்கல்லைத் தவிர - வேறு என்ன இருக்கிறது? கடவுள் பெண்டாட்டி சேலையை அவிழ்த்துக் கொண்டு போகிறவனைக் கேட்க சக்தி இல்லாத கடவுள் உன்னை எப்படிக் காப்பாற்றும்?

-------------------------------------

10.11.1958 - அன்று கரூர் பிள்ளைபாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. ”விடுதலை”, 14.11.1958
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It